Serial Stories

நந்தனின் மீரா-23

23

விறுவிறுப்பும்
சுறுசுறுப்பும்
மதமதப்புமாக
சிலீரென்று என்னை தாக்கிவிட்டு
ஒன்றுமறியாத அன்றைய உன்னைப்போலவே ,
இதோ
இன்றைய மழை .

” அங்கே ஸ்பீட் ப்ரேக் மீரா .பார்த்து போ …” அவள் தோள்களை பற்றி அழுத்தினான் .

” எனக்கு தெரியுது …” பல்லைக் கடித்தாள் .

” அழகாக ஓட்டுகிறாய் மீரா .எப்போதிருந்து ஓட்டுகிறாய் …? ” குனிந்து அவள் காதிற்குள் கேட்டான் .

பின்னங்கழுத்தை சுட்ட மூச்சு இப்போது காதில் .மீராவிற்கு உடல் கூசியது .இவன் வேண்டுமென்றே செய்கிறான் .

” பத்தாவது படிக்கும் போதிலிருந்து .கொஞ்சம் தள்ளி உட்காருங்க “

” இதற்கு மேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே விழுந்து விடுவேன் மீரா ..” இன்னமும் நெருங்கி அமர்ந்தான் .

பேசாமல் இருந்திருக்கலாம் …மீரா மூச்சை பிடித்துக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாள் .

” இன்று சீயக்காய் தேய்த்து குளித்தாயா மீரா …? ஜம்மென்று  மணக்கிறதே …” அவள் கூந்தலை  முகர்ந்தான் .

” ஒழுங்காக உட்காரவில்லையென்றால் வண்டியை எங்கேயாவது கொண்டு போய் விட்டு விடுவேன் …” மிரட்டினாள் .

” இதோ நேரே உட்கார்ந்துவிட்டேன் .”நல்ல பிள்ளை போல் கொஞ்ச நேரம் தள்ளியமர்ந்தான் …

” பழைய கார் ஒன்று விலைக்கு வருகிறது மீரா .நாம் வாங்கலாமா … ? கார் டிரைவிங்கும் கற்றுக் கொள்கிறாயா …? ” அவன் கைகள் மீண்டும் அவள் தோள்களை வருட ஆரம்பித்தது .

” ம் ..ம் …வாங்கலாம் …” இவன் ஏன் இவ்வளவு குனிந்து பேசுகிறான் …மீராவின் மனதில் வேறு படபடப்பு .

” கார் வாங்க வேண்டுமென்பது எனது ரொம்ப நாள் ஆசை மீரா .இப்போது நீ வண்டி ஓட்டுவதை பார்த்ததும் உன்னை கார் ஓட்ட வைத்து பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது . அந்தக் காருக்கு அட்வான்ஸ் கொடுத்து விட போகிறேன். பர்டிகுலர்ஸெல்லாம் முடித்து பத்து நாட்களில் வாங்கிவிடலாம் .ஓ.கே “

மீராவிற்குள் நெகிழ்ச்சி அலையடித்தது …

” எனக்காக காரா ….? ” தடுமாறி கேட்டாள் .

” எப்படியும் வாங்க வேண்டுமென்றுதான் எண்ணியிருந்தேன் மீரா .உன்னால் இப்போது சீக்கிரம் வாங்க வேண்டுமென்று தோணுகிறது .உன்னை , அம்மாவை , அக்காவை , தங்கச்சியை காரில் உட்கார வைத்து ஊரை சுற்றி வர வேண்டும் .நீ எப்போது கார் ஓட்ட கற்றுக்கொள்ள போகிறாய் …? நானே கற்றுத் தரவா …? “

மீரா வண்டியை நிறுத்தினாள் .நந்தகுமாரின் அக்கா அவள் மனதில் பிரவீணாவின் நினைவை கொண்டு வந்தது .

” இப்போது உங்களுக்கு கடையில் முக்கியமான வேலை இருக்கிறதா …? “

” லஞ்ச் டயம்தானே …பெரிய வேலையெல்லாம் இல்லை .என்ன மீரா …? என்ன விசயம் …? “

” என்னோடு வாருங்கள் …” ஸ்கூட்டியை திருப்பினாள் .

” எங்கேடா ..?? “

” நான் இன்று போன ப்ரெண்ட் வீட்டுக்கு …”

” அங்கே நான் ….என்ன விசயம் மீரா …? “

” சொல்கிறேன் …”

அந்த பிள்ளையார் கோவிலின் பின்புறம் வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு கோவிலினுள் மறைவாக அமர்ந்து கொண்டு தனக்கு பின்னால் கணவனை இழுத்தாள் .

” சத்தமில்லாமல் இங்கே மறைந்து உட்காருங்கள் ….” அவனை மறைத்தாற் போல் முன்னால் அமர்ந்து கொண்டாள் .




” என்னை நீ மறைக்கிறாயா …? ” சிரித்தான் .

உயரமும் , அகலமுமாக ஆகிருதியாக இருந்தவனை மெலிந்து கொடியாய் இருப்பவள் மறைக்க முயற்சித்தால் …மலையை மறைக்க முயலும் கொடியாய் இருந்தது அந்த தோற்றம் .

புதிராய் இருந்த மனைவியின் செய்கையை கவனித்தபடி இருந்த நந்தகுமார் இப்போதோ …அதிர்ஷ்டமாய் வாய்த்துவிட்ட மனைவியின் அருகாமையை அனுபவித்தபடி இருந்தான் .

” அதோ அந்த எதிர்வீட்டு வாசலை கவனித்தபடி இருங்கள் ….” என்றபடி திரும்பி பார்த்தவள் , அவள் தலைபின்னலை கையில் எடுத்து வருடிக் கொண்டிருந்தவனை முறைத்தாள் .

”  உன் பின்னலை எண்ணிக்கொண்டிருந்தேன் மீரா .எண்ண எண்ண வந்துகொண்டேயிருக்கிறதே …”

அவன் கையிலிருந்து பின்னலை உருவிக்கொண்டவள் ” அங்கே கவனியுங்கள் …,” என்றாள் .

குனிந்து அவள் தோள்களில் தன் நாடியை வைத்துக்கொண்டான் …

” ஒதுங்கு மீரா …எனக்கு மறைக்கிறது  …”

” ஏங்க …நான் முக்கியமான விசயமாக வந்திருக்கிறேன் .நீங்களென்னவென்றால் ….” வருத்தம் தொனித்த அவள் குரலை கண்டவன் , குறும்புகளை விட்டு தள்ளி அமர்ந்தான் .

” என்னடா …சொல்லு ….” கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த வீட்டு கதவு திறந்தது .

வெளியே வந்த குமரேசனை கண்டதும் நந்தகுமாரின் வேடிக்கைகள் துணி கொண்டு துடைத்தாற் போல் மறைந்தது .முகம் சிறுத்தது .

தன்னை வழியனுப்ப வந்த அந்த வீட்டு பெண்ணின் கன்னத்தில் தட்டி விடை பெற்றான் குமரேசன் .

கைகளில் தலையை தாங்கி அமர்ந்து விட்ட கணவனின் தோற்றம் மீராவிற்கு கஷ்டமளித்தது .

” தேற்றிக்கொள்ளுங்கள் .மேலே ஆக வேண்டியதை யோசிப்போம் .வாங்க வீட்டிற்கு போகலாம் …” அவன் கைகளை பிடித்து எழுப்பினாள்.

” நான் கடையில் இறங்கிக் கொள்கிறேன் .நீ வீட்டிற்கு போ மீரா …” வண்டி அருகே வந்தவன் …

” இப்போதும் நீதான் வண்டி ஓட்ட வேண்டும் .என்னால் ஓட்ட முடியாது …” வறண்டு ஒலித்தது அவன் குரல் .

இப்போதும் அவன் கைகள் அவள் தோள்களை அழுந்த பற்றியிருந்தது ஆனால் அதில் முன்பு போல் காதலோ , குறும்போ இல்லை .வெறுமை நிறைந்த வேதனை இருந்தது .

” முடிவில்லாத பிரச்சினை என்று எதுவும் கிடையாதுங்க .தைரியமாக இருங்க .நாம் சமாளிப்போம் ….” அவனை இறக்கிவிட்டு சொன்னாள் .

அரை கவனத்துடன் தலையாட்டி கேட்டபடி படியேறி கடையினுள் சென்றவன் …நினைத்தாற் போல் வெளியே வந்து …

” நீ பார்த்து போ மீரா….” என்றான் .




அன்று இரவு நந்தகுமார் வீட்டிற்கு வர ரொம்ப நேரமானது .எல்லோரும் தூங்கிய பிறகு பதினொரு மணிக்கு மேல்தான் வந்தான். சரியாக சாப்பிடாமல் சாப்பாட்டை பிசைந்து கொண்டிருந்து விட்டு எழுந்தான் .கட்டாயப்படுத்தி மீரா கொடுத்த பாலை சுவை தெரியாமல் விழுங்கி விட்டு படுக்கையில் விழுந்தான் .

விளக்கணைத்து படுத்த பிறகும் படுக்கையில் தூங்காமல் அவன் உருண்டு கொண்டிருப்பதை அறிந்த மீராவின் மனது தவித்தது .

கடவுளே …நேற்றுத்தானே நிம்மதியாக உறங்குகிறான் என பொறாமை பட்டேனே …ஒரே நாளில் இப்படி அதற்கு மாறுதலாக நிகழ்ந்துவிட்டதே .என் மனதால் ஏன் அப்படி நினைத்தேன் …?

” அலட்டாமல் தூங்குங்கள் .எல்லாம் நல்லபடியாக நடக்கும் …” கணவனின் வேதனையை தூண்ட வேண்டாமென்றுதான் இவ்வளவு நேரம் பேசாமல் இருந்தாள் மீரா .ஆனால் இப்போது …மனது கேட்காமல் சொன்னாள் .

” எல்லாம் விசாரித்துவிட்டேன் மீரா .அவள் பெயர் அபர்ணா .மூன்று வருடங்களாக இவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் இருக்கிறது …” கட்டிலில் எழுந்து அமர்ந்தான் .

” மீரா …நான் அங்கே உன் அருகே வந்து படுத்துக்கொள்கிறேனே .கொஞ்சநேரம் …” கெஞ்சுதலாக கேட்டான் .

மௌனமாக தன் கைகளை நீட்டினாள் மீரா .புதைகுழிக்குள் புதைந்து கொண்டிருப்பவன் வெளியேற கிடைத்த குச்சியை பற்றும் ஆர்வத்துடன் அவள் கைகளை பற்றியவன் …தளர்ந்து அவளருகில் படுத்தான் .அவள் கைகளை பற்றி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்.

” உனக்கு எப்படி மீரா தெரிந்தது …? “

” நம் கல்யாணத்திற்கு முன்பே ஒருநாள் நாங்கள் எல்லோரும் சினிமாவிற்கு போனோம் .நானும் அம்மாவும் ஸ்கூட்டியில் வந்தோம் .அப்பா தம்பிக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்துக்கொண்டே அவனுடன் வண்டியில் வந்தார் .அந்த தெருவில் அவன் தடுமாறி அந்த வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக்கின் மீது மோதி விட்டான் .

அவ்வளவுதான் அந்த பெண் வெளியே வந்து காச்மூச்சென்று கத்த தொடங்கிவிட்டாள் .ஆட்கள் கூட ஆரம்பிக்க , அப்பா என்னையும் , அம்மாவையும் பக்கத்திலிருந்த சந்துக்குள் மறைந்து நிற்க சொன்னார்.

அப்போதுதான் அந்த வீட்டு சந்துக்குள் நின்று கொண்டிருக்கும் போதுதான் , சன்னல் வழியாக தற்செயலாக பார்த்தேன் .அங்கே உங்கள் மச்சான் உடகார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் .இந்தப் பொண்ணு வந்து அவரிடம் …

” ஊரார் பார்க்க எனக்கு கௌரவமான வாழ்க்கைதான் தர மாட்டீர்கள் .இந்த தெரு ஆட்கள் பார்க்க என் கௌரவத்தை காப்பாற்ற மாட்டீர்களா ..? தெருவில் போகிற எவனோ உங்கள் வண்டியை இடித்துவிட்டு போகிறான் .நான் போய் கேட்டால் பதிலுக்கு கத்துகிறான் .வந்து என்னவென்று கேளுங்கள் .என்றாள் .

இவர் உடனே எழுந்து கை கழுவி விட்டு  வாசலுக்கு வந்து தம்பியை பார்த்து கத்த துவங்கினார் .அதற்குள் கூட்டம் அதிகமாக ஆளாளுக்கு பேசி சமாதானம் செய்து ஒரு வழியாக அங்கிருந்து வந்தோம் …,”

” ஓ…உன் அம்மா , அப்பா எல்லோரும் பார்த்தார்களா …? ” சிறு மனத்தாங்கல் அவன் குரலில் .

அவன் மனவோட்டத்தை உணர்ந்து ” ம்ஹூம் இல்லைங்க .அன்னைக்கு நான்தான் கொஞ்சம் பதட்டமில்லாமல் இருந்தேன் . அம்மா , அப்பா , தம்பி எல்லோரும் டென்சனாக இருந்ததால் குமரேசன் அண்ணாவை கவனித்திருக்க மாட்டார்கள் .நீங்க எதுவும் நினைக்கவேண்டாம் …” சமாதானப்படு்த்தினாள் .

மீராவின் இதமான அணுகுமுறை நந்தகுமாரை பெருமளவு சமாதானப்படுத்தியது .

” இனி இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்க போகிறோம் மீரா …அம்மாவிடம் சொல்லவே பயமாக இருக்கிறது .அம்மா ரொம்ப கவலைப்படுவார்கள் .முதலில் அப்பாவிடம்தான் சொல்லவேண்டும் …”

” இல்லைங்க நீங்க முதலில் பாட்டியிடம் பேசுங்கள் …”

” பாட்டியிடமா …? எதற்கு ….? “

” பிரவீணா அண்ணியின் பிரச்சினையை முதலில் கண்டு கொண்டதே பாட்டிதான் . அவர்கள் பெரியவர்கள் …விவரமானவர்கள் .ஏன் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் கூட நீங்கள் பாட்டியிடம் பேச மாட்டீர்களா …இன்னுமா பாட்டி மீது கோபத்தை பிடித்து வைத்துள்ளீர்கள் …” அவளையறியாமலேயே படபடத்தாள் மீரா .

” ஏய் மீரா…பாட்டி மேல் எனக்கென்ன கோபம் ….? அதெல்லாம் ஒன்றுமில்லை .நீ சொன்னது போல் நாளை காலை பாட்டியிடம் பேசுகிறேன் …”

நந்தகுமார் சொன்னது போன்றே மறுநாள் காலையில் பாட்டி முன்னால் போய் நின்றான் .பாட்டிக்காக மீரா இட்லிகளை எடுத்துக் கொண்டு போன போது அவளுடன் தானும் ஒட்டிக்கொண்டான் .

” என்னடா …என்னை தனியாக பார்க்க தைரியமில்லாமல் பொண்டாட்டி முந்தானையை பிடிச்சிட்டு நிற்கிறியாக்கும் …? ” பாட்டி நக்கலாக கேட்க …

” நான் எப்போ பொண்டாட்டி முந்தானையை பிடித்தேன் …..? ” ரோசமாக கேட்டவன் பாட்டியின் பார்வையை தொடர்ந்து …

பேச்சை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் மனதினுள் சொல்லி பார்த்தபடி இயல்பாக மீராவின் முந்தானை நுனியை எடுத்து விரல்களில் சுற்றிக் கொண்டிருந்த தன் கைகளை பார்த்துவிட்டு சட்டென்று அதை விட்டு விட்டு அவசரமாக மனைவியை விட்டு தள்ளி நின்றான் .




What’s your Reaction?
+1
24
+1
24
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
12 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!