pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 19

19

தடயம் ஏதுமின்றி எனை மறைத்துக்கொள்ளும் 

பெரும் பிரயத்தனங்களின் பின்பு 

முகம் மழித்தபடி நீ்யிருக்கிறாய் ,

தனித்தொரு நர்த்தனம் செய்கின்றன 

உன் தாடை முடிகள் , 

சாகர ஓசைகளை என் நெஞ்சிலறையும் 

அவற்றிற்கும் 

உன் பெயரைத்தான் இடுகிறேன் மகிஷனே …

 

 

 




” அய்யய்யோ மருதாணி என்னை காப்பாற்று .உன் அக்கா என்னை கொலை செய்ய வருகிறாள் ” கழுத்தை கத்தியால அறுப்பது போன்று குரலெடுத்துக் கத்தினான்  ரிஷிதரன்.

அந்தக் கத்தலுக்கு என்ன வந்தாலும் பரவாயில்லை என்று நேரடியாக கத்தியை அவன் கழுத்திலேயே பதித்தாள்  தேவயானி.




” அக்கா என்னக்கா ? ” மருதாணிக்கும் அதிர்ச்சிதான்.

” உன்னுடைய குணசாலி அண்ணனை பேசாமல் இருக்கச் சொல்லு .இல்லையென்றால் நான் எதற்கும் தயங்க மாட்டேன் ” 

” அய்யோ அண்ணா நீங்கள் இந்தப்பக்கம் வந்து விடுங்கள் ”  மருதாணி அவன் கை பற்றி இழுக்க அவள் இழுவைக்கு  சென்றபடி பயந்த தன் பார்வையை மாற்றி கண்களை சிமிட்டினான் ரிஷிதரன்.

தேவயானியின் கத்தி வேகத்துடன் மரத்தில் குத்தியது .” எருமை மாடு , மகிசாசுரன் …” வசவுகளை முணுமுணுத்தாள்.

” அங்கேயேதான்… அக்கா அமிர்த கொடி இருக்கிறது பாருங்கள் .அது வேம்பு மரம் ” மருதாணி சொல்ல ஆர்வத்துடன் அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தாள் தேவயானி.

” அட ஆமாம் ”  என்றவள் அந்த வேப்பமரத்தை சுற்றி படர்ந்திருந்த கொடியை கத்தியால் அறுக்க துவங்கினாள்.

” நானும் ஹெல்ப் பண்ணவா ஏஞ்சல் ? ” என்று கேட்டபடி அருகில் வந்து நின்று ரிஷிதரன் கையிலெடுத்த கத்தியைப் பார்த்து ஆச்சரியமானாள் .

” என்னுடைய கத்தி ” 

” ஆமாம் உன்னுடையதுதான் .அன்று நீ தவறவிட்டது .நான் எடுத்து வைத்திருந்தேன் “. 

” என்னிடம் கொடுங்கள் சார் .இது சரியில்லை .அந்த கத்திதான் எனக்கு கை வாகாக இருக்கும் ” 

” ம்ஹூம்  இது என்னுடையது .யாருக்கும் தர மாட்டேன் ” சொல்லிவிட்டு கத்தியின் நுனியைப் பிடித்து அவள் முகத்தின் முன் தூக்கிப்போட்டு சுழல விட்டு மீண்டும் பிடித்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டான்.

தேவயானி அவனை முறைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தபடி”  போடா ”  என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

ரிஷிதரனின் வாய் ஒரு நிமிடம் சும்மா இருக்கவில்லை. இது என்ன…. அது எப்படி… இது எதற்கு… என்று ஆயிரம் விளக்கங்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.

” மூலிகை பறிப்பதை விட உங்களுக்கு பதில் சொல்லித்தான் அதிகமாக சோர்ந்து போனேன் ” சிறு சலிப்புடன் தேவயானி ஒரு பாறையில் அமர்ந்து கொண்டாள்.




” மூலிகைகளை தனித்தனியாக கட்டிவை மருதாணி ” சொல்லிவிட்டு தளர்வாக தன் கால்களை நீட்டிக் கொண்டாள்.

” அப்படி என்ன உங்களுக்கு இந்த மூலிகைகள் மேல் திடீரென்று இவ்வளவு இன்ட்ரெஸ்ட் வந்துவிட்டது ? ” 

” உன்னிடம் பேச வேண்டுமே அதற்காகத்தான் ”  தயங்காமல் தன் நோக்கத்தை சொன்னபடி அவள் அருகிலேயே அமர்ந்து அமர்ந்துகொண்டான் ரிஷிதரன் .

” ரொம்ப தைரியம் தான் ” 

மெல்ல இருள் பிரிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் ஒளிக் கீற்றாய் வந்துகொண்டிருந்த வெளிச்சத்தில்

அவன் பார்வை நீண்டிருந்த அவள் பாதங்களில் இருந்தது . ” கால் வலிக்கிறதா ஏஞ்சல் ? ” அக்கறையாக கேட்டான்.

” அப்படி எல்லாம் இல்லை .சும்மாதான் …” 

தேவயானி கால்களை மடக்கி தன் பாதங்களை அவன் கண்களிலிருந்து மறைத்துக் கொண்டாள்.

” உங்கள் கையைக் காட்டுங்கள் .காயங்களை பார்ப்போம் ” 

” மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் என்மீது அக்கறை வந்திருக்கிறது .” குரல் துள்ள  அவள் முன் கை நீட்டினான் ” இன்று வருவாய் தானே ஏஞ்சல் ? ” 

தேவயானி பதில் சொல்லாமல் அவன் காயங்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.”  தொடர்ந்து எண்ணெய்  தடவிக் கொண்டு இருக்கிறீர்கள் தானே ? ” 

” எனக்கு கண்ணாடி கொண்டு வருவதாக சொன்னாய் .அதுவும் தரவில்லை ” குறைபாடாக சொன்னான்.

அடர்ந்த மரங்களுக்கிடையே இலைகளின் இடைவெளி வழியாக ஆதவனின் ஒளி கீற்றாக கீழே இறங்கத் துவங்கியது .

ஒளிரும் மழைக் கம்பிகள் போல் இறங்கிய அதிகாலை ஒளியை அண்ணாந்து பார்த்து ” வாவ் ” என்றான் ரிஷிதரன். தானும்  நிமிர்ந்து பார்த்து ரசித்த தேவயானி திடுமென்று ஒன்று தோன்ற எழுந்தாள்.

” இங்கே வாருங்கள் ”  அவனை அழைத்த படி முன்னால் நடக்க அவளை பின்பற்றிய ரிஷிதரன் கொஞ்ச நேரத்தில் மீண்டும் ” வாவ் ” என்றான் .ஒரு சிறிய நீரோடை சலசலவென்று சப்தத்துடன் அவர்கள் முன்னால் ஓடிக்கொண்டிருந்தது.

பாறைகளில் கால் வைத்து கவனமாக இறங்கிய தேவயானி ஒரு இடத்தில் நின்று ” இங்கே வந்து பாருங்கள் ” என்று அழைத்தாள்.

ரிஷிதரன் அவளை நெருங்கி கீழே பார்க்க அங்கே பாறை திட்டுகளின் நடுவே சிறிதளவு நீர் தேங்கி நின்றது. அது கண்ணாடியாக மாறி   பார்ப்பவர்களின் உருவத்தை பிரதிபலித்தது.

” உங்களை பார்க்க வேண்டும் என்றீர்களே .இதோ பாருங்கள் ” சொல்லிவிட்டு தானும் எட்டிப்பார்க்க நீரை பார்த்த ரிஷிதரனின் இதழ்கள் ” பியூட்டிஃபுல் ” என்று முணுமுணுத்தன.







தேவயானி சந்தேகத்துடன் நீரில் அவன் முகம் பார்க்க அவன் கண்கள் அப்போது நீரிலிருந்த தேவயானியின் முகத்தைத்தான் பார்த்தபடி இருந்தன.

அப்போதுதான் கழுவித் துடைத்த முழு மதியை போல் தேஜஸுடன் இருந்த தேவயானியின் முகத்தில் மேக கீற்றென படர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன அவளது தலைமுடிகள் .உருளும் திராட்சை போலிருந்த விழிகள் ஆவல் சுமந்து இருந்தன… ரிஷிதரனுக்கு அவனை காட்டும் ஆவலை …

தொண்டை காய்ந்தவன் பழரசத்தை பார்க்கும் பார்வை பார்த்தான் ரிஷிதரன் ” அதிகாலை நேரம் .இப்போதுதான்  படுக்கையிலிருந்து எழுந்து வந்திருக்கிறாய் .

அதெப்படி துளி மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகாக இருக்கிறாய் ஏஞ்சல் ? ” 

” என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? நான் உங்களை பார்க்கச்  சொன்னேன் ”  பற்களை நற நறத்தாள் .

” ம் ” என்றபடி மனமின்றி பார்வையை அவளிடமிருந்து தனக்கு திருப்பி கொண்டவன் முகம் வாடியது. மெல்ல தன் முகத்தை தடவிப் பார்த்துக் கொண்டான் .பிறகு அருகிலிருந்த அவளையும் பார்த்துக்கொண்டான். விரக்தியான சிரிப்பு  அவன் இதழ்களில்.

” தேவதையும் , அரக்கனும்… ” இரண்டு  பேர் பிம்பத்தையும் சுட்டிக் காட்டிக் கொண்டவன் ” இரண்டு பேருக்கும் பெயர்கள் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன இல்லையா ஏஞ்சல் ? ”  நிச்சய வருத்தம் இருந்தது அவன் குரலில்.

” பலம்வாய்ந்த மனதுக்காரன் என்று யாரோ பெருமை பேசிக்கொண்டார்கள் ”  தேவயானி கிண்டல் போல் கண்டித்தாள்.

” ஆமாம் தான் .ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி என்னை பலவீனமாக உணர்கிறேன் ” என்றவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

” கண்களை திறந்து பாருங்கள் ரிஷி ” அதட்டலாக சொன்னாள் தேவயானி .” இப்படி கண் மூடி கொள்ளுமளவு உங்கள் முகம் மாறிவிடவில்லை .நன்றாக பார்த்து உங்களை நீங்களே சரி செய்து கொள்ளுங்கள் ” 

” ப்ச் இதனை சரிசெய்ய எனக்கு பத்து நாட்கள் போதும் தேவயானி .அடுத்த ப்ளைட்டிலேயே வெளிநாடு பறந்துபோய் இந்த தோலை  சரி செய்து கொண்டு வந்து விடுவேன் .ஆனால் இப்போது இதோ உன் அருகே நிற்கும் இந்த நொடி நான் அசிங்கமானவனாக இருக்கிறேன் .அருவருப்பாக தெரிகிறேன் ” 

” முழு முட்டாள்தனம் .யாரோ ஒரு அரைவேக்காடு யோசிக்காமல் பேசியதை அரைகுறையாக கேட்டுவிட்டு இப்படித்தான் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுவீர்களா ? ” 




தேவயானியின் கோபத்திற்கு அவளை நிமிர்ந்து பார்த்த ரிஷிதரனின் முகம் எழுந்து கொண்டிருந்த ஆதவனுக்கு ஈடாக துள்ளலாய் இருந்தது ” வன யட்சிகள் அழகானவர்கள் மட்டுமல்ல,  அன்பானவர்களும் கூட ” என்றான்.

” எதையாவது உளறி சமாளிக்க நினைக்காதீர்கள் .இதோ பாருங்கள் உங்கள் முகத்தை .உங்கள் குறைகளை சரிப்படுத்தும் முறைகளை யோசியுங்கள் ” 

” ம் ” என்றபடி மீண்டும் தன் உருவத்தை பார்த்த ரிஷிதரன் மேலுதட்டை வருடினான் .” ஐயோ என்ன இது பாதி மீசையை காணோம் ” அலறினான்.

” எதற்கு இந்த கத்தல் ? ஆக்சிடென்ட் ஆனால் அப்படி இப்படி நடப்பது தான் .பாதி மீசையெல்லாம் இல்லை , ஒரு ஓரமாகத்தான் இல்லாமல் இருக்கிறது.இப்போது இதனை எப்படி சரிசெய்வது என்று மட்டும் யோசியுங்கள் ” 

” எப்படி சரிசெய்ய ? உன்னிடம் காஜல் இருக்கிறதா ஏஞ்சல் ?அதை கொடுத்தாயானால் இல்லாத மீசையை வரைந்து கொள்வேன் ” 

” சகிக்கல ” 

” என் முகம் தானே ? ” 

” உங்க ஐடியா .இப்படியா யோசிப்பீர்கள் ? ” 

” வேறு என்ன செய்யட்டும் ? ” என்று அப்பாவியாய் கேட்டான்.

” அரைகுறையா இருப்பதை முழுதாக எடுத்துவிட்டால்….” 

” ஏய் என் மீசையை எடுக்க சொல்கிறாயா ? எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஆண்மகனை மீசையை எடுக்க சொல்வாய்  ” ரிஷிதரன் மீசையை முறுக்கி கொண்டான்.

” ஆண் என்பதை மீசையில் காட்டக்கூடாது .பண்பில் , பாசத்தில்  காட்ட வேண்டும் .நீங்க வாங்க இதனை நான்   சரி செய்கிறேன் .”  தலையசைத்து தேவயானியை பின்தொடர்ந்த ரிஷிதரனின் முகத்தில் மனோகரமாக ஒரு முறுவல் மலர்ந்திருந்தது.


” இங்கிட்டு அவ்வளவு வெளிச்சமில்லையேங்க முதலாளி.வெளியே நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து கொள்ளலாமா ? ” என்று கேட்டபடி அறைக்குள் வந்து சுற்று முற்றும் பார்த்து  நின்ற பெரியவரை கேள்வியாய் பார்த்தான் ரிஷிதரன்.

” யார் சார் நீங்க ? எதுக்கு உங்களுக்கு வெளிச்சம் வேண்டும் ? ” 

” பார்பர் சார் .உங்களுக்கு ஷேவிங் , கட்டிங் செய்து விட வந்திருக்கிறார் ”  அறிமுகப்படுத்தியபடி வந்தான் சுந்தரேசன்.

” ஐயோ அதெல்லாம் வேண்டாம் .நான் ஊரில் போய் பார்த்துக் கொள்கிறேன் ” ரிஷிதரன் அவசரமாக மறுத்தான்.

” இவர் நன்றாக பண்ணிவிடுவார் சார் .உங்களுக்கு நிறைய முடி வளர்ந்திருக்கிறது .வாருங்கள் பண்ணிக் கொள்ளுங்கள் ” 

” இல்லை… இல்லை நான் வழக்கமாக பியூட்டி பார்லரில் தான் பண்ணிக் கொள்வேன். ஊருக்குப் போய் அங்கேயே செய்து கொள்கிறேன் ” 

” அதுவரை இப்படியே வளர்த்துக் கொண்டிருப்பீர்களா தம்பி . இங்கே நம் விடுதியில் தங்க வருபவர்கள் எல்லோருக்குமே இவர்தான் கட்டிங் ஷேவிங் செய்வார் .நீங்கள் சொல்கிறபடி அழகாக வெட்டி விடுவார் . எழுந்து வாங்க ” மெல்லிய வலியுறுத்தலுடன் அவன் கை பற்றி எழுப்பினாள் சொர்ணம்.




” ம்ஹூம்  இவர்களிடம் எல்லாம் கட் பண்ணி எனக்கு பழக்கம் கிடையாது .சுந்தரேசன் , ஆன்ட்டி ப்ளீஸ் வேண்டாமே…” 

” அதென்ன இவர்களிடம் எல்லாம் …இவர்களெல்லாம் ஒழுங்காக முடிவெட்ட மாட்டார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள் ? ” தேவயானி அவன்முன் வந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு நிற்க ரிஷிதரன் தலையை குனிந்து கொண்டான்.

” போச்சு  யட்சி வந்துவிட்டாள். இவள் சொல்வதை செய்ய வைக்காமல் போகமாட்டாள் ” முணுமுணுத்தான்

” இவரிடம் ஏன் அண்ணா கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் …இப்படி காடு மாதிரி மூஞ்சி நிறைத்திருக்கும் முடியை வெட்டினால் தான் அந்த முகத்தில் இருக்கும் வடுக்களுக்கு என்னால் மருந்து போட முடியும் .நம்முடைய சிகிச்சைக்காக இவரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் அவசியம் கிடையாது. இவரை வெளியே இழுத்துக் கொண்டு வாருங்கள். நல்ல வெளிச்சத்தில் வைத்து கட் பண்ணலாம்  ” கை காட்டிவிட்டு குடிலை விட்டு வெளியேறினாள்

அவளுடைய ‘ இழுத்துக்கொண்டு ‘ ரிஷிதரனின் வயிற்றில் புளியை கரைக்க,

” வாருங்கள் சார் போகலாம் “சுந்தரேசன் இப்போது பற்றிய கை பிடியில் பிடிவாதம் இருந்தது . மறு கை சொர்ணத்தின் பிடியில். தேவயானியின் ‘இழுத்துக்கொண்டு ‘அப்படியே நிறைவேற்ற படுவதாக ரிஷிதரன் உணர்ந்தான் .பெருமூச்சுடன் எழுந்துவந்து குடிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

” கட்டிங் பியூட்டி பார்லரில்… ஷேவிங் நான் எப்போதும் செல்ப்தான் . இவர்களிடம் எல்லாம் செய்து எனக்குப் பழக்கமில்லை தேவயானி ” இடுப்பிலிருந்து சவரக் கத்தியை எடுத்து கூர் தீட்டிக் கொண்டிருந்த நாவிதரை பயத்துடன் பார்த்தபடி பேசினான் .

” சங்கோஜப்படாதீங்க முதலாளி .சும்மா பள பளன்னு மொசைக் தரை மாதிரி முகத்தை மாற்றி விடுகிறேன் பாருங்க  ” சொன்னபடி தன் கத்தியை மேலும் பதம் ஏற்றிக் கொண்டிருந்தவரை  கொஞ்சம் பயத்துடனேயே பார்த்தான்.

” அதெல்லாம் இவர் நன்றாகவே செய்வார் .நீங்கள் பேசாமல் இருங்கள். பயமாக இருந்தால் கண்ணை மூடிக் கொள்ளுங்கள் ” தேவயானி சொல்ல …சரி என்று ஒத்து கண்களைமூடி கொண்டவன் மறுநொடியே அவசரமாக திறந்து கொண்டான்.

” கண்களை  மூடினால் தான் ரொம்பவும் பயமாக இருக்கிறது ” ஒருமாதிரி விழி உருட்டியவனை பார்க்க சிரிப்பு வந்தது தேவயானிக்கு.

” நிஜம் ஏஞ்சல். கண்ணைத் திறந்திருந்தால் உன்னை பார்த்தபடியேனும் இந்த இக்கட்டை கடந்து விடுவேன்”  ரிஷிதரனின் முணுமுணுப்பை கண்களில் ஆட்சேபம் காட்டி அடக்கினாள் .




” நீங்கள் ஆரம்பியுங்கள் அண்ணா ” நாவிதரை சொல்ல அவர் சீப்பு கத்திரிக்கோலுடன்  ரிஷிதரன் பின்னால் போனார் .சுத்தமாக முழு வெள்ளையில் இருந்த மெல்லிய துணியை எடுத்து வந்து ரிஷிதரனின் உடலை மூடினான் சுந்தரேசன்.

” இதில் பார்த்துக் கொள்ளுங்கள் ரிஷி சார் .எதுவும் ஆல்ட்ரேஷன் இருந்தால் சொல்லுங்கள் ” என்றபடி அவனிடம் ஒரு  கை கண்ணாடியை கொடுத்தான்.




15 நிமிடங்களில் அளவற்று வளர்ந்து நெற்றி காது என வழிந்திருந்த ரிஷிதரனின் தலைமுடியை அழகாக வெட்டி சீராக்கினார் நாவிதர் .

பார்த்து… மெல்ல.. கத்தி பட்டு விடப்போகிறது… ஜாக்கிரதை… அசையா தீர்கள் தம்பி… இப்படி 

ரிஷிதரனையும் நாவிதரையும் எச்சரித்தபடி சொர்ணம் , சுந்தரேசன்,  தேவயானி மூவரும் பொறுமையாக அருகே இருந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

நாவிதர் முகத்திற்கு வரும்போது தேவயானி ரிஷிதரன்  முன் நகர்ந்து வந்து முகத்தை கவனித்தாள்.”  முகத்தில் காயம் இல்லை அண்ணா .ஆனால் புகை அடித்ததால் இப்படி கருப்பு படிந்திருக்கிறது .அந்த தோல் கொஞ்சம் மென்மையாகத்தான் இருக்கும். அதனால் கொஞ்சம் பார்த்து கவனமாக கத்தியை வையுங்கள் ” எச்சரித்தபடி மிகுந்த கவனத்துடன் பார்த்திருந்தாள்

” அதெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன் தாயி ” சொன்னபடி அதிக கவனத்துடன் தன் வேலையை செய்யத் தொடங்கினார் நாவிதர்.




‘ தேவயானி ‘ சற்றுத்தள்ளி கேட்ட குரலுக்கு நிமிர்ந்து பார்த்து விட்டு சுந்தரேசனிடம் கவனித்துக் கொள்ளுமாறு ஜாடை சொல்லி விட்டு நகர்ந்து போனாள் அவள்.

” அசையாம இருங்க முதலாளி ” நாவிதர் முகத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தார். ரிஷிதரன் முகத்திற்கு நேராக கண்ணாடியை உயர்த்தி பிடித்துக் கொண்டான்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!