Serial Stories

நந்தனின் மீரா-26

26

மூக்கு விடைத்து …கண் சுருக்கி
நா சுழலும் உன் கோபத்திலும் ,
வெண்புறாவாய் இதயம் சடசடக்க…
மெல்ல நகரும் பின்மதியம் தாண்டிய
காதல் பூத்துவிட்ட சாயங்காலத்தினை ,
நத்தையின் காலென அமைத்து விட்டதென்ன  நியாயம் …?

குமரேசனின் வீட்டிற்கு முந்தின தெருவில் போகும் போது மீராவின் தோழி ஒருத்தி அவளை பார்த்து வண்டியை நிறுத்தி பேச ஆரம்பித்துவிட …சீக்கிரம் வரும்படி கூறிவிட்டு நந்தகுமார் மட்டும் முன்னால் போனான் .

தோழியிடம் பேசிவிட்டு மீரா அங்கே போனபோது இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி எதிரெதிரே அமர்ந்திருந்தனர் .கணவனை திரும்பி பார்த்த மீரா விழி விரித்தாள் .என்ன பார்வை இது …..????

நீயா …? நீதானா …? நீயேதானா ….? என்பது போன்றதொரு நம்ப முடியாதோர் பார்வையை அவன் மேல் வீசிக்கொண்டிருந்தான் நந்தகுமார் .அந்த பார்வையை சந்திப்பதும் …பின் தலைகுனிவதுமாக இருந்தான் குமரேசன் .

” வந்து …நான் …அ…அவள் ….” அவனது தடுமாற்ற ஆரம்பத்தில் இதுவரை இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லையென உணர்ந்தாள் மீரா .

கூடை கூடையாய் கொட்டிய அறிவுரைகளை விட இந்த கனன்ற பார்வை குமரேசனை அதிகம் பாதிப்பதை உணர்ந்தாள் மீரா .வாய் திறந்தால் …தவறாக எதுவும் பேசிவிடுவோமோ …என பயந்து கண்களாலேயே கோபத்தை வெளிப்படுத்தும் கணவனை பாராட்டியபடி வாசலை பார்த்திருந்தாள் அவள் .

அப்போது சார் என அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் அந்த பெண் .சற்று முன் மீராவிடம் பேசிய அவளது தோழி .

” வணக்கம் சார் .நான் இங்கே …” ஒரு லோக்கல் டிவி சேனலின் பெயரை சொல்லி …

” அங்கே காம்பயராக வேலை செய்கிறேன் .” பாதர்ஸ் டே …” வருதில்லையா …அதற்கு இந்த ஏரியாவில் எல்லோர வீட்டு ,பிள்ளைகளிடம் அவர்கள் அப்பாவை பற்றி எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தோம் .நிறைய பேர் எழுதி குவித்து விட்டார்கள் .நிறைய நெகிழ்ச்சியான அனுபவங்கள் இருந்தாலும் ஜட்ஜ் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து செலக்ட் செய்து  முதல் பரிசு வாங்கியிருப்பது உங்கள் மகள் திவ்யாவின் “அப்பாவும் , நானும்” கட்டுரையை ….”

” அப்படியா ….? ” குமரேசனிடம் மிகுந்த மகிழ்ச்சி .

” ஆமாம் சார் .என்னமா எழுதியிருக்கிறாள் உங்கள் பொண்ணு .எப்படிப்பட்ட அற்புதமான அப்பாவாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் .கை கொடுங்க .உங்க பொண்ணையும் , மனைவியையும்  கூப்பிடுங்க .பரிசு கிடைத்த விபரத்தை சொல்லிட்டு போறேன் …”

” திவ்யா அவுங்க பாட்டி வீட்டுக்கு போயிருக்கிறாள் ….”

” சரி சார் …நான் அவர்கள் வந்ததும் வருகிறேன் .பாதர்ஸ் டே அன்று நம் டிவி அலுவலகத்தில் பங்சன் சார் .லைவ் டெலிகாஸ்ட் .நீங்கள் குடும்பத்தோடு வந்துவிடுங்கள் ….”

” கண்டிப்பாக வருகிறேன் .என் பொண்ணு என்ன எழுதியிருந்தாள் …?”

” நிறைய எழுதியிருக்கிறாள் சார். உங்களை எழுதியிருக்கிறாள் .அப்பாவாக மட்டுமில்லாமல் , அம்மாவாக , நண்பராக , அண்ணனாக நீங்கள் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் எழுதியிருக்கிறாள் .முக்கியமாக அவள் எழுதியிருந்தது …உங்கள் ஒழுக்கத்தை …நல்ல குணங்களை .ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டுமென என் அப்பாவின் நடத்தையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ..என படிப்பவர்களுக்கு சவால் விட்டிருக்கிறாள் ….”

குமரேசன் உள்ளுக்குள் நொறுங்கிக்கொண்டிருப்பதை அறியாமல் அந்த பெண் பேசிக்கொண்டே போனாள்.
மறக்காமல் வந்துவிடும்படி மீண்டும் நினைவுறுத்திவிட்டு போனாள் .

வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்த குமரேசனிடம் ” யோசித்து முடிவெடுங்க ..” என்று எழுந்தான் நந்தகுமார் .




” ஏற்றுக்கொண்ட கட்டாயத்திற்காகவே எந்த பாரத்தையும் அநாவசியமாக தலையில் சுமக்க வேண்டியதில்லை அண்ணா .தகுந்த இடத்தில் இறக்கியும் வைத்துவிடலாம் ….ஒரே ஒரு முறை தாங்கும் தகுதி உங்களுக்கில்லை என அங்கே சொல்லிப்பாருங்கள் ….” சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டாள் மீரா .

” அந்தப் பெண்ணை நீதான் தயார் செய்தாயா …? ” பைக்கில் திரும்பி வரும்போது கேட்டான் நந்தகுமார் .

” ஆமாம் …ஆனால் தற்செயலாக நடந்தது அது .திவ்யா அப்பாவை பற்றி எழுதியது , பரிசு கிடைத்தது எல்லாம் உண்மைதான் .ஆனால் அதனை என் தோழி வந்து இங்கே சொல்வதாக இல்லை .அவள் அந்த சானலில் வேலை பார்க்கிறாள் .யார் வீட்டிற்கு வந்தீர்களென கேட்டாள் …? நான் சொன்னதும் இந்த பரிசு விபரம் சொன்னாள் .நானாகத்தான் அந்த நேரம் இங்கே வந்து பேசும்படி கேட்டுக்கொண்டேன் .அவள் இது ஏதோ நம் குடும்ப கலாட்டா போல என நினைத்துக்கொண்டு சம்மதித்தாள் .

நான் நீங்கள் நம் குடும்ப கௌரவம் பற்றி எப்படியும் பேசியிருப்பீர்கள் .அந்த நேரம் திவ்யா பற்றிய செய்தி வந்தால் ….”

” பாசமும் , சமூக அந்தஸ்தும் சேர்ந்து மச்சான் மனதை மாற்றுமென்று நினைத்தாய் போல ….? “

” ஆமாம் …ஆனால் என் முயற்சியை விட பேசாமல் கண் பார்வையிலேயே சாதித்தது நீங்கள்தான் .அந்தப் பார்வையிலேயே அண்ணன் அப்படியே அரண்டு போய் உட்கார்ந்திருந்தார் தெரியுமா …? “

” ப்ச் …நீ சொன்னது போல் அவருக்கு என் மேல் ஒரு அபிமானம் ….சரியாக சொல்வதானால் ஒரு வகை பிரமிப்பு உண்டு மீரா .”

” இதை நான் அன்று திவ்யாவிற்கு தலைக்கு தண்ணீர் ஊற்றும் நாளன்றே ஊகித்தேன் .ரொம்ப வேகமாக வந்தவர் நீங்கள் பேசியதும் அடங்கிவிட்டார் ….”

” ம் ..இவ்வளவு வேகமாக தொழிலில் நான் முன்னேறியதுதான் அதற்கு காரணம் .கொஞ்சம் மதிப்போடுதான் என்னை பார்ப்பார் . .அக்கா திருமணத்திலிருந்து எனக்கும் , அவருக்கும் நல்ல அன்டர்ஸ்டான்டிங் உண்டு . .வெளிப்படையாக நண்பர்கள் போல பேசிக்கொள்வோம் .முதலிலேயே இந்த விசயத்தில் நானே பேசியிருக்கலாம் .ஆனால் நண்பர்களாக பழகினாலும் …உறவினால் உண்டான ஒரு மெல்லிய கோடு நூல் போல் எங்களிருவரிடையே இருந்தது .அதனை அறுத்துவிட முடியாமல் நான் தவித்துக்கொண்டிருந்தேன் .

அக்கா யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறாளே ….அது வேறு எனக்கு கோபத்தை உண்டாக்கி கொண்டிருந்தது .கை நீட்டிவிடுவோமோ என்ற பயத்தில்தான்  அமைதியாக உட்கார்ந்தே  இருந்தேன் . “

” நீங்கள் கை நீட்டியிருந்தால் கூட பலன் எதிரமறையாகத்தான் இருந்திருக்கும் .இப்போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் .கவலைப்படாதீர்கள் ….”

” ம்ப்ச் …பார்க்கலாம் ….”

” அப்பாவுடன் போகப் போவதில்லை என சொன்னாலும் திவ்யா மனதில் அவள் அப்பா பற்றிய ஏக்கம் இருக்கிறதுங்க .அம்மாவும் , அப்பாவும் அடிக்கடி சண்டை போடுகிறார்கள் என்றுதான் அதை சரி செய்யத்தான் பாட்டி வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் .மற்றபடி அவள் மனம் முழுவதும் அவர்கள் வீட்டிலேயேதான் இருக்கிறது .அன்று காலையில் கூட அப்பாவும் , அம்மாவும் சண்டை போட்டதினால் …அம்மா அழுதுகொண்டிருந்தார்கள் என்றுதான் …ஸ்கூலிலிருந்து நம் வீட்டிற்கு ஓடி வந்திருக்கிறாள் …”

” ம் …அக்கா என்ன சொல்கிறார்கள் …? அவர்களுடன் பேசிப் பார்த்தாயா …? “

” திவ்யாவை கூட கணித்துவிடலாம் போல .பிரவீணா அண்ணி மனதில் இருப்பதை கணிக்கவே முடியவில்லை .ஒரு மாதிரி இறுகிப்போய் இருக்கிறார்கள் .பக்கத்தில் போய் பேசவே பயமாக இருக்கிறுது .”

” ம் …பார்க்கலாம் ….”

அவர்கள் எல்லோருக்கும் பெரும் அவஸ்தையை தந்த அந்த வாரம் மிகவும் நிதானமாக , ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து முடிந்தது .அடுத்த வார ஆரம்பத்திலேயே …குமரேசன் வந்து நின்றான் .

” எனது கூடாத பழக்கங்களையெல்லாம் விட்டு விட்டேன் .என் மனைவியையும் , குழந்தையையும் அனுப்பி வையுங்கள் ….” என்றான் .

அந்த பெண்ணை அவளது சொந்த ஊருக்கு அனுப்பிய ஆதாரங்களை காட்டினான் .அந்த நிமிடமே நந்தனும் , சசியும் போய் விசாரித்து விட்டு வந்து அது உண்மைதானென உறுதிப்படுத்தினர் .

செய்தியறிந்து ஓடி வந்த சண்முகசுந்தரமும் தன் பங்கிற்கு விபரங்களை விசாரித்து வந்து உறுதிபடுத்தினார் .வீட்டிலுள்ள அனைவரும் சூழ்ந்திருக்க கைகட்டி தலை குனிந்து நின்றான் குமரேசன் .

” முன்பே அவளிடம் எனக்கு திவ்யா மட்டும்தான் குழந்தை. வேறு குழந்தை கிடையாது என சொல்லியிருந்தேன் . அந்த மனத்தாங்கல் அவளுக்கு உண்டு .இப்போது எனக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் …என்னால் இரண்டு வீடுகளை பார்க்கமுடியாது என சொன்னேன் ….எல்லாம் சேர்ந்து அவளாக விலகி கொண்டாள் .ஓரளவு பணம் கொடுத்து அனுப்பிவிட்டேன் ….”

தனக்கென ஒரு குடும்பத்தையோ …ஒரு பாதுகாப்பான வாழ்க்கையையோ கொடுக்காத ஆண் பின்னாலேயே ஒரு பெண் வரவேண்டுமானால் அவளுக்கு அவன் மீது அளவு கடந்த காதல் இருக்கவேண்டும் .பணத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் மட்டுமே ஆரம்பித்த இந்த உறவு …எளிதாக உடைந்து போனது .

” இனியாவது புத்தியோடு பிழைக்க பாருங்கள் .பிரவீணா நீ கிளம்பும்மா ….” பாட்டி சொல்ல …

” எனக்கு அவருடன் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் பாட்டி …” என்றாள் பிரவீணா .

இருவரையும் தனித்து விட்டு விட்டு மற்றவர்கள் திக்திக் மனதுடன் இருந்தனர் .

” இதே போல் இன்னொருத்தி நம் வாழ்வில் வரமாட்டாளென்பதற்கு எனக்கு என்ன உத்தரவாதம் தருகிறீர்கள் …? “

” நம் குழந்தை மீது சத்தியம் செய்யவா பிரவீணா …? “

” வேண்டாம் . ஆண்களையும் , அவர்கள் சத்தியங்களையும் நான் இப்போதெல்லாம் நம்புவதில்லை ….”

” நம் குழந்தை இப்போது பெரிய பெண்ணாகிவிட்டாள் .அவளுக்கு ஒரு முன்மாதிரி தகப்பனாக இருப்பேன் என உறுதியாக கூறுகிறேன் பிரவீணா ….”

” அது …உங்கள் அப்பா ..மகள் பிரச்சினை .ஒருவர் மீது ஒருவர் வைத்தருக்கும் அன்பை நீங்கள் எப்படியாவது வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கிடையில் நான் வர மாட்டேன் . ஒரு மனைவியாக எனக்கு என்ன பதில் …? ” இரும்பின் கடினத்துடன் கேள்விகளை துப்பினாள் பிரவீணா .

” நா …நான் …இ…இனி என்ன செய்யவேண்டும் பிரவீணா ….? “

” நான் அப்போது அங்கே வருவது திவ்யாவிற்கு அம்மாவாக மட்டும்தான் .உங்களுக்கு மனைவியாக இல்லை .புரிகிறதென்று நினைக்கிறேன் .கணவனென்ற எண்ணத்துடன் என்னருகில் நெருங்க கூடாது …சம்மதமென்றால் வருகிறேன் ….,”




” இது யாருக்கான தண்டனை பிரவீணா …? “

” முதலில் தடம் மாறிய என் புருசனுக்கு …பிறகு அந்த தவறுக்கு பிறகும் அறிந்தும் , அறியாமலும் அவனோட குடும்பம் நடத்திய எனக்கு ….ஆக இருவருக்கும்தான் ….”

” எந்த சாபத்திற்கும் விமோசனம் உண்டில்லையா பிரவீணா …? ” குமரேசன் வேதனையோடு கேட்டான் .

” உண்டுதான் .உங்கள் மீதான நம்பிக்கை எனக்கு உறுதியாகும் வரை .எனக்கான நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்தும் வரை ….”

” நான் கல்மிசமற்ற சுத்தமான மனதோடு இருப்பதினால் , விரைவிலேயே நம் இல்லற வாழ்வை எதிர்பார்த்து …செய்த தவறுக்குரிய தண்டனையாய் இதனை மனமார ஏற்றுக்கொண்டு அழைக்கிறேன் .வா பிரவீணா நம் வீட்டிற்கு போகலாம் ….” கைகளை அவள்புறம் நீட்டினான் .

” திவ்யா கிளம்பும்மா .நம் வீட்டிற்கு போகலாம் …” குரல் கொடுத்தபடி நீட்டிய அவன் கைகளை கண்டுகொள்ளாமல் வெளியே நடந்தாள் பிரவீணா .




What’s your Reaction?
+1
19
+1
33
+1
0
+1
2
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
7 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!