Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-19 (நிறைவு)

19

அதிகாலையிலேயே தன் அறைக் கதவை தட்டிய சுபவாணியை தூக்க கலக்கத்துடன் ஆச்சரியமாய் பார்த்தான் ரியோ. “வாணி என்னடா?” 

” உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். வெளியே போகலாமா?”

” இப்போதா…?”பனி பொழிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தை பார்த்தபடி கேட்டான். 

“ஆமாம் பத்து நிமிடத்தில் கிளம்பி வாருங்கள். நான் ரிசப்ஷனில் உட்கார்ந்திருக்கிறேன்” போனவளை யோசனையாக பார்த்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

குளிருக்காக கனமான ஜாக்கெட்டும்,பனிக் குல்லாவுமாக அமர்ந்திருந்தவளை பார்த்தபடி தனது ஜெர்கினுக்குள் கை நுழைத்துக் கொண்டே வந்தான்.”போகலாமா?”

அடர்த்தியாக பனி பொழிந்து கொண்டிருக்க பைக்கை கவனமாக செலுத்தினான். “நன்றாக பிடித்துக் கொண்டு உட்கார் வாணி” “பரவாயில்லை” என்று பின்னால் பார்த்தபடி வந்தவள் தன்மேல் உரசாமல் தள்ளி அமர்ந்திருந்ததை கொஞ்சம் கவலையுடன் பார்த்தான் “என்ன விஷயம் வாணி?” 

“சொல்கிறேன் காஞ்ச் மந்திர் ( kanch mandir) போங்க” 

“ஜெயின் கோவிலுக்கா? இந்த அதிகாலையில் பனி நேரத்தில் என்ன அவசரம்?”

” கோவிலுக்கு போனால் கொஞ்சம் மனதிற்கு நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது. போங்களேன்”

அதற்கு மேல் சுபவாணியை மூட் அவுட் ஆக்க விரும்பாமல் பைக்கை வேகமாக செலுத்தினான் ரியோ.

சுபவாணியின் மனதிற்குள் முன் தினம் ரகுநந்தன் பேசிய பேச்சுக்கள் வட்டமிட்டன. “ஆக நீ கடைசியில் என் நினைப்பை சரியாகி விட்டாய். அந்த எதிர் வீட்டுக்காரனை வளைத்து பிடித்து இங்கே கூத்தடித்துக் கொண்டிருக்கிறாய்.பெரிய கோடீஸ்வரனாம், அவன் அப்பா கலெக்டராமே. பரம்பரை சொத்து கொட்டி கிடக்கிறதாமே…அங்கே உன் குடும்பமே பேசிப் பேசி பெருமையடிக்கிறது.ஏய் உண்மையை சொல். இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்காகத்தானே அங்கே எதிர் வீட்டில் வந்து குடியிருந்தான். நான் ஆபீசுக்கு போனதும் அவன் வீட்டிற்கு வந்து விடுவான்தானே. அன்று உன் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு அப்பா அவன்தானே? பெரிய பத்தினி மாதிரி கோர்ட்டில் பேசினாயே… இப்போது உன் பத்தினித்தனம் எங்கே போனது?”

 ரகுநந்தனின் பேச்சில் குழப்பத்துடன் தலையைப் பிடித்துக் கொண்டாள் சுபவாணி.”நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?”

“மும்பையில் என் வீட்டிற்கு எதிர் வரிசையில் மூலை  வீட்டில் குடியிருந்தானே ஒரு பேச்சுலர் அவன்தான் இந்த ரியோ. அவன் கூடத்தான் நீ இப்போது ஸ்டூடன்ட் என்று வேடமிட்டு சுற்றிக் களித்து இப்போது கல்யாணம் வரை வந்து நிற்கிறாய்”




“எதையாவது சொல்லாதீர்கள். ரியோவை நான் முதலில் பார்த்தது இந்த காலேஜில்தான். அவரை அதற்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது”

“அட கண்ணகி தங்கச்சியே இதை என்னை நம்ப சொல்கிறாயா? அன்றைக்கு கதவை உடைத்துக் கொண்டு வந்து உன்னை அள்ளிப் போய் ஆஸ்பத்திரியில் போட்டவனே அவன்தான்.கையை முறுக்கிக் கொண்டு என்னை கொன்று விடுபவன் போலல்லவா வந்தான்?எல்லோரும் தடுத்திராவிட்டால் என்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.அவ்வளவு வெறி அவனுக்கு ,என் மேல் அல்ல…உன் மேல் …உன் அழகான உடம்பு மேல்…”

“சீ…வாயை மூடு ” சீறியவள் ” நான் அவரிடமே கேட்கிறேன் ” என்றாள்.

“கேளு…கேளு.நானும் கூடவே வந்து பார்க்கிறேன்.அவனை விட நீயே பெட்டரென்று என் பின்னால் ஓடி வருவாய் பார்” சவாலிட்டு விட்டு போனான்.

——-

ரியோ பைக்கை கோவில் பார்க்கிங்கில் நிறுத்த சுபவாணி இறங்கினாள். அதிகாலையிலும் மகாவீரரை தரிசிக்க கணிசமான பக்தர்கள் வருவதும் போவதுமாக இருக்க பனிக்குள் வெள்ளை நிறத்தில் மின்னிய அந்த கண்ணாடி கோவிலை கையெடுத்து கும்பிட்டாள்.

 “அங்கே உட்கார்ந்து பேசலாம்” ஓரமாக இருந்த கல் பெஞ்சை காட்டினாள்.அமர்ந்ததும் “நீங்கள் யார் ரியோ?” என்றாள்.

 அலெக்சை விடுத்து ரியோ என்று அவள் அழைத்ததிலேயே துணுக்குற்றவன் அவளை தடுமாற்றமாய் பார்த்தான். “என் வாழ்வில் நீங்கள் எப்போது வந்தீர்கள்? அந்த ரகுநந்தன் சொல்வது போல் அடுத்தவன் பொண்டாட்டியை குறி வைத்து…”

“வாணி….” அதட்டியவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.”மூன்று வருடங்களுக்கு முன்பு…” என்றான் வறண்ட குரலில்.

” தெளிவாக நடந்ததை சொல்லுங்கள். எனக்கு எல்லாம் தெரிய வேண்டும்”

 ரியோ பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தான்.” நீ அடிக்கடி கேட்பாயே வாணி.இத்தனை தகுதிகளை வைத்துக் கொண்டு இங்கே ஏன் பாடம் சொல்லிக் கொடுக்க வந்தீர்களென்று.

உனக்காகத்தான் வாணி.உன்னுடன் அறிமுகமாகிக் கொள்ள,உன் கடந்த கால நினைவுகளிலிருந்து உன்னை மீட்க,உன்னை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க…

இதெல்லாவற்றிற்கும்தான் இந்த கல்லூரியும்,அந்த பி.ஜி எதிர் அறையும்.அனன்யா தோழியாய் கொஞ்ச நாட்கள் அவள் இடத்தை எனக்கு விட்டுக் கொடுத்து உதவினாள்.முன்னதாக தனா மூலம் இந்த கல்லூரிக்கு படிக்க உன்னை வரவழைத்ததும் நான்தான்”

“என்னை சுற்றிலும் பிரமாதமான திட்டமிடல்கள்.எதையும் உணராத மட்டியாக இருந்திருக்கிறேன்.ம்…சொல்லுங்க”

” நான் சென்னை யுனிவர்சிட்டியில் ஒரு ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது தனசேகரும் அங்கே படித்துக் கொண்டிருந்தான்.வேறு பிரிவு என்றாலும், தற்செயலாக இருவரும் நண்பர்களானோம்.படிப்பு முடிந்த பிறகும் எங்கள் நட்பு போனில் தொடர்ந்தது. உனக்கு வரன் பார்க்க ஆரம்பித்த போது தனா உனது போட்டோவையும்,ஜாதகத்தையும் முதலில் அனுப்பியது எனக்குத்தான்.ஆனால் நான் அப்போது அரபிக் கடலுக்குள் இருந்த ஒரு தீவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.அங்கே இன்டர்நெட்டோ,போன் சிக்னலோ கிடைக்காது.மூன்று மாதங்கள் கழித்து நான் கரை திரும்பிய பிறகுதான் தனாவின் செய்தி எனக்கு கிடைத்தது.உன் போட்டோவை பார்த்ததுமே மிகவும் பிடித்துப் போய் தனாவை தொடர்பு கொண்டேன். அவன்…” ரியோ நிறுத்தி தொண்டையை செருமிக் கொண்டான்.

” போன வாரம்தான் உனக்கு திருமணம் முடிந்ததென சொன்னான்.ஜாதியை காரணம் காட்டி உன் பெற்றோர் என்னை நிராகரித்து விட்டதால்,வேறொரு அவனது நண்பனுடன் உனது திருமணத்தை முடித்து விட்டதாய் வருத்தமாக சொன்னான்.பெரிதாய் எனக்கு கிடைக்க வேண்டிய பொருளை இழந்து விட்டதாய் ஒரு விரக்தி தோன்ற மும்பைக்கு வந்துவிட்டேன்.அடுத்த புத்தகம் எழுத வேண்டுமென ஒரு வீடெடுத்து தங்கியிருந்தேன்.அங்கேதான் மீண்டும் உன்னை சந்தித்தேன்”

“லிப்டில் கூட்டம் நிறைய இருக்குங்க, ஜாலியாக பேசிக்கொண்டே படியேறி விடலாம் என்று நீ சொல்லிக் கொண்டிருந்தாய். படிக்கட்டில் ஏறும்போது என்ன ஜாலி வேண்டி கிடக்கிறது உனக்கு… என்று விட்டு அவன் சொன்ன வார்த்தை என்னை திடுக்கிட வைத்தது. அந்த ரகுநந்தனிடம் ஏதோ சரியில்லை என்று என் மனம் சொல்லியது.அன்றுதான் நான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வரிசையிலேயே நீங்களும் இருப்பதை தெரிந்து கொண்டேன்”

” பிறகு ஓரிருமுறை உங்கள் வீட்டை கடக்கும் போதெல்லாம் உன்னுடைய சத்தம் அழுகையாகவோ வலியை தாங்கிக் கொள்ளக் கூடியதாகவோ என் காதில் கேட்கும்.முதலில்  பிரமை என்று கடந்தவன் பிறகு உண்மைதான் என்று தெரிந்து தீவிரமாக உங்களை கண்காணிக்க தொடங்கினேன். ரகுநந்தனிடம் நீ மாட்டிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டேன்”




” ஆனால் இதனை உடனடியாக என்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த அப்பார்ட்மெண்டில் ரகுநந்தனுக்கு மிகவும் நல்ல பெயர். தனாவிடம் ஃபோனில் மெல்ல அவனைப் பற்றி விசாரித்த போது அவன் கொடுத்த தகவல்களும் ரகுநந்தனை மிகுந்த உத்தமனாகவே காட்டியது. புதிதாக திருமணமான கணவன் மனைவிக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்திருந்தேன்”

” நீயாக அவனைப் பற்றி வெளியே வாய் திறந்தால்தான் நான் எதுவும் செய்ய முடியும் என்று புரிந்தது. அப்படி ஒரு நேரத்திற்காக காத்திருந்தேன். எதற்காக எல்லாவற்றையும் வாய்மூடி பொறுத்துக் கொண்டிருக்கிறாய் என்று உன் மேல் நிறைய கோபம் வந்தது. நானாக வந்து நின்றால் என் புருஷனுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் ,நீ யார் கேட்க என்று நீ சொல்லி விடுவாயோ என்ற பயமும் இருந்தது”

” சாரதா ஆன்ட்டி அழைத்து வந்த பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கக்கூட மறுத்து நீ திருப்பி அனுப்பி வைக்க, அந்த பிள்ளைகளுக்கு அதன் பிறகு நான்தான் பாடம் எடுத்தேன். நீ விட்ட செயலை முடித்த திருப்தி எனக்கு. இந்த நிலைமையில்தான் ஒரு நாள் உனது அழுகை சத்தம் கதறலாக கேட்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தேன். ரத்தம் சொட்ட தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தாய். என் உயிரே போவது போல் இருந்தது. அங்கே அந்த நொடியில் நீ இல்லாமல் ஒரு வாழ்வு எனக்கு கிடையாது என்பது புரிந்தது. உன்னை அள்ளி எடுத்து ஆஸ்பிட்டலில் சேர்த்து விட்டு உன் வீட்டாருக்கு தகவல் சொன்னேன்”

” பிறகு தனா மூலமாக உன் விபரம் கேட்டு தெரிந்து கொண்டிருந்தேன். உனக்கு விவாகரத்து கிடைத்ததும் உன் மனச்சோர்வை தனா என்னிடம் சொல்லி வருத்தப்பட உனக்கு தைரியம் சொல்வதற்காகவும், உன்னை முதன்முதலாக நேராக சந்திப்பதற்காகவும் ஆவலுடன் உன் வீட்டிற்கு வந்தேன். அங்கேதான் உன் சொந்தக்காரன் உன்னை ஆசை நாயகியாக வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு ஒரே உதை, கீழே சுருண்டு விழுந்தான். தனா சூழ்நிலை சரியில்லையென்று என்னை அவசரமாக வெளியே அனுப்பிவிட்டான்”

” உனது வீடு இருக்கும் சூழலில் அங்கிருந்து உன்னால் பழைய வாழ்வில் இருந்து மீள முடியாது என்றே இந்தூர் கல்லூரியில் எனது செல்வாக்கை பயன்படுத்தி உனக்கு சீட் வாங்கி விட்டு தனசேகர் மூலமாக உன்னை இங்கே வரவழைத்தேன். இங்கு வந்த பிறகும் உன்னுடைய பழைய வாழ்க்கை சோகத்திலேயே இருந்த உன் கவனத்தை திசை திருப்பத்தான் கல்லூரியில் பி.ஜியில் உன்னிடம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன். நிகழ்வை சமாளிக்க நீ கடந்த காலத்தில் இருந்து மீளத் துவங்கினாய்”

” அனன்யா முடிந்த அளவு என் காதலுக்கு உதவினாள். ஆனால் வலி என்று அன்று இரவு அவள் வீட்டிற்கு போனதெல்லாம் உண்மைதான். வெகு நாட்கள் கழித்து இங்கே வந்த பிறகுதான் உன் விசயத்தில்  சந்தர்ப்பங்கள் எனக்கு சாதகமாக உருவாகத் துவங்கியது. அதனை பயன்படுத்திக் கொண்டேன்” ரியோ தன் பக்கத்து விளக்கங்களை சொல்லி முடித்தான். 

“அதெப்படி உங்களுக்கு என் மேல் அவ்வளவு பரிவும்.. பாசமும் ?”

“பார்த்ததும் உன்னை பிடித்துப் போனது ஒரு பக்கம், பிறகு…” கொஞ்சம் தயங்கியவன் தலையை உலுக்கி தொடர்ந்தான். “இன்னொரு காரணம் என் அம்மா. என் தாய் தந்தையின் வாழ்க்கை. உன்னுடைய திருமண வாழ்க்கையின் சோகத்தில் பாதியாவது  அவர்கள் வாழ்விலுமிருக்கும். காதல் திருமணம் தான். ஆனாலும்  வீட்டில் என் அப்பாவின் அதிகாரம் உயர்ந்து நிற்கும். வெளியில் அதிகாரம் செய்த பழக்கமோ என்னவோ வீட்டிற்குள்ளும் அப்படியே அம்மாவை நடத்துவார், அவருக்கு அடிமை போல… அம்மா இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருடைய பேச்சுக்கு கீழ்ப்படிந்து போய்விடுவார். இந்த என் வீட்டு சூழ்நிலை பிடிக்காமல்தான் நான் ஒதுங்க ஆரம்பித்தேன். இதென்ன இந்த பெண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்கு கோபம் வரும். உன்னை கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ரகுநந்தன் வேறுவிதம் என்பதை இரண்டு நாட்களிலேயே புரிந்து கொண்டேன்”

சுபவாணி எழுந்து கொண்டாள். “கோவிலுக்குள் போகலாம்” நடந்தவளின் பின் குழப்பமாக போனான் ரியோ.. 

கோவிலுக்குள் நுழைந்ததும் குளிருக்காக  தான் போட்டிருந்த குளிர் உடையையும் தொப்பியையும் கழட்டினாள் சுபவாணி. அவளைப் பார்த்து ரியோவின் கண்கள் விரிந்தன.பட்டுப் புடவையும் நகையும் தலையில் பூவுமாக கல்யாண பெண் போன்ற அலங்காரத்தில் இருந்தாளவள். 

ரியோவின் கையை பற்றி கொண்டவள் “வாங்க சாமி கும்பிடலாம்”தீர்த்தங்கரரை கண் மூடி தரிசித்தவள், அங்கிருந்த பண்டிட்டிடம் “நாங்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறோம். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றால் சத்தமாக.

” ரியோ சந்தோசமாக அவள் தோளணைத்துக்கொள்ள, இருவரும் பண்டிட்டின் பாதம் பணிந்து ஆசி பெற்றுக் கொண்டனர். ரியோவின் அணைப்பிலிருந்து நகராமலேயே கோவில் முழுவதும் இருந்த கண்ணாடிகளில் தங்கள் இருவர் உருவமும் பிரதிபலிக்க சுற்றி நடந்தாள் சுபவாணி.

 அப்போது அவள் எதிரே ஆத்திரத்துடன் வந்து நின்றான் ரகுநந்தன்.” சீ…நீயும்  ஒரு பெண்ணா? தாலி கட்டிய கணவன் முன்னாலேயே இன்னொருவனை கட்டிக்கொண்டு…” 

“ஏய்…”ரியோ கோபத்துடன் அவனை நெருங்கும் முன்பே சுபவாணி சப்பென அவனை அறைந்திருந்தாள். ” சீ நாயே வாயை மூடுடா” மீண்டும் அறைந்தாள். “இதோ இவர் என் கணவர்.நாங்கள் இருவரும் அடுத்த வாரம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். எங்கள் ஜோடிப் பொருத்தத்தை இங்கே பாரேன்” சுற்றி அவர்களை பிரதிபலித்த கண்ணாடியை பெருமையாக காட்டினாள்.

“என் முன்னால் நிற்காதே, நின்றால் எவனோ தெருவில் போகும் ரவுடி என்னிடம் வம்பு செய்கிறானென்று கோவிலில் அழைத்து சொல்லி விடுவேன். ஆளுக்கு நான்கு அறை கொடுத்தால் நீ என்ன ஆவாய் தெரியுமா ?” பெண் சிங்கமாய் நின்று கர்ஜித்த தன்னவளை காதல் பொங்க பார்த்தான் ரியோ.

 நினைத்தது நிறைவேறாத தோல்வியில் தலையை தொங்கவிட்டபடி வெளியேறினான் ரகுநந்தன்.

கோவிலில் இருந்து வெளியேறிய பின்பு இன்னமும் தன்னை பிரமிப்பாய் பார்த்து நின்ற ரியோவை புன்னகையுடன் பார்த்த சுபவாணி அவனை மிக நெருங்கி அவன் கழுத்தில் தன் கைகளை கோர்த்து இழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.ரியோவின் பிரமிப்பு அதிகமானது. “என்னுள் வந்திருக்கும் இந்த தெளிவு அதோ அந்த ரகுநந்தன் ஏற்படுத்தியது.நீங்கள் சற்று முன்பு சொன்னீர்களே இந்திய  பெண்களை பற்றி, அது உண்மைதான்.நாங்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டோம்.ஒரு முறை திருமணம் முடிந்து விட்டால் அவனே உன் தெய்வம் என்று காலம் காலமாக மனதில் பதித்து வளர்க்கப்பட்டோம்.இந்த வளர்ப்பு முறை தந்த தைரியத்தில்தான் ரகுநந்தன் அப்படி பேசினான்.பக்கத்து வீட்டுக்காரனுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாய்…ஐயோ அவன் உன்னை தப்பாக பார்த்தான் தெரியுமா? என்ற அவனது பேச்சுக்களில் நான் இல்லையில்லை நான் பத்தினி என்று கதறியபடி வந்து அவன் கால்களில் விழுந்து விடுவேனென்று மனக்கோட்டை கட்டினான் “




“ஆனால் இங்கே இருப்பது அந்த ரகுநந்தனிடம் மாட்டிக் கொண்டு விழித்த அப்பாவி சுபவாணி கிடையாது என்று அவனுக்கு தெரியவில்லை..நான் அலெக்ஸான்டர் ரியோவின் மாணவி ,அலெக்ஸின் காதலி.இவள் தைரியமானவள்.எதற்கும் துணிந்து நிற்பவள்.இதனை அவன் அறியவில்லை.அவன் மோசமாக பேசப் பேச உங்களை என்னால் விட முடியாது என்பதை உணர்ந்தேன்”

“ஆனாலும் எனக்கு உங்களிடம் இருந்து விளக்கங்கள் தேவைப்பட்டது. அதனை வெளியே அவனது கண் பார்வையிலேயே இந்த புனித கோவிலில் வைத்து பெற வேண்டும், என்றுதான் அலங்காரம் செய்து கொண்டு உங்களையும் இங்கே அழைத்து வந்தேன்.நரியாய் நம் பின்னாலேயே ஒளிந்து கொண்டு நம்மை வேவு பார்த்துக் கொண்டிருந்தான் அவன். கண்ணார நம்மை பார்த்துவிட்டு போகட்டும் என்றுதான் உங்களோடு சேர்ந்து கோவில் முழுவதும் சுற்றினேன். பண்டிதரிடமும் என் முடிவை தெளிவாக சொன்னேன்”

ரியோ உற்சாகத்துடன் சுபவாணியை  இறுக்கி அணைத்துக் கொண்டான். “எங்கே நீ என்னை நிராகரித்து விடுவாயோ என்று எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா?”

“ஒருவேளை அங்கே நான்கு சுவருக்குள் வீட்டிற்குள் அடைந்து கிடந்திருந்தேனானால் அந்த ரகுநந்தன் பேசியது போல் கொச்சையாக உங்கள் அன்பிற்கு ஒரு பெயர் வைத்திருப்பேன். ஆனால் எனக்கு வேறோர் பரந்த உலகையும் பல்வேறு குணாதிசயம் உள்ள மனிதர்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். என்னால் இப்பொழுது சுயமாக சிந்திக்க முடிகிறது. என் மேல் பேரன்பு வைத்திருக்கும் உங்களை எப்படி ஒதுக்குவேன் அலெக்ஸ்?”

“என்னையே நான் உணர்ந்து கொண்ட நாள் இது. அந்த ரகுநந்தன் என் வாழ்வில் சில நேரம் இருந்துவிட்டு களைந்து போன மேகம். நீங்கள்தான் என் வானம் என்று உணர்ந்து கொண்டேன். இனி எந்த உறுத்தலும் இல்லாமல் நம் வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கலாம்”

சுபவாணி உணர்வு பொங்க பேச, அவர்களது சுப வாழ்விற்கு கட்டியம் கூறுவது போல் ஆதவன் விழித்தெழ ஆரம்பித்தான் .இருள் விலகி ஒளி வர ஆரம்பித்தது. பூமியில் மட்டுமன்றி சுபவாணி – ரியோவின் வாழ்விலும் இனி வெளிச்சமே.

                     நிறைவு




What’s your Reaction?
+1
46
+1
25
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!