Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-17

17 

 

“நமது ஊர்ப் பக்கம் ஒரு பழமொழி உண்டு.கட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றி தெரியும் ஆண்களுக்கு கல்யாணம் செய்தால்

சரியாகிப் போகும் என்பார்கள் பெரியவர்கள். அது எந்த அளவு உண்மை என்று இப்போது அனுபவத்தில் பார்க்கிறேன்” கலியபெருமாள் புன்னகைக்க சத்யநாதன் மிரண்டான்.

“ஐயோ அப்பா இந்த பழமொழியை எல்லாம் அஞ்சு எதிரில் சொல்லி விடாதீர்கள். ஊர் சுற்றி திரியும் ஆண்களை திருத்துவதற்கென்று பிறந்தவர்களா நாங்கள்? என்று தலையை சிலுப்புவாள். பிறகு அவளை சமாதானப்படுத்துவது பெரிய கஷ்டம்”

கலியபெருமாள் கடகடவென சிரித்தார் “பாவம்தான் மகனே நீ! ரொம்பத்தான் மிரண்டு போயிருக்கிறாய். சரி வா அஞ்சனாவை பார்க்கலாம்” ஸ்டோர் ரூமிற்குள் போய் பார்க்க அங்கே அஞ்சனா இல்லை.

வீட்டின் முன் விளையாண்டு கொண்டிருந்த பிள்ளைகள் அஞ்சனாவை பார்க்கவில்லை என்றும் சிறிது நேரத்திற்கு முன்பு சாஹித்யாதான் வெளியே போனாள் என்றும் தெரிவித்தனர்.

“சாஹித்யா மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாளே” சுகுணா சொல்ல ஏதோ ஒரு அபஸ்வரத்தை உணர்ந்தான் சத்யநாதன்.

 சாஹித்யா அவள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள், அஞ்சனா அடித்த தடம் இன்னமும் சிவப்பாக அவள் கன்னத்தில் இருந்தது. சத்யநாதன் அவளை தட்டி எழுப்ப… அவளோ அசையவில்லை. எல்லோருக்கும் பதற்றம் தொற்றிக்கொள்ள, கன்னத்தில் படபடவென தட்டி முகத்தில் நீர் அடித்து எழுப்ப மெல்ல விழிகளை திறந்தாள் அவள்.

வீட்டினர் அனைவரையும் சுற்றிலும் பார்த்தவள் மலங்க மலங்க விழித்தாள் “சாஹித்யா என்னம்மா ஆச்சு ஏன் இப்படி படுத்திருக்கிறாய்?”

“ஐயோ தூங்கி விட்டேனா? மணி என்ன?”

“ஆறு மணி ஆகிறது. உனக்கு உடம்புக்கு என்ன?”

“ஆறு மணியா? ஐயோ இனிமேல் நான் என்ன செய்வேன். அவன் என் போட்டோக்களை ரிலீஸ் செய்து விடுவானே?” அழ ஆரம்பித்தாள்.

எல்லோரும் அதிர்ந்து நின்றனர். சத்யநாதன் அவள் அருகே அமர்ந்து மெல்ல தலையை வருடினான். “சாஹித்யா ஒன்றும் பயப்பட வேண்டாம். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். யாரும் உன்னை எதுவும் செய்து விட முடியாது.என்ன நடந்தது? சொல்லுடா ப்ளீஸ்”




“மாமா என் ஸ்கூலில் ஒரு சார்,பேர் பிரபு, என்னை நிறைய போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்” திக்கி திணறி பேசினாள்.

கலியபெருமாள் கண்கள் சிவந்தார் “எவன்டா அவன் என் பேத்தியை மிரட்டுபவன்?”

அந்த கோபத்திற்கு சாஹித்யாவின் உடல் நடுங்கியது.சுகுணா ஆதரவாக அவளை அணைத்துக் கொள்ள “பாட்டி இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். யாரிடமும் சொல்ல வேண்டாம் பாட்டி.எனக்கு பயமாக இருக்கிறது. அம்மா அப்பாவிற்கு சொல்லி விடாதீர்கள். என்னை அடிப்பார்கள்”

“நீ தவறே செய்யவில்லையேடா! எதற்கு உன்னை அடிப்பது? அவனை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் அட்ரஸ் சொல்லு” சத்யநாதன் கேட்க இன்னமும் நடுங்கினாள்.

“வேண்டாம் மாமா அவரை போய் பார்க்க வேண்டாம். அவர் தப்பு தப்பாக பேசுவார். என்னை…எ… எனக்கு அசிங்கமாக இருக்கும். அய்யோ அத்தை முதலிலேயே சொன்னார்களே! நான்தான் கேட்கவில்லை” முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“அஞ்சனா என்ன சொன்னாள்?”

“அந்த ஆள் சரியில்லை. அவனுடன் பழகாதே என்று அன்று பொருட்காட்சியில் அவனுடன் நான் பேசியதை பார்த்த போதே சொன்னார்கள். நான்தான் அவர்கள் பேச்சைக் கேட்காமல்….”

“என்ன இதெல்லாம் அஞ்சனாவிற்கு தெரியுமா? என்னடா சத்யா இது நம்மிடம் ஒரு வார்த்தை கூட அவள் சொல்லவில்லை?”

“யாரிடமாவது இந்த விஷயம் சொன்னால் நான் செத்துப் போய் விடுவேன் என்று அவர்களிடம் சொல்லி வைத்திருந்தேன்…”

“இதனால்தான் உங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்ததா?”

 “நான் இங்கே வந்த பிறகு அவருடன் பேசவிடாமல் பழக விடாமல் ஏதாவது செய்து கொண்டே இருந்தார்கள்.என் போனில் அவர் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முயன்றார்கள். முதலில் அந்த சாரை பற்றி தெரியாததால் அத்தை பொறாமையில் பேசுகிறார்கள் என்று நினைத்து சண்டை போட்டேன். அவர்களை இந்த வீட்டை விட்டு அனுப்பி விட்டால்,நான் ப்ரீயாக இருக்கலாமென்று நினைத்தேன். ஆனால் நேற்று அந்த சார்…எ… என்னை தப்பு தப்பாக தொட்டு…” மேலே பேச முடியாமல் விம்மினாள்.

ஜட்ஜும் வக்கீலும் ஒன்றும் செய்ய முடியாமல் தாடை இறுக நின்றிருந்தனர்.

“அந்த ஆளிடமிருந்து தப்பி வந்து அத்தையிடம் சொல்லி அழுதேன். கோபத்தில் என்னை அடித்து விட்டார்கள். பிறகு சமாதானம் சொல்லி பாலை குடிக்க வைத்தார்கள். நான் தூங்கி விட்டேன்”

இடை இடையே கண்கள் சொருக சாஹித்யா பேச கனகா வேகமாக அவள் நாடித் துடிப்பை ஆராய்ந்து, கண்களை பிரித்துப் பார்த்தாள். “தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறாள்.ஆனால் தூங்கும் அளவுதான்” என்றாள்.

ஆக ,அஞ்சனா திட்டமிட்டு இவளை தூங்க வைத்துவிட்டு போயிருக்கிறாள் என எல்லோரும் உணர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனைக்குள் நுழைந்தபோது சத்யநாதன் அங்கே இல்லை.

“அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் நான் பேசுகிறேன் சுரேந்தர், நீயும் சத்யாவும் போய்…ஏய் இவனை எங்கேடா?”

“சித்தப்பா அப்பவே பைக் எடுத்துட்டு போயிட்டாரு” ஆதவ் தகவல் கொடுக்க, கலியபெருமாள் “இவன் வேற…” சலித்தபடி போன் பேசிவிட்டு “நீங்கள் இரண்டு பேரும் போய் பாருங்கள்” என்று மகன்களை அனுப்பினார்.

நான் ஒரு ஜட்ஜ் என் வீட்டு பெண் குழந்தைக்கே இந்த ஆபத்து என்றால் இந்த நாட்டின் ஆதரவற்ற எத்தனையோ பெண் குழந்தைகளின் கதி என்ன… கலக்கத்துடன் சரிந்து அமர்ந்து விட்டார் கலியபெருமாள்.




What’s your Reaction?
+1
57
+1
37
+1
2
+1
0
+1
1
+1
1
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!