ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 19

19

” பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , ட்விட்டர் ,  வாட்ஸ் அப் ,  டெலகிராம் போன்ற எல்லா சமூக வலைத்தளங்களிலும் நான் சொன்னதை சொல்லுங்கள் நிலானி. இங்கே  உங்களுடன் நட்பில்  இருக்கிற எல்லோரிடமும் நாம் ஆரம்பித்திருக்கும் இந்த புது குரூப்பை பற்றி சொல்லுங்கள் .குறிப்பாக பெண்களிடம் .பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கமின்றி  நம்மை தேடி வர வேண்டும் .அவர்களது முகம் வெளியே தெரியாமல் அவர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்று சொல்லுங்கள் .இதுபோன்ற ஊடகங்களில் எல்லாம் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் கிடையாது .அதனால் தான் உங்களிடம் இந்த பொறுப்பின் ஒப்படைக்கிறேன். மிக வேகமாக இந்த குரூப்பை அனைவருக்கும் பரப்புங்கள் ” 

” ராஜியின் பதவியை தவறாமல் எல்லாருக்கும் தெரியப்படுத்து நிலா. அது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கும் ” 

” எனது காவல்துறை தோழிகளிடமும் இதுகுறித்து பேசுகிறேன் .அந்தந்த ஊர்களில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பொறுப்பை

அவரவர்களுக்கு கொடுத்து விடலாம் ” 

” நிச்சயமாக உனது காவல்துறை துணை இல்லாமல் இதனை நாம் செய்ய முடியாது ராஜி ” 

” நான்  சட்டத்திற்கு உட்பட்டு தான் எதனையும் செய்யமுடியும் அபி .அதனையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும்” 




” அதுதான் எனக்கு தெரியுமே .சட்டப்படி நீ பார்த்துக் கொள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். நிலா நீ ஷிவானியுடன் பேசு .அவளுக்கு இருந்த ஆபத்து நீங்கி விட்டதை சொல் .இதே போன்று வேறு அவளது தோழிகளுக்கு  சூழல் இருந்தால் அதனை தயங்காமல் நம்முடன் பகிர்ந்து கொள்ளச் சொல்” 

படபடவென அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்த அபிராமனையும் ராஜலட்சுமியையும் வியப்பாய் பார்த்தாள் நிலானி .இவர்கள் இருவருக்கும் எவ்வளவு சமூக அக்கறை …?எத்தனை பொறுப்பு…? 

” எவனாவது என் கையில் மாட்டட்டும் அவனை அப்படியே …” பற்களைக் கடித்தபடி அவன் ஆண்  திமிரை அறுத்து விடுவேன் என்று ராஜலட்சுமி கொதிக்க அவளது ஆத்திரம்  சும்மா இல்லை  என்பதனை அபிராமன் அனுப்பியிருந்த வீடியோ நிலானிக்கு தெரியப்படுத்தியது.

ராஜலட்சுமியின் ஷூ கால்களுக்கும் லத்திக்கும் இரையாகி கொண்டிருந்தான் ஷிவாயின் அந்த கசின் . ” சின்ன பொண்ணுங்க  மேல் கை வைப்பாயா ? சொல்லுடா ? ” ராஜலட்சுமியின் ஆத்திரம் வரிவரியாய் அவனது வெற்றுடம்பில் படிந்தது .அவன் அலறியபடி தரையில் உருண்டு கொண்டிருந்தான்.

” டிபார்ட்மென்ட் ரீதியாக என் வேலை முடிந்தது .இனி நீ பார்த்துக் கொள் ” அவனை எத்தி  தள்ள அவன் விழுந்தது அபிராமனின் கால்களில் .அவன் தலை முடியை பிடித்து தூக்கிய  அபிராமன் சப் சப் என்று அறைந்து கீழே தள்ளி காலால் மிதித்தான் . ” உன் அப்பா அம்மாவின் வேலை , உன் அக்காவின் வேலை,  வீட்டு அட்ரஸ் என்று உன் குடும்பத்தின் ஜாதகமே எங்கள் கையில் இருக்கிறது .இனி ஒருமுறை ஷிவானியிடம் ஏதாவது கை நீட்டினால் உன்னை குடும்பத்தோடு தூக்கி ஜெயிலுக்குள் போட்டு விடுவோம் ” அடிகளை கொடுத்தபடியே எச்சரித்தான்.

” விட்டுடுங்க சார். இனி அந்த பொண்ணு இருக்கிற பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன். நாங்கள் குடும்பத்தோடு ஊரை விட்டே  ஓடிடுறோம் ” 

” அதை செய்யுடா பொட்ட பயலே. உன்னை எல்லாம் …” பற்களைக் கடித்தபடி அவன் உயிர் நிலையில் ஓங்கி மிதித்தாள் ராஜலட்சுமி .அவன் அலறியபடி கீழே சாய ” இந்த நாயை இழுத்துக்கொண்டு போய் ரோட்டில் உருட்டி விட்டு விட்டு வாங்க ”  உடனிருந்த போலீஸ்காரர்களுக்கு உத்தரவிட்டாள் .வீடியோ அத்தோடு முடிந்தது.

” ஷிவானியிடம் விசாரிக்க அவளது அட்ரஸ் கேட்கத்தான் உனக்கு போன் செய்தாள் . நீ பதில் சொல்லாததால் அவளாக அலைந்து ஷிவானியை கண்டுபிடித்து அவளிடம் விவரம் பெற்று …என்று நான்கு நாட்கள் இந்த வேலை அதிகமாக இழுத்து விட்டது ” அபிராமனின் விளக்கத்திற்கு பின்னே சாரி கேட்பதற்கு நிலானி தயங்கவில்லை.

இதோ அந்த விஷயத்தை ஷிவானியுடன் விடாமல் இதைப்போல் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ பெண்கள் இருப்பார்களே என யோசித்து அவர்களுக்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரே… சமூக வலைதளங்களில் அதிக பங்கு இருக்கும் நிலானியின் உதவியோடு இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதை உணர்ந்தாள்.

” நிறைய இடங்களில் சொந்த வீட்டிற்குள்ளேயே மிக நெருங்கிய சொந்தங்களிடமே இந்த வன்கொடுமையை பெண்கள் அனுபவிக்கின்றனர் .இவர்களிடம்  நமது குரூப் போய் சேர வேண்டும் .அப்பன் சித்தப்பன் மாமன்  அண்ணன் தம்பி அத்தனை பேரையும் இழுத்துப்போட்டு மிதிக்க வேண்டும் ..யாரால் இது நடக்கிறது என்று தெரியாமலேயே அந்த நாய்கள் பிறகு அந்தப் பெண்களைப் பார்த்தாலே அலறி ஓட வேண்டும் ” வேகத்துடன் தனது திட்டங்களை சொன்னாள் ராஜலட்சுமி.

“ஓரளவு பரவலாக இதுபோல் நடந்து விட்டால் எங்கிருந்தோ வந்து யாரோ நம்மை  அடித்தே கைகால்களை உடைப்பார்கள் என்ற பயம் வந்து விட்டால் எல்லா ஆண் பிள்ளையும் பெண்டாட்டியை தவிர மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் ” அபிராமன் இப்படி மாறியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு பேசினான்.

இவர்களது இந்த சமுதாய அக்கறையில் முழு மனதுடன் தன்னையும்  ஈடுபடுத்திக் கொண்டாள் நிலானி .இதனால் மூவருமாக அடிக்கடி சந்திப்பது வெளியே செல்வது என அவர்களுக்குள் ஒரு வலுவான நட்பு உண்டானது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு வந்தது .திருக்குமரன் பிரச்சாரம் என்று தமிழ்நாடு முழுவதும் அலைந்து கொண்டிருந்ததால் நிலானிக்கு  போன் செய்வதை குறைத்து இருந்தார் .இல்லாவிட்டால் தினமும் போன் செய்து ஏதாவது குறை பாடிக்கொண்டிருப்பார் .அபிராமனின்  குடும்பத்தை குறை சொல்வதில் ஆரம்பித்து எனக்கு பணம் பற்றாக்குறை என்பதில் முடியும் அவரது புலம்பல் .வாய்க்கு வந்த ஏதாவது சமாதானங்களை தந்தைக்கு சொல்லி முடிப்பாள் நிலானி.

தந்தையுடனான ஒவ்வொரு போன் பேச்சிற்கும்  பிறகு அபிராமனின் மேல் அவளுக்கு அளவில்லாத ஆத்திரம் வரும் .இவன் பாட்டிற்கு இவன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது தானே என எரிச்சல் படுவாள்.

அப்பாவிற்கு நிறைய வேலை போல அதனால் தான் நான்கு நாட்களாக போனை காணோம் என்று நினைத்தபடி மென் சாரலாய் விழுந்து கொண்டிருந்த மழையை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மழைக்கு நனையாத ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டு அபிராமன் தனது பைக்கை எடுப்பதை பார்த்தவள் வேகமாக வெளியே சென்றாள்.

“இந்த இரவில் மழை நேரத்தில் எங்கே போகிறீர்கள் ? என்ன வேலையாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் .உள்ளே வாருங்கள் ” 

” இல்லை .இது மிக முக்கியமான வேலை அதனை முடித்துவிட்டுத்தான் வருவேன் ” அபிராமன் பிடிவாதமாக இருக்க ” சரி அப்போது என்னையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு போங்கள் ” 

அபிராமன் திகைத்தான் . ” வேண்டாம் நிலா .இரவு மழை  இதெல்லாம் உனக்கு ஒத்துக்கொள்ளாது “

” அதெல்லாம் நான் சமாளித்துக் கொள்வேன் .நானும் வருகிறேன் .வாருங்கள் . ” தானும் ஒரு ஜாக்கெட்டை அணிந்துகொண்டு கிளம்பி விட்டாள் .அபிராமனுடன் நெடுநாட்கள் கழித்து மீண்டும் ஒரு பைக் பயணம் .நடுங்கிய கைகளை அவன் தோள்களில் அழுத்தமாக பதித்து பற்றிக்கொண்டாள்.




அன்று பவுர்ணமி போலும். நிலவும் அவர்களுடன் துணையாக உடன் வந்தது .அபிராமன் ஒரு மேடேறி இறங்க அங்கே தெரிந்த காட்சியில் நிலானியின் விழிகள் விரிந்தன .அங்கே ஏரி இருந்தது .ஒரு பக்கம் ஏரியும்  ஒரு பக்கம் காடுமாக இருந்த இந்த பயணம் நிலானியின் மனதை தொட்டது .சிறிது நேரம் கழித்து காடுகள் குறைந்து இரண்டு பக்கமும் ஏரியே வர் பைக்கை திருப்பி ஏரிக்கு அருகே இருந்த ஒரு மண்பாதைக்குள் விட்டான் அபிராமன் .அந்த மண் பாதை ஏரிக்கு இடையே அவர்களை அழைத்துச் சென்றது .

ஏரிக்குள் பைக்கில் பயணம் .ஆஹா என்ன ஒரு அற்புதமான பயணம் இது நிலாவினியின் உடல் உற்சாகத்தில் சிலிர்த்தது .அவளது கைகள் அபிராமனின் கழுத்தை வளைத்துக் கொண்டன.

” பென்டாஸ்டிக் ராம். இதுபோல் ஒரு அழகான  பயணத்தை என் வாழ்வில் நான் சந்தித்ததே கிடையாது .இதற்காக உங்களுக்கு நிறைய நிறைய நன்றி சொல்ல வேண்டும் .”காதுகளை உரசிச் சென்ற காற்றோடு காற்றாக அவனது காதில் முணுமுணுத்தாள். அபிராமன் தலையசைத்து அவளது நன்றியை ஏற்றுக் கொண்டான்.

அவனது மனது இங்கே இல்லை என்பதை உணர்ந்த நிலானி பின்னர் அமைதியோடு இயற்கையை ரசிக்க தொடங்கினாள் .ஒரு இடத்தில் பைக்கை நிறுத்திய அபிராமன் ” இங்கே வா ” என அவள் கைபற்றி நீருக்குள் அழைத்துப் போனான்.

ஜில்லென்ற நீரின் குளிர்ச்சிக்கு தடுமாறி நின்றவளை தாங்கிப்பிடித்து நீர் நடுவே நடத்திச் சென்று ஒரு திட்டு போன்ற இடத்தில் ஏற்றினான் .அந்த இடம் நன்கு பெரியதாக நான்கு பேர் தாராளமாக படுத்துக் கொள்ளும் அளவில் இருந்தது.

” இது என்ன இடம் ராம்  ? ” தான் அமர்ந்திருந்த இடம் பெஞ்சு போல் தோன்ற குழப்பத்துடன் கேட்டாள் நிலானி.

” இது வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதி .அதோ அங்கே பாலம் தெரிகிறது பார்த்தாயா ?அந்த பாலத்தை கட்டும்போது இந்த ஏரிக்கு அருகே இருந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டினார்கள் .அப்படி வெட்டுப்பட்ட மரங்களின் அடிப்பகுதியில் ஒன்றுதான் இது .இதுபோல் நிறைய மரங்கள் இந்த ஏரிக்குள் உண்டு ” சுற்றிலும் காட்டினான்.

எவ்வளவு பெரிய மரங்களாக இவை இருந்திருக்கும் ? தான் அமர்ந்திருந்த மரப் பகுதியை முழுவதுமாக ஒரு ரவுண்ட் சுத்தி வந்தாள் நிலானி .இயற்கையின் அதிசயத்தை அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அபிராமன் அமர்ந்து கொண்டு வாயில் சிகரெட்டை வைத்து பற்ற வைத்தான் .முகத்தை சுளித்தபடி அவன் அருகே வந்து அமர்ந்தாள் நிலானி .” இந்த சிகரெட்டை விட்டு விடக்கூடாதா ? ” எரிச்சலாக கேட்டாள்.

” ம் …கெட்ட பழக்கம் தான். கொஞ்ச நாட்களாக நிறைய டென்சன். அதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முழுதாக விட முயற்சிக்கிறேன் ” சொன்னபடி சிகரெட்டை தண்ணீருக்குள் தூக்கி எறிந்தான்.

நிலானியின் முகம் மலர்ந்தது .வானில் முழுநிலவு வலம் வந்து கொண்டிருக்க சுற்றிலும் நீருக்கு நடுவில் இருவர் மட்டுமாக அமர்ந்திருந்த இந்த ஏகாந்த நிலை நிலானியின் மனதை ஏதோ செய்தது .களையும் கம்பீரமுமாக அருகே அமர்ந்திருந்த கணவனின் பால் அவள் மனம் எளிதாக படர்ந்தது. நிலவொளியில் கோட்டோவியமாக தெரிந்தவனை இரு கண் விரித்து அள்ளிப்பருகினாள் அவள் .அவனோ எந்த சலனமும் இன்றி அமைதியாக அமர்ந்திருந்தான்.

” யாரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? ” இருட்டை வெறித்தபடி அமர்ந்திருந்த அபிராமனிடம் மெல்ல கேட்டாள் .உதட்டின் மீது விரல் வைத்து ” உஷ் ” என எச்சரித்தான் அவன்.

அப்போது  சில மனிதர்களின் காலடி ஓசையும் குசுகுசுவென சத்தங்களும் கேட்டன. நிழல் உருவங்கள் சிலவற்றை பாலத்தின் சுவர் அருகே பார்த்தவள் ” அவர்கள் யார் ராம் ? ” கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

” சமூக விரோதிகள் ” அழுத்தமாய் உறுதி சொன்னவனை தலையாட்டி ஒத்துக் கொண்டு அந்த கூட்டத்தினரை உற்று கவனித்தவள் அதிர்ந்தாள் .  அதன் நடுவே இருந்தவர்  அவளது அப்பா திருக்குமரன்.

What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!