Serial Stories ஓ…வசந்தராஜா…!

ஓ…வசந்தராஜா…!-1

1

“கனியே… கட்டிக் கரும்பே… தேவதையே… எங்கள் வீட்டு மகாலட்சுமியே… உன் பட்டுப்போன்ற பாதங்களை எடுத்து வைத்து கொஞ்சம் இங்கே வர முடியுமா?” சைந்தவியின் குரல் பாசத்துடன் தேனொழுக கீழிருந்து அழைத்தது.

 லேப்டாப்பில் பார்வையை பதித்திருந்த அஸ்வினி தனக்குள் சிரித்துக் கொண்டாள். இது ஆரம்பம் தான். இன்னமும் 5 நிமிடங்களில் இந்த அழைப்பு மாறும். தேவதை ராட்சசியாகும்… மகாலட்சுமி மூதேவியாகும்.  அந்த வேடிக்கை தருணத்தை எதிர்பார்த்தபடி தொடர்ந்து லேப்டாப்பை தட்டினாள்.

” ஏய் செல்லக்குட்டி… பட்டுக்குட்டி…பாப்பு குட்டி…” சைந்தவியின் அழைப்பு இப்போது வேறாகியுருந்தது. வீட்டின் கடைக்குட்டி செல்லக் குழந்தையை அழைக்கும் அழைப்பாக இருந்தது. அஸ்வினி இதனையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தாள்.

 அடுத்த நிமிடமே “ஏய் நாயே… கூப்பிடுறது காதில் விழலையா?” அதட்டல் வந்தது. அஸ்வினி புன்னகைத்தபடி இதற்கும் மௌனம் சாதித்தாள். இப்படி சகோதரியை சீண்டுவதில் அவளுக்கு ஒருவித ஆனந்தம்.

” அடியே ராட்சசி! காது கேட்கிறதா? இல்லையா? அது என்னடி உனக்கு அவ்வளவு திமிர்? இப்போ நீ வரலை… நானே உள்ளே வந்தேன்னா காலை வெட்டிடுவேன்” 

அக்கா வயலென்ட் மோடை ஆன் செய்து விட்டாள்.இப்போது  போகாவிட்டால் இறுதியாக சொன்னதை செய்தும் விடுவாள். தமக்கையின் ஆத்திர குணம் அறிந்து வைத்திருந்த அஸ்வினி லேப்டாப்பை ஷட்டவுன் செய்துவிட்டு எழுந்து வந்தாள். 

இடுப்பில் இரு கைகளையும் தாங்கி ஹாலில் நின்று கொண்டிருந்தாள் சைந்தவி. அவள் முகத்தில் அனல் பறந்து கொண்டிருந்தது.விரித்து போடப்பட்டிருந்த தலைமுடி காற்றில் பறந்து  அவள் தலையைச் சுற்றி  ஒரு வட்டம் அமைத்திருக்க ருத்ரகாளியாக நின்று கொண்டிருந்தாள். 

“கூப்பிட்டாயா அக்கா?”சாதாரணமாக கேட்டாள் அஸ்வினி. 

“அடியேய் ஒரு மணி நேரமாக கத்திக் கொண்டிருக்கிறேன். உன் காது டமாரம் ஆகிவிட்டதா? வந்து தொலைடி எருமை” இவ்வளவு அழகாக அக்கா பேசுவது உள் மனதை குத்தினாலும் 22 வருடங்களாக அவளை இப்படித்தான் பார்த்து வருகிறாள் அஸ்வினி.

 சிறு வயது முதலே எதிலும் அலட்டல், ஆர்ப்பாட்டம் ,அதட்டல். இதை தவிர சைந்தவிக்கு வேறு தெரியாது. மூத்த பெண் என்ற சலுகையோ அல்லது எனக்கு தாயாக முடியும் என்று நிரூபிக்க வந்த பிள்ளை என்பதால் தாய்மார்களுக்கு முதல் குழந்தையின் மேல் அதீத பிரியம் இருக்குமாமே, அப்படி அம்மாவின் பிரியத்தை பெற்று விட்டவள் என்ற காரணத்தினாலோ சைந்தவி இப்படியேதான் இருக்கிறாள்.




 

 இரண்டாவது பிள்ளையும் பெண்ணா என்ற ஒரு சலிப்போ என்னவோ அம்மா சரிதா அஸ்வினியிடம் ரொம்ப ஈடுபாட்டுடன் இருப்பதில்லை. இன்னமும் நான் ஆண்தான் என்று உலகிற்கு நிரூபிக்க பிறந்த பிள்ளை கடைசி பிள்ளை. அதனால் அவர்கள் எப்போதுமே அப்பா செல்லம் என்ற உலக வழக்கோ அல்லது அம்மா கொஞ்சம் ஒதுங்குவதால் இயல்பாக அப்பாவிடம் வந்த நெருக்கமோ! அஸ்வினி அப்பா சுரேந்தரின் செல்லம்.

” அக்கா எதற்காக இப்படி கத்துகிறாய்? கொஞ்சம் சத்தமாக பேசினாலே பக்கத்து வீடுகளுக்கு கேட்கும். நாம் இருப்பது அந்த மாதிரி ஒரு அப்பார்ட்மெண்ட். உனக்கு நினைவில் இல்லையா?” தடவைக்கு தடவை உயர்ந்து கொண்டே போன சகோதரியின் குரலில் எரிச்சலடைந்து கேட்டாள். 

” அவ்வளவு அக்கறை உனக்கு இருந்தால் முதல் முறை நான் கூப்பிட்ட போதே வந்திருக்க வேண்டும். இதோ  நான்கு எட்டு வைத்து வரக்கூடிய உள் அறைக்குள் இருந்து கொண்டு என் சத்தம் கேட்கவில்லையா?”

” அந்த நான்கு எட்டை வைத்து நீயே உள்ளே வந்து கூப்பிட்டிருக்கலாமே?”

” ஓஹோ மகாராணியை நான் நேரில் வந்து அழைத்தால்தான் வருவீர்களோ? உனக்கெல்லாம் திமிர்டி.நான் உன்னையே நம்பியிருக்கிறேன் என்ற எண்ணம் உனக்கு”

” ஐயோ அக்கா ஆளை விடு, உன்னோடு சண்டை போட எனக்கு நேரமில்லை. காலேஜ் பவுண்டர்ஸ் டே டைம்கா. நிறைய வேலைகள் இருக்கிறது. நீ முதலில் கூப்பிடும் போது ஒரு முக்கியமான கோடிங் தகராறு பண்ணிக் கொண்டிருந்தது. அதனால் தான் வர நேரமாகிவிட்டது” பாந்தமாகவே சகோதரியிடம் பேசினாள்.

” இப்போது என்ன சொல்ல வருகிறாய்? உனக்கு வொர்க் ப்ரஷர். அதனால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது என்கிறாயா?”

 போச்சு… இன்று இந்த சைதுவிற்கு மூடு சரி இல்லை போல, எவ்வளவு இறங்கி வந்தாலும் எகிறிக் கொண்டே போகிறாள்… மனதுக்குள் புலம்பிய அஸ்வினி “ஏன்கா இன்று டிஷ் நீ நினைத்தது போல் வரவில்லையா?” என்றாள். சைந்தவியின் மூட் அவுட்டிற்கு அதை தவிர வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்?

 தங்கையின் கணிப்பு மெய்தான் போலும். தமக்கை குதித்தாள்.”ஏய் விதம் விதமாக சமைப்பதற்கென்றே படித்தவள். என்னையா சமைக்க தெரியாதென்கிறாய்?”

 “ச்சோ கவனி அக்கா தெரியாதா என்று கேட்கவில்லை, சரியாக வரவில்லையா என்றுதான் கேட்டேன்”

” இரண்டிற்கும் என்னடி பெரிய வித்தியாசம்? இன்று நானே ரெசிபி கண்டுபிடித்து செய்த கோக்கனட் ஜிஞ்சர் பிரட் சூப்பராக வந்திருக்கிறது தெரியுமா?”

 கோக்கனட்டிற்கும் ஜிஞ்சருக்கும் பிரட்டிற்கும் என்ன சம்பந்தம்… மனதிற்குள் சலித்தபடி “சரிக்கா முதலில் இரண்டு பீஸ்கள் செய்து பார்த்துக் கொண்டாயல்லவா? இப்போது செய்முறையை தொடங்கு, நான் வீடியோ எடுக்கிறேன்” தனது போனை எடுத்துக் கொண்டு அக்காவின் சமையலை வீடியோ எடுக்க தயாரானாள் அஸ்வினி.

 இந்த உதவிக்காகத்தான் தங்கையை அப்படி அழகாக அழைத்திருந்தாள் சைந்தவி.பிளஸ் டூ முடித்ததும் கேட்டரிங் படிப்பை மிகவும் விரும்பி எடுத்து படித்து முடித்தாள் சைந்தவி.ஒன்றிரண்டு இடங்களில் வேலை பார்த்துவிட்டு அது எனக்கு செட்டாகவில்லை என்று சொல்லி வேலையை விட்டு விட்டாள். இப்பொழுது வீட்டில் இருந்தபடியே சமையலுக்கு என யூடியூப் சேனல் ஆரம்பித்து,எதையோ கொட்டி,கிண்டி என அடுப்படியை அதகளம் செய்து கொண்டிருந்தாள்.

 அவளுடைய வித்தியாசமான ரெசிபிகளை வீடியோ எடுக்கும் வேலை அஸ்வினியுடையது. உன் கடமை அது என்பது போல் தங்கையை முதலிலேயே செட் செய்து வைத்திருந்தாள். இந்த ரெசிபியை செய்து காட்டுவதோடு சைந்தவியின் வேலை முடிந்து விடும். அதன் பிறகு லேப்டாப்பில் அதற்கான எடிட்டிங் மியூசிக் பேக்ரவுண்ட் வொர்க் எல்லாம் முடித்து அழகான வீடியோவாகி சைந்தவியிடம் ஒப்படைக்க வேண்டியதும் அஸ்வினியின் கடமை. 

காரணம் அஸ்வினி கம்ப்யூட்டர் படித்துக் கொண்டிருக்கிறாள். பாவமான சைந்தவிக்கு கம்ப்யூட்டரில் எதுவும் தெரியாது. ஒருமுறை எனக்கு வேலை இருக்கிறது என்று அஸ்வினி சொன்னதற்கு கத்தி அலறி வீட்டை இரண்டு படுத்தினாள் சைந்தவி. சரிதாவும் அவளுக்கு சப்போர்ட் செய்ய அஸ்வினி இப்படி இவர்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த வீடியோவை எடுத்து கொடுத்து விட்டோமானால் தன்னுடைய வேலையை பார்க்கலாம் என்றெண்ணி போனை கையில் எடுத்துக் கொண்டாள்.

 அவள் பிறகு அது போல் சைந்தவியுடன் போராடுவதில்லை.இன்று போல் அவ்வப்பொழுது சகோதரியை சிறிய அளவில் சீண்டுவதோடு தனது எதிர்ப்பை நிறுத்திக் கொள்வாள். இந்த வீடியோ எடுக்கும் நேரம்தான் அவளுக்கு மிகுந்த சிரமம் தரும். தப்பு தப்பாக செய்து திரும்பத் திரும்ப முதலில் இருந்து வருவாள் சைந்தவி. அதனால் என்ன செய்வதென்றாலும் முதலில் கொஞ்சமாக செய்து பார்த்துவிட்டு பிறகு வீடியோ எடுக்க ஆரம்பிக்குமாறு அஸ்வினி யோசனை சொல்லியிருந்தாள்.

  வீடியோவை எடுத்து முடித்து விட்டால் எடிட்டிங் ரெக்கார்டிங் வேலைகளெல்லாம் அஸ்வினிக்கு மிகவும் சுலபமே. அவளுடைய வேலைகளுக்கு இடையே லேப்டாப்பில் செய்து முடித்து விடுவாள்.




 தன் போனின் வலது மூலையில் நேரத்தை கவனித்தபடி வீடியோவை ஆன் செய்தாள் அஸ்வினி. ஐந்து நிமிடம் போதும் என்ற சைந்தவிக்கு அந்த சமையலை  முடிக்க 25 நிமிடங்கள் ஆயிற்று.

” இன்றைக்கு நைட் வீடியோவை முடித்து விட அஸ்ஸு. நாளை காலை யூட்யூபில் ஏற்ற வேண்டும்” சைந்தவி சொல்ல அவளுக்கு கட்டைவிரலை உயர்த்தி காட்டிவிட்டு மீண்டும் தன் வேலைக்குள நுழைந்தாள் அஸ்வினி.

 மறுநாள் அவளுடைய கல்லூரியில் பவுண்டர்ஸ் டே நடைபெற இருந்தது. மற்ற வருடங்களை விட இந்த வருடம் புதிய பவுண்டர்களை அப்டேட் பண்ணுவதாக இருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே அந்த விழா கொண்டாடப்பட்டது. அதற்காக தங்கள் கல்லூரியின் பெருமைகளை புது பவுண்டர்களுக்கு தெரிவிக்கும் விதமாக மாணவர்களின் படிப்பும் திறமைகளும் கலை நிகழ்ச்சிகளும் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகி விரும்பினார்.

 எனவே ஒரு மாதமாக மாணவர்கள் தங்கள் திறமைகளுடன் மேடை ஏறுவதற்கான பயிற்சிகளில் மிக தீவிரமாக இறங்கியிருந்தனர். மேடை நிகழ்ச்சிகளின் நிரல்களை மேடை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் வரிசையாக ஓடும் விதமாக அமைத்து அதன் கட்டுப்பாட்டை தனது லேப்டாப்பிற்குள் கொண்டு வந்து அதனை இயக்கும் பொறுப்பேற்றிருந்தாள் அஸ்வினி.

 இதனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவளுடைய பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்தது.மறுநாள் 9 மணியிலிருந்து பவுண்டர்கள் ஒவ்வொருவராக வரத்துவங்க சீப் கெஸ்ட் ஆக உள்ளே நுழைந்தவனை பார்த்ததும் அஸ்வினியின் புருவங்கள் நெறிந்தன.

 இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே, அடிக்கடி…அனேகமாக தினமுமே பார்க்கும் முகம் போல் தெரிகிறதே… யோசித்தபடி தனது லேப்டாப்பில் தெரிந்த அவன் உருவத்தை பெரிய திரைக்கு கொண்டு வந்து பார்த்தபடி இருந்தாள்.

 நிமிர்வும் கம்பீரமுமாக கல்லூரி வாயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அவன் செருக்கான யானை ஒன்று படைத்தலைமைக்குள் நுழைந்தது போன்ற உணர்வை உண்டாக்கினான்.




What’s your Reaction?
+1
26
+1
19
+1
2
+1
1
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!