Cinema Entertainment விமர்சனம்

பட்டணத்தில் பூதம் விமர்சனம்

1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப் படம் வெளியானது. முதல் வண்ணப் படமே யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான படமாக அமைந்தது. ‘இருபதாம் நூற்றாண்டில் பூதமாவது பிசாசாவது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன?’ என்ற பகுத்தறிவு மற்றும் லாஜிக் இவற்றையெல்லாம் மறக்கச் செய்து மக்களைப் பார்த்து மகிழ வைத்த சிறந்த பொழுதுபோக்குப் படமாக வந்தது ‘பட்டணத்தில் பூதம்’. காட்சியமைப்புகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி, எண்டெர்டெய்ன்மெண்ட் டெம்போ கொஞ்சம்கூட குறையாமல் இறுதி வரை கொண்டு சென்றிருந்தனர்.




மெய்நிகர் யதார்த்த தொழில்நுட்ப வளர்ச்சியால் 2D திரையரங்குகள் இல்லாமல் போக வாய்ப்பு உண்டா? - Quora

‘கொஞ்சும் சலங்கை’ என்ற அருமையான டெக்னிகலர் படத்தை இயக்கிய எம்.வி.ராமன் பட்டணத்தில் பூதம் படத்தை இயக்கியிருந்தார். வசனம் எழுதிய ஜாவர் சீதாராமன் படத்தின் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆம், ‘ஜீ பூம்பா’ என்ற பூதம் அவர்தான். ஜெய்சங்கருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்க, நகைச்சுவையில் நாகேஷ் தூள் கிளப்பியிருந்தார். அவரது ஜோடியாக ரமாபிரபா. வில்லன்களாக மனோகர், பாலாஜி மற்றும் நாம் எதிர்பாராத ஒருவர் பிரதான வில்லனாக உருமாறுவார். வி.கே.ராமசாமி வழக்கம் போல நகைச்சுவை கலந்த அப்பா ரோலில்.

பாஸ்கருக்கும் (ஜெய்) லதாவுக்கும் (கே.ஆர்.வி) ரயில் பயணத்தில் ஏற்படும் சின்ன மோதலோடு படம் துவங்குகிறது. மோதல் சிறிது நேரத்திலேயே ராசியாகி ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகமாக, ஜெய் கல்லூரியில் ஒரு பாஸ்கட்பால் பிளேயர் என்றும், விஜயா கல்லூரியின் நல்ல பாடகி என்றும் தெரிந்து கொள்கின்றனர். லதாவின் அப்பா தங்கவேலு முதலியார் (வி.கே.ஆர்), சிங்கப்பூரில் ஒரு கலை நய மிக்க புராதன ஜாடி ஒன்றை ஏலத்தில் எடுத்து வருகிறார். அது ராசியில்லாத ஜாடி என்று சிங்கையிலேயே பலர் சொல்லியும் கேளாமல் அவர் எடுத்து வந்து தன் அலுவலகத்தில் வைக்க, அது வந்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொழிலில் பெரிய நஷ்டம் என்று தகவல் வருகிறது. சரி அதை வீட்டுக்காவது எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்யும் போதே வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாக போனில் தகவல் வர, அதிர்ச்சியடைகிறார்.




அவரது பார்ட்னர் சபாபதியுடன் (வி.எஸ் ராகவன்) , அந்த ஜாடியை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லூரி கவிதைப் போட்டிக்கு டொனேஷன் கேட்டு வரும் பிரமுகர்களிடம் கவிதைப்போட்டியில் முதலில் வருபவருக்கான பரிசாக தன்னுடைய ஜாடியை வழங்க விரும்புவதாகக் கூறி அவர்கள் தலையில் ஜாடியைக் கட்டிவிடுகிறார். கவிதைப்போட்டியில் தாய்மையைப் பற்றிப் பாடி பாஸ்கர் அந்த ஜாடியை பரிசாகப் பெறுகிறார்.

இதற்குள் பாஸ்கருக்கும் லதாவுக்கும் காதல் ஏற்பட, தன் காதலியின் தந்தை தங்கவேலு முதலியாரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு பரிசளிக்க வேறு எதுவும் இல்லாததால், தனக்குப் பரிசாகக் கிடைத்த ஜாடியையே அவருக்குக் கொடுத்து விட முடிவு செய்து (அது முதலியாரிடமிருந்து வந்த ஜாடிதான் என்று தெரியாமல்) பாஸ்கரும், நண்பன் சீஸர் சீனுவும் (நாகேஷ்) எடுத்துப்போக, அதைப் பார்த்த முதலியார் அதிர்ச்சியடைந்து, அதை ஏற்க மறுத்து அவர்களை ஜாடியுடன் விரட்டி விடுகிறார்.

கோபமடைந்த பாஸ்கரும் சீனுவும் அந்த ஜாடிக்குள் அப்படி என்னதான் இருக்கிறதென்று திறந்து பார்க்க, உள்ளிருந்து ‘ஜீ பூம்பா’ என்று உச்சரித்துக் கொண்டே ஒரு பூதம் வெளிப்படுகிறது. அந்த பூதத்தை இருவரும் விரட்டத்துணிய, அதுவோ, ‘மூவாயிரம் ஆண்டுகள் ஜாடிக்குள் அடைந்து கிடந்த தன்னை விடுவித்த எஜமானர்கள் அவர்கள்’ என்று சொல்லி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் நிறைவேற்றுவதாகச் சொல்லி நிறைவேற்றத் துவங்குகிறது.

அதிலிருந்து படம் முழுக்க பூதத்தின் சித்து வேலைகள்தான், போரடிக்காமல் எடுக்கப்பட்டிருக்கிறது. (படத்தில் அது செய்யும் வித்தைகளையெல்லாம் பார்க்கும்போது, ‘அடடா நமக்கும் இப்படி ஒரு பூதம் கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என்ற நப்பாசை ஏற்படுகிறது)

பூதத்தின் சித்துவேலைகளில், நம் பகுத்தறிவு சிந்தனைகளையும் மீறி ரசிக்க வைக்கும் இடங்கள்…

திருப்பதி லட்டு பிரசாதம் கேட்டதும் வரவழைப்பது.

பாஸ்கருக்கும், சீனிக்கும் ஒரு பெட்டி நிறைய தங்கக்கட்டிகளைக் கொடுப்பது. பின்னர் போலீஸில் அவர்கள் மாட்டிக் கொண்டதும் அதையே சாக்லேட்டுகளாக மாற்றுவது.

செய்தித் தாள் விளம்பரங்களில் ‘திருவிளையாடல்’, ‘எங்கவீட்டுப்பிள்ளை’ படங்களை ஓடச் செய்வது.

நாகேஷின் உடம்புக்குள் புகுந்து கொண்டு, அவரை மனோகருடன் சண்டையிடச் செய்து, மனோகரையும் ரமாபிரபாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது.

பாஸ்கட்பால் போட்டியில், சீனுவின் கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலில் எதிர் அணியில் பந்துகளை விழச் செய்வது, பின்னர் கடைசி நிமிடத்தில் சுதாரித்து பாஸ்கர் அணியை மயிரிழையில் வெற்றி பெற வைப்பது.

பாலாஜி ஓட்டிவரும் ஹெலிகாப்டரை வாயால் ஊதி ஊதி நிலை குலையச் செய்வது.

இப்படி நிறைய விஷயங்களை குழந்தை மனதோடு ரசித்து மகிழலாம். தந்திரக் காட்சிகளை ரவிகாந்த் நிகாய்ச் என்பவர் அமைத்திருந்தார்.

கவியரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு ஆர்.கோவர்த்தனம் இசையமைத்திருந்தார். அத்தனையும் தேன் சொட்டும் அற்புதமான பாடல்கள். அப்பாவின் பிறந்தநாளில் கே.ஆர்.விஜயா பாடும் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” பாடலின் (கண்ணதாசன் – காமராஜர்) பின்னணி பற்றி ஏற்கெனவே நிறையப் பேருக்கு தெரியும். அதிலும் “மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்” வரிகளின் போது டி.எம்.எஸ். குரல் அச்சு அசலாக ஜெய்சங்கர்தான்.

கல்லூரி பாட்டுப் போட்டியில் நாகேஷ், கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் தனித் தனியாகப் பாடும் “உலகத்தில் சிறந்தது எது, ஓர் உருவமில்லாதது எது” பாடல் டி.எம்.எஸ்., சுசீலா, ஏ.எல்.ராகவன் மூவரும் பாடியது. இப்பாடலில் குறிப்பாக நாகேஷின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு தனியாக கைதட்டல் விழுந்தது.

கே.ஆர்.விஜயா முதலும் கடைசியுமாக நீச்சல் உடையில் நடித்த பாடல்,
“கண்ணே கண்டதெல்லாம் காட்சியா  உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா”
ஜெய்சங்கர், விஜயா பங்குபெறும் இப்பாடல் நீச்சல் குளத்தில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருந்தது. விஜயா நீச்சல் உடையில் நடித்தது ‘அப்போது’ பரபரப்பாகப் பேசப்பட்டது.

கோவர்த்தனம், தன் இசைத்திறமையனைத்தையும் பயன்படுத்தியிருந்தது “நான் யார் யார் யாரென்று சொல்லவில்லை நீ யார் யார் யாரென்று கேட்கவில்லை”
பாடலில்தான். வரிக்கு வரி வித்தியாசமாக கர்நாடக இசை, வடநாட்டு இந்துஸ்தானி இசை, எகிப்திய அரேபிய இசை என்று பிரமாதப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு வரிக்கான இடையிசையிலும் புகுந்து விளையாடியிருப்பார்.

தமிழ்ப்படங்களிலேயே முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில்தான். (இதையடுத்து இரண்டாவதாக ‘சிவந்த மண்’ படத்தில் இடம்பெற்றது. இப்போது சாதாரணமாக படங்களில் பயன்படுத்தப்படுகிறது). இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சமீபத்தில் தொலைக்காட்சிப் பேட்டியில், இக்காட்சியில் எப்படி கேமரா பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். ‘ஹெலிகாப்டரில் ஒரு கேமரா வைத்து, கீழே ‘போட்’டைப் படம் பிடிக்க வேண்டும். படகில் ஒரு கேமராவைப் பொருத்தி ஹெலிகாப்டரைப் படம் பிடிக்க வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பின்னர் அவையிரண்டையும் எடிட்டிங் மேஜையில் போட்டு மாற்றி மாற்றி எடிட் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார். (படங்களைப் பார்த்துவிட்டு நாம் ரொம்ப லேசா கமெண்ட் அடிச்சிட்டு போயிடுறோம். ஆனால் அந்தந்த தொழில் நுட்ப கலைஞர்கள் அதை விளக்கும் போதுதான் இமாலய பிரமிப்பு ஏற்படுகிறது).




படம் முழுதும் பூதத்தின் உதவியிலேயே போய்க் கொண்டிருந்தால், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதி, இறுதிக் காட்சிகளில் ஜெய்யும், விஜயாவும் ‘ஜீ பூம்பா’ வை விரட்டி விடுவதாகக் காட்டியிருப்பார்கள். அதனால் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வழக்கம் போல சூடு பறக்கும். ஜெய், ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் நேரம் விஜயா மீண்டும் பூதத்தை அழைக்க, அப்போதுதான் மீண்டும் ‘ஜீ பூம்பா’ வருவதாகக் காட்டி முடித்திருப்பார்கள்.

பதினெட்டு ரீல் படமாதலால், மூன்று மணி நேரம் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு ஜாலியாக பொழுதுபோக்கும் படமாக அமைந்ததால் ஏ.பி.சி. என்று எல்லா சென்ட்டர்களிலும் அபார வெற்றி பெற்ற படமாக அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்’.

(சில படங்களுக்கு, படம் வெளியாகும் நேரத்தில் பாட்டுப் புத்தகங்கள் சற்று வித்தியாசமாக வெளியிடுவார்கள். அது போல் இப்படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில் வெளியிடப்பட்டிருந்தது)




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!