தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-16

16

 

“நீ சமைப்பதற்கே படித்தவள், உன் அளவுக்கு எனக்கு சமைக்க வராது” சுலேகா சொல்ல, “நீங்களாவது பரவாயில்லை அக்கா ஒன்றிரண்டு செய்வீர்கள். நான் அடுப்படி பக்கமே இந்த ஒரு வாரமாகத்தான் வருகிறேன். பரவாயில்லை, இதுவும் புது அனுபவமாக பிடித்தமானதாகத்தான் இருக்கிறது” என்றாள் கனகா.

“ஆமாம் இதற்கெல்லாம் நாம் அஞ்சனாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்”

ஆண்கள் அனைவரும் பெண்களை வியப்பாக பார்த்திருந்தனர். நன்றாக இருக்கிறது என்ற சிறிய பாராட்டு வார்த்தையால் இந்த அளவிற்கு ஒரு நேர்மறை அலைகளை வீடு முழுவதும் பரப்ப முடியும் என்பது அவர்கள் எதிர்பாராதது.

இதையே தினமும் செய்தால்… வேலைகளை எல்லோரும் பகிர்ந்து கொண்டால்…  அந்நேரத்திற்கு எல்லோருடைய மனதிலும் இந்த எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது.

“சத்யா நீங்கள் இரண்டு பேரும் இங்கே வந்து சாப்பிடுங்களேன்” சுகுணா அழைக்க “நோ” என கத்தியபடி எழுந்தாள் சாஹித்யா.

” பாட்டி அவங்க உள்ளே வந்தால் நான் வெளியே போயிடுவேன். எவ்வளவு தெளிவா பிளான் போட்டு இங்கே எல்லோரையும் வேலை செய்ய வச்சிருக்காங்க. இது உங்கள் யாருக்கும் புரியலையா? என்னை கூட வேலை பார்க்க வைத்தார்கள். இன்னமும் நீங்கள் எல்லோரும் அவங்களுக்கு சப்போர்ட் செய்றதா இருந்தா நான் கிளம்பி போய்க்கொண்டே இருப்பேன்” சாப்பாட்டு கையை உதறிவிட்டு டக் டக் என்று பூமி அதிர நடந்து அறைக்குள் நுழைந்து கதவை சத்தத்தோடு சாத்திக்கொண்டாள்.

இப்போது எல்லோருக்குமே நெருடலை தரத் துவங்கின சாஹித்யாவின் சொற்கள். ஒன்றும் இல்லாததற்கு இவள் எதற்காக இவ்வளவு கத்துகிறாள்? மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேச முடியாமல் அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கலியபெருமாள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.பேத்தி விஷயத்தில் தான் எங்காவது தவறு செய்கிறோமா?

“அக்காவும் அத்தானும் இரண்டு நாட்களில் வந்து விடுவார்கள் அப்பா. அதன் பிறகு சாஹித்யாவிடம் பேசலாம் .இப்போது நாம் சொல்வது  சரியாக வராது” சிவக்குமார் சொல்ல ஒத்துக் கொண்டு தலையசைத்தார்.

தொடர்ந்த நாட்களில் பெண்களும் ஆண்களும் இணைந்து எல்லா வேலைகளையும் செய்ய பழக கலியபெருமாளின் வீடு முயல்கள் குதித்து விளையாடும் பூங்காவாக மாறிக்கொண்டிருந்தது.

சாஹித்யாவின் பிடிவாத குணத்தை மகளும் மருமகனும் வந்த பிறகு பேசி சரி செய்து விடலாம், பிறகு கிரீஷ் தடவிய  இயந்திரமாய் சுமூகமாக உருளும் நம் குடும்பம் என்று கலியபெருமாளும் சுகுணாவும் பேசி வைத்திருக்க, அதுபோன்ற கனவெல்லாம் கண்டு விடாதீர்கள் என்றது அன்று மாலை நடந்த சம்பவம்.

மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சாஹித்யா மொட்டை மாடிக்கு போக, அங்கே அஞ்சனா அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்து கொண்டிருந்ததை சுலேகா பார்த்தாள்.

“அஞ்சனா என்ன செய்கிறாய்?” அவள் கேட்டு முடிக்கும் முன்பாகவே முதுகிலும் தோளிலும் இன்னமும் இரண்டு அடிகளை கொடுத்திருந்தாள் அஞ்சனா. விக்கலும் விம்மலமாக அழுதபடி கீழே இறங்கி ஓடிவிட்டால் சாஹித்யா.

“அய்யய்யோ சும்மாவே இந்த பெண் அலம்பு பண்ணுவாள், இப்போது இப்படி கைநீட்டி அடித்து வைத்திருக்கிறாயே?” சுலேகா அதட்ட வெறித்த பார்வையுடன் நின்றிருந்த அஞ்சனா விடு விடென்று கீழிறங்கி போய் ஸ்டோர் ரூமிற்குள் உட்கார்ந்து கொண்டாள்.




இது பெரிதாக வளரும் முன் நாமாகவே சொல்லிவிடலாம் என்றெண்ணிய சுலேகா கலியபெருமாள் வந்ததும் அவரிடம் சொல்ல கோபத்தில் சிவந்தன அவர் விழிகள்.

“அஞ்சனா “கோபத்துடன் கத்தியவர் நிதானமாக வந்து நின்றவளை நெருப்பாய் பார்த்தார்” சாஹித்யாவை அடித்தாயா?”

“ஆமாம் ஓவராக வாய் பேசினாள். அதனால் இரண்டு வைத்தேன்”

கைகளை இறுக்கி கண்களை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவர் “இனியும் நீ இங்கிருக்க வேண்டாம். உடனே கிளம்பு” என்றார்.

“அதனை உங்கள் மகன் வந்து சொல்லட்டும்” அலட்சியமாக சொல்லிவிட்டு மீண்டும் ஸ்டோர்  ரூமிற்கே போய் அமர்ந்து கொண்டாள்.

சத்யநாதன் வரவும் சுகுணா அவனிடம் நடந்ததை சொன்னாள். “அப்பா மிகவும் கோபமாக இருக்கிறார் சத்யா. ஒரு வாரத்திற்கு அஞ்சனாவை அவள் அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டு வா. அப்பாவின் கோபமும் குறையட்டும் சாஹித்யாவும் அவள் வீட்டிற்கு போய்விடுவாள். பிறகு நாம் பேசிக் கொள்ளலாம்”

தாயின் நீண்ட விளக்கத்திற்குப் பிறகும் நிதானமாக “எதற்கம்மா ?”என்றான் சத்யநாதன்.

“இவ்வளவு நேரம் உன் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாளே, எதுவுமே உன் மரமண்டையில் ஏறவில்லையா?” கலியபெருமாள் கேட்க சத்யநாதன் அவர் பக்கம் ஆச்சரியமாக திரும்பினான்.

“நீங்களா அப்பா? என்னுடனா பேசினீர்கள்? என்னிடம் பேசுவீர்களா அப்பா?”

அவர் வாயடைத்து நிற்க, தொடர்ந்தான்.”எனக்கென்று தனி சிந்தனை கொஞ்சம் சுதந்திரம் கேட்டேன். அதனை கொடுப்பதற்கு எத்தனை சட்ட திட்டங்கள் போட்டீர்கள்? அவற்றை மீறினேன் என்பதற்காக ஆறு வருடங்களுக்கும் மேலாக என்னுடன் பேசாமலேயே இருந்தீர்களே! இப்போது எதற்காக அப்பா பேசுகிறீர்கள்?”

“சத்யா நீ செய்வது தவறு, சரியான நேரத்தில் அப்பாவை குத்திக் காட்டாதே”

“நான் குத்தவில்லை அம்மா. முன்பு அவர் என்னை குத்தியதை இப்போதுதான் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா? அஞ்சனாவை பார்த்ததுமே பிடித்துப் போய் மிகவும் விரும்பித்தான் திருமணம் முடித்துக் கொண்டேன். ஆனாலும் இன்று வரை நானும் அவளும் மனதால் ஒன்றுபட்டு வாழவில்லை. காரணம் இவர்தான்”




“டேய் என்னடா உளறுகிறாய்?”

“ஆமாம் அம்மா, அப்பா என்னை ஒதுக்கியதை தொடர்ந்து குடும்பத்தில் எல்லோருமே என்னை கொஞ்சம் ஒதுக்கியே வைத்திருந்தீர்கள். வெளிப் போக்குக்கு தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுர எல்லோருடனும் ஒன்றாக கலந்து வாழ வேண்டும் என்ற

எண்ணம்தான் எனக்கும். என் திருமணத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தேன்”

“ஓரளவு சரியானது போல் தோன்றினாலும் சிறிது நாட்கள் கழித்துதான் அதனை உணர ஆரம்பித்தேன். அஞ்சனா இந்த வீட்டின் சமையல்காரியாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். இப்போது என் மனைவிக்காக இங்கே நான் யாரிடமும் எதுவும் பேசிவிட முடியாது.முன்பே என்னை ஒதுக்கி வைத்திருக்கும் நீங்கள் சுலபமாக அவளையும் ஒதுக்கி விடுவீர்கள். அதனால் மௌனம் சாதித்தேன். ஆனாலும் அஞ்சனாவிற்கு தவறிழைப்பதாக என் மனசாட்சி குத்திக் கொண்டே இருந்தது”

“அவளோடு ஓட்டவும் முடியாமல் விலகவும் முடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த போதுதான் சாஹித்யா பிரச்சனை வந்தது. முதலில் அஞ்சனா இங்கே இருந்து தொல்லை பட்டது போதும் என்று எண்ணித்தான் அவளை அம்மா வீட்டிற்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடுவது தவறு எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டும் என்று எனக்கு தன் செயலால் உணர்த்தினாள் அஞ்சனா”

“எவ்வளவோ வெளி உலக அனுபவங்களை பெற்றிருக்கும் நான் அத்தனை அனுபவமற்ற அஞ்சனாவின் அணுகு முறையில் வியந்து போய் நிற்கிறேன். இப்போதும் சாஹித்யா விஷயத்தின் பின்னால் நிச்சயம் வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது. இதனை அஞ்சனாவால்தான் விளக்க முடியும். விளக்கங்களை அவளிடம் கேட்காமல் தண்டனைகளை அவளுக்குத் தர நான் தயாராக இல்லை”

முன்பு போல் தலையை நிமிர்த்தி எதிர்த்துப் பேசவில்லை, பணிவாக கைகளை கட்டிக்கொண்டு தலை தாழ்த்தி பேசினாலும் தனது கருத்தை ஆணித்தரமாக சொன்ன மகனை பெருமையாய் பார்த்தார் கலியபெருமாள். சில வருடங்களுக்குப் பிறகு அவருடைய இரு கைகளும் மகனுக்காக பாசமாய் நீண்டன.

“டேய் சத்யா வாடா”

இழுக்கும் காந்தத்தை விலக்கி போகுமா இரும்புத்துண்டு! கண்கள்  கலங்க அப்பாவை கட்டிக் கொண்டான் சத்யநாதன்.




What’s your Reaction?
+1
61
+1
32
+1
3
+1
2
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!