Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-14

14 

 

“சமையலுக்கு ஆள் போட்டுடலாங்க” இரண்டே நாட்களில் தளர்ந்து போய் வந்து நின்ற மனைவியை யோசனையாக பார்த்தார் கலியபெருமாள்.

“மூன்று பெண்கள் இருக்கிறீர்கள் சுகுணா.அவரவர் புருஷன் பிள்ளையை கவனித்துக் கொண்டால் கூட போதும். ஏன் முடியவில்லை?”

“மருமகள்கள் இரண்டு பேருமே வேலைக்கு போகிறவர்கள். எனக்கு வயதாகி விட்டது”

“சரி வா, உனக்கு நான் ஹெல்ப் செய்கிறேன்” சொன்னவரை ஆச்சரியமாக பார்த்தாள் சுகுணா.

“நீங்க கிச்சனுக்குள் வரப் போகிறீர்களா?”

“எப்போதோ செய்திருக்க வேண்டும். நான்கு குழந்தைகளுடன் வீட்டில் நீ மட்டுமே போராடிக் கொண்டிருக்கும்போது நான் என் வேலைகளில் மட்டுமே கவனத்தை செலுத்தி இருந்தது தவறுதான் என்று இப்போது தோன்றுகிறது. இனியாவது கொஞ்சம் என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் வா”

அப்பாவை சமையலறைக்குள் பார்த்த மகன்கள் வியந்தனர். என்னப்பா இது? நீங்கள் போய்  அடுப்பையெல்லாம் தொட்டுக்கொண்டு…?”

“ஏன்டா எனக்கு எதுவும் தோஷம் இருக்கிறதா? அடுப்பை தொடக்கூடாதா? பாவம் என் மனைவி. வேலை செய்ய முடியவில்லை என்கிறாள். அவளுக்கு நான் தானே உதவ வேண்டும்?” துருவிய தேங்காயை மிக்ஸியில் இட்டு பொரிகடலை பச்சை மிளகாய் சேர்த்து சுழல விட்ட தந்தையை நம்ப முடியாமல் பார்த்தனர் சிவகுமாரும், சுரேந்தரும்.

“அப்பா குக் வச்சுக்கலாம்பா. நீங்க எதற்கு சிரமப்படுறீங்க?”

“இரண்டு நாட்களாக மேல் வேலை செய்யும் பெண் ஏகப்பட்ட புலம்பல் புலம்புகிறாள். காரணம் தெரியுமா? சமைத்ததை ஒதுக்கி கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று விடுவதாக சொல்லிப் போயிருக்கிறாள். முன்பு சமையலுக்கு ஆள் வைத்த போதும் இந்த குடும்பத்திற்கு சமைக்க என்னால் முடியாது என்று சொல்லிப் போனதாக ஞாபகம். மீண்டும் அதே நிலைமை வந்தால் என்ன செய்வது? எத்தனை சமையல்காரிதான் வைக்க முடியும்?”

“இதென்ன அநியாயம்? சமைத்த இடத்தை ஒதுக்க மாட்டாளா ஒரு வேலைக்காரி?” சுலேகா கத்தலாக  கேட்க…

“மாட்டாள்” ஆணித்தரமாக சொன்னாள் சுகுணா. “சமைத்து முடித்து பாத்திரங்களை ஒதுக்கி சிங்கில் போட்டுக் கொடுத்தோமானால் கருவி வைத்துவிட்டு போவாள். துணிகளை உதறி ஊற வைத்தோமானால், துவைத்து கொடுத்து விட்டுப் போவாள்.வீட்டை இரைந்து போடாமல் ஒதுக்கி கொடுத்தோமானால் பெருக்கி துடைத்துவிட்டு போவாள். இவ்வளவுதான் வேலைக்காரி செய்வாள். மற்றவற்றை நாம்தான் செய்ய வேண்டும்”

“ஐயோ அத்தை உண்மையை சொல்வதானால் இதுபோல் ஒதுக்கிக் கொடுப்பதுதான் பெரிய வேலை. தெரியுமா..?” சண்டை போடும் எண்ணத்துடன் பேசினாள் கனகா.




“உண்மைதான்.அப்படி ஒதுக்குவதற்கு ஒரு ஆள் போடலாமா? மொத்தத்தில் வீட்டிற்கு எத்தனை வேலை ஆட்கள் போடலாம்?”

“அதற்குத்தான் அஞ்சனா இருக்கிறாளே! அவள் வீட்டில் சும்மாதானே இருக்கிறாள். எல்லாவற்றையும் ஒதுக்கி கொடுக்க கூட முடியாதாமா?”

“எதை அம்மா ஒதுக்கி கொடுக்க வேண்டும்? நீயும் உன் பிள்ளைகளும் அவிழ்த்து போடும் துணிகளை எடுத்து ,சீப்பில் வைத்துப் போகும் முடியை சுருட்டி போடுவது வரை அஞ்சனா செய்ய வேண்டுமா?” கலியபெருமாள் கேட்க கனகா இன்னமும் கத்தினாள்.

“இப்படி எல்லாம் உங்களிடம் சொன்னது அஞ்சனாவா? நான் செய்தேன் என்று சொல்லிக் காட்டுகிறாளாமா?”

“இல்லை இதையெல்லாம் சொன்னது நம் வீட்டு வேலைக்காரி. இதெல்லாம் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. ஏன் வேலைக்காரிக்கே கூட இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது”

“மாமா, நானும் கனகாவும் வெளியில் போய் வேலை பார்ப்பவர்கள். எங்களால் வீட்டில் இவ்வளவுதான் செய்ய முடியும். வீட்டிலேயே இருந்து டிவி பார்த்துக் கொண்டு தூங்கி எழுந்து கொண்டிருப்பவள் இந்த சின்ன வேலைகளை செய்வதற்கு சோம்பல் படலாமா?”

“ஓ ,சிறு வேலைகள்தான். சரி ஒன்று செய்யலாம், நீங்கள் இரண்டு பேரும் பத்து நாட்கள் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள். அஞ்சனா செய்த வேலைகளை இருவரும் சேர்ந்து செய்யுங்கள்.அப்போது சிறியதா? பெரியதா? என்று வேலைகள் பிடிபட்டு விடும்”

“எங்களை வீட்டு வேலை செய்ய சொல்கிறீர்களே மாமா, அதுபோல் அஞ்சனாவை ஆபீஸ் வேலைக்கு அனுப்பிப்பாருங்களேன்,அப்போது தெரியும் எது கடினம் என்று” சுலேகா எகத்தாளமாக கேட்டாள்.

“இங்கே எல்லோருக்கும் அஞ்சனா வேலைக்கு போவதில் ஆட்சேபனை இல்லையென்றால் அடுத்த வாரமே அவளை வேலைக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றான் சத்யநாதன்.

“எந்த ஐடி கம்பெனி இவளுக்கு கதவை திறந்து பிடித்துக் கொண்டிருக்கிறார்களாம்?”

“ஐடி கம்பெனி இல்லை அண்ணி. சொர்ணரேகா ஹோட்டல் தெரியுமா? த்ரீ ஸ்டார் ஹோட்டல். அங்கே புட் மேனேஜராக அஞ்சனாவிற்கு வேலை கிடைத்தது. மாத சம்பளம் 58 ஆயிரம் ரூபாய்.எங்கேயோ போய் யாருக்கோ ஏன் சமைக்க வேண்டும் என்றுதான் அஞ்சனா அந்த வேலையை ஒத்துக் கொள்ளவில்லை. இப்போது நீங்கள் எல்லோரும் விரும்பினீர்களென்றால் அவளை வேலைக்கு அனுப்பி விடலாம்” சொல்லிவிட்டு சத்யநாதன் எழுந்து போய் விட்டான்.

சுலேகாவும், கனகாவும் முகம் வெளுத்து நின்றிருந்தனர்.அஞ்சனா இல்லாத வீட்டை அவர்களால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

“கஞ்சியை ஆற்றி விட்டேன் சுகுணா. வா நாம் வாசல் வராண்டாவிற்கு போய்விடலாம்” அகலமான பவுலில் கஞ்சியும் ஸ்பூனும் கூட தேங்காய் துவையலுமாக கலியபெருமாளும் சுகுணாவும் போய்விட்டனர்.

“ஸ்தம்பித்து நின்றிருந்த சுலேகாவின் தோள்தொட்டசைத்த சிவக்குமார்” உனக்கு ஏதாவது ஹெல்ப் வேண்டுமா? வா சமையலை பார்க்கலாம்” என அழைத்தான்.

கனகா சுரேந்தரை நிமிர்ந்து பார்க்க” குழந்தைகளை குளிப்பாட்டி யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு தயார் செய்து அழைத்து வருகிறேன். சமைத்துக் கொண்டிரு இருவருமாக அவர்களுக்கு ஊட்டி விட்டு ஸ்கூலுக்கு அனுப்பலாம்” பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போனான்.

மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க

மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மரத்தின் மேலிருந்த காக்கைகளை மெனக்கெட்டு எண்ணிக் கொண்டிருந்த அஞ்சனா,

சத்யநாதனுக்கு சிரிப்பை வரவழைத்தாள். மாடி இறங்கி அவளை நோக்கி நடந்தான்.

தன் முன் நீண்ட காப்பி டம்ளரை யோசனையாக பார்த்தாள் அஞ்சனா “அப்பா அம்மாவிற்கு ஹெல்ப் பண்ணுகிறார். அண்ணன்கள் அண்ணிகளுக்கு ஹெல்ப் செய்கிறார்கள்.நான் என் மனைவிக்கு…” என்று விட்டு காபி கிளாஸை உயர்த்தி காட்டினான்.

மரத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டு துளித்துளியாக காபியை பருகினாள். ” ம்…காபி ரொம்ப நன்றாக இருக்கிறது .உங்களுக்கு சமைக்க தெரியுமா?”

“தெரியும். மூன்று வருடங்களாக அப்பாவோடு சண்டை போட்டுக் கொண்டு தனியாக வீடெடுத்து தங்கி இருந்தேன். அப்போது சமைக்க கற்றுக் கொண்டேன்”

“அட இதையெல்லாம் இப்போது போய்… இன்னும் ஒரு வாரத்தில் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கப் போகும் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?”

“முன்பே சொல்லியிருக்க வேண்டும். ஒரு வகை ஈகோ… உன்னிடம் அது தேவையில்லை என்று இப்போது உணர்ந்து கொண்டேன்”




“சரி இனி என்ன செய்வதாக உத்தேசம்?” கேட்டவளை கண்ணெடுக்காமல் பார்த்தான்.

” இந்த நிமிட என் உத்தேசத்தை வெளிப்படையாகச் சொன்னால் அடித்தாலும் அடிப்பாய். நான் கிளம்புகிறேன்…” இரண்டு எட்டு நடந்தவன் நின்று திரும்பி “கோகுல் என்னை வந்து சந்தித்தார்” என்றான்.

அஞ்சனா திடுக்கிட்டாள் “எதற்கு? என்ன சொன்னார்?”

“அவரது திருமண செய்தி கேட்டு நீ தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறாயாம்.உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொன்னார்”

சத்யநாதன் சொன்ன செய்தி மனதிற்குள் இறங்க அஞ்சனாவிற்கு சில நிமிடங்கள் பிடித்தது. அதன் பிறகு அவள் நிமிர்ந்து பார்த்தபோது சத்யநாதன் அங்கே இல்லை.




What’s your Reaction?
+1
47
+1
37
+1
1
+1
7
+1
2
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!