Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-15

15 

 

“இரண்டு கிலோ மட்டன் .எலும்பை தனியாக பிரித்து குழம்பு வைத்துவிட்டு மீதியை கிரேவியாகவும், வறுவலாகவும் செய்துவிடலாம்” சுகுணா சொல்ல ஆட்சேபம் சொல்லினர் சுலேகாவும் கனகாவும்.

“இரண்டு கிலோ மட்டனா? அடக்கடவுளே! உடம்பு என்னாகிறது?” சுலேகா மருத்துவராக கவலை காட்ட, கனகா இயற்கையிலேயே உப்பி இருக்கும் தனது உடலை அதிக கவலையுடன் குனிந்து பார்த்துக் கொண்டாள்.

“இத்தனை கொழுப்பும் நம் உடம்பிற்குள்ளா போகிறது?” பெரிய குத்துச் சட்டியில் குவித்து வைத்திருந்த ஆட்டுக்கறியை பார்த்து மிட்சியாய் கேட்டாள் சுலேகா.

“வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை நம் வீட்டில் இதுதானே சமையல்? பிரியாணி, கிரேவி, வறுவல், கோலா உருண்டை என்று செய்முறைகள்தான் வித்தியாசமாகுமே தவிர மட்டன்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்” சுகுணா சொல்ல சுலேகா விழித்தாள்.

“இதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாயா?”

சாப்பிடும் போது கலோரி தெரிவதில்லை, சமைக்கும் போது அநியாயத்திற்கு நினைவு வந்து தொலைகிறது தனக்குள் அலுத்துக் கொண்டாள்.

“மீன், நண்டு இப்படி சி புட்ஸ் சாப்பிடலாமே அத்தை?”

” சாப்பிடலாம்தான், அதெல்லாம் இங்கே யாருக்கும் பிடிக்க மாட்டேன் என்கிறதே, எல்லோரும் மட்டன்தான் கேட்கிறார்கள்”

“சை…வெளி வேலைகளில் இதை நான் கவனிக்காமல் இருந்து விட்டேனே!  இனி வீட்டினரின் உணவு பழக்கத்தை கவனித்து மாற்ற வேண்டும்.” முனுமுனுத்தபடி குத்துச் சட்டியை தூக்கிக்கொண்டு

அரிவாள்மனையை தரையில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

“நீ போய் மசால் அரைத்து வா” கனகாவை ஏவி விட்டு கறித் துண்டுகளை குழம்புக்கு வறுவலுக்கு கிரேவிக்கு என்று தனித்தனியாக வெட்ட துவங்கினாள்.

“சமையல் முடிய எவ்வளவு நேரமாகும்?” உள்ளே வந்து கேட்ட சிவக்குமாரை எரிப்பது போல் பார்த்தாள்.

“இதை வெட்டி முடிக்கவே ஒரு மணி நேரமாகும் போல, பிறகு சமைக்க வேண்டும். ஒழுங்காக ஓடி விடுங்கள், கடுப்பேற்றாதீர்கள்”

“நான் வேண்டுமானால் வெங்காயம் உறிக்கட்டுமா?” சிவக்குமார் மனைவிக்கு உதவ முன்வந்தான்.




அண்ணனைப் பார்த்து தானும் தயக்கமாய் பின் வந்து நின்ற சுரேந்தரை “சிங்கில் கிடக்கும் பாத்திரங்களை அலசி டப்பில் போட்டு பின்னால் தூக்கிப் போய் வையுங்கள். வேலைக்காரி வந்தால் விளக்குவதற்கு சரியாக இருக்கும்” ஏவினாள் கனகா.

“சாஹிம்மா உன்னோட அழுக்கு டிரஸ் நிறைய இருக்குதுன்னு சொன்னாயே! எடுத்து வந்து பிரித்து வாஷிங் மெஷின்ல போடும்மா” சுகுணா சொல்ல சாஹித்யா விழித்தாள். “நானா பாட்டி..?”

“நீயேதான், பார்த்து பார்த்து அழகழகாக டிரஸ் வாங்கிக் கொள்கிறாயே! அதை எல்லாம் பத்திரமாக நீயேதான் துவைத்துக் கொள்ள வேண்டும். வாஷிங் மெஷின் போடும் வேலை கூட செய்ய முடியாதா?” கனகா கேட்க முனுமுனுத்தபடி தனது அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு வந்தாள் சாஹித்யா.

“எனக்கு ஐஸ்கிரீம், எனக்கு ஜூஸ் “ஆளுக்கு ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்த பேரன்களை தனது ஸ்கூட்டரில் கூட்டிக்கொண்டு தெருமுனையில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லருக்கு போனார் கலியபெருமாள்.

“பர்ஃபெக்ட்” என்றபடி ஸ்டோர் ரூமிற்குள் வந்தான் சத்யநாதன். அவன் கையில் இரண்டு கண்ணாடி டம்ளரில் ஜூஸ் இருந்தது.

“எது இந்த ஜூஸா?” ஜூஸை வாங்கிக் கொண்டு கேட்டாள் அஞ்சனா. மூன்று வேளைகள் உணவு போக இது போன்ற பானங்களையும் அஞ்சானாவிற்கு தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

“இல்லை நம் வீடு, மிகவும் சரியான பாதையில் இயங்க துவங்கியிருக்கிறது. இதுதானே உன்னுடைய விருப்பம் அஞ்சு?” அஞ்சனா மவுனமாக ஜூசை குடித்தாள்.

“இப்போது எல்லோருமே உன்னுடைய கஷ்டங்களை புரிந்து கொண்டிருப்பார்கள்.அதோ பாரேன் சாஹித்யாவை அன்று எப்படி உன்னை எடுத்தெறிந்து பேசினாள், இப்போது, நிச்சயம் தெரியாமல் பேசி விட்டோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டு  இருப்பாள்”

அஞ்சனாவின் பார்வை சாஹித்யாவின் மேல் அச்சடித்து நின்றது. “சிறு பெண் அவள் இப்படி வேலை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை”

“நினைத்திருந்தாலும் தவறில்லை அஞ்சு.பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் செய்யும் தவறு இதுதான், பெண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையானாலும் ஓரளவு விபரம் தெரிந்த வயதிலேயே அவரவர் வேலையை அவரவர் செய்ய பழக்கப்படுத்த வேண்டும்”

அஞ்சனா தலையசைத்தாள் “எங்கள் வீட்டில் அம்மா அப்படித்தான்,ஆனால் திருமணம் முடித்து வந்து விட்ட பிறகு எல்லா வேலைகளும் உன் பொறுப்பு தானே நீ தானே பார்க்க வேண்டும் என்கிறார்கள்.இந்த முரண்பாட்டை எப்படி எடுத்துக் கொள்வது?” ஒரு விதவிரக்தி அஞ்சனாவில் குரலில்.

“அது… ஒரு தாயாக அவர்கள் மனதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும் அஞ்சு. திருமணம் முடித்து வாழப்போன இடத்தில் மகள் சில வருடங்கள் பொருந்திப் போன பிறகு தன்னுடைய வசதிகளை பேசலாமே என்று நினைத்திருப்பார்கள்”

“நான்கு மாதங்கள் அமைதியாய் வேலை பார்த்ததற்கே கிட்டத்தட்ட சமையல்காரியாக்கிவிட்டார்கள். இதில் வருடக் கணக்கில் அமைதியாக இருந்திருக்க வேண்டுமோ?”

” நான் சொல்லவில்லை, உன் அம்மாவின் மனநிலையை சொன்னேன்”

“ஏன், நீங்களும் அப்படி நினைக்கவில்லை? வீட்டினருக்கு எல்லாமும் நானேதான் செய்ய வேண்டும் என்று உங்கள் மனதில் நினைக்கவில்லை?”

சத்யநாதன் பெருமூச்செறிந்தான். “நினைத்தேன்தான்.எதையாவது செய்து நீயும், நானும் இந்த வீட்டிற்கு இன்றியமையாதவர்களாக மாறி விட வேண்டுமென எண்ணினேன்”

“உங்களுக்கென்று ஒரு காரணம் இருக்கலாம்/ஆனால் அதனை உங்களை நம்பி வந்த ஒரு பெண்ணின் மீது ஏற்றுவது எந்த வகை நியாயம்?”

“தவறுதான் அஞ்சு/நான் முன்பு நினைத்து இருக்கிறேன், என்னை விட ஒரு தவறற்ற பெருந்தன்மையான மனிதன் கிடையாதென்று.என் அப்பாவுடன் எனக்கு வரும் ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் இப்படித்தான் நினைத்து என்னை நானே உயர்த்திக் கொள்வேன். தன்னம்பிக்கை என்று இத்தனை நாட்களாக நான் நினைத்திருந்தது தற்பெருமை என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்”

“எந்த போதி மரத்தடியில்?” அஞ்சனா கிண்டலாக சுற்றும் முற்றும் பார்க்க சத்யநாதனின் ஆட்காட்டி விரல் அவளை நோக்கி நீண்டது.

“எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது ஒரு நபர்  திருப்பத்தை கொண்டு வருவார். அம்மா அப்பா சகோதரர் நண்பன் என்று அவர்கள் யாராகவும் இருக்கலாம். வாழ்வில் மாற்றத்தை அனுபவித்தவனுக்கு அந்த நபர் தேவதையின் வம்சமாக தோன்றுவார்.எனக்கு நீ அப்படித்தான் அஞ்சு”

கணவனின் முகத்திற்கு நேரான புகழுரை கூச்சத்தை கொடுக்க, கையில் இருந்த கண்ணாடி டம்ளருக்குள் பார்வையை பதித்தபடி இருந்தாள்.” எலுமிச்சம்பழத்தை சரியாக பிழியாமல் கொட்டைகள் டம்ளருக்குள்ளேயே கிடக்கிறதா?” காலியாகிவிட்ட அவள் கை டம்ளருக்குள் எட்டிப் பார்த்தவனை செல்லமாய் முறைத்தாள்.

“தேவதை, கடவுள் என்று போற்ற வேண்டாம். சாதாரண மனுசியாக பெண்களைப் பாருங்கள். தியாகம் செய்ய பிறந்தவள் என்று அவளை ஏற்றி விட்டு வீட்டுக்குள் முடக்காமல் இருந்தீர்களானால் போதும்”




மேடைப் பேச்சுக்கு ஏற்ற வார்த்தைகள்தான். ஆனால் அப்போது அஞ்சனாவின் வாயிலிருந்து சன்னக்குரலில் முணுமுணுப்பாகவே வந்தன. ஆனாலும் தங்களது கருத்தை ஆணித்தரமாக சொல்லின அவ்வார்த்தைகள்.

அவள் பக்கம் சாய்ந்தமர்ந்து வார்த்தைகளை தெளிவாக கேட்டுக்கொண்ட சத்யநாதன் தலையசைத்துக் கொண்டான். “நிச்சயம், இதோ நம் வீடு உன் வார்த்தைகளுக்கு சாட்சி. வீட்டு வேலைகளானாலும் வெளி வேலைகளானாலும் ஆண் பெண் இருவருமாக கலந்து செய்தோமானால் எல்லாமே எளிதுதான். அதோ பாரேன் மதியம் 2 மணி வரை நீளும் உன் சமையல் வேலைகள் என்று 12 மணிக்கே முடிந்துவிட்டது. எல்லோருமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மொத்தமாக உட்கார்ந்து டிவியில் நல்ல படமாக தேர்ந்தெடுத்து பார்க்கலாம் சரிதானே?”

உலை வைக்க அரிசி எடுக்க ஸ்டோர் ரூமுக்குள் வந்த கனகா அருகருகே அமர்ந்து தலை சாய்த்து பேசிக் கொண்டிருந்த இருவரையும் எரிச்சலாக பார்த்தாள். அங்கே வியர்வை வடிய எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருக்க இங்கே இவர்களுக்கு என்ன கொஞ்சல் வேண்டியிருக்கிறது?

அஞ்சனா வேகமாக நகர்ந்து எழுந்து கொள்ள முயல, அவள் கையை அழுத்தி பற்றினான் சத்யநாதன். “என்ன வேண்டும் அண்ணி?”

எங்கள் பிரைவசியில் ஏன் தலையிடுகிறாய் என்பது போன்ற தொனியில் அவன் கேட்ட கேள்விக்கு “அரிசி எடுக்க வந்தேன்” என்று அளந்து எடுத்தவளின் மனதிற்குள் புயல் காற்று.

அதற்கு நீங்கள் உங்கள் ரூமிற்குள் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்… பொறுமியபடி வந்தவள் “ஸ்டோர் ரூமிற்குள் உட்கார்ந்து கொண்டு வெட்கமில்லாமல் கொஞ்சல்” உடனே சுலேகாவிடம் பற்ற வைத்தாள்.

“அவர்களுக்கு சிறு வயது கனகா.அப்படித்தான் இருப்பார்கள்.பொறாமையாக இருந்தால் நாமும் நம் கணவர்களுடன் கொஞ்சிக் கொள்ள வேண்டியதுதான்”

“என்னக்கா இப்படி சொல்லுகிறீர்கள்?”

” வேறு என்ன பேச சொல்கிறாய்? இதோ பார்த்தாயா ஒரே வாரத்தில் நம் வீட்டையே தலைகீழாக மாற்றி வைத்திருக்கிறாள். மாமாவும் இப்போது அவள் பக்கம் சேர்ந்து விட்டார்.இனி அவள் தலையில் வீட்டு வேலைகளை கட்டி விட்டு இருக்க முடியாது.இதோ இப்போது போல் வீட்டு வேலைகளை எல்லோரும் சேர்ந்துதான் செய்தாக வேண்டும். நம் நிலைமை இப்படி இருக்க அவள் கொஞ்சலை கேட்கும் நிலையிலா நாம் இருக்கிறோம்? போய் தட்டை எடுத்து வை. சமையல் முடிந்தது, இனி பரிமாற வேண்டும்”

கனகா முகத்தை தொங்கப் போட்டபடி தட்டுகளை எடுத்து வைத்தாள். எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே சத்யநாதன் இரண்டு தட்டுகளில் சாப்பாடு எடுத்துக்கொண்டு ஸ்டோர் ரூமிற்குள் போனான்.

“எப்போதும் ஆளுக்கு ஒரு சுவரை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இப்போது கொஞ்சலையும், அக்கறையையும் பார்த்தீர்களா?” கனகா சுரேந்தரிடம் கிசுகிசுக்க, அவன் “வாயை மூடு அப்பா காதில் கேட்கப் போகிறது” மெலிதாய் அதட்டினான்.

“சுலேகாக்கா குழம்பு சூப்பர். உப்பு, உறைப்பெல்லாம் ரொம்ப சரியாக இருக்கிறது” ஸ்டோர்  ரூமுக்குள்ளிருந்து சத்தமாக கூறினாள் அஞ்சனா.

அவ்வளவு நேரமாக இருந்த சலிப்பும் எரிச்சலும் மறைந்து பூவாய் மலர்ந்தது சுலேகாவின் முகம்.

“கிரேவியில் மசால் மிக நன்றாக கலந்து வந்திருக்கிறது.அரைத்த பக்குவம் பர்ஃபெக்ட்” அடுத்த பாராட்டிற்கு கனகா மலர்ந்தாள்.

வீட்டுப் பெண்களின் முக மலர்வில் வினாடியில் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமாய் மாறியது அந்த இடமே.




What’s your Reaction?
+1
59
+1
26
+1
3
+1
1
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!