Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-29

29

மற்றுமொரு அசுப நாளென்ற
மனக்கனத்தில் ,
பிசிறடித்து விட்ட வார்த்தைகளை
சீர் செய்ய முடியாது விழித்தபடி ,
சிற்றெறும்பு சினத்தில் சீறும் எனை ..
பல் முளைக்கா சிசு கடி போல்
கையாள்கிறாய்
சூடான காபி …சுவையான சூடு …
மற்றும் இதமான உன்னுடன் ,
கழுத்தோர இதழ்களில் புதைந்து கொண்டது
காணாமல் போய்விட்ட ஒரு கோபம் .

” அந்த மிருணாளினிக்கும் உங்களுக்கும் என்ன பாட்டி பிரச்சினை …? ” ஒருநாள் பாட்டியிடம் மெல்ல கேட்டாள் .

” அவளே பிரச்சினைதான் …” பாட்டி பெருமூச்செறிந்தார் .
” பிரச்சினைதான் முடிந்துவிட்டதே .இனி யாரிடமும் சொல்ல வேண்டாமென நினைத்தேன் .ஆனால் உன்னிடம் சொல்லத்தான் வேண்டும் …”

” சுந்தரிக்கு அவள் அண்ணன் குடும்பத்தார் மேலிருக்கும் அபிமானம் உனக்கு தெரியுமில்லையா …? அது அளவில்லாமல் இருப்பதாக நினைத்து குரு அடிக்கடி அவளுடன் சண்டை போடுவான் .அவன் பேசாமல் இருந்திருந்தால் நாளனடைவில் அந்த அபிமானம் குறைந்து சுந்தரி சரியாகியிருப்பாள் .அவன் செய்யாதே …செய்யாதே என்க
சுந்தரிக்கு செய்யும் ஆர்வம் வந்தது .அவள் அண்ணனை மட்டம் தட்ட …தட்ட அவளுக்கு அண்ணன் தனக்காகவே பிறந்த தேவதூதன் என்ற எண்ணம் வந்து அவனை அப்படியே பாவிக்க தொடங்கினாள்.இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை .

இந்த சூழ்நிலையில் தான் அண்ணன் மகளை தன் வீட்டு மருமகளாக்கி கொண்டால் , தனக்கும் அண்ணனுக்குமான உறவு நீடிக்குமென்ற எண்ணத்துடன் நந்தனுக்கும் , அந்த மிருணாளினிக்கும் திருமணம் பேசினாள் சுந்தரி .

அப்போது எனக்கும் மிருணாளினியை மறுக்க தோன்றவில்லை .மிக அழகான பெண் .இனிய பேச்சுக்களுடன் பட்டாம்பூச்சி போல வீட்டை சுற்றி வந்தாள் .நந்தனுக்குமே அவள் மீது ஒரு அபிப்ராயம் இருந்தாற் போல் இருந்தது .அதனால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தேன் .குருவையும் சம்மதிக்க வைத்தேன் .




நாங்களாக வீட்டிற்குள் வாய் வார்த்தையாக பேசி வைத்து …மாளவிகா திருமணத்திற்கு பின் இவர்கள் திருமணம் என்று முடிவு செய்தோம் .அப்போது ஒருநாள் மிருணாளினியும் , அவள் அம்மாவும் நான் அறைக்குள் படுத்திருப்பதை அறியாமல் பேசிக்கொண்டிருந்தனர் .

இந்த வீட்டிற்கு மருமகளாக வந்ததும் பேசிப்பேசியே சீக்கிரமே என்னை மேலே அனுப்பி விடுவதாகவும் ,குருநாதனை சாமியாராக்கி வீட்டை விட்டு விரட்டி விடுவதாகவும் , சுந்தரி கை , கால்களை முடக்கி படுக்கையில் தள்ளி விடுவதாகவும் …பிரவீணா , மாளவிகாவை இந்தப் பக்கமே வரவிடாமல் வைத்து விடுவதாகவும் , சசியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு இந்த வீட்டிற்குள்  அவள் மட்டுமே மகாராணியாக வளைய வரப் போவதாக அவள் அம்மாவிடம் பெருமை பேசிக்கொண்டிருந்தாள் “

” பாட்டி …” அதிர்ந்தாள் மீரா .

” எனக்குமே அன்று அதிர்ச்சிதான்மா .சுந்தரியின் அண்ணனிற்கு அதற்கு முன்பெல்லாம் மகளை இங்கே மணமுடித்து தரும் எண்ணமில்லை .வீடு வீடாக சென்று பொருட்களை விற்கும் குருவின் தொழிலை எப்போதும் கொஞ்சம் கேவலமாகவே பார்ப்பான் .ஆனால் எப்போது நந்தன் அவன் தொழிலில் மேலேற ஆரம்பித்தானோ அப்போதே தன் மகளை இங்கே மணம் முடிக்கும்  எண்ணம் சண்முகசுந்தரத்திற்கு வந்துவிட்டது …”

” அதில் தப்பென்ன பாட்டி …தன் மகள் வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பது ஒரு அப்பாவின் ஆசைதானே …”

அவள் கன்னத்தை நெட்டி முறித்த பாட்டி …” இதுதான் மீராவிற்கும் , மிருணாவிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் .உனக்கு பிடிக்காதவள் என்றாலும் அவள் பக்க நியாயத்தை உணர்கிறாய் பார் .அந்த மிருணா  தப்பு தப்பாக செய்துவிட்டு அதுதான்  சரியென அடம்பிடிப்பாள் ..நான் சண்முகசுந்தரத்தை தப்பு சொல்லவில்லை .சுந்தரி நினைப்பது போல் அவள் அண்ணன் பாசம் என்னவானாலும என் தங்கச்சி ..என்று அதிகப்படி அளவில் இல்லை …தன் மகளுக்கு வசதியான மாப்பிள்ளை என்ற சாதாரண கணக்கில்தான் இருந்தது என்கிறேன் …” என்றாள்.

” ஆனால் இதனை அத்தை உணர்ந்து கொள்ளவில்லை …”

” அதேதான் …அதை உணரவைக்கும் தெம்பும் எனக்கில்லை .ஏனென்றால் மனம் முழுவதும் பேசி வைத்திருக்கும் திருமணத்தை நிறுத்துவது தப்பில்லையா என்ற குழப்பம் நிரம்பியிருந்ததாலோ …என்னவோ …பாத்ரூமில் பாதம் பிறழ்ந்து இடுப்பில் அடிபட்டு கட்டிலில் விழுந்துவிட்டேன் .பாதி வேலை இப்போதே முடிந்தது என அம்மாவும் , மகளும் என் படுக்கையை கிண்டல் பண்ணி சிரிக்கவும் ஒரே மனதாக திருமணத்தை நிறுத்தவேண்டும் என நினைத்து …எனக்கு மனதில் சரியாக படவில்லை …அது …இதுவென ஏதேதோ காரணங்களை குருவிடம் சொல்லி அந்தக் கல்யாணத்தை நிறுத்திவிட்டேன் …”

” நான் செய்தது ஏதோ புண்ணிய காரியம் போல , அதனால்தான் அந்தக் கடவுள் உன்னை எங்கள் குடும்பத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார் ….” மீராவின் மோவாயை தொட்டு முத்தமிட்டார் பாட்டி .

இதன்பிறகு அந்த மிருணாளியின் வாழ்வை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ …என்ற உறுத்தல் மீராவினுள் மறைந்தது .இந்த வீட்டில் வாழும் தகுதியற்றவள் மிருணாளினி என நினைத்துக்கொண்டாள் .

ஆனால் இதை உணரவேண்டியவர்கள் சுந்தரியும் , நந்தகுமாரும்தான் . ஆனால் சுந்தரிக்கோ அண்ணன் மகள் தேவதையாக தெரிந்தாள் .இன்னமும் அவள் உள்மனதில் இருந்த மிருணாளினியை  மருமகளாக்கி கொள்ள முடியாத ஏக்கம்  இடையிடையே அவளது செயல்களில் அவ்வப்போது வெளிப்பட்டபடி இருந்தது .

நந்தனோ …தான் தர தவறிய வாழ்வினால் மிருணாளினி படு துயரத்தில் இருப்பதாக எண்ணி அவளிடம் பரிதாபம் காட்டினான் .எனவே தன்னால் முடிந்ததாக அவளுடன் , அவள் பேச்சுடன் ஒத்து போக எண்ணினான் .

அதற்கேற்றபடி மிருணாவின் திருமணம் தட்டிப் போக …மிருணாளினி ஆதரவு தேடி என அங்கே அடிக்கடி வந்து சுந்தரியையும் , நந்தகுமாரையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  …மீராவை சொற்களால் குத்தி ,கிழித்துக் கொண்டிருந்தாள் .

” அத்தானுடன் தான் திருமணம் என்பது என் தலைவிதி போல .அதனால்தான் என் திருமணம் தள்ளிப் போய்கொண்டே இருக்கிறது என்பாள் .




” அதெப்படி உன்னை விரும்பாத  இடத்தில் உன்னால் இப்படி உட்கார்ந்து கொண்டிருக்க முடிகிறது …? என்றாள் .

” உன்னிடத்தில் நானிருந்தால் எப்போதோ …என் அம்மா வீட்டிற்கு ஓடியிருப்பேன் …” என்றாள் .

” இது என் வீடு …நான் ஏன் போகவேண்டும் …? “என்றாள் மீரா .

அவளருகில் வந்து அவள் கழுத்திலிருந்த தாலி செயினை கையிலெடுத்து பார்த்துவிட்டு …

” இதை வைத்துதானே …என் வீடு என்ற உரிமை வந்தது உனக்கு .இது மட்டும்தான் உன் கழுத்தில் இருக்கு .மற்ற உரிமையெல்லாம் என்னிடம்தான் இருக்கு .சீக்கிரமே இந்த உரிமையும் என் கழுத்திற்கு வரும் பாரேன் …”

மிருணாளினியின் சவாலில் நடுங்கிவிட்டாள் மீரா .

எப்போதும் அண்ணன் மகளை தெய்வமாக பார்க்கும் மாமியார் .அம்மாவை தெய்வமாக பார்க்கும் கணவன் .இவர்களிடையே மிருணாளினியின் எண்ணம் நிறைவேற மிக அதிக வாய்ப்புகள் இருக்கின்றனவே ….

அப்படியானால் தனது கதி …கணவனை விட்டு …இந்த வீட்டை விட்டு தன்னால் வாழமுடியுமா …? மீராவின் உடல் நடுங்க தொடங்கியது .

” அத்தான் கார் வாங்க போகிறார் தெரியுமா …?  .இன்று நானும் , அப்பாவும் அவருடன் போனோம் .நான்தான் காரை செலக்ட் செய்தேன் .முதலில் என்னைத்தான் கீ போட்டு ஸ்டார்ட் செய்து தரச்சொன்னார் தெரியுமா …? என்றாள் ஒருநாள் .

மீராவால் முழுதாக பொய்யென்று ஒதுக்க முடியவில்லை .கார் வாங்கப் போவதாக நந்தகுமார் சொன்னது உண்மைதானே ….

” இன்னைக்கு அத்தானும் , நானும் சினிமாவுக்கு போகிறோமே ….” பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தவளின் காதில் வந்து கிசுகிசுத்தாள்  மிருணாளினி .

” பொய் …நீ பொய் சொல்கிறாய் …”

” பொய்யா …நேரில் வந்து பார்க்கிறாயா …? சூப்பர் ஸ்டார் கபாலி படம் …” இவளிடம் ஒரு டிக்கெட்டை நீட்டினாள் .

கபாலி படம் ரிலீஸானதும் போக வேண்டுமென்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த போது , இப்போது வேண்டாம் ஒரு வாரம் கழித்து போகலாம் .இப்போது ரசிகர்களின் கூச்சலாக இருக்கும் …என்று நந்தகுமார்தான் கூறியிருந்தான் .இப்போது இவளுடன் போகிறானா …?

” என்னோடு மட்டும் போகவேண்டும் …என்றுதான் உங்களையெல்லாம் அடுத்த வாரத்திற்கு அத்தான் தள்ளினார் .என் தோழி ஒருத்திக்காகவும் அத்தானையே டிக்கெட் எடுக்க சொன்னேன் .இதோ எடுத்து வந்துவிட்டார் .அவள் ஏதோ வேலையென வரவில்லையென்றுவிட்டாள் .உனக்கு சந்தேகமென்றால் நீ நேரிலேயே வந்து பார் …எங்களுக்கு பத்தொம்பது , இருபது ..சீட் நம்பர் . டிக்கெட்டை அவள் கையில் திணித்துவிட்டு போய்விட்டாள் .

வேண்டாம் …சந்தேகம் வேண்டாம்  …போக கூடாது …எவ்வளவோ திடமுடன் நினைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் தன்னிடமே தோற்று …வேகமாக சரியான நேரத்திற்கு ஸ்கூட்டியில் கிளம்பிவிட்டாள்.

அந்த பத்தொம்பது , இருபது …மீரா இருந்த சீட்டிலிருந்து நன்கு பார்க்கும்படி இருந்தது .தலையை குனிந்து முகத்தை பாதி மறைத்தபடி அந்த சீட்டையே பார்த்தபடி இருந்தாள் .பத்து நிமிடத்தில் அதில் மிருணாளினி வந்து அமர்ந்தாள் .வாட்சை பார்க்கவும் , போனை நோண்டவுமாக இருந்தாள் .மீரா நன்றாக குனிந்து கொண்டாள் .ஆனால் அவள் மீரா பக்கமே திரும்பவில்லை .அவள் பார்வை முழுவதும் வாசல் பக்கமே இருந்தது .

தியேட்டரினுள் விளக்கணைத்ததும் இருளில் தடுமாறியபடி வந்து அமர்ந்தது ….வெளிச்சமே இல்லாவிட்டாலும் …கணவனை தெரியாதா …மீராவிற்கு .விம்மல்கள் தெறித்து வெளியே வந்துவிடுமோ என பயந்து வேகமாக வெளியேறினாள் .
சுந்தரியிடம் தலைவலியென்று விட்டு அறைக்குள் வந்து படுத்தவள்தான் .அழுதழுது எப்போது தூங்கினாளோ …தெரியாது .

” மீரா …என்னடா …? உடம்பு என்னசெய்யுது…? ” கணவனின் இதமான வருடலில் மீராவின் உடல் விரைத்தது .

கையை எடுடா …எனக் கத்த தோன்றிய மனதை அடக்கியபடி கண்ணை இறுக மூடியபடி படுத்து கிடந்தாள் .

” வெளியே போய்விட்டு வந்ததும் தலைவலியென படுத்தாள் நந்து .இன்னும் சாப்பிடவில்லை .சுந்தரியின் குரலும் கேட்க ….இன்னமும் கண்களை இறுக்கிக் கொண்டாள் .

” ஏன் மீரா …? கொஞ்சம் பால்சாதம் சாப்பிட்டு மாத்திரை போட்டுக் கொள்கிறாயா …? “




” நான் குழைவாய் பிசைந்து எடுத்து வரவா மீரா …? என்றாள் சுந்தரி .

” கொஞ்சநேரம் என்னை தனியாக விடுங்களேன் …” தன்னை மறந்து கத்தினாள் மீரா .

” ச…சரிம்மா மீரா .நீ தூங்கு …” சுந்தரி போய்விட்டாள் .

” என்ன மீரா …எவ்வளவு கோபமென்றாலும் அம்மாவை இப்படி பேசலாமா …? ” வருடிய கணவனின் கையை பட்டென தட்டிவிட்டாள் .

” அம்மா …அம்மா …இதைத் தவிர வேறு எண்ணமே உங்களுக்கு கிடையாதா …? அம்மா என்னை ஒதுக்கி வைத்துவிடச் சொன்னால் உடனே ஒதுக்கி வைத்து விடுவீர்களா …? ” ஆத்திரமாக கேட்டாள் .

” என்ன உளறுகிறாய் …? அம்மா ஏன் அப்படி கேட்க போகிறார்கள் ..? “

” ஏதோ சூழ்நிலையில் கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் .அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் …? “

” ம் …நல்லவேளையாப் போச்சுன்னு உடனே உன்னை தள்ளி வைத்துவிட்டு அம்மா காட்டுற பொண்ணுக்கு தாலி கட்டிடுவேன் …” நந்தகுமார் கேலி பேசினான் .

சட்டென எழுந்த மீரா தரையில் பாயை உதறி படுத்தாள் .

” ஏய் ..மீரா …நான் சும்மா சொன்னேன் ….” சமாதானப்படுத்த நெருங்கியவனை கையுயர்த்தி தடுத்தாள் .

” நான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கனும்னா என்னை விட்டு தள்ளியிருங்க. வெறுத்துப் போய் என்னை அம்மா வீட்டிற்கு போக வச்சிடாதீங்க …”

திரும்பி படுத்து கண்களை மூடிக்கொண்டாள் .




What’s your Reaction?
+1
19
+1
25
+1
0
+1
1
+1
1
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
9 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!