Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா -1

1

வானுமற்ற …நிலமுமற்ற…எல்லை கட்டாதோர்  பிரதேசத்தில்
எங்கிருந்தோ …எப்படியோ …
வந்தென்னகம் நனைத்துவிட்டான்
அன்றுதான் ஆரம்பமானது என்  பிரபஞ்சம் .

“நந்தகுமரன் வெட்ஸ் மீரா ” எனும் எழுத்துக்கள் பொன்னாய் மின்னின. உற்சாகம் பொங்கும் மனதுடன் அதனை பார்த்தபடி காரிலிருந்து இறங்கினாள் மீரா .இன்னமும் கல்யாண களை கட்டவில்லை அந்த மண்டபத்தில் .ஆனாலும் மணப்பெண்ணிற்குரிய அனைத்து இயல்புகளும் மீராவிடம் குடிவந்து விட்டது .
” ஏய் மீரா என்னடி …ப்யூட்டி பார்லர் மேக்கப்  அதற்குள் முடித்து விட்டு வந்துவிட்டாயா …? ” கீர்த்தனா கேட்டாள் .சித்தி பெண் .

” ம்ஹூம் ..சாப்பிட்ட பிறகு மேக்கப்பிற்கு போகலாம் என்று முதலில் இங்கே சாப்பிட அழைத்து வந்துவிட்டார் அப்பா …” மென்மையாய் இதழ் பிரித்து குயில் குரலில் கூறினாள் மீரா .

” என்னது இன்னமும் மேக்கப் முடிக்கலையா …? ஏய் …ராதா , சரிதா , சித்ரா , ரவி , ஆனந்த் எல்லோரும் ஓடி வாங்க …”

கீர்த்தனாவின் கத்தலில் அந்த மண்டபத்தில் ஆங்காங்கே இருந்த அந்த இளைஞர் பட்டாளம் முழுவதும் அங்கே , வாசுகியை சுற்றி கூடியது .எல்லோரும் வாசுகியின் அத்தை , மாமா …சித்தப்பா , பெரியப்பா பிள்ளைகள் .ஓரிரண்டு வயது கூட , குறைய இருக்கும் , கிட்டதட்ட ஒரே வயதுடைய நண்பர்களைப் போல் பழகும் உறவினர்கள் .

” ஏய் எதுக்குடி இப்படி கத்துகிறாய் ….? ” மீரா புரியாமல் கேட்டாள் .அவளுக்கு பதில் சொல்லாமல் தங்களை சூழ்ந்து கொண்ட இளவல் பட்டாளத்தை பார்த்து கையாட்டிய கீர்த்தனா ….

” ஏய் எல்லாரும் நல்லா பாருங்கப்பா.நம்ம புதுப்பொண்ணு இன்னமும் இன்னமும் அலங்கரிக்க அழகு நிலையம் போகவில்லை .அதற்குள் அவள் முகத்தை பார்த்தீர்களா …? கோல்டன் பேசியல் போட்டது போல் ஜொலித்துக் கொண்டிருக்கிறதே …”

” அட ..ஆமாம் …”

” முகம் மின்னுது …”

” கண் ஜொலிக்குது …”

” கன்னம் சிவக்குது …”

ஆளாளுக்கு மீராவை  தங்கள்புறம் திருப்பி ஆராய்ந்தபடி சொல்ல , இந்த கேலியில் மீரா திணறினாள்  .

” ஏன்பா பொண்ணுங்க , கல்யாணம்னா நிஜம்மாகவே இப்படி அழகாயிடுவாங்களா …? ” ரவி கேட்டான் .

” டேய் ரவி அண்ணா .நம்ம மீரா சும்மாவே அழகு .இதில் அந்த மாதிரி ஹீரோ மாதிரி ஒரு மாப்பிள்ளை அமைஞ்சா இன்னும் அழகாக மாட்டாளா …? அதுதான் அப்படியே பட்டர் பேப்பர் மாதிரி வழுவழுன்னு ஆகிவிட்டாள் …” சொன்னது போன்றே பட்டராய் வழுவழுத்த மீராவின் கையை வருடிய ராதாவின் குரலில் மிக லேசாக ஒரு பொறாமை கூட தெரிந்தது .

” சரிப்பா கைதான் பட்டர் பேப்பராகி விட்டது .கண்ணில் எதற்கு எப்போதும் ஒரு டியூப்லைட் எரிகிறதாம் …? ” சரிதா .

” அதைவிடு இந்த கன்னம் ஏன் எப்போதும் ரூஜ் தடவியது போன்றே இருக்கிறதாம் …” கீர்த்தனா .

” ஏய் கலாட்டா பண்ணாமல் சும்மா இருக்க மாட்டீர்களா …? ” தனது கன்னத்தை தேய்த்தபடி மீரா மெல்லிய குரலில் கூறினாள் .கன்னம் சிவந்நிருக்கிறதாம்மா ..இருக்கும் அவனை முதன்முதலில் பார்த்ததும் கன்னத்தில் ஏறிய சிவப்பு இது .போக மாட்டேனென்கிறது .அழுத்தி தடவிக்கொண்டாள் .

” என்னது கலாட்டா பண்ணக்கூடாதா …? பிறகு நாங்கள் எதற்காக காலேஜ் , ஆபிஸெல்லாம் லீவ் போட்டுவிட்டு இங்கே ஓடி வந்திருக்கிறோமாம் .கல்யாணம் முடிவதற்குள் உன்னையும் , உன்னவரையும்  ஒரு வழி பண்ணிவிடுவோம் …” ஆனந்த் உற்சாகமாக கூறினான் .

அவனது அந்த உன்னவரில் ஏதோ ஓர் சிலிர்ப்பு மீராவின் உடலில் ஓடியது .என்னவர் ….அவர் என்னவர் …ஆமாம் எனக்கே உரியவர் .நாளை இந்நேரம் நான் அவருக்கும் , அவர் எனக்கும் உரியவராயிருப்போம் .

நந்தகுமரனின் உருவம் மனதினுள் வந்து நிற்க , கண்கள் சொக்கி ஒரு மயக்கத்திற்குள் போனாள் .அன்று ….

பெண் பார்க்க வந்த அன்று …ஒரு முறை …ஒரே ஒரு முறைதான் அவளை ஏறிட்டு பார்த்தான்.அதே நேரம் மீராவும் அவனை பார்க்க , விநாடியில் தன் கண்களை திருப்பிக் கொண்டுவிட்டான் .அந்த கணப்பொழுதே ஆயிரக்கணக்கான வோல்டேஜ்களை மீராவின் உடலினுள் செலுத்திவிட்டது .




அந்தப்பொழுதிலிருந்து ஏதோ ஒரு புது உலகத்தினுள் வாழந்து கொண்டிருக்கிறாள் அவள் .அநாவசிய அலட்டல்களோ , வழிசல்களோ இன்றி கம்பீரமாக அந்த ஒற்றை சோபாவில் நிமிர்ந்து அமர்ந்திருந்தான் .மீராவிற்கு அவள்  படித்த  சில சரித்திர நாவல்களின் நாயகர்களின் வர்ணனைகளை நினைவூட்டினான் .

அவனை சுற்றி அமர்ந்து படிப்பு , தொழில் என  கேள்விகளால் அவனை துருவிய அவள் வீட்டு ஆட்களுக்கு பொறுமையாக , பதட்டமின்றி தெளிவாக விடை  கூறினான் .அவனுக்கென வைக்கப்பட்ட பலகாரங்களை தவிர்த்து விட்டு , தண்ணீர் மட்டும் குடித்தான் .அவனருகில் வந்து அமர்ந்து பேச்சு கொடுத்த மீராவின் தம்பி வினோத்திடம் சிறு புன்னகையோடு பேசினான் .

அவன் ஒரு முறையாவது மீண்டும் ஒரு தடவை தன்னை பார்க்க மாட்டானா … என்ற ஆசையுடன் , உள்ளறை ஜன்னல் வழியாக அவனை பார்த்தபடியிருந்த மீராவின் ஆசையை மட்டும் கடைசி வரை நிறைவேற்றவேயில்லை .திரும்பியே பார்க்காமல்தான் டாக்ஸியில் போய் ஏறிக்கொண்டான் .

இரு வீட்டு வழியிலும் திருப்தியுடன் திருமணம் பேசி  பூ வைத்து நிச்சயம் செய்த பிறகும் , ஒவ்வொரு நாளும் அவனது போன் காலுக்காக காத்திருந்து ஏமாந்தாள் . பெண் பார்க்க வந்தபோது அநாவசிய வழிசலின்றி இருந்த அவனது நிமிர்வில் பெருமை கொண்டிருந்த அவளது பெற்றோருக்கு , நிச்சயத்தின் பின்னும் போனில் கூட பேசாத அவனது தன்மை சிறு கவலையளித்தது .

இது மெல்ல மாப்பிள்ளை வீட்டாரின் காதில் போடப்பட்டது. நந்தகுமாரின் அக்கா பிரவீணா , தங்கை மாளவிகா , மாமியார் சுந்தரியுடன் ஒரு வெள்ளிக்கிழமை பெண்ணை பார்த்து போகவென்று வந்த அந்த வீட்டு பெண்கள் கூட்டம் , வாங்கி வந்த மல்லிகை பூவை மீராவின் தலை நிறைய வைத்துவிட்டு , தனது பிள்ளையின் , தம்பியின் , அண்ணனின் பெருமைகளை அடுக்க தொடங்கியது.

மீராவின் தந்தை திருக்குமரனிடம் நந்தகுமரனின் தொழில் திறமைகள் குவியலாக கூறப்பட்டன. அம்மா அன்பரசியிடம் அவனது குடும்ப பொறுப்பு , சகோதர பாசம் கூடை கூடையாக கொட்டப்பட்டது .ஏனோ இதிலேதும் பொய்யிருப்பது போன்றே மீராவுக்கோ , அவள் பெற்றோருக்கோ தோணவேயில்லை .

இதுபோல் மணக்க போகும் மணமகனின் பெருமைகள் , அதுவும் பார்த்த கணம் முதல் மனம் முழுவதும் பரவி விரிந்து சிரித்து நிற்பவனது புகழுரைகள் கேட்க மீராவுக்கு கசக்குமா என்ன …? அவளும் உடல் முழுவதும் செவியாக்கிக் கொண்டுதான் அமர்ந்திருந்தாள் . ஆனால் ஏதோ ….எங்கேயோ …ஒரு விடுதல் .சிறு பிசகொன்று ….வெண்பரப்பில் ..விழுந்துவிட்ட கரும்புள்ளியொன்று அவள் இதயத்தை உறுத்தியபடியிருந்த்து. சுபமான  வீணை மீட்டலின் ஊடே அசுபமாய் ஸ்வரமொன்று ஒலித்தபடியே இருந்த்து .

அப்போது தனது போனை எடுத்த பிரவீணா ஏதோ நம்பரை அழுத்தியபடி வெளியே நடந்தாள் .இரண்டு நிமிடங்கள் வெளியே நின்று பேசியவள் உள்ளே வந்து தனது போனை மீராவின் காதில் வைத்தாள் .

” தம்பிதான் பேசு …” என்றாள் .

திக்கென்றது மீராவுக்கு .என்ன இது இப்படி திடீரென்று பேச சொன்னால் ..என்ன பேச …? விழித்துக்கொண்டு இருந்த அவளின் காதில் ….

”  வேண்டாம் அக்கா .நான் பேசவில்லை …” என்ற அவனது குரல் விழுந்த்து .

சற்று முன் அவனது குரலுக்கான பரபரப்போடிருந்த அவளது மனம் இப்போது அமைதியானது .எதிர்பார்ப்போடு விரிந்திருந்த இதழ்கள் இறுகிக்கொண்டன.

அவளது முகமாற்றத்தை கண்ட பிரவீணா போனை தன் காதுக்கு கொண்டு போய் …

” நந்து ….மீரா பேசுகிறாள் .இரண்டு வார்த்தை பேசு …” உத்தரவு போல் கூறிவிட்டு போனை மீராவிடம் கொடுத்தாள் .

இப்போது போனின் மறுபுறம் ” ஹலோ …” எனும் குரல் கேட்டது.

மீராவின் பதில் ஹலோவில் சிறு மரத்த தன்மையிருந்தது .

” வந்து …உ…உங்கள் ..பெ …பெயர் என்ன …? “

உங்களாம் …பெயர் தெரியாதாம் ….மௌனமாக இருந்தாள் மீரா  .

” சாரி ..என்ன பேசுவதென்று தெரியவில்லை …” எதிர்குரலில் தடுமாற்றம் இருந்தது .

” ம் …” என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக்கினாள் மீரா .சுற்றி இத்தனை பேர் இருக்கையில் வேறு என்ன பேச ….?

” நாம் அனைவரும் சுற்றியிருப்பதால் , பேச கூச்சமாக இருக்கும் …” அன்பரசி ஜாடையாக சொன்ன பின்னும் சுற்றியிருந்த யாருக்கும் நகரும் எண்ணமில்லை .மூன்று பெண்களும் சுற்றியமர்ந்து மீராவை விட்டு பார்வையை நகற்றாமல் அமர்ந்திருந்தனர் .அதிலும் மாளவிகா தனது கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு , விழியகற்றாமல் வாசுகியை பார்த்தபடியிருந்தாள் .

” ம் …..” பெருமூச்சொன்றை விட்டாள் சுந்தரி .

” எங்க காலத்திலெல்லாம் இப்படியா …நிச்சயமானவுடனே போன்ல பேசனும் , நேரில பேசனும்னு காத்துக்கிட்டிருந்தோம் .கல்யாணமாகி பத்துநாள் கழிச்சித்தான் அவர் முகத்தையே முழுசா நிமிர்ந்து பார்த்தேன் . இப்போ இருக்கிறதுகெல்லாம் அப்படியா …? ஆனால் நான் என் பிள்ளைங்களையும் என்னை மாதிரிதான் வளர்த்திருக்கேன் .என் பொண்ணுங்களும் சரி , பசங்களும் சரி …கல்யாணத்துக்கு முன்னால் அப்பிடியிப்படின்னு எதுவும் பண்ணினதில்லை ….ம் ….எல்லார்கிட்டயும் இதையே எதிர்பார்க்க முடியுமா …? ம் ….”

வார்த்தைக்கு வார்த்தை பெருமூச்சுவிட்டு , குரலை ஏற்றியிறக்கி நீளமாக பேசி நிறுத்தினாள் .அன்பரசிக்கும் , திருக்குமரனுக்கும் தர்ம சங்கடமானது .தலையை குனிந்து கொண்டனர் .




தன் காதிலிருந்த போனை விலக்கி பிரவீணாவிடமே நீட்டினாள் மீரா.ஆனால் அதற்கு முன்பே எதிர்புறம் கட்டாகிவிட்டதோ என்ற சந்தேகம் அவளுக்கிருந்த்து .போனை வாங்கி தனது காதில் வைத்த பிரவீணாவின் முகமும் அதையே உணர்த்த , அவள் மீராவை  பார்க்காமல் திரும்பிக்கொண்டாள் .

சங்கடமான அங்கே நிலவிய சூழ்நிலையை சரி பண்ண தோதாக , மாளவிகாவின் மடியிலிருந்த அவளது எட்டு மாத குழந்தை குரல் கொடுத்து அழத்துவங்கியது .அவள் குழந்தையை சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் .

” குழந்தைக்கு பால் கொண்டு வரட்டுமாம்மா …? ஆற்றி தருகிறாயா …? ” அன்பரசி மாளவிகாவிடம் கேட்க , அவள் பதில் சொல்ல சூழ்நிலை இயல்பாக முயற்சித்தது .

ஆனால் மீராவின்  மனநிலை இயல்பாகவில்லை .அவனுக்கு அவளுடன் பேச பிடித்தமில்லை. இதற்கு அர்த்தம் அவனுக்கு என் மேல் பிடித்தமில்லை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும் …? ஏனோ தனது இந்த நெருடலை தன் வீட்டாருடன் கலந்து கொள்ள அவளுக்கு யோசனையாக இருந்த்து .

இந்த நவீன காலம் போல் சுந்தரி தனது பிள்ளைகளை வளர்க்கவில்லை .அதனால் நந்தகுமரன் அன்னைக்கு , தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்கிறான்  .அன்று பெண் பார்க்கும் போது கூட அப்படித்தானே இருந்தான் ..!!! இது அன்பரசியின் வாதமாக இருந்தது .

திருக்குமரனோ இடையில்  இரண்டொரு முறை நந்தகுமரனை அவனது கடையில் போய் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து  , ஓயாமல் மாப்பிள்ளை புகழ்தான் .அவனது பேச்சு , வியாபார தந்திரம் , திறன் …அது இதுவென்று தினமும் ஒன்று சொல்லுவார் .அவராக பார்த்து அறிந்து கொண்டது கொஞ்சம் , வெளியே கேட்டு அறிந்த்து கொஞ்சம் என்று அவர் பேசியதெல்லாமே நந்தகுமரனின் புகழ்தான் .

தந்தை , தாயின் பேச்சுக்களில் வாசுகியும் மெல்ல தனது உறுத்தல்களை மறக்க துவங்கினாள் .மறக்க விரும்பினாள் என்பதே உண்மை .நந்தகுமரனின் சிரிப்பும் , அந்த ஒரே ஒரு நொடி கண் சந்திப்பும் அவளது கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த தயங்கங்களையும் துடைத்து எறிந்தது.

இதோ இப்போதும் இங்கே திருமண மேடையில் அருகருகே நின்றிருந்தும் , இன்னமும் அவன் திரும்பி அவளை …அவளுக்கென பார்க்கவில்லை .வருவோர் போவோரிடமெல்லாம் பேசினான் .கை கொடுத்தான் உறவுகளை அறிமுகப்படுத்தினான் .அறிமுகமானான் .ஆனால் எந்த நேரமும் இவளை இவள் முகத்தை ..கண்களை பார்க்கவில்லை .

புல்சூட்டிலிருந்த அவனது கம்பீர தோற்றத்தில் முன்பே தன்னைத் தொலைத்திருந்த வாசுகிக்கும் அவனது பேச்சோ , பார்வையோ அப்போது வேண்டியிருக்கவில்லை .அவன் அவளை பார்த்து பேசினானென்றால் , அவள் தலை குனிய வேண்டி வரும் .பிறகு இப்படி அவனை அவ்வப்போது பார்வையிட முடியாமல் போகுமே …

அவனது  தோற்றத்திலும் அடுத்தவர்களிடமென்றாலும் அவனின் பேச்சிலும், கவனமாக தள்ளியே நின்றாலும்  தவிர்க்க முடியாமல் மிக லேசாக உரசிய  அவனது தொட்டும் தொடாத படுதல்களிலும்  தனை மறந்தபடி , அவனது பாராமுகத்தை மறந்து நெகிழ்ந்திருந்தாள் மீரா.

அன்று இரவு ….

” ஒரு மாதமாகவே கல்யாண அலைச்சல் .சரியாக தூங்கியே ஒரு வாரமாயிற்று .எனக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது .தூக்கம் வருகிறது .உனக்கும் அப்படித்தானிருக்கும் .அதனால் இன்று …நாம் தூங்குவோம் …” என்று ஒரு கொட்டாவியை ஙெளியேற்றியபடி அவன் தூங்க தயாராக ஏனோ முதலில் திகைத்து , பின் நிம்மதியோ …ஏமாற்றமோ போன்று ஏதோ ஒரு உணர்ச்சி பரவ நின்றாள் மீரா .

அவளொன்றும் உடனே அவனின் அணைப்பை நினைக்கவில்லை .வேண்டவில்லை .நேற்று இரவு வரை அறிமுகமற்ற ஒருவனுடன் …இன்று இரவு உடனே எப்படி …?????என்ற எண்ணம் அவளுள் உண்டு .ஆனால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ள , இருவரின் குடும்பத்தையும் அறிந்து கொள்ள …ஆசைகளை பகிர்ந்து கொள்ள இதற்கு கூட என்ன தடை …?

சரி ..விடு பேசக்கூட முடியாத அளவு அவருக்கு மிகவும் அசதி போல என எண்ணும் போதே அவனது செயல் அவளுக்கு உறுத்தலை அளித்தது .படுக்கை முழுவதும் பரவியிருந்த மல்லிகையையும் , ரோஜாவையும் தனது கைகளால் துப்புரவாக கீழே தள்ளி விட்டுக்கொண்டிருந்தான் .இந்த உதிரிப்பூ கூடைக்கு மட்டுமே ஆயிரம்  ருபாய் கொடுத்திருந்தார் அவள் தந்தை.இவன் இத்தனை அலட்சியமாக அதனை இப்படி  தள்ளுகிறானே …கோபமாக அவனை பார்த்தாள் ..

அவள் பக்கம் பார்த்தாலல்லவா …அவன் அவளது கோபத்தை அறிந்து கொள்ள …? அருகில் ஒருத்தி நிற்கிறாளென்ற உணர்வேயின்றி , மலர்களை சுத்தமாக தள்ளியவன் , அவளுக்கு முதுகு காட்டி திரும்பியபடி படுத்துக்கொண்டான் .

வேறு வழியின்றி விளக்கை அணைத்துவிட்டு கட்டிலின் மறுஓரம் படுத்த மீராவுக்கு , இவ்வளவு நேரமாக இருந்த அந்நியோன்ய உணர்வு போய் , யாரோ ஒரு அறிமுகமற்ற ஆணுடன் தனியறையில் ஒரே கட்டிலில் படுக்க நேர்ந்த சங்கடம் உருவாக தொடங்கியது .




What’s your Reaction?
+1
22
+1
23
+1
1
+1
1
+1
1
+1
3
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!