Serial Stories udalena nan uyirena nee

உடலென நான் உயிரென நீ-4

4

” ஆன்ட்டி …” சஷிஸா கெஞ்சலாய் ரூபாவை பார்த்தாள்.

” உன் அப்பாவின் அதிகார எல்லை உனக்கு தெரியும் சஷிஸா.  அவருக்கு என் மீது கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டதென நினைக்கிறேன். அதுதான் அந்த குரியகோஸ் மூலம் என்னை துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் .நான் சமாளித்துவிட்டு வந்துவிட்டேன் . ஆனால் தற்சமயத்திற்குத்தான் .அவர் தனது அதிகார கைகளை நீட்டி என்னைக் கண்டுபிடித்து, என்னுடன் கணா இல்லையெனக் கண்டு , அவனை தேடி மோப்பம் பிடித்து இந்தியா வந்து உன்னைக் கண்டுபிடிக்கும் போது …நீ ஒரு தாயாக அவர் முன் நிற்க வேண்டும். அவர் தோற்று திரும்ப வேண்டும் “

ரூபாவின் திட்டம் மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அது நல்ல திட்டமாகத்தான் சஷிஸாவிற்கு தோன்றியது .  இன்னமும் ஒரு படி மேலே போய் அவள் மனம் இடுப்பில் குழந்தையோடு நிற்கும் அல்லது வயிற்றில் குழந்தையோடு நிற்கும்  தன் தோற்றத்தை பார்த்ததும் இஞ்சி தின்ற குரங்கு போல் மாறும் தன் தந்தை சந்திரலாலின்  முகத்தை கூட கற்பனையில் கண்டு மகிழ்ந்தது.

ஆனால் …அதற்கு அவளுக்கு உடனடி தேவை ஒரு ஆண். அவனுடன் திருமணம் . அப்படி ஒரு ஆணை அவள் எங்கே போய் தேடுவாள் ? அவளது உண்மை நிலை அறிந்து அவளை திருமணம் செய்ய சம்மதிக்கும் ஒருவன் …அதுவும் இப்போது அவள் இருக்கும் நிலைமையில்…

சஷிஸாவின் கை அநிச்சையாக அவள் முகத்தை வருடியது . உதடுகள் புண்ணாகி வடிவிழந்து கிடந்தன. கன்னங்கள் குழிவாகி ஒட்டிக் கிடந்தன .

விநாடியில் அவளது வேதனையை உணர்ந்து கொண்ட ரூபா ஆதரவாக புன்னகைத்தாள் .” சஷிஸா கவலைப்படாதம்மா . உன்னை உணர்ந்து கொண்டு உன்னை மணக்கும் ஒருவனை என்னால் காட்ட முடியும் “

” யா …யார் ஆன்ட்டி அது ?”

” என் மகன். கணநாதன் “

” ஆன்ட்டி …” சிறிய கூச்சலாகத்தான் அவள் குரல் வந்து விட்டது போலும் . கணநாதன் ஹாலிலிருந்து பெட்ரூமிற்குள் வந்துவிட்டான்.

” என்ன …ஏன் கத்தினாய் ? ” அவன் கையிலிருந்த போனின்  டார்ச்சில் பென்சில் முனையாய் வெளிச்சக்கீற்று . முன் பாய்ந்த அதன் பின்னணியில் இருந்தவனது முகம் இருளப்பிக் கிடந்து அவனது தோற்றத்தை மறைத்தது.

சஷிஸாவின் பார்வை அவன் வரிவடிவத்தில் ஆணியடித்து நின்றது .இ …இவனையா …? இவனுடனா …?

” கணா  ஒன்றுமில்லை. நீ வெளியே போ ” ரூபா போனிலேயே மகனுக்கு உத்தரவிட்டாள். அவன் வெளியேறினான்.

” அவன் என் மகன் சஷிஸா. என்னைப் போல் நம்ப உகந்தவன் …” அழுத்தமாக பேசினாள்.

” எ …எனக்கு பயமாக இருக்கிறது ஆன்ட்டி “

” எதற்கு பயம் …? அவன் என்ன பேயா ? பிசாசா …? “

” பேய் , பிசாசுகளை விட எனக்கு மனிதர்கள் மீது தான் பயம் ஆன்ட்டி ” சஷிஸா விம்மினாள். ஆனால் அந்த விம்மல் வெளியே கேட்டு விடாதபடி வாயை பொத்திக் கொண்டாள் .

” சரி வேண்டாம். இந்த திட்டத்திற்கு  உனக்கு தெரிந்த வேறு யாராவது உன் மனதிற்கு பிடித்தவர்கள் இருந்தால் சொல்லும்மா “




சஷிஸா விழித்தாள் .

” இல்லையென்றால் விடு. வேறு ஏதாவது நல்ல திட்டமாவது சொல்லு “

இன்னமும் அதிகமாக விழித்தாள்.

” என்னம்மா எதற்கும் இப்படி விழித்தால் நான் என்னதான் செய்வது ? ” ரூபா அலுத்தாள் .

” எ…எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க ஆன்ட்டி .நான் யோசித்து சொல்கிறேன் “

” ஒரு வாரமா ..? சஷிஸா  நீ இப்போது இருப்பது மணிபாலில் ஒரு அவுட்டர் ஏரியா. இரவு நேரமென்பதால் நீ ஆஸ்பத்திரியை விட்டு வந்தது இது வரை யாருக்கும் தெரியாது .நாளை விடிந்ததும் தெரிந்து விடும்..  உனக்கு கொஞ்சம் ஓய்வு வேண்டுமென்பதால் இப்போது இரண்டு மணி நேரங்கள் உன்னை தூங்க விட்டாயிற்று. இனி இருள் விலகி வெளிச்சம் வருவதற்குள் நீ  கர்நாடகாவை விட்டு வெளியேறி விட வேண்டும் “

” நா…நான் எங்கே போவேன் ஆன்ட்டி ? நான் பிறந்தது மும்பையில். வளர்ந்ததும் அங்கேதான். மும்பை , டில்லி , கொல்கத்தா தவிர எனக்கு இந்தியாவில் வேறு ஊர்கள் தெரியாது . இப்போதுதான் ட்ரீட்மென்ட் என்று என்னை இங்கே மணிப்பால்  ஆஸ்பிடலில் கொண்டு வந்து விட்டார்கள் …நா…நான்…”

” அழுகையை நிறுத்து சஷிஸா. இது அழும் நேரம் இல்லை. மும்பை , டில்லி ,  கொல்கத்தா எங்கேயும் நீ போகப் போவதில்லை. நீ உன் அப்பா சிறிதும் எதிர்பாராத தமிழ்நாட்டிற்கு போகப் போகிறாய். அங்கேதான் வாழப் போகிறாய் “

” தமிழ்நாட்டிற்கா …,? நானா …?  ஆன்ட்டி அம்மா தமிழ் பேசுவதால் எனக்கும் சொல்லி தந்ததால் நானும் தமிழ் பேசுவேன். மற்றபடி எனக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் எந்த சம்பந்தமுமில்லை .நான் எப்படி அங்கே போய் வாழ முடியும் ? “

” உன் அம்மா தமிழ் நாட்டுக்காரி தான்   சஷிஸா .அவளது ஆசை நீ தமிழ்நாட்டில் தங்குவது தான் .”

தங்குவது சரி ஆனால் கல்யாணம் முடித்து …அதுவும் அந்த கணநாதனை கல்யாணம் முடித்து தங்குவது என்பது ….சஷிஸாவின் மூளைக்குள் மட்டக் குதிரைகள் இரண்டு ரேஸ் ஓட்டம் ஓட முயன்று தடுமாறிக் கொண்டிருந்தன.




What’s your Reaction?
+1
20
+1
12
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
11 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!