Serial Stories

சதி வளையம் -13

13 தர்மா, நீ ஒரு ஜீனியஸ்!

அன்று சனிக்கிழமையாதலால் தர்மா காலையிலேயே நங்கநல்லூர் நரசிம்மர் கோவிலுக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் போய்விட்டான். அவன் திரும்பிய போது, ஹால் முழுக்கப் பிளாஸ்டிக் பைகளும் காகிதப் பைகளும் சணல் பைகளும் பரப்பப்பட்டு, நடுவில் தன்யாவும் தர்ஷினியும் அமர்ந்திருந்தார்கள்.

“என்னது ஒரே ‘ஷாப்பிங் பாக்’கா பெருக்கெடுத்து ஓடுது?” என்று வியப்பாய்க் கேட்டான் தர்மா.

“ஒரு சேஞ்சுக்காக நேத்தி சாயங்காலம் ஷாப்பிங் போனோம், தர்மா. இன்னிக்கு முக்கியமான நாள். இந்தக் கேஸைப் பற்றி நமக்குத் தெரிஞ்சதைப் பாஸ்கர் குடும்பத்தோடையும் போஸ் சாரோடையும் பகிர்ந்துக்கப் போறோம்” சீரியஸாய்ச் சொன்னாள் தர்ஷினி.

“அதெல்லாம் சரி. அதுக்காக இவ்வளவு சாமான் வாங்கணும்னு இருக்கா என்ன? ஒவ்வொரு கேஸுக்கும் நீங்க இவ்வளவு செலவு பண்ணினா, நான் ரொம்ப சீக்கிரம் ஓட்டாண்டி தான்” – பொய்க்கோபத்தோடு சொன்னான் தர்மா.

“புரியாமப் பேசாதே தர்மா. இன்னிக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னேன் இல்லையா? அதனால் நம்ம கவனம் எல்லாம் ஒருமுகப்படணும், எல்லாக் கேள்விக்கும் விடை தெரியணும். ஒரு முழு உருவம் கிடைக்கணும். அதுக்கு மனது ரிலாக்ஸ் பண்ண வேண்டியது ரொம்ப அவசியம்” என்று எடுத்துச் சொன்னாள் தர்ஷினி.

தர்மா தலையாட்டி வைத்தான். பிறகு, “தன்யா ஏன் மௌனமா இருக்கா? இன்னும் ரிலாக்ஸேஷன் முடியலையா? ஏதாவது தியானம் பண்றாளான்ன?” என்று புன்னகையோடு கேட்டான்.

“ஆமாம், தியானம் மாதிரி தான். திங்க் பண்ணிண்டிருக்கேன்” என்றாள் தன்யா, அவ்வளவு கவனம் இல்லாமல்.

“எதைப் பற்றி?”




தன்யா உடனே பதிலளிக்கவில்லை. எங்கோ வெறித்தாள். பிறகு, “இன்னும் ஒரு கேள்விக்குப் பதில் தெரியணும் தர்மா. சின்னக் கேள்விதான். ஆனால் இது தான் முதல் கேள்வி” என்றாள் யோசனையாக.

இன்னும் முதல் கேள்விக்கே பதில் தெரியாமல் இவர்கள் இன்று எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள் என்று தர்மா நினைத்துக் கொண்டான், சொல்லவில்லை. பிறகு அங்கிருந்த பொருட்களை ஒரு நோட்டம் விட்டான். பெரும்பாலும் சுரிதார்கள், ‘டாப்ஸ்’கள், முழு ‘ஸ்கர்ட்’கள் என்று உடைகள் தானிருந்தன. நடுநடுவே வேறு பொருட்கள் கண்சிமிட்டின.

“என்னது ஜுவல்பாக்ஸ் எல்லாம் இருக்கு? நகை வாங்கறதும் ரிலாக்ஸேஷனா?” என்றான் தர்மா, பொய்யான பதட்டம் காட்டி.

“ஓவரா சீன் போடாதே, சரியா! இதெல்லாம் ஒன் கிராம் கோல்ட் நகைகள்.” சொன்ன தர்ஷினி ஒவ்வொரு பெட்டியாகப் பிரித்துக் காட்டினாள்.

“ரொம்ப அழகாக இருக்கு எல்லாமே” என்று தர்மாவால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எல்லாமே கலை நயம் மிகுந்தவையாக இருந்தன. கண்ணைப் பறிக்காமல் அடங்கிய அழகாய் மிளிர்ந்தன.

தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியைத் திறந்தான் தர்மா. அதில் ஒரு நகை செட் இருந்தது. தோடு, நெக்லஸ், நீண்ட ஆரம், கங்கணம், வளையல்கள், மோதிரம், கல்வைத்த கொலுசு வரை எல்லாம் இருந்தன.

“இரண்டு பேரில் யாருக்காவது கல்யாணமா? சொல்லவே இல்லையே” என்று சிரித்தான் தர்மா.

“பேத்தாதே! அது போஸ் சார் அக்காவுக்கு எங்க பிரசண்ட்.”

இத்தனை காலம் போஸோடு பழகியிருக்கிறோம், அவனுக்கு ஒரு அக்கா உண்டு என்பது நாம் வெகுகாலத்துக்குப் பிறகுதான் அறிந்தோம், இவர்கள் இரண்டே நாளில் எப்படித் தெரிந்து கொண்டார்கள் என்று வியந்தான் தர்மா.

“என்ன, அதை அப்படிப் பார்க்கற?” தர்ஷினி சிரித்துக் கேட்டாள்.

“சூப்பரா இருக்கு. எக்கச்சக்க விலை கொடுத்துத் தங்கம் வாங்குவானேன்? இப்பல்லாம் தங்கத்தோட டிசைன்ல கவரிங் வறது. தங்கம் கவரிங் மாதிரி இருக்கு. ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல…”

தர்மா சொல்லி முடிப்பதற்குள் “என்ன சொளசொளன்னு பேச்சு! என்னைக் கொஞ்சம் யோசிக்க விடேன் தர்மா! இந்தா நீ ரொம்பநாளாய்க் கேட்ட ப்ளூடூத் ஸ்பீக்கர். எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணு” என்றாள் தன்யா கோபமாக.




“நான் தர்ஷினியோட தானே பேசிட்டிருக்கேன். உன்னை என்ன பண்ணினேன்?” என்று வெறுப்பாய்க் கூறிவிட்டுக் கதவு நோக்கிப் போனான் தர்மா.

அவன் வெளியே போவதற்குள் “தர்மா!” என்று கத்தினாள் தன்யா.

“இப்ப என்ன ஆச்சு?” என்றவாறே திரும்பினான் தர்மா.

“கைகொடு தர்மா!” என்று ஓடிவந்து அவன் கையைக் குலுக்கினாள் தன்யா.

“என்ன, ஏதோ பதில் தெரியணும்னு சொன்னியே, தெரிஞ்சுடுச்சா? கண்டுபிடிச்சுட்டியா?” என்று கேட்டான் தர்மா.

“பதில் தெரிஞ்சுடுச்சு. ஆனா அதைக் கண்டுபிடிச்சது நீதான்!” என்றாள் தன்யா. “வா, தர்ஷினி! ஏகப்பட்ட வேலை இருக்கு. கமான் கமான்!” என்று கூவினாள்.

அவர்கள் வெளியேறும் முன்பு தன்யா ஒரு விநாடி நின்று சொன்னாள் – “தர்மா! நீ ஒரு ஜீனியஸ்!”

கதவு அறைந்து சாத்தப்பட்டது.

கதவையே பார்த்தவண்ணம் பிரமித்துப்போய் நின்றான் தர்மா.




 

What’s your Reaction?
+1
7
+1
2
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!