Serial Stories

சதி வளையம் -14

14 கேள்விகள்

அந்த ஹால் குளிரூட்டப் பட்டிருந்தது. பெரிய கம்பெனிகளின் கான்பெரன்ஸ் அறை போல் தோற்றம் காட்டியது. வரிசையாய் நாற்காலிகள் தெரிந்தன. பெரிய மேஜை மட்டும் இல்லை.

தர்ஷினி நாற்காலிகளின் முன்னால் சுவரை ஒட்டிப் பாடம் எடுக்கப் போகும் விரிவுரையாளரைப் போல் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் மிகச் சிறியதாய் மேஜை ஒன்று. உள்ளே வருபவர்களைத் தலையாட்டி வரவேற்றாள். தன்யாவைக் காணவில்லை.

முதல் ஆளாய்ப் போஸ் வந்தாயிற்று. பின்வரிசையில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமர்ந்திருந்தார். தர்மா உள்ளே வந்து போஸூக்கு அருகில் அமர்ந்தான்.

பாஸ்கர் அறை வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். என்றுமில்லாத ஒரு பதட்டம் தெரிந்தது அவனிடம். பக்கத்திலேயே அய்யாக்கண்ணு ஒரு பி.ஏ. வைப் போல் நின்று கொண்டு பாஸ்கர் ஏவுவதைச் செய்யச் சித்தமாகப் பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

சதானந்த வர்மா உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டர் அமர்ந்திருப்பதைப் பார்த்துச் சற்றே திடுக்கிட்டார். உடனே சமாளித்துக் கொண்டு அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். முன் வரிசையில் ஒரு சீட்டில் அமர்ந்தார்.

சுஜாதாவும் மேஜர் கமலும் இணைந்து உள்ளே வந்தார்கள். மேஜர் கமல் கடைசிக்கு முந்தின வரிசையில் அமர்ந்தார். சுஜாதா முன்வரிசைக்குப் போனாள். ‘டிபிகல்’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் தர்ஷினி.

அட, சமையல் மாமி! சேது! இவர்களை அழைத்துப் போய் ஸைடில் போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் காட்டினாள் தர்ஷினி. ஒரேடியாய் மறுத்துக் கீழேதான் அமருவோம் என்றவர்களிடம் மென்மையாய்ப் பேசி அமரவைத்தாள்.




இன்னும் பாஸ்கர் மட்டும் ஏன் வாசலிலேயே நிற்கிறான் என்பது சில நிமிடங்களிலேயே தெரிந்துபோனது. தென்றல் நடந்து வந்தது போல அவனோடு உள்ளே வந்த பெண்ணைப் பார்த்ததும் மூச்சைப் பிடித்துக் கொண்டாள் தர்ஷினி.

பத்மாவை இதற்கு முன்னால் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். இருந்தாலும் அந்தக் காகிதத்தால் இப்படி ஒரு அழகை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை என்றே தோன்றியது தர்ஷினிக்கு. 

பத்மாவுக்கு லேசாய் ஹன்சிகாவின் சாயல். தமன்னாவின் அசர அடிக்கும் நிறம். அந்தக் கால நதியாவின் துறுதுறுப்பான சுபாவம். சுகாசினியின் கூர்மையான மேதைமையான பார்வை. ஆச்சர்யமான நீலக் கண்கள்.

பத்மா ஒரு நடுநாயகமான நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள். பாஸ்கர் அருகில் வளர்ப்பு நாய்க்குட்டியைப் போல அமர்ந்தான். 

பத்மாவுக்குப் பின்னால் வால்பிடித்தது போல் வந்தவன்தான் அவள் தம்பி பாலாஜியாக இருக்கவேண்டும். முகம் சுளித்தாள் தர்ஷினி. தன்யாவுக்கு ஏற்பட்ட அதே அருவெறுப்பு அவளுக்கும் தோன்றியது. “சரியான ரௌடி லுக்” என்று நினைத்துக் கொண்டாள்.

தன்யா இப்போது உள்ளே பிரவேசித்து விட்டாள். கையிலே ஒரு சின்ன உலோகத்தாலான பைப் போல ஒரு உருளை. எல்லோரும் அவளை ஆவலுடன் பார்த்தார்கள். ஆனால் அவளும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது எல்லோர்க்கும் வியப்பாக இருந்தது.

அய்யாக்கண்ணுவை அனுப்பி விஜய்யைக் கூப்பிடச் சொன்னாள் தர்ஷினி. வெகுநேரம் கழித்து ஆடி அசைந்து வந்துசேர்ந்தான் விஜய். அங்கிருந்த அத்தனை பேரையும் முறைத்துப் பார்த்துவிட்டு, சதானந்தனின் உஷ்ணப் பார்வையைத் தாங்க முடியாமல் அவரைவிட்டு வெகுதூரம் தள்ளி அமர்ந்தான். அய்யாக்கண்ணு சேதுவுக்கு அருகில் தயங்கியவாறு அமர்ந்தான்.

“என்ன, தன்யா, தர்ஷினி! எல்லோரும் வந்தாச்சு போலிருக்கே! இன்னும் எதற்குக் காத்திருக்கிறோம்?” என்றார் போஸ் பொறுமையிழந்து.

“இன்னும் ஒருத்தர் வரவேண்டியிருக்கு, சார். ஆனால் நாம் அவருக்காக வெய்ட் பண்ணவேண்டாம். ஆரம்பிச்சுடலாம்” என்ற தன்யா, தர்ஷினியைக் கைகாட்டினாள்.

தர்ஷினி தன் அருகில் இருந்த மேஜை மேல் வைக்கப் பட்டிருந்த புரொஜக்டரை ஆன் செய்தாள். அந்த ஒளி எதிரில் இருந்த சுவரில் பாய்ந்து எழுத்துக்களைக் காட்டியது.

“மிஸ்டர் பாஸ்கரும் டாக்டர் திலீபும் இந்தக் கேஸைச் சதுரா டிடக்டிவ் ஏஜன்சி கிட்ட ஒப்படைக்கும் போது, நம் எதிரில் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது” கையில் இருந்த பாய்ண்டரால் சுவற்றில் இருந்த எழுத்துக்களைச் சுட்டிக் காட்டினாள் தர்ஷினி.

“மோதிரம் எங்கே?”

“நாங்க இந்தக் கேள்விக்குப் பதில் அந்த வீட்டிலேயே இருக்கான்னு தேடினோம். இன் அதர் வர்ட்ஸ், மோதிரம் வெறுமே கைத்தவறுதலாய் எங்காவது மாறிக் கிடக்கிறதான்னு கண்டுபிடிக்க முயன்றோம். அப்படி இல்லைன்னு தெளிவானது. அடுத்த கேள்வி பிறந்தது.”




“மோதிரத்தைத் திருடியது யார்?”

என்று இப்போது சுவர் காட்டியது.

தர்ஷினி தொடர்ந்தாள். “இந்தக் கேள்விக்கு விடை காண, அடிப்படையாய் இரண்டு கேள்விகளுக்குப் பதில் வேணும் – காரணம், வாய்ப்பு. அதாவது மோட்டிவ், ஆப்பர்சூனிட்டி.”

“மோதிரத்தைத் திருடுவது யார் யாருக்குச் சாத்தியம்?

“என்ன காரணம் அல்லது காரணங்கள்?”

“இந்த இரண்டு கேள்விகளில் முதல் கேள்விக்குப் பதில் தேட ஆரம்பித்தோம். ஒருசிலர் சந்தேக லிஸ்டிலிருந்து உடனே வெளியேறினார்கள் – உதாரணமாக, சமையல் மாமி, சேது. மற்றபடிச் சந்தேக வட்டத்துக்குள் விழுபவர்கள், மேஜர் கமல் மற்றும் அய்யாக்கண்ணுவின் ஸ்டேட்மெண்ட்களை நிஜமென்று கொண்டால், விஜய், சதானந்த ரகுநாத வர்மா, சுஜாதா.

“மோதிரம் காணாமல் போன சந்தர்ப்பத்தை ஆய்வு செய்த போது, இதைத் திட்டமிட்டு யாரும் செய்திருக்க முடியாதுன்னு தோன்றியது. ஏனெனில் பாஸ்கர் அன்று பார்த்து அந்த மோதிரத்தை அறையிலேயே வைத்துவிட்டு வரப் போகிறார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

“இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் மிக நேரடியாக இருந்தது. இரண்டே இரண்டு காரணங்கள் – ஒன்று, மோதிரம் இருந்தால் சொத்தை அடையலாம் என்ற நம்பிக்கை, இரண்டு, பாஸ்கரின் திருமணத்தை நிறுத்துவது.

“இந்த இரண்டாவது காரணம் இந்தக் கேஸில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டே தான் இருந்திருக்கிறது. காரணம், பத்மா. அவங்க சார்ம். அவங்களுக்கு இருந்த… அட்மைரர்ஸ்.” (பத்மா புன்னகைத்தாள்.)

“ஆனால் இந்த வழக்கின் மூல காரணம் பாஸ்கரோட குடும்பச் சொத்தை அடைவதுதான் என்பது வெகு சீக்கிரத்திலேயே வெளியாகி விட்டது. இந்தக் காரணத்தை வைத்துப் பார்த்தால், சுஜாதா சந்தேக வட்டத்திலிருந்து விலகுகிறார். ஏனென்றால், வர்மா குடும்பச் சொத்துக்களுக்கு இதுவரை பெண்கள் வாரிசானதே இல்லை.

“ஆக, வெகு சுலபமாக இந்தக் கேஸ் இரண்டு புள்ளிகளுக்குள் அடங்கிவிட்டது – விஜய் மற்றும் அவர் அப்பா. இரண்டாவது காரணத்தை யோசித்தாலும் விஜய் பார்வைக்கு வருகிறார். பத்மாவின்… ஆர்வலர்களில்… அவரும் ஒருவர் என்பதும் வெகு தெளிவாகத் தெரிந்தது.”

விஜய் தலைகவிழ்ந்தான். 

“இதற்கிடையில், இன்னொருவர் நம்ம சந்தேக வட்டத்துக்கு உள்ளே வந்தார். டாக்டர் திலீப். அவருக்கும் பத்மா மீது விருப்பம் இருப்பது வெகு சீக்கிரத்திலேயே தெளிவானது.”

“ரப்பிஷ்!” என்று உறுமினார் டாக்டர் திலீப். அவர் முகம் சிவந்தது.

“ஆனால் அவர் பாஸ்கர் ரூமுக்கு வருவதற்கு முன்னமே மேஜர் கமல் அங்கே மோதிரம் இல்லைன்னு சொல்லியிருக்காரே என்று சொல்லலாம். ஆனால் அவர் மோதிரத்தை எடுத்திருப்பது சாத்தியம்தான்! எப்படின்னு சிறிது நேரத்தில் சொல்கிறோம்” என்றாள் தர்ஷினி.

“கிழிச்சீங்க! மடியில கனம் இருந்தா தானே வழியில பயம்” என்று கோபத்துடன் சொன்னார் திலீப்.

தர்ஷினி அவரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தாள். “இதற்கிடையில் ஒரு ஆச்சரியமான விஷயம் வெளியானது. அதாவது, அன்று வீட்டில் பார்ட்டி நடக்கும் நேரத்தில் தற்செயலாக வேலைக்காரி ஹேமா அங்கு இருந்திருக்கிறாள் என்பது! அதனால் இன்னும் இரண்டு பேர் சந்தேக வட்டத்துக்குள் வராங்க. ஒன்று ஹேமா, இன்னொன்று… அய்யாக்கண்ணு.”

அய்யாக்கண்ணு எழுந்துவிட்டான். “இந்தாம்மா, சத்தியமா நான் அப்டில்லாம்” என்று ஆரம்பிப்பதற்குள், “உட்கார் அய்யாக்கண்ணு” என்றாள் அழுத்தமாக. சேது அவனைப் பிடித்து இழுக்க, அரைமனதாய் அமர்ந்தான் அய்யாக்கண்ணு.

“ஹேமா ஒரு திருடி அல்ல, ஆனால் இந்தச் சம்பவம் நடந்த அன்று அவள் என்னவோ பார்த்திருக்கிறாள் என்பது சீக்கிரமே வெளியானது. ஆனால் அவள் அதை வெளியே சொல்லாமல் அதை வைத்துப் பணம் பறிக்க முயற்சித்தாள். ஹேமா பதில் சொல்லாமல் மறைத்த அந்தக் கேள்வி: “

“ஹேமா அன்று எதை, எப்போது பார்த்தாள்?”

“இந்த நிலையில் கேஸின் உருவமே மாறிப் போகும்படியாய் ஒன்று நடந்தது. எல்லாருக்கும் தெரியும் நான் எதைச் சொல்கிறேன் என்று! ஆம், ஹேமாவின் கொலை! ஒரு சின்ன மனச் சலனத்தில் நடந்துவிட்ட திருட்டு என்பதிலிருந்து மாறி இது பெரிய விவகாரமானது. இத்தனை காலம் இந்தக் குடும்பம் உள்ளே நுழையவொட்டாமல் நிறுத்தி வைத்திருந்த போலீஸ் உள்ளே நுழைந்தது. இன்னொரு கேள்வி நம் பட்டியலில் சேர்ந்தது” மறுபடி பாய்ண்டரை நீட்டினாள் தர்ஷினி.




“ஹேமாவைக் கொன்றது யார்?”

“இதனோடு சேர்ந்து இன்னும் ஒரு கேள்வியும் எழுந்தது – ஹேமாவைக் கொன்றதற்கும் மோதிரம் காணாமல் போனதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா? நிச்சயமாய்ச் சம்பந்தம் உண்டு! ஏனென்றால் ஹேமா கொல்லப்பட்ட அன்று ஹேமா பேசிய சில வார்த்தைகள். எனக்கு விஷயம் தெரியும் என்று யாரையோ எச்சரிப்பது போலப் பேசினாள். மனதில் பிளாக்மெய்ல் திட்டம் ஏதாவது இருந்திருக்க வேண்டும்.

“அவள் பேசியதை கொண்டு யோசித்துப் பார்த்தால், அவள் பேசியபோது அந்த அறையில் இருந்தவர்கள் யாரோதான் அவளைக் கொன்றிருக்கக் கூடும். அப்படியானால் சந்தேகத்திற்குரியவர்கள் – எல்லா வேலைக்காரர்களும், சதானந்த வர்மா, சுஜாதா, விஜய், டாக்டர் திலீப், பாஸ்கர்.” 

பாஸ்கரின் முகம் சுருங்கியது. ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.

“இன்னும் தீவிர விசாரணையின் போது, இதில் இன்னொரு க்ரூப் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று வெளியானது – அரக்கில் கோவிலகம்! இவர்கள் மேல் சந்தேகப்பட இரண்டு பெரிய காரணங்கள் – 1. இந்த மோதிரம் இருந்தால் சொத்து என்ற நம்பிக்கை அவர்களுக்கும் உண்டு, 2. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கே சென்னையிலேயே பதினைந்து நாட்களாய்த் தங்கி, மோதிரத்தைக் கைப்பற்ற முயன்று வருகிறார்! 

“ஆனால் அரக்கில் கோவிலகத்தைச் சேர்ந்த யாரும் அன்று வீட்டுக்குள் வரவில்லை. அவர்கள் செய்திருந்தால் இதை வேறு யார் மூலமாவதுதான் செய்திருக்க வேண்டும். ஆக நம் அடுத்த கேள்வி இதோ.”

“பாஸ்கரைச் சேர்ந்தவர்களில் அரக்கில் கோவிலகத்திற்கு ஏஜண்ட் வேலை பார்த்தது யார்?”

தர்ஷினியிடமிருந்து எல்லோருடைய பார்வையும் ஒரு நிமிடம் விலகியது. எல்லோரும் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். ஒரு வேண்டத்தகாத சந்தேக அலை எல்லோரையும் தொட்டுப் போனது போல் இருந்தது.

“அவ்வளவுதான்னு சொல்ல முடியல. இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கி இருக்கு” என்று தர்ஷினி சொன்னதும் மீண்டும் எல்லோரும் அவளைப் பார்த்தார்கள்.

“இது வரை நாம் எழுப்பிய கேள்விகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான யூகம் என்ன?”

எல்லோரும் விழித்தார்கள்.

“பாஸ்கரோட மோதிரம் திருடு போயிருக்கு – இதுதான். ஆனால் ஒரு நிமிடம் காரணங்களை விட்டுவிட்டு வாய்ப்பை மட்டும் கவனித்தோமானால், அந்த மோதிரத்தை எடுத்து மறைத்து வைக்க பாஸ்கருக்குத்தான் எல்லோரையும்விட அதிகமான வாய்ப்பு இருக்கு!”

பாஸ்கர் திடும்மென எழுந்து நின்றான்.

தர்ஷினி தொடர்ந்தாள். – “ஆக, நம் கடைசிக் கேள்வி.” 




“இந்த மோதிரம் காணாமல் போனதில் பாஸ்கருக்குச் சம்பந்தம் இருக்கிறதா, இல்லையா?” 

பாஸ்கர் மெதுவாக அமர்ந்தான். பத்மா அவனை உறுத்துப் பார்த்தாள்.

“ஓவர் டு தன்யா” என்றாள் தர்ஷினி.




What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!