Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் -1

         உறவு சொல்ல ஒருவன்  

1

அல்லல்போம் வல்வினைபோம் ,
அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம் ,
போகாத் துயரம்போம்,
நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும், கணபதியைக் கைதொழுதக் கால்.

இனிய குரலில் அந்த விநாயகர் துதியை அந்தக் குழந்தைகளுக்குள் மனதினுள் இறங்கும் வகையில் கணீரென மென்மையோடு பக்தி கலந்து சொல்லிக்கொண்டிருந்தாள் சத்யமித்ரா .அந்த துதியின் வலிமையோ அல்லது அதை சொல்லித் தந்து கொண்டிருந்த அந்த அழகிய டீச்சரின் ஆள்மையோ …கண்களை அகல விரித்தபடி நா தடுமாறாமல் அந்த துதியை அழகாக பின் பாடினர் அந்தக் குழந்தைகள் .

” ம் …இதுதான் அந்த மந்திரம் .இதை நீங்கள் தினமும் காலையில் குளித்து முடித்ததும் உங்கள் வீட்டில் பிள்ளையார் படத்திற்கு முன்பு சொல்லி நன்றாக சாமி கும்பிட்டுவிட்டு பிறகு பள்ளிக்கூடம் வர வேண்டும் .பிறகு பாருங்கள் யாருக்கு பர்ஸ்ட் ரேங்க் போடுறதுன்னு நானே திணறுகிற அளவிற்கு எல்லோரும் படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் ….”

” அப்படியா டீச்சர் …? “

” உண்மையா டீச்சர் ..? “

” நிஜம்மாகவா டீச்சர் ..? “

பலவிதங்களில் ஒரே கேள்வியை கேட்ட குழந்தைகளுக்கு ஆமாமென்ற உறுதியை கூறிவிட்டு அன்றைய வீட்டுப் பாடத்தை விளக்கினாள் .நாளை எல்லோரும் கண்டிப்பாக செய்து வர வேண்டுமென்று கண்டிப்பு காட்டினாள் .பள்ளி விடும் மணியோசை கேட்க புத்தக மூட்டையை தூக்கியபடி மாணவர்கள் கலைந்தனர் .




” என்ன இன்னைக்கு ஏதோ மந்திரமெல்லாம் சொன்னாப்பல இருந்த்து ..? ” பக்கத்து வகுப்பறையிலிருந்து வந்து கேட்டாள் சங்கீதா .சக டீச்சர் .

” ஆமங்க டீச்சர் .சும்மா புத்தகத்தை மட்டுமே வாசித்து விடாமல இது போல் நமக்கு தெரிந்த மற்ற சில விசயங்களையும் இந்த பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாமே என்றுதான் ….”

” நீ என்ன சொன்னாலும் இந்த பட்டிக்காட்டு பக்கிகளுக்கு மண்டையில் ஏறாது .எதுக்கு வெட்டியா தொண்டைத்தண்ணியை வத்த விடுற …? ” என்ற சங்கீதாவின் ஊரும் இதே பட்டிக்காடுதான் .ஆனால் அதை அவள் அடிக்கடி மறந்து விடுவாள் .

அவளுக்கு பதில் சொல்ல மனமின்றி ” குழந்தை அழுவான் .நான் கிளம்புகிறேன் டீச்சர் ….” பள்ளியை விட்டு வெளியேறினாள் சத்யமித்ரா .

அது ஒரு நடுத்தர கிராமத்திலிருந்த நடுத்தர பள்ளி .அதில் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே இருந்த்து .அதில் எட்டாவது படிக்கும் குழந்தைகளுக்கு சத்யமித்ரா டீச்சர் .

இரண்டு டிகிரி முடித்துவிட்டு கால் லட்சத்திற்கும் சற்று அதிகமாகவே சம்பளம் வாங்கிய அந்த பெரிய அலுவலக உயர் ஏஸி ரூம் வேலை  நினைவிற்கு வந்த்து .அதெல்லாம் ஏதோ போன ஜென்ம ஞாபகம் போல் இப்போது தோன்றியது .பெருமூச்சுடன் பிள்ளையின் நினைவில் நடையை எட்டிப்போட்டாள் .

குழந்தையை விட்டு வந்திருந்த வீட்டு வாசலை மிதித்த உடனேயே அவள் வருகையை உணர்ந்து கொண்ட பிள்ளை , கையில் வைத்திருந்த பொம்மையை எறிந்துவிட்டு ” அம்மா “என ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான் . குனிந்து குழந்தையை அள்ளியெடுத்து அவன் குண்டு கன்னங்களில் தன் இதழ்களை பதித்தாள் சத்யமித்ரா .

” கண்ணா அழாம சமத்தா இருந்தியாடா …? ” குழந்தையின் கன்னத்தை வருடியபடி கேட்டாள் .

” அவன் ஏன் அழப் போகிறான் . நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு சமர்த்து புள்ளையை பார்க்கலைடியம்மா .அம்மா வருவாள் .உட்காரு என்று சொன்ன தும் அப்படியே சமர்த்தாக உட்கார்ந்துவிட்டது .ஏதோ மணி பார்க்க தெரிந்த மாதிரி அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்கிறது .இதோ நீ வீட்டு வாசப்படியை மிதித்த உடனேயே அவனுக்கு தெரிந்துவிட்டது .எப்படி ராக்கெட் மாதிரி வந்து உன்கிட்ட ஒட்டிக்கிட்டான் பாரு ….” குழந்தையை பார்த்துக்கொள்ள அவள் ஏற்பாடு செய்திருந்த மருதாயி பெருமிதம் கலந்தே குழந்தை புகழ் பாடினாள் .

” ரொம்ப நன்றி மருதாயி ….குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொண்டதற்கு ….”

” இதுக்கு எதுக்கு நன்றி .சும்மாவா பார்த்துக்கறேன் .மாசம் பொறந்தா சொளையா பணம் கொடுக்கறியே ….புள்ளையை தூக்கிட்டு போ ….சாந்துக்குட்டி அம்மா கூட போ ராசா ….”

சாந்தனு என்ற குழந்தையின் அழகான பெயரைத்தான் இந்த லட்சணத்தில் சொல்லி வைத்தாள் மருதாயி .

” அதென்னவோ உன் பிள்ளை அளவு அவன் பேரு என் மனசுக்குள்ள வரலை ….இது என்ன பேருன்னு வச்சியோ ….? ” எப்போதும் போல் இப்போதும் சலித்தாள் .

” சாந்தன் என்றால் சாந்தமானவன் என்று அர்த்தம் .அதாவது அமைதியானவன் ….” விளக்கினாள் சத்யமித்ரா .

” ஆங் …அது சரிதான் ஒன் புள்ள அமைதியின் இருப்பிடந்தான் .அவன் அப்பா எப்படி …? ரொம்ப அமைதியானவரோ ….? ” துருவினாள் மருதாயி .

அமைதியா …இவன் அப்பாவும் சரி …அவன் குடும்பத்தினரும் சரி .அமைதியென்றால் கிலோ என்ன விலையென்பார்கள் .மனதிற்குள் நினைத்தபடி ” ஆமாம் மருதாயி .சாந்தனுக்கு பசிக்கும் .நான் போய் சாப்பாடு கொடுக்கிறேன் ….” என்றபடி நடந்தாள் .

சாந்தனு  அவனது தந்தையை போன்றோ …இல்லை அவர்கள் குடும்பத்தினரைப் போன்றோ வேகமாக , கோபமாக இருந்துவிடக் கூடாது என்றே அவனுக்கு இந்த பெயரை வைத்து , அவனை சாந்தரூபியாக , பொறுமையானவனாக வளர்த்துக் கொண்டிருந்தாள் சத்யமித்ரா .

அப்படியும் சில நேரங்களில் அவனுக்கு கோபம் வரும் பொழுதுகளில் , அவன் புருவம் சுருக்கி பார்க்கும் பொழுதுகளில் , கோபமான அவனது அப்பாவையோ , தாத்தாவையோ இன்னமும் ….அவனது உறவினர்களையோ நினைவு படுத்திவிடுவான் .அந்த நேரங்களிலெல்லாம் சத்யமித்ராவின் மனம் மிரண்டுவிடும் .இந்த கோபமே இவனை தன்னிடமிருந்து பிரித்து விடுமோ ….என அஞ்சிவிடுவாள் .

ஆனால் ஐந்தே நிமிடங்களில் கோபம் குறைந்து விளையாடும் பச்சைக்குழந்தை முகத்தைக் கண்டதும் ….சை சிறுபிள்ளையைப் போய் இப்படி நினைத்தேனே என தனக்கு தானே நொந்து கொள்வாள் .

” அக்கா உங்களுக்கு லெட்டர் வந்திருக்கிறது …”மாடியில் இருந்த  அவளது வீட்டிற்கு படியேறிக் கொண்டிருக்கையில் கீழ்வீட்டினுள்ளிருந்து ஓடி வந்து கொடுத்தாள் சித்ரா .




அந்த வீடு சத்யமித்ரா வேலை பார்க்கும் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜினுடையது  .அவள் குழந்தையுடன் தனியாக இருப்பதால் அவரது வீட்டு மாடியிலேயே தங்கிக்கொள்வதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று அவளுக்கு அங்கே இடமளித்திருந்தார் .ஓரளவு சத்யமித்ராவின் முன்கதை தெரிந்தவரும் அவர்தான் .

சொந்தங்கள் அனைத்தும் அவளை விட்டு போனதும் திக்கற்று கையில் கைக்குழந்தையோடு நின்றவளை தந்தையின் நண்பரென்ற ஒரே காரணத்திற்காக இந்த ஒதுக்குபுற கிராமத்திற்கு அழைத்து வந்து , அவளும் குழந்தையும் வாழ்வதற்கான வேலையும் ஏற்பாடு செய்து தந்தவர் .தந்தையைப் போல் அவரும் அவர் குடும்பத்தினரும் சத்யமித்ராவை தாங்கி வருகின்றனர் .

சித்ரா …செல்வராஜின் மகள் கொண்டு வந்து கொடுத்தது ஒரு கொரியர் கவர் .எனக்கு யார் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் …?கவரின் மேல் ஏதோ மைக்கேல்ராஜ் என்ற பெயர் தெரிந்த்து .

யாராக இருக்கும் …. யோசனையோடு கவரோடு உள்ளே வந்து அதனை மேசையில் வைத்தவளின் முகத்தை பற்றி சாந்தனு தன் பக்கம் திருப்ப , அதன்பிறகு அம்மாவிற்கும் , மகனுக்கும் தங்களைத் தாண்டி வெளி உலகமொன்று இருப்பதே மறந்துவிட்டது .

குழந்தையை குளிப்பாட்டி தானும் சேர்ந்து உடையையெல்லாம்  நனைத்து பிறகு குளித்து உடை மாற்றினாள் . , சாந்தனுக்கென மென்மையான தோசை வார்த்து விளையாட்டு காட்டியபடி ஊட்டிவிட்டாள் .அவனோடு கதை பேசியபடி கொஞ்சம் பாடம் சொல்லிக் கொடுத்தாள் .

பிறகு அவனுக்கு பிடித்த குரங்கு கதையை கூறியபடி மெல்ல அவனை தூங்க வைத்தாள் .கூடவே தானாகவே சொக்கிய தனது விழிகளை பிரித்தவள் , எழுந்து வாசல் கதவை சரி பார்த்து கிச்சனை ஒதுக்கிவிட்டு மீண்டும் படுக்க வந்த போது அந்த கவர் அவள் கண்ணில் பட்டது .

விழி நுனியில் இருந்த தூக்கம் கலைய , அந்த கவரை எடுத்து பிரித்தாள் .அந்த கடிதம் கேரளாவிலிருந்து வந்திருந்த்து . சாந்தனுவின் தந்தை வீட்டாரிடமிருந்து .மைக்கேல்ராஜ் என்ற வக்கீலின் மூலமாக வந்திருந்த்தது.அவசரமாக முழுவதும் ஒரு முறை வாசித்தவள் பிறகு நிறுத்தி நிதானமாக மீண்டும் ஓரு முறை வாசிக்க ஆரம்பித்தாள் .

எப்படி வாசித்தாலும் அந்த கடிதம் சொன்ன விசயம் ஒன்றாகத்தான் இருந்த்து . அது சத்யமித்ராவும் , சாந்தனுவுமாக தங்களை ஒதுக்கிக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வந்த அந்த இன்பமான வாழ்வு இனி அவர்களுக்கு கிடையாது என்று சொன்னது .

உடனே மிக உடனே அவர்கள் இருவரும் கிளம்பி கேரளா வர வேண்டுமென்று சொன்னது .மறுத்தால் அவள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென சொன்னது .சாந்தனுவின் மீது அந்த குடும்பத்தாருக்கு இருந்த உரிமையை நிலைநாட்டியது .அதனை சட்டத்திற்கான வாசகங்களுடன் தெளிவாக அவளுக்கு கோடிட்டு காட்டியது .

அன்று பச்சிளங்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு செய்வதறியாது விழித்துக்கொண்டு அவள் நின்று கொண்டிருந்தாளே , அந்த துரதிர்ஷ்டமான நாளில் …அவளை திரும்பியும் பாராது அழுகையோடு தனது உறவை மட்டுமே கூட்டிச் சென்ற அந்த பெரிய மனிதர் இப்போது நினைவில் வந்தார் .

அன்று எச்சில் பண்டமென அவர்களால் வீசியெறியப்பட்டது , இன்று மிக முக்கியமாக அவர்களுக்கு தேவைப்படுகிறது .அது எப்படி மூன்று வருடங்களுக்குள் இந்த மாற்றம் நடந்த்து என்று அவளுக்கு தெரியவில்லை .இவ்வளவு குறைந்த அவகாசத்தில் மனம் மாறக்கூடிய அளவு அந்த வீட்டில் நெகிழ்வானவர்களோ ….அன்பறிந்தவர்களோ யாரும் கிடையாதே ….இப்போது இந்த ப்ளாக்மெயிலின் நோக்கம் என்னவாக இருக்கும் …?

அவர்கள் மிரட்டுவது போன்று நடப்பதற்கு சட்டத்தில் நிறைய வழியிருப்பதை அவள் அறிவாள் .அப்படியானால் அவர்கள் மிரட்டலுக்கு தான் பணியத்தான் வேண்டுமா …? அங்கே போனதும் அவர்களின் தேவையான அவர்கள் வாரிசினை பிடுங்கி வைத்துக்கொண்டு அவளை விரட்டி விட மாட்டார்களென்பது என்ன நிச்சயம் …? அவர்கள் அப்படி செய்யக்கூடியவர்கள் தானே …?




ஒரு வேளை அது போல் நடந்துவிட்டால் பிறகு சத்யமித்ராவின் நிலை என்ன …? இவனை பிரிந்து தன்னால் இருந்து விட முடியுமா …? நினைவு போன போக்கில் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அழுத்தமாக அணைத்துவிட்டாள் போலும் .

சாந்தனு தூக்கத்தில் முனகினான் .சட்டென அவனை விட்டு விலகி படுத்தவள் , விடிய விடிய இந்த பிரச்சினைக்கான முடிவை யோசித்தபடி கிடந்தாள் .ஒரு வழியாக சத்யமித்ரா ஒரு முடிவிற்கு வந்த போது வானம் வெளுக்க ஆரம்பித்தது .

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!