lifestyles News

உழைப்பால் உயர்ந்த தமிழ் இளைஞர் நவீந்திரன்!

 வறுமையின் படிக்கட்டுகளை வசமாக்கி இளமையின் உணர்வுகளைப் புறந்தள்ளி உண்மை, உழைப்பு, உறுதி என்ற மூன்றையும் முன்னிறுத்தி மலேசியாவின் இளம் தொழில் அதிபர் என்ற விருதை வென்றிருக்கிறார் திரு. நவீந்திரன் சுந்தரராஜ் அவர்கள்.

செபா பிசினஸ் அவார்ட்ஸ்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மிக உயர்ந்த ஐந்து நட்சத்திர விடுதியான செராட்டன் ஹோட்டலில் இந்த விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. ‘செபா பிசினஸ் அவார்ட்ஸ்’ என்ற பெயரில் இளம் தொழில் அதிபர்களைத் தேர்வு செய்து அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. யயாசான் உஷாவான் மலேசியா என்ற அமைப்பின் சேர்மன் நித்தேஷ் மலானி அவர்கள் இந்த விருதை வழங்கி சிறப்புச் செய்திருக்கிறார். இந்த சிறப்பான விருதைப் பெற்று மலேசியாவின் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் ‘நவீன் குரூப் ஈவண்ட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீந்திரன் அவர்கள்.




இளமையில் வறுமை: நவீந்திரன் அவர்களின் பிள்ளைப் பருவம் இன்னல்கள் சூழ்ந்த இருண்ட காலம். சுமார் பத்து வயதாக இருக்கின்ற பொழுது ஒரு விபத்தில் தந்தையைப் பறி கொடுத்தார். மகனின் எதிர்காலம் ஒன்றையே மனதில் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பிள்ளைக்காக அர்ப்பணித்தார் நவீந்திரனின் தாயார் அமுதாதேவி.

தாத்தா பாட்டி: தாத்தா பெர்னாட்ஷாவும் பாட்டி இந்திராவும் பாசத்தையும் பண்பையும் ஊட்டி வளர்த்தார்கள். தாத்தா, பாட்டி, தாயாரின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்த நவீந்திரன் கம்போங் பாண்டான் சீனப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கினார். தாத்தா கார் கழுவும் வேலை செய்தார். பாட்டியும் தாயாரும் ஹவுஸ் கீப்பிங் என்று சொல்லக்கூடிய வீடு சுத்தம் பண்ணும் வேலை பார்த்தார்கள்.

படிப்பும் வேலையும்: மலேசியாவில் ஒரு வாரம் காலை நேரப் பள்ளி, மறுவாரம் மாலை நேரப் பள்ளியாக இருக்கும். மாலை நேரப் பள்ளியாக இருக்கும் காலகட்டத்தில் தாத்தாவோடு காலை நேரத்தில் நவீந்திரன் கார் கழுவச் செல்வார். அதோடு ஆபீஸ் சுத்தம் பண்ணும் பணியிலும் ஈடுபடுவார்கள்.




அன்றே சொன்ன நவீன்: குப்பைகளை எடுத்துப் போடுவது, வேக்யூம் பண்ணுவது, கழிவறைகளைக் கழுவி சுத்தம் செய்வது போன்ற வேலை செய்து அதன் மூலமாக உபரி வருமானம் பெறுவார்கள். ‘ஏபிஎஸ் பவுலிங்’ என்ற நிறுவனத்தின் மேலாளர் சூசன் என்ற பெண் அதிகாரி நவீனைப் பாராட்டி ஊக்கம் கொடுப்பார். “பெர்னாட்… உன்னுடைய பேரன் ஒரு காலத்தில் பெரிய முதலாளியாக வருவான். கண்டிப்பாக நடக்கும்” என்று அப்போதே அவர் நவீன் தாத்தாவிடம் உறுதியாகக் கூறினார். அன்று அவர் சொன்ன சத்திய வார்த்தை இன்று நிறம் மாறாமல் பலித்திருக்கிறது.

பட்டப்படிப்பு: பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் நவீன் சிரம்பான் நகரில் உள்ள டேப் கல்லூரியில் ‘ஏர்கிராஃப்ட் மெயிண்டனிங் இன்ஜினியரிங்’ பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கும் சிறப்பாக தேர்ச்சி பெற்று மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களின் கையால் பட்டம் பெற்றார். பின்னர் ஏர் ஆசியா விமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற தணியாத ஆசை அவர் உள்ளத்தில் தணலாகக் கொதித்தது.

தொழிலதிபர் நவீன்: அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டில் ‘நவீன் குரூப் ஈவண்ட்’ என்ற நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினார். நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைப்பது, மேடை அலங்காரம் செய்வது, நாற்காலி மேசைகளைச் சப்ளை செய்வது போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்தார். உழைப்பால் உயர்ந்தவர்: தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். சீன மொழியை அழகாகவும் நேர்த்தியாகவும் பேசுகின்ற ஆற்றல்மிக்க நவீனின் கால நேரம் பார்க்காத கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் அரசியல் பிரமுகர்களையும் பெரும் தொழிலதிபர்களையும் கவர்ந்து இழுத்தது. அதனால் தன்னுடைய தொழிலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் உபகரணங்களையும் சொந்தமாக வாங்கிச் சேர்த்தார்.

அலங்கார மேடைகள்: இன்று மலாய், சீன, இந்திய தொழிலதிபர்களும் அரசியல் பிரமுகர்களும் நவீனுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அரசாங்க விழாக்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சுமார் 60,000 பேர் அமரக்கூடிய அளவிற்கு பந்தல் அமைக்கும் ஆற்றலோடு நவீன் குரூப் ஈவண்ட் வளர்ந்திருக்கிறது. பொருட்களைச் சேமித்து வைப்பதற்காக ஒரு ஏக்கர் அளவில் குடோன் அமைத்திருக்கிறார். உள்நாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என சுமார் 30 பேர் இவர் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.




வறுமையை ஜெயித்த நவீன்: இந்தோனேசியப் பெண்கள் 5 பேர் குடோனில் தங்கி பொருட்கள் பராமரிப்புப் பணி செய்து வருகிறார்கள். பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவும் 10 லாரிகள் இயங்குகின்றன. ஆரம்பத்தில் 300 வெள்ளி வாடகை வீட்டில் குடியிருந்தார்கள். 2001 ஆம் ஆண்டு 46 ஆயிரம் வெள்ளி விலையில் சிறிய வீட்டை வாங்கினார்கள். இன்று நீச்சல் குளத்தோடு கூடிய மூன்று பங்களா வீடுகளுக்குச் சொந்தக்காரராக உயர்ந்திருக்கிறார்.

முதன்முதலாக வாங்கிய சிறிய வீட்டையும் சிறிய காரையும் விற்காமல் பாதுகாப்போடு பராமரித்து வருகிறார். சீன நண்பர்கள் அதிகமாக இருந்தாலும் வாய்ப்பு வசதிகள் அதிகரித்தாலும் தேவையில்லாத பழக்கங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்ற மாணவர்களுக்கும் இல்லாத இயலாதவர்களுக்கும் உதவி செய்து சமுதாயப் பணிகளையும் மேற்கொள்கிறார்.

சாதனையாளர் விருது: அன்பு, பண்பு, பாசம், பரிவு, உழைப்பு, உறுதி, உண்மை ஆகியவற்றை அணிகலாகக் கொண்ட நவீன் குரூப் ஈவண்ட் நிர்வாக இயக்குனர் திரு. நவீந்திரன் சுந்தரராஜ் அவர்கள் சாதனையாளர் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று விருது வழங்கிய திரு. நித்தேஷ் மலானி பாராட்டினார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!