Serial Stories

சதி வளையம்-12

12 பாலாஜியின் கோபம்

“வணக்கம் மிஸ்டர் பாலாஜி” என்று கைகுவித்தாள் தன்யா.

“யார் நீங்க?” என்றான் பாலாஜி. குரலில் ஒரு கடுமை இருந்தது. கடுகளவு கூடப் பணிவோ, நாகரீகமோ இல்லை. சாணி நிறத்தில் ஒரு ஜீன்ஸும் மேலே அதே நிறத்தில் ஜீன்ஸ் கோட்டும் அணிந்திருந்தான். உள்ளே ஒரு சட்டை. “வெள்ளை” என்று சொல்ல முடியாதபடி பழுப்பு ஏறியிருந்தது. சிகரெட் பிடிப்பவன் என்று சத்தியம் செய்த ஊதா நிற உதடுகள். கண்களில் சிகப்பு. கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த கைக்குட்டையில் ரௌடித்தனம்.

“பாஸ்கர் எம்ப்ளாய் பண்ணின டிடக்டிவ்ஸ் நாங்க …” என்று தன்யா ஆரம்பிப்பதற்குள் பாலாஜியின் கண்கள் ரத்தச் சிவப்பாகின. முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“வாங்கடி, வாங்க! எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க! இந்தக் கல்யாணத்தை நிறுத்தத்தானே அந்த சதானந்தன் அனுப்பிச்சான்? ஏண்டி ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்கறீங்க! நீங்கதான் கொழுப்பெடுத்து அலையறீங்கன்னா…”

பளார்!

தன்யா அறைந்த அறையில் பாலாஜி நிலைகுலைந்து போனான்.

தன்யாவின் முகத்தில் கோபம் ஜிவுஜிவுத்தது. “மைண்ட் யுவர் வேர்ட்ஸ். உன் அக்கா வாழ்க்கையைக் காப்பாத்தணும்னுதான் நாங்க இவ்வளவு கஷ்டப்படறோம். கூடப்பிறந்த நீதான் அவ வாழ்க்கையை அழிக்கப் பார்க்கறே! ஒழுங்கா பதில் சொல்றதா இருந்தா இங்க உங்க வீட்லயே பேசலாம். ஒரு வார்த்தை மரியாதைக் குறைவா பேசினேன்னா போலீஸ் ஜீப் வந்துடும். லாக்கப்ல உட்கார்ந்து கேள்விக்குப் பதில் சொல்லலாம். எப்படி வசதி?” என்று கர்ஜித்தாள்.

பாலாஜி அப்படியே மடங்கித் தரையில் உட்கார்ந்தான்.

“ம். ஆரம்பி. அன்னிக்குப் பார்ட்டிக்கு வரும்போதே துரைக்கு ஏதோ கோபமாமே? என்ன விஷயம்?”

“அவங்க சித்தப்பா எங்க குடும்பத்தை ஏதோ கேவலமா பேசினதாத் தெரிஞ்சுது, மேடம். அதான் அவங்ககிட்ட நல்லா நாலு வார்த்தை கேட்டுடணும்னு …”

“கோபத்தோட போனே! நாலு வார்த்தை கேட்டியா?”

“எங்க, மேடம்! அவர் முகம் கொடுத்துப் பேசினாத்தானே! ஏதோ பூச்சியைப் பார்க்கற மாதிரி விலகிப் போறார்! ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் நம்ம மச்சான் அவர் ரூமுக்குக் கூட்டிப்போய் ஆறுதலா பேசினாரு. இல்லன்னா எல்லோரையும் நார் நாராக் கிழிச்சிருப்பேன், மேடம்!”

“சபாஷ்! ஆறுதலா பேசினாராக்கும். அவ்வளவுதானா, வேற கலெக்‌ஷன் ஏதாவது உண்டா?”

“என்ன சொல்றீங்கன்னு புரியல, மேடம்” என்ற பாலாஜி, தன்யா முகம் சுளிப்பதைப் பார்த்து, “கிஃப்ட் ஒண்ணு கொடுத்தார் மேடம்” என்றான் அவசரமாக.

“அப்படிச் சொல்லு. என்ன கிஃப்டோ?”

“ஸ்மார்ட்ஃபோன்.”

“சே, அவ்வளவு தானா! அருமை மச்சானுக்கு அழகா தங்கத்தில இல்ல கிஃப்ட் தரணும், மைனர் செய்ன், மோதிரம் இப்படி!”

பாலாஜி பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றான்.

“அவர் தரலைன்னா என்ன, நீயே எடுத்துக்கிட்டே, இல்ல? என்ன முழிக்கற? பாஸ்கரோட மோதிரத்தை எடுத்தது நீதானே? மறுக்க முயற்சிக்காதே. பாஸ்கரோட மோதிரம் கீழ கிடந்திருக்கு. உன்னோட ‘கிஃப்டை’ எடுக்க பாஸ்கர் வார்ட்ரோப் பக்கம் போனபோது நீ அதை அமுக்கிட்ட. கரெக்டா?”

“ஏன் மேடம் இப்படிப் பழி போடறீங்க? ஏதாவது எதிர்த்துச் சொன்னா போலீஸ் அது இதுன்னு பயங்காட்டறீங்க” என்றான் பாலாஜி. விட்டால் அழுது விடுவான் போல் இருந்தது.

“போலீஸ், ஜெயில் இதெல்லாம் உனக்குப் புதுசு இல்லையே, பாலாஜி!” என்று சிரித்தாள் தன்யா.

“அதானே என்மேல பழி போடறீங்க. நான் திருந்தவே கூடாதா, மேடம்? நானும் நேர்மையா வாழக் கூடாதா?’

“அடேடே! நீ திருந்திட்டியா! தெரியாமப் போச்சே! மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஒரு சின்னக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அரக்கில் கோவிலகம்னா என்னன்னு தெரியுமா?” என்று கேலியாகக் கேட்டாள் தன்யா.

பாலாஜி சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக “மேடம், இனிமே உங்ககிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல. அரக்கில் கோவிலகத்தைச் சேர்ந்தவர்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் சில நாட்களுக்கு முன்னால் என்னைப் பார்க்க வந்தார்.”

“பேர் ஏதாவது சொன்னாரா?”

“உன்னி முகுந்தன்னு சொன்னார். பாஸ்கரோட மோதிரத்தை எப்படியாவது எடுத்துக் கொடுத்துட்டா, கையில் பத்து லட்ச ரூபாய் பணமும் அவங்க கம்பெனி ‘அரக்கில் மரைன் ப்ராடக்ட்ஸ்’ல அக்கவுண்ட்ஸ் மானேஜர் வேலையும் தரதா சொன்னார். நான் என்ன செய்வேன், மேடம்? எங்க குடும்பமே பத்மாவை நம்பித்தான் இருக்கு. அவ கல்யாணம் பண்ணிப் போனா நாங்க நடுத் தெருவில் தான் நிற்கணும். ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு யார் வேலை குடுப்பாங்க?”

“சரி சரி. மோதிரத்தை எடுத்துக் கொடுக்கறதா ஒத்துக்கிட்டே! எடுத்துக் கொடுத்தியா?”

“சத்தியமாச் சொல்றேன் மேடம், அந்த மோதிரத்தை எடுக்க இந்தப் பத்து நாளா படாதபாடு பட்டுட்டேன். என்னால முடியல. இந்த பார்ட்டிக்கு வந்த போதே கவனிச்சேன், பாஸ்கர் கையில மோதிரம் இல்ல. அதனால உண்மையிலேயே வந்த கோபத்தை ரொம்ப அதிகமா காட்டிக்கிட்டு, அவர் என்னைத் தனியா அவர் ரூமுக்குக் கூட்டிப் போகும்படி பண்ணினேன். முடிஞ்ச வரை அங்கே நேரத்தை இழுத்து, பாஸ்கர் சந்தேகப்படாதபடி தேடிப் பார்த்தேன். கிடைக்கவேயில்ல.”

“எப்படிக் கிடைக்கும், உனக்காக அதை முன்னாடியே அய்யாக்கண்ணு எடுத்து வச்சிருந்தா?”

பாலாஜி சிரித்தான். “மேடம், நீங்க சீரியஸாகவா இப்படிச் சொல்றீங்க? அந்த வீட்டுக்குத் துரோகம் பண்ண யாராவது சொன்னா, அய்யாக்கண்ணு பட்டாக்கத்தியெடுத்துச் சொருகிடுவான்.”

“இது உனக்கு எப்படித் தெரியும்?” கூர்மையாகக் கேட்டாள் தன்யா.

“வந்து… உன்னி முகுந்தன் தான் சொன்னார்.”

“அதாவது, உன் கிட்ட வரதுக்கு முன்னாடி அவர் அவனைப் பார்த்திருக்கார். அவன் மாட்டேன்னு சொல்லிட்டதால உன்னைத் தேடி வந்தார், சரியா? அவனோட குணம் எங்கே, நீ எங்கே? உன்னைப் பத்தி சதானந்தன் சொன்னது என்ன தப்பு?” உதட்டைச் சுழித்தாள் தன்யா.

“அப்படியெல்லாம் தப்பா பேசாதீங்க, மேடம். ஏதோ கஷ்ட காலம், புத்தி கெட்டுப் போய்த் தப்புப் பண்ணிட்டு, அதனால ஒவ்வொரு நிமிஷமும் தண்டனை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன். என்னைப் பத்திப் பேசினார்னு சொல்றீங்களே, சதானந்தன், அவர் குடும்பம் மட்டும் ரொம்ப யோக்கியமா?” சூடாகக் கேட்டான் பாலாஜி.

“என்ன சொல்றே நீ?” ஆச்சரியமாகக் கேட்டாள் தன்யா.

பாலாஜி பேச ஆரம்பித்தான்.

====================

தன்யா பத்மா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, தர்ஷினி காரில் வந்து காத்திருந்தாள். தன்யா ஏறிக் கொண்டதும் விருட்டென்று கிளம்பினாள்.

“என்ன சொல்றான்?” என்று கேட்டாள் தர்ஷினி.

“எல்லாம் நாம எதிர்பார்த்ததுதான். ஆனா எதிர்பாராத மீன் ஒண்ணு சிக்கியிருக்கு. ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு மொபைலில் போஸை அழைத்தாள் தன்யா.

“சொல்லுங்க தன்யா” என்றார் போஸ்.

“போஸ் சார், ஏ எஸ் வாசுன்னு ஒருத்தன். பதினைந்து நாளைக்கு முன்னால் புழல் ஜெயில்லேர்ந்து ரிலீஸ் ஆனவன். அவனைப் பத்தி ஃபுல் டீடெய்ல்ஸ் கிடைக்குமா?” என்று கேட்டாள் தன்யா.

“புதுசு புதுசா காரெக்டர் அறிமுகப்படுத்துங்க. பொம்பளை பாரதிராஜாவா நீங்க? கேட்டா பழைய ஆள் தான்னு ஷாக் கொடுப்பீங்க” சிரித்தவாறே சொன்னார் போஸ்.

“இவன் புது ஆள்தான் சார். புத்தம்புதுசு. நாம எதிர்பார்க்காத ஒரு காரெக்டர். அப்புறமா இவனைப் பத்திச் சொல்றேன். அது இருக்கட்டும். ஹேமா கொலை கேஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?”

“எங்க போகுது? ஒரே இடத்தில் நிக்குது. அவளோட சம்பந்தப்பட்டவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரையும் விசாரணை பண்ணிக்கிட்டிருக்கோம். ஒண்ணும் பிடி கிடைக்கல.”

“கொலை நடந்த இடத்தில் எதாவது க்ளூ கிடைச்சதா சார்?”

“ஒரு வெள்ளிச் சாவி கிடைச்சுது. அதிலே மலையாளத்தில் ஏதோ எழுதியிருந்தது. ட்ரான்ஸ்லேட் பண்ணச் சொன்னோம், அது ‘அரக்கில் லாக்கர்ஸ்’னு சொன்னாங்க. கொச்சியில் ரொம்ப பேமஸ் கம்பெனியாம் அது.”

“வாவ்! அந்தச் சாவி யாரோட லாக்கருக்குண்டானதுன்னு சுலபமாகக் கண்டுபிடிச்சுடலாமே!”

“வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க. அந்த லாக்கர் இந்த அணிமங்கலம் குடும்பத்திற்குப் பொதுவானதாம். அதற்கு ரெண்டு சாவிகள் கொடுத்திருக்காங்க. ஒண்ணு பாஸ்கர் கிட்ட இருக்கு, காமிச்சார். இன்னொன்று சதானந்தன் கிட்ட இருக்கு. அதை அவர் ஊர்லேர்ந்து கொண்டு வரவேயில்லையாம். அது சும்மா சொந்தக்காரங்க கம்பெனின்னு வாங்கி வெச்ச லாக்கராம். அதிலே விலை உயர்ந்ததா ஒண்ணும் இல்லையாம்.”

“அப்போ இந்தச் சாவி ஏது?”

“கள்ளச் சாவியா இருக்கணும்னு தோணுது.”

“ஐ சீ” தன்யா பெருமூச்சு விட்டாள்.

“எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. அந்த லாக்கருக்குக் கள்ளச் சாவி பண்ண வேண்டிய அவசியம் என்ன? அதைச் செய்தது யார்? அவங்களுக்கும் ஹேமாவுக்கும் என்ன சம்பந்தம்?”

“எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சுடும் சார். எனக்குக் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுங்க.”

“அதான் கொடுத்திட்டிருக்கேனே. ஏதோ நான் ரிடையர் ஆகறதுக்குள்ள பதில் தெரிஞ்சா சரி.”

தன்யா சிரித்துவிட்டாள். “போஸ் சார், பதிலுக்குக் கிட்ட நெருங்கிட்டோம்னு நினைக்கிறேன். நாளைக்குப் பாஸ்கர் வீட்டில் சந்திக்கலாமா? எனக்குத் தெரிஞ்சதை எல்லோருக்கும் சொல்லறேன்.”

“இது புத்திசாலித்தனமான செயலான்னு தெரியல. எனிவே உங்க மேல நம்பிக்கை வெச்சு வரேன். சாயந்திரம் ஒரு நாலு மணிக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுங்க.”

“தாங்க்ஸ் சார்.” போனை அணைத்தாள் தன்யா.

“இதெல்லாம் என்ன தன்யா? யார் இந்த வாசு?” என்று கேட்டாள் தர்ஷினி.

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ போன விஷயம் என்ன ஆச்சு?”

“ம். உன்னி முகுந்தன்னு ஒருத்தர், அரக்கில் கோவிலகம் ஃபாமிலி, கடந்த பதினைந்து நாட்களாக பேர்ல்சாண்ட்ஸ் ரிசார்ட்ல தங்கியிருக்கார்.”

“இந்த உன்னி முகுந்தனைப் பத்தி பல விஷயம் பாலாஜி சொன்னான்.”

“ஆனா அவர் தங்கியிருக்கும் ரிசார்ட் பத்தி ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டானே!”

“என்ன சொல்ற நீ?”

“இந்த பேர்ல்சாண்ட்ஸ் ரிசார்ட்ல வெச்சுத் தான் நேத்து போலீஸ் விஜய்யைப் பிடிச்சிருக்காங்க” என்றாள் தர்ஷினி நிதானமாக.

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!