Uncategorized

நந்தனின் மீரா-25

25

கருவிழி மிரள கனிமொழி குழற
அச்சத்தை அடுக்கி சூழும்
இந்திர  தனிமையிலும்
உன் பொல்லா சொற்களில் ஒளிந்திருக்கும்
சொல்லா காதலையே தேடுகிறேன்

கொல்வதேயானாலும் சீக்கிரம்
வாடா  கள்ளா …

குமரேசன் சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவன் .திருமணம் முடிந்த இரண்டே வருடங்களில் அம்மாவும் மறைய பெரியவர்களென அதட்ட அவனுக்கான நெருங்கிய உறவில்லாதவன் .அதனால் பெரியவர்களாக போய் நியாயத்தை எடுத்து சொன்னால் அவன் மாறிவிடுவான் என அனைவருமே நினைத்தனர் .அதனால்தான் ஒருவருக்கு இருவராக போகும்படி பாட்டி ஆலோசனை சொன்னார் .

ஆனால் …

முதலில் தன் தவறை கண்டுபிடித்து விட்டனரே என குறுகினாலும் , விரைவிலேயே சுதாரித்துக் கொண்டவன் …. அந்தப் பெண் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவள்  , என்னை நம்பி வந்துவிட்டாள் .அதனால் அவளை விட முடியாது என்றான் .அதற்காக பிரவீணாவையோ , திவ்யாவையோ ஒதுக்க போவதில்லை என்றும் , அவர்களும் எனக்கு மிகவும் வேண்டும் என்றும் , இரு குடும்பத்தையும் வைத்து வாழும் அளவு தனக்கு திடம் இருப்பதாகவும் உறுதியாக கூறினான் .

ஓங்கி சுவரில் குத்திய நந்தகுமாரின் வேகத்தில் அவனது ஆத்திரத்தை உணர்ந்தாள் மீரா .வாய்க்குள் அவன் முணுமுணுத்த வார்த்தைகள் நிச்சயம் கேட்ககூடிய வசவாக இருக்காது என அவளுக்கு தோன்றியது .

” இரண்டு  வருடமாக இந்த கண்றாவியைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் …” முடிவை முன்பே தெரிந்திருந்த பிரவீணா விரக்தியுடன் சொன்னாள் .

” என்னண்ணா அவர்தான் கோபக்காரர் .எடுத்துக் , கவிழ்த்தேன் என பேசி வைப்பார் .நீங்கள் பக்குவமாக எடுத்து சொல்லி மாப்பிள்ளைக்கு புரிய வைத்திருக்க வேண்டாமா …? ,”

மனைவியை முறைத்தார் குருநாதன் .இவளுக்கு அண்ணன் முன்னால் என்னை எப்படியாவது ஒரு படியாவது குறைத்துவிட வேண்டும் .பல்லை கடித்தார் .

” இல்லம்மா …மாப்பிள்ளை ரொம்ப அமைதியாக பொறுமையாகத்தான் பேசினார் .பிரவீணா வீட்டுக்காரர் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை .பொறுமையாக நாங்கள் பேசுவதை முழுவதும் தலை குனிந்து கேட்டுவிட்டு பிறகு அவர் சொன்னதையே சொல்கிறார் கிளிப்பிள்ளை போல ….” என்றார்  சண்முகசுந்தரம் .




” அப்படியே ஓங்கி ஒரு அறை விட்டிருக்க வேண்டியதுதானே மாமா …”

” டேய் நந்து பேசாமல் இரு .உன்னை அனுப்பினால் இப்படி ஏதாவது செய்வாயென்றுதான் உன்னை போகாதே என்றேன் …” பாட்டி அதட்டினார்.

எல்லோரும் பாட்டி வீட்டில் வைத்துதான் பேசிக்கொண்டிருந்தனர் .

” நீங்கள் அனுப்பினாலும் நான் போகப் போவதில்லை …நேரில் பார்த்தால் அடிக்காமல் வரமாட்டேன் ….” முணுமுணுத்தான் .

” இப்போ என்ன செய்வது சண்முகம் …? ” பாட்டி சண்முகசுந்தரத்திடமே ஆலோசனை கேட்டார் .

” எனக்கும் ஒன்றும் ஓடவில்லை அத்தை .திரும்ப திரும்ப என் பொண்டாட்டியையும் , பிள்ளையையும் அனுப்பி வைங்கங்கிறாரு .பேசாமல் அனுப்பி வைத்து பார்க்கலாமா என யோசிக்கிறேன் ….”

பிரவீணாவின் முகம் நிராசையுடன் சோர்ந்தது .

அவளை கவனித்தபடியிருந்த மீரா ” அதெப்படி அனுப்ப முடியும் …? ” என்றாள் வேகமாக .

” அப்படியெல்லாம் அனுப்ப முடியாது …” என்ற நந்தகுமாரின் குரலும் அவள் குரலோடு சேர்ந்து ஒலித்தது .

சண்முகசுந்தரத்தின் பார்வை கூர்மையாக மீராவின் மேல் படிந்தது . ” பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறோமில்லையா …? ” என்றார் .

” அவள் சொன்னதில் என்ன மாமா தப்பு …? இந்த மாதிரி ஒரு தரங்கெட்ட ஆளுடன் வாழ நான் என் அக்காவை அனுப்பபோவதில்லை ….” நந்தகுமார் .

” இங்கே பாருங்க மாப்பிள்ளை நாம் பெண்ணை பெற்றவர்கள் .கொஞ்சம் தாழ்ந்துதான் போகவேண்டும் ….” சண்முகசுந்தரம் .

அதுதான் திருமணமே இல்லையென்றாகிவிட்டதே …பிறகென்ன மாப்பிள்ளையென்ற கொஞ்சல் வேண்டிக்கிடக்கிறது …சண்முகசுந்தரத்தின் தாய்மாமன் உறவை மறந்து , மிருணாளினியின் அப்பாவாக மட்டுமே அவரை பார்த்தாள் மீரா .

” பொறுத்து போவதற்கும் ஒரு அளவு இருக்கிறது மாமா .ஒரு கணவன் அவன் மனைவிக்கு செய்யும் அதிகபட்ச துரோகம் இது .இதை பொறுத்து போகவோ , பொறுத்து போகச் சொல்லவோ என்னால் முடியாது .”

” ஆனால் நமக்கு இப்போது வேறு வழியில்லையே நந்து ” சுந்தரி அழுகையுடன் குறுக்கிட்டாள் .

” எதற்கு வழி …? இங்கே சாப்பாடு இல்லையென்றா அக்கா  அங்கே போகவேண்டும் …? அதெல்லாம் நாங்கள் நன்றாகவே செய்வோம் .அவர் ஒழுங்காக வாழ வந்தால் சரி .இல்லாவிட்டால் அக்கா இங்கேயே இருக்கட்டும் ….,”

” எதுவானாலும் யோசித்துதான் செய்யவேண்டும் நந்து …” பாட்டி .

” இல்லை மாப்பிள்ளை அப்படி எடுத்தேன் , கவிழ்த்தேன்னு பேச முடியாது ….,”

” ஒரு அப்பனாக என் மகளை அனுப்ப எனக்கும் பிடிக்கவில்லைதான் ஆனால் வேறு வழியில்லையே …”

” வேண்டாம் மாமா ….அனுப்ப வேண்டாம் …”

” நீ பேசாதேம்மா …” சண்முகசுந்தரம் திரும்ப அதட்ட ….

” ஏன் ஆளாளுக்கு கத்திக்கொண்டிருக்கிறீர்கள் …? இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் வரை நான் அங்கு போகப் போவதில்லை ….” பாதிக்கப்பட்டவள் தன் முடிவை சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள் .

அனைவரும் அமைதியானார்கள் .ஏனோ இந்த முடிவு ஒரு வகையில் எல்லோருக்குமே திருப்தியளித்தது .

அதன்பிறகு எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு மயான அமைதியில் மூழ்கியிருந்தது .சமையல் செய்ய ஆளிருந்தாலும் , சாப்பிட ஆளில்லை .ஆண்கள் கிளம்பி சென்று விட பெண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அஞ்சி ஆளுக்கு ஒரு இடத்தில் முடங்கியிருந்தனர் .

” அத்தையும் , மாமாவும் சாப்பிடவில்லை …” இரவு வீட்டிற்கு வந்த கணவனிடம் தகவல் சொன்னாள் மீரா .

” நீ சாப்பிட சொல்லியிருக்கலாமே ….,”

” சொன்னேன் ஆனால் ….”

” சரி நீ போய் அம்மாவிடம் சாப்பாட்டை கொடுத்து அப்பாவிற்கு தரச் சொல்லு …”

” வேண்டாங்க , மாமா ஏற்கெனவே உங்கள் மாமா வந்ததிலிருந்து அத்தை மேல் கொஞ்சம் கோபமாக இருக்கிறார்கள் …ஏதாவது பெரிய சண்டையாக …வந்து விட போகிறது ….” என அடிப்பது போல் கை காட்டினாள் .

” ம் …ஆனால் நமக்கு வேறு வழியில்லை .அப்பா சாப்பிடவில்லையென்றால் அம்மாவும் சாப்பிட மாட்டார்கள். அப்பா சாப்பிட்ட தான் அம்மா சாப்பிடுவாங்க .நீ போய் சாப்பாடு கொடுத்து அனுப்பு …”

மருமகளை கணவருக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிவிட்டு படுத்திருந்த சுந்தரி …அவர் சாப்பிடவில்லை என மருமகள் சொல்லவும் பற்றி தானே உணவு கொண்டு போனாள் .

கொஞ்ச நேரம் வெளியே நின்று எதுவும் சண்டை வந்துவிடுமோ என பயந்தபடி இருந்தனர் நந்தகுமாரும் , மீராவும் . கொஞ்சநேரத்தில் சுந்தரியின் அழுகை சத்தம் கேட்க வேகமாக இருவரும் எட்டி பார்த்தபோது …

கட்டிலில் உட்கார்ந்திருந்த குருநாதனின் கால்களில் தலையை சரித்து கீழே உட்கார்ந்தபடி அழுது கொண்டிருந்தாள் சுந்தரி .சமாதானமாக அவள் தலையை வருடியபடியிருந்தார் குருநாதன் .

கலங்கிய கண்களை துடைத்தபடி வந்துவிட்டனர் நந்தகுமாரும் , மீராவும் .

நாட்கள் ஓடியதே தவிர குமரேசனிடம் மாற்றமில்லை .திவ்யாவிற்கு மூன்று மாதத்தில் சடங்கு வைப்பதாக நாள் குறித்திருந்தனர் .அதனை அவளுடைய அப்பா இல்லாமல் எப்படி நடத்துவது ….?

” நீங்கள் ஒரு தடவை உங்கள் மச்சானிடம் பேசி பாருங்களேன் ….” கணவனிடம் கேட்டாள் மீரா .

” நானா …? அப்பா , மாமாவிடம் பேசுவது போல் என்னிடம் பேசினாரானால் அந்த ஆளை அடிக்காமல் நான் வரமாட்டேன் .எதற்கு பிரச்சினை …? “




” எனக்கென்னவோ அவர் உங்களிடம் அப்படி பேச மாட்டாரென தோன்றுகிறது .உங்கள் மீது அவருக்கு தனி அபிமானம் இருக்கிறது ….”

” மதிப்பு , மரியாதை …அபிமானமெல்லாம் இந்த விசயத்தில் செல்லாது மீரா …”

” அப்படியே இருக்கட்டுமே . .நீங்கள் ஒரு வார்த்தை …சும்மா நலம் விசாரித்து விட்டுத்தான் வாங்களேன் …”
கைகளை கணவனின் கழுத்தில் மாலையாக்கி அவன் விழிகளுக்குள் பார்த்து …” ப்ளீஸ் …” என்றாள் .

” போகிறேன் ….ஆனால் ஒரு கண்டிசன் ..நீயும் என்னுடன் வர வேண்டும் ….”

” நான் எதற்கு ….? “

” நீ பக்கத்தில் இருந்தால் எனக்கு கொஞ்சம் எனர்ஜிட்டிக்காக இருக்கும் மீரா …வாயேன் ப்ளீஸ் ….” அவள் இடையில் கைகளை கோர்த்து தன்னருகே இழுத்துக் கொண்டான் .

“சரி ….சரி வருகிறேன் .விடுங்கள் ….” வேகமாக விடுபட முயன்றவளின் இடையை வருடியபடி மெல்ல விடுவித்து ….

” நான்தான் விட்டுக்கொண்டே இருக்கிறேனே .பிறகு ஏன் அவசரம் …? ” என்றான் .

நெஞ்சம் படபடக்க ஓடிவந்துவிட்டாள் மீரா .

அன்று மாலையே கோவிலுக்கு போவதாக சொல்லவிட்டு இருவரும் குமரேசனை பார்க்க சென்றனர் .




What’s your Reaction?
+1
18
+1
17
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
11 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!