Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-18

18

“என்னை பார்த்தால் உங்களுக்கு அசிங்கமாக அருவருப்பாக இல்லையா?” திரும்பத் திரும்ப கேட்டாள் சுபவாணி. “நிச்சயம் இல்லை” அலுக்காமல் அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ரியோ.

இன்னமும் அதே பரிவுடன் மனம் நிறைந்த காதலுடன் தன்னை அணுகும் ரியோவை நம்ப முடியாமல்

பார்த்தாள். “நான் கரை பட்டவள். குறையுடையவள் அலெக்ஸ்”

“என்ன கரை? எதில் குறை? உடம்பை மட்டும் வைத்து பேசுவதனால் என்னிடம் இனிமேல் பேச வராதே, நான் உன் உள்ளத்தை தான் விரும்புகிறேன். உள்ளத்தால் உனக்கு நெருக்கமாகத்தான் நினைக்கிறேன். நம் இருவர் உள்ளமும் எந்த துணுக்கமுமின்றி ஒன்றாக இணைந்த பிறகு, உடல்கள் இணைந்தால் போதும். அதுவரை நான் காத்திருக்க தயாராக இருக்கிறேன்”

“நான் பட்ட வேதனைகள் அதிகம் அலெக்ஸ்.அப்படி ஒரு நாள் நம் வாழ்வில் வராமலே போய்விட்டால்…” கேள்வி எழுப்பியவளின் கண்களோடு கலந்தவன் “இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாய் வாணி?” என்றான்.

“தெரியவில்லை” சுபவாணி உண்மையைத்தான் சொன்னாள். “என் உடம்போடு மனமும் கூட ரணமாகிக் கிடக்கிறது அலெக்ஸ். என்னால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாக நடந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அதனால் என்னை விட்டு விடுங்கள்”

அவள் அருகே அமர்ந்திருந்த ரியோ எழுந்து போய் எதிர் இருக்கையில் அமர்ந்தான். தவிப்புடன் பார்த்தவளின் கண்களுக்குள் பார்த்து “சரி பிறகு என்ன செய்யப் போகிறாய்?” என்றான்.

“நா… நான் இந்த படிப்பை முடித்துவிட்டு… இல்லை இனியும் இங்கே இருந்து படிக்க முடியும் என்று தோன்றவில்லை.நா… நான் எங்கள் ஊருக்கே போய்விடுகிறேன்”

“பிறகு…?”

“பி…பிறகு ஏதாவது வேலை தேடிக்கொண்டு… அம்மா அப்பா உடனேயே… இருந்து விடுவேன்” சுபவாணியின் குரல் நடுங்க துவங்கியது.

ரியோ எழுந்து வந்து அவள் அருகே நின்றான். அவள் தோள் பற்றி எழுப்பி நிற்க வைத்தான். “என்னைப்பார் வாணி, என்னை விட்டுவிட்டு உன்னால் இருக்க முடியுமா?”

கண்ணீர் வழிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.” என் பேச்சு,சிரிப்பு, நான் சொல்லிக் கொடுக்கும் பாடம், என் அணைப்பு இது எதுவுமே இல்லாமல் உன்னால் இருந்து விட முடியுமா?” கேட்டு முடித்த போது ரியோவின் கண்களும் கலங்கி கண்ணீர் வழிய துவங்கியது.

“அலெக்ஸ்” சிறு கத்தலுடன் சுபவாணி அவன் மார்பில் சரிய இறுக்கி அணைத்துக் கொண்டான். “இரண்டு நிமிடங்கள் நம்மால் ஒருவரை விட்டு ஒருவர் தள்ளி நிற்க  முடியவில்லை.இனி வாழும் காலம் முழுவதும் தள்ளி இருந்து விடுவோமா…?”ரியோவின் கேள்விக்கு பதிலாக அவன் மார்புக்குள் புதைந்து கொண்டாள். 




“கணவன் மனைவியின் முதல் படி நட்புதான் வாணி. பிறகுதான் அது பரிணாமம் அடைந்து காதலாக மாறும். நம் விஷயத்தில் நாம் நட்பை தாண்டி காதலை தொட்டு விட்டோம். உன் முன் வாழ்வு உன்னை மிகவும் தொந்தரவு செய்யும் என்று எனக்கு தெரியும். ஆனால் நம் காதல் அந்த தொந்தரவுகளை தூரம் தள்ளி நம்மை சேர்த்து வைக்கும். இங்கே பார் வாணி நாம் காதலிக்கிறோம். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கிறோம்” அவள் மனதிற்குள் உரைக்கும்படி அழுத்தமாக திரும்பத் திரும்ப சொன்னான்.

அவனது அன்பான கதகதப்பிலும்  மந்திரம் போல் காதுக்குள் ஒலித்த காதலிலும் கண்கள் சொருக வெகு நாட்களுக்குப் பிறகு தன்னை மறந்து நிம்மதியாக தூங்கவே ஆரம்பித்தாள் சுபவாணி.

———

“நானும் தான் காலேஜ் எல்லாம் போய் படித்தேன். எனக்கெல்லாம் இந்த காதல் வரவில்லையே…” கவலையோடு இந்திரா கன்னத்தில் கை வைத்துக் கொள்ள சுபவாணிக்கு அக்காவை பார்த்து சிரிப்பு வந்தது.

” தனா அத்தான் அக்காவிற்கு ஒரு புது கவலை வந்திருக்கிறது. வந்து என்னவென்று கேளுங்களேன்…” எட்டிப் பார்த்து குரல் கொடுக்க எதிர் அறையில்  ரியோ உடன் பேசிக் கொண்டிருந்த தனசேகர் எழுந்து வந்தான். 

இந்திரா தங்கையை விளையாட்டாக மொத்த ஆரம்பித்தாள். சுபவாணி போனில் லேசாக இரண்டு வார்த்தை சொன்னதுமே தனசேகரனும் இந்திராவும் உடனே கிளம்பி வந்திருந்தனர். ரியோவை பார்த்து பேசி தங்கள் முழு திருப்தியை தெரிவித்திருந்தனர்.

“அடுத்த வாரமே கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை முடித்து விடலாம். என் பக்கம் அம்மா அப்பாவோடு சில முக்கிய உறவினர்கள் மட்டும். உங்கள் பக்கமும் அப்படியே அழைத்து வந்து விடுங்கள். திருமணம் முடிந்த பிறகு கல்லூரியில் எல்லோருக்கும் சொல்லிக் கொள்ளலாம். சுபவாணிக்கு இன்னமும் ஒரு வருடம் படிப்பு இருக்கிறது. அவள் அதை முடித்த பிறகு என்னுடைய குழுவில் இணைந்து பணியாற்ற தொடங்கட்டும்”

தெளிவாக போடப்பட்ட ரியோவின் திட்டங்களை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் சுபவாணி. “எத்தனை வருடங்களாக இதையெல்லாம் பிளான் செய்தீர்கள்?” அவனிடம் கேட்க புன்னகைத்தான். “உன்னை எனக்குரியவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று என் மனம் சொன்ன நாளிலிருந்து” என்றான்.

“உங்கள் அம்மா அப்பா நம் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்களா?” கவலையுடன் கேட்டாள்.

” நான் முன்பே பேசி விட்டேன். அவர்கள் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்” சுபவாணிக்கு ஆச்சரியம்தான்.படிப்பும் சம்பாத்தியமுமாக செல்வாக்கு நிறைந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆணுக்கு இப்படி ஒரு பெண்ணை மணம் முடிக்க எந்த பெற்றோர் ஒப்புக் கொள்வார்கள்? அவள் மனம் முரண்டிக்கொண்டே இருந்தது.

திருமண திட்டங்களை தெளிவாக போட்டு முடித்துவிட்டு தனசேகரும் இந்திராவும் சந்தோசமாக ஊருக்கு கிளம்பினர். அம்மா அப்பாவையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் வந்து விடுவதாக சொல்லி சென்றனர். திருமணம் பத்து நாட்கள் கழித்து இருக்க சுபவாணியின் தினங்கள் ஏதோ ஒரு வித படபடப்புடன் கழிய துவங்கின.

 என்னவோ ஒன்று நடக்கப் போவதாக அவள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

அது உண்மையாகி ஒரு நாள் அவள் எதிரே வந்து நின்றான் ரகுநந்தன் “என்னடி பத்தினி எப்படி இருக்கிறாய்? ஒரே கும்மாளமும் கூத்தாட்டமும் தான் போலவே?” ஓநாய் போல் கொக்கரித்து நின்றான்.




What’s your Reaction?
+1
42
+1
28
+1
2
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!