Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-18 (நிறைவு)

18 

 

சத்யநாதன் பிரபுவின் வீட்டை அடைந்தபோது இருட்ட ஆரம்பித்துவிட்டது.முன்புறம் சோகையாய் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கை தவிர்த்து இருளில் மூழ்கியிருந்தது வீடு. சத்யநாதனின் இதயம் ரேஸ் குதிரையாய் வேகம் எடுத்தது.

ஹெல்மெட்டை சுழற்றாமலேயே காலிங் பெல்லை அழுத்தினான். மிக லேசாகத் திறந்த கதவின் பின் நின்றவன் “யாரது?” என்றான்.

“கொரியர் சார்”

“இந்நேரத்திற்கு என்ன? நான் எதுவும் ஆர்டர் போடவில்லை” அவன் கதவை பூட்டப் போக ஒரே உந்தலில் கதவோடு சேர்த்து அவனையும் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.உடன் தோள்பட்டை சுரீரென்று தீப்பட்டாற் போல் காந்தியது. கையில் கத்தியோடு நின்றிருந்த பிரபு சத்யநாதனின் கழுத்துக்கு குறி வைத்தான்.

 காயத்தின் எரிச்சலில் கையை நீட்டி பிரபுவின் முகத்தில் அறைந்த சத்யநாதன் அவன் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கினான் “அஞ்சுவை எங்கேடா?”

“அஞ்சுவா அது யார்?”

“டேய் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கொன்றே விடுவேன். என் அஞ்சுவிற்காகத்தான் பார்க்கிறேன். சொல்லு எங்கே அவள்?”

“ஓ சின்னப்பெண் போல் உடையும் நகையும் அணிந்து கொண்டு என்னை ஏமாற்ற நினைத்தாளே அந்தப் பெண்ணா? பிரபுவின் முகம் கோணலாய் சிரித்தது. “வா என்றதும் வந்து விட்டாள். இரு என்றால் படுத்தே விட்டாள். என்ன குடும்பம் உங்களுடையது?” பிரபு அரை ஸ்கிரீனை விளக்கி காட்ட உள்ளே கட்டிலில் படுத்திருந்தாள் அஞ்சனா.

“டேய்” பொங்கிய ஆத்திரத்துடன் பிரபுவை அடித்து துவைத்து விட்டான். “பெண்கள் எல்லோரும் உனக்கு கிள்ளுக் கீரையாடா? என் வீட்டு பெண்கள் மேல் கை வைக்க உனக்கு எவ்வளவு தைரியம்?”

“நான் எங்கேடா அவர்களைத் தேடினேன். எனக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை என்று லேசாக கண்ணை கசக்கினேன். உன் அக்கா மகள் தானாக வந்து என் மடியில் உட்கார்ந்து விட்டாள். அவளை காப்பாற்ற வேண்டும் என்று வந்தவளுக்கும் என் மேல் நிறைய ஆசை போல, அவளைப் போலவே உடை அணிந்து கொண்டு என்னிடம் குழைவாக பேசுகிறாள், இழுத்து கட்டிலில் போட்டால் அப்படியே அடங்கி விட்டாள். சரி வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால் நீ வந்து நிற்கிறாய்”

சத்யநாதன் பிரபுவின் வாயோடு அறைய அவன் முன் பற்கள் மூன்று பெயர்ந்து வெளியே விழுந்தன. “அஞ்சு” கத்தினான்.




அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பிரபு அவனை கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்து கத்தியை அவன் கழுத்தை நோக்கி இறக்க உயர்த்திய போது கைகள் தொய்ந்து கண்கள் சொருக கீழே விழுந்தான்.சிறிய மர ஸ்டூல்  ஒன்றுடன் அவன் பின்னால் நின்றிருந்த அஞ்சனா “மயக்க மருந்து.. ஸ்பிரே…” என்று துண்டு துண்டாக பேசியபடி கண்கள் சொருக தடுமாறினாள். வேகமாக எழுந்து அவளை தாங்கிக் கொண்டான் சத்யநாதன்.

——–

“ஷாப்பிங் போகும் போது என் கழுத்தில் இருந்த செயினை பறித்துப் போக முயன்றான் சார். நான் போராடினேன், மயக்க மருந்து ஸ்பிரே முகத்தில் அடித்து விட்டான். கையில் கிடைத்ததை வைத்து அவனை அடித்தேன். அதற்குள் என் கணவர் வந்து என்னை காப்பாற்றி விட்டார்” மருத்துவமனையில் பிசிறில்லாமல் போலீசிற்கு விவரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவளை எல்லோருமே கொஞ்சம் ஆச்சரியமாகவே பார்த்தனர்.

“இன்ஸ்பெக்டர் குறைந்தது ஐந்து வருடங்களாவது அவனை உள்ளே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்” கலியபெருமாள் சொல்ல, “நிச்சயம் சார் உங்கள் வீட்டு பெண் மீது கை வைக்க பார்த்திருக்கிறான். அவ்வளவு எளிதாக வெளியே விட்டு விடுவோமா?” பணிந்து சென்றார் இன்ஸ்பெக்டர்.

அஞ்சனா அருகில் வந்த கலியபெருமாள் அவள் கையை பற்றி குலுக்கினார்” உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்மா. நம் வீட்டையே மாற்றியது மட்டுமல்லாமல் நம் குடும்பத்தின் மரியாதையையும் மீட்டுக் கொடுத்திருக்கிறாய். உனக்கு நாங்கள் எல்லோருமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்”

அஞ்சனாவின் முகம் மலர்ந்து கண்கள் பனித்தது. சுற்றி இருந்த குடும்பத்தினர் அனைவருமே தன்னை பிரமிப்பாய் பார்ப்பதை உணர்ந்தாள். அதிலும் பார்வதி அவள் கால்களையே பிடிக்கப் போக பதறி ஒதுங்கினாள்.

” என்ன அண்ணி இது? என்னுடைய மகளென்றால் நான் செய்திருக்க மாட்டேனா? சாஹித்யாவிடம் இனிதான் நீங்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். ஜாக்கிரதை எதையும் தூண்டித் துருவாதீர்கள்”

பார்வதி பேச வார்த்தைகள் வராமல் தலையை அசைத்தாள். “இந்த ட்ரிப்ஸ் முடியவும் இவர்களை கூட்டிப் போகலாம் சார்” நர்ஸ் சொல்ல, “நீங்கள் எல்லோரும் கிளம்புங்கள், நான் இவளை அழைத்து வருகிறேன்” சத்யநாதன் அனைவரையும் அனுப்பினான்.

அறைக்கு வெளியே ஒரு முறை எட்டிப் பார்த்து லேசாக கதவை

ஒருக்களித்து வைத்துவிட்டு அருகே அமர்ந்தவனை கேள்வியாய் பார்த்தாள் “யாரைப் பார்க்கிறீர்கள்?”

“அது ஒரு லூசு. அவனை விடு, ஏன் இப்படி செய்தாய் அஞ்சு. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே?”

“எப்போதும் என்னை முறைத்துக் கொண்டு உங்கள் குடும்பத்திடமிருந்து பிரித்து கூட்டிப் போக வந்திருப்பவள் போலவே பார்த்துக் கொண்டிருப்பவரிடம் எதை நான் கலந்து கொள்ள முடியும்?”

” அப்படித்தான் உன்னை ஆரம்பத்தில் நினைத்திருந்தேன் அஞ்சு.அண்ணன்கள் அக்கா போல் இல்லாமல் முதலில் இருந்தே அப்பாவால் சிறிது ஒதுக்கி வைக்கப்பட்டே வளர்ந்த பிள்ளை நான்.அதனால் ஒரு வகை தாழ்வு மனப்பான்மை.நானும் அந்தக் குடும்பத்தினன்தானென நிறுவிக் கொள்ளவே வீட்டு வேலைகளை இழுத்தாம் போட்டு செய்வேன்.நன்றாக செய்தாய் என்று யாராவது ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டார்களா என்று ஏங்கி நிற்பேன்.நம் திருமணத்திற்கு பிறகோ, எனக்கு கிடைக்காத பாராட்டு உனக்காவது கிடைக்க வேண்டுமென நினைத்தேன்.அதனால் வீட்டில் உன் கடின உழைப்பை கண்டு கொள்ளவில்லை.இடையில்…”




 சத்யநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு தள்ளி திறக்கப்பட்டு பரபரப்போடு உள்ளே வந்தான் கோகுல்.

“கடவுளே அஞ்சு நீயா? அய்யய்யோ தற்கொலைக்கு முயற்சி செய்தாயா? எனக்கு கல்யாணம் என்றால் அஞ்சு தாங்க மாட்டாள். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே சார், அப்படியும் இப்படி ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து படுக்க வைத்திருக்கிறீர்களே?” புலம்பிக் கொண்டே போனவனை “ஏய்  நிறுத்து” அலறினாள் அஞ்சனா.

சத்யநாதன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.”இந்த கோமாளிக்கு  பயந்துதான் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டேன்”

“கோமாளியா? என்ன சத்யா பேச்சே மாறுகிறது? மறந்து விட்டாயா…நான் விட்டுக் கொடுத்ததால்தான் அஞ்சனாவை நீ திருமணம் முடிக்க முடிந்திருக்கிறது”

” அப்படியெல்லாம் நீ சொன்னதை நம்பிய சத்யநாதன் காணாமல் போய்விட்டான் கோகுல்.என் தேவதையை முழுதுமாக உணர்ந்து கொண்ட புது சத்யநாதன் நான்.இனி உன் பேச்சுக்கள் இங்கே எடுபடாது.திருமணம் முடித்துக் கொண்டு ஒழுங்காக வாழப் பார்”சத்யநாதன் அஞ்சனா அருகே நெருக்கமாக அமர்ந்து அவள் தோளில் கை போட்டுக் கொண்டான்.கோகுல் தலை குனிந்தபடி வெளியேறினான்.

“எவன் வந்து என்னை பற்றி என்ன கூறினாலும் நம்பி விடுவீர்களா?” கோகுல் போனதுமே தன் தோளில் கிடந்த கணவனின் கையை தள்ளினாள்.

“நான்தான் என் நிலைமையை முதலிலேயே சொல்லிவிட்டேனே அஞ்சு.ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனை குழப்புவது அந்த கோகுலுக்கு எளிதாகிப் போனது.

 உன்னை சோம்பேறி நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்குவாய் வீட்டு வேலைகள் செய்யாதவள் என்று குற்றச்சாட்டுகளை அவன் கூட்டிக் கொண்டே செல்ல,அந்த பேச்சுக்கள் எதுவும் உனக்கு பொருந்தாமல் போக, உண்மையை அறிய அவனை பேச விட்டு உன்னை கவனிக்க ஆரம்பித்தேன். கோகுலின் புரட்டு ட்டுத்தனங்கள் புரிய துவங்கியது”

” ஓஹோ…அதனால்தான் குடித்துவிட்டு வந்தீர்களோ?”

சத்யநாதன் தலை குனிந்தான்

“தவறுதான் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், குற்ற உணர்ச்சியை தாண்டி உன்னை நெருங்குவதற்காகவும் எனக்கு நானே போட்டுக் கொண்ட கவசம் அந்த குடி.குடிகாரனின் தவறுகள் போதையில் செய்ததாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறதே… அப்படி என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் அந்த சூழலையும் அம்மா மூலம் உனக்கு சாதகமாக திருப்பிக் கொள்வதை வியப்பாய் பார்த்தேன். நான் சராசரி ஆண்தான் அஞ்சு.ஆனால் நீ சராசரியை தாண்டிய தேவதைப்பெண்.ஒரு கட்டத்தில் அந்த குடியை கூட உனக்கெதிராக செய்ய முடியாமல் போக…”

” சும்மா மேலே தெளித்துக் கொண்டு வர ஆரம்பித்தீர்கள்…”

“ஆமாம்…அது எப்படி உனக்கு தெரியும்?”

” அன்று உங்கள் உடம்பு குடித்திருப்பதாக சொன்னது.ஆனால் வாய்…உங்கள் முத்தம்…அன்றுதான் உங்கள் நடிப்பை உணர்ந்து கொண்டேன்.உங்கள் மீதிருந்த கோபம் குறையத் தொடங்கியதும் அன்றிலிருந்துதான்”

“ஆஹா…கட்டுப்படுத்த முடியாமல் அன்று நான் கொடுத்த முத்தம்தான் இன்று எனக்காக பேசியிருக்கிறதா…”

“சாஹியை பக்கத்தில் வைத்துக் கொண்டு…அப்படியா செய்வீர்கள்?”

சாஹித்யா பேச்சு வரவும் சத்யநாதனின் முகம் மாறியது.”சிறு பெண்ணென்று நினைத்தால் இப்படி செய்து விட்டாளே?”

“சில நேரங்களில் நமக்கு பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் மேல் ஒரு க்ரெஷ் இருக்குமே…அப்படித்தான் அந்த பிரபு மேல் சாஹிக்கு இருந்திருக்கிறது.அவன் அதனை உபயோகப்படுத்த முயன்றிருக்கிறான்.எனக்கு அன்று பொருட்காட்சியில் அவனை பார்க்கும் போதே சந்தேகம்.பார்வை பேச்சு எதுவும் சரியில்லை.இவளானால் கிறங்கி நிற்கிறாள்.பிறகும் அவனை பற்றி சாஹி அடிக்கடி பேச,அவளை கண்காணிக்க ஆரம்பித்தேன்.”

“ம்…அன்று நீ சாஹியுடன் பேசிக் கொண்டிருந்த்தை அவனுடன் பேசியதாக அந்த கோகுல் சொல்லிக் கொண்டான்”

“நீங்களும் நம்பினீர்கள்?”

“இல்லை.குழம்பினேன்.உன் பக்கமே பாயத் துடித்த மனதை சிரமபட்டு அடக்கியிருந்தேன்.ஆனாலும் அன்று இரவு சாஹித்யாவின் உடையில் நீ சிக்கென நின்ற போது, என்னால் முடியவில்லை.அவளுக்கு உதவுவதற்காக முன்பே யோசிததாயா? அவள் உடைகள்…அணிகள்…”

“ஆமாம்.சாஹித்யாவை ஒரு நாள் அந்த பிரபு மிரட்டுவானென எதிர்பார்த்தேன்.அந்த நேரம் அவள் இடத்தில் நானே நிற்க வேண்டுமென பயிற்சிகள் எடுத்தேன்.அவள் புரிந்து கொள்ளாமல் என்னை வீட்டை விட்டு விரட்ட நினைத்தாள்.அவளுக்காகத்தான் அம்மா வீட்டிற்கு போக முடியாதென பேசி,நம் வீட்டில் தங்கினாலும்,அதையே நம் குடும்பத்தை மாற்றவும் உபநோகித்துக் கொண்டேன்”

“கூடவே என்னையும்…”

“உங்களையெல்லாம் எப்போதோ மாற்றியாயிற்று…என்னை எதிர்கொள்ள பயந்து போதையை நாடிய போதே உங்கள் விக்கெட் அவுட் தெரியுமா?”

ஆணின் திமிராக,கௌரவமாக தான் நினைத்து செய்த செயல்,தன் மனைவியால் அலட்சியமாக சுண்டுவிரலால் ஒதுக்கப் பட்டிருப்பதை அசடு வழிதலோடு உணர்ந்தான் சத்யநாதன்.பெருமிதத்தோடு தன் மனையாளை அணைத்துக் கொண்டு வளமான எதிர்கால வாழ்விற்கு தயாரானான்.

நிறைவு




What’s your Reaction?
+1
60
+1
23
+1
2
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!