Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-17

17

“உங்களிடம் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வேண்டும்” முகம் மலர சிரித்தபடி நின்ற சுபவாணியிடம் என்னவென்றான் ரகுநந்தன். தான் பரிசோதித்த பிரக்னென்சி கிட்டை அவன் முன் நீட்டினாள். 

” 40 நாட்கள் ஆகியிருக்கிறது” மெல்ல தன் வயிற்றை வருடிக் கொண்டாள். 

“ஓ” என்றவனின் முகத்தில் ஆராய்தல் இருந்தது. “கொஞ்சம் இரு” என்று என்றவன் உள்ளே சென்று ஒரு டைரியை எடுத்து வந்தான். “நமக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த நாட்களெல்லாம் நாம் செக்ஸ் வைத்துக் கொண்ட நாட்கள். ஒரு நாள் கூட விடாமல் எல்லாவற்றையும் குறித்து வைத்திருக்கிறேன். இப்போது உன் கருவுக்கு 40 நாட்களா? அப்படியென்றால் 40 நாட்களுக்கு முன்பு ஒன்று… இரண்டு… மூன்று…” என்று தனது டைரியில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனை நெஞ்சு வெடிக்க பார்த்து நின்றிருந்தாள். 

“ம்… சரிதான்” கணக்கு பார்த்து திருப்தியாய் நிமிர்ந்தான். “ஓகே வாழ்த்துக்கள், என்னையெல்லாம் எதற்கும் தொந்தரவு செய்யாதே, நீயாகவே பார்த்துக் கொள்.எனக்கு வேலை இருக்கும்” போய்விட்டான்.

 இரண்டு நாட்கள் ஒரு மாதிரி யோசனையுடனே நடமாடிக் கொண்டிருந்தவன் மூன்றாவது நாள் அலுவலகத்தில் இருந்து பாதியில் திரும்பி பரபரப்புடன் வந்தான் “ஏய் எனக்கு நினைவு வந்துவிட்டது, அன்று உங்கள் ஊரில் இருந்து ஒருவன் வந்தானே பெயர் கூட ஏதோ சேட்டோ சேக்கோ..” 

சுபவாணி யோசித்து நினைவுபடுத்தி “அபிஷேக்” என்றாள்.

 “அவனேதான். அவன் அன்றைக்கு தானே வந்தான்…” ரகுநந்தனின் கேள்வியின் அர்த்தம் புரிந்து அஅதிர்ந்தாள்.

” ஏங்க அவன் அப்போதுதான் நீங்கள் ஆபீசிலிருந்து வருவதற்கு ஐந்து நிமிடம் முன்புதான் அம்மா அங்கிருந்து கொடுத்து விட்ட தின்பண்டங்களை கொடுத்துப் போக வந்திருந்தான். எங்கள் தெரு பையன். என்னைவிட ஐந்து வருடங்கள் இளையவன்” மனம் வெறுத்து விளக்கினாள்.

“இளையவனென்றாலும் அவனும் ஆண் பிள்ளைதானே? ஐந்து நிமிடங்கள் முன்பு தான் வந்தான் என்றால் ஆதாரம் வைத்திருக்கிறாயா? ம்கூம்  இது சரிவராது,நாம் இந்த கர்ப்பத்தை கலைத்து விடலாம்” என்றான் எளிதாக.

 சுபவாணி அனிச்சையாக தன் வயிற்றை மூடிக்கொண்டாள்.” மாட்டேன்” அலறினாள்.

” இங்கே பார் சுபா,என் மனதில் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அது சரியோ தவறோ காலம் முழுவதும் அந்த உறுத்தலுடன் இருக்க முடியாது. நாளை பிறக்கப் போகும் பிள்ளை என்னுடையதா அவனுடையதா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டால்…?” 

சுபவாணி “ஐயோ…” என்று காதுகளை மூடிக்கொண்டு கதறினாள்.

“வெறும் பேச்சைக் கேட்கவே உனக்கு இப்படி இருக்கிறதே, அந்த சந்தேகம் இருந்தால்… எனக்கு எப்படி இருக்கும்? வா கிளம்பு உடனே அபார்ட் பண்ணிக்கொண்டு வந்துவிடலாம். அடுத்த மாதமே இன்னொரு குழந்தையை உருவாக்கிக் கொண்டால் ஆயிற்று”

 சுபவாணி நிர்தாட்சன்யமாக மறுத்து விட்டாள்.”போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணுவேன்” மிரட்டவும் செய்தாள்.

 அவன் சில நாட்கள் ஒரு மாதிரி யோசனையுடனே நடமாடிக் கொண்டிருந்தான். அன்று ஆபீஸிலிருந்து வரும்போது “ப்ரஸ் ஜூஸ் வாங்கி கொண்டு வந்திருக்கிறேன். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லது.குடி ” புன்னகையுடன் கூறினான்.

 சுபவாணி முகம் மலர்ந்தாள். அவர் மாறிவிட்டார்…இந்தக் குழந்தை அவரை மாற்றி விட்டது என நம்பினாள். சந்தோஷத்துடன் ஜூசை ஊற்றி குடித்தாள். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் வயிற்றுக்குள் பிரதயம் உண்டானது. வயிற்றை பிடித்துக் கொண்டு கதறினாள். “என்ன செய்தீர்கள்?”

” நீயாக ஹாஸ்பிடல் வந்திருந்தால் இந்த வலி இல்லாமல் போயிருக்கும்.எல்லாம்  உன் பிடிவாதத்தால் நீயே இழுத்துக் கொண்டதுதான். கொஞ்ச நேரம் பொறு எல்லாம் ஒரேடியாக கரைந்து போகட்டும்” வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறியவளை சோபாவில் அமர்ந்து கொண்டு நிதானமாக பார்த்திருந்தான்.




 சுபவாணி வலி பொறுக்க முடியாமல் தரையில் விழுந்து உருண்டு கதறினாள். திட்டுத் திட்டாக ரத்தம் அவள் புடவையை நனைத்து தரை முழுவதும் பரவியது. போட்டிருந்த வீட்டு கதவு தாழ்ப்பாளை பெயர்த்து தள்ளியபடி உள்ளே ஓடி வந்த இரண்டு ஷூ கால்களை பார்த்தபடி நினைவிழந்தாள். அப்பார்ட்மெண்ட் முழுவதும் அங்கே கூடியது.

அன்றைய வலியை இன்றும் அனுபவித்த சுபவாணி வயிற்றை இரு கைகளாலும் இறுக கட்டி தனக்குள் குறுகிக் கொண்டு சத்தமாக கதறினாள். அருகில் அமர்ந்திருந்த ரியோ அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். “என் குழந்தை அலெக்ஸ்,ஐம்பது நாட்கள் நான் பார்த்துப் பார்த்து வயிற்றுக்குள் வளர்த்து வந்த என் உயிர்.என் கண் முன்னாலேயே ரத்தமும் சதையுமாக கரைந்து போனதை பார்த்தேன். அந்த குழந்தைக்கு வலித்திருக்கும்தானே? இப்படி என்னை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே அம்மா என்று கதறி இருக்கும் தானே?”

” வேண்டாம் வாணி, அழாதே ப்ளீஸ் மீண்டு வா” ரியோவின் குரல் கரகரக்க  சுபவாணியை இறுக்கி தனக்குள் புதைத்துக் கொண்டான். 

 சிறிது நேரம் அவன் மார்பிலேயே கிடந்து அழுது

ஓய்ந்தவள் அண்ணாந்து பார்க்க ரியோவின் கண்களும் கண்ணீரை பொழிந்து கொண்டிருந்தன. தன்னிச்சையாய் கையுயர்த்தி அவன் கண்ணீரை துடைத்தாள்.

” அக்கம் பக்கத்தினர் என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர்.என் அம்மா அப்பா வந்தனர்.

 தற்செயலாக நடந்த கருச்சிதைவு என்று தைரியமாக சொன்னான் அவன்.நான் அவர்களிடம் திருமணம் முடிந்ததிலிருந்து நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். கொதித்தவர்கள் என்னை தங்களுடன் அழைத்து சென்று விட்டனர். விவாகரத்திற்கு அப்ளை செய்தோம். விவாகரத்து தரமாட்டேன் என்று தகராறு செய்தான். அந்த அப்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல பயந்தனர்.கோர்ட் வளாகத்தில் வைத்தே என்னிடம் அராஜகமாக நடந்து கொண்டான்.அதனை எங்கள் வக்கீல் வீடியோ எடுத்து ஜட்ஜிடம் ஒப்படைக்க உடனே எங்களுக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. நீ எப்படி நிம்மதியாக வாழ்கிறாய் என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டுவிட்டு போனான். பிறகு எங்கள் உறவினர்களின் தொல்லை தாங்க முடியாமல் எல்லோர் கண்ணில் இருந்தும் கொஞ்ச நாட்கள் மறைந்திருக்க படிப்பை சாக்கிட்டு இதோ இங்கே இவ்வளவு தூரத்தில் வந்து சேர்ந்தேன்”




 கொடுமையான தன் முன் வாழ்க்கை கதையை சொல்லி முடித்தால் சுபவாணி “”நான் திருமணம் முடிக்காத கன்னிப்பெண் இல்லை அலெக்ஸ். திருமணம் முடிந்து எல்லாம்… தாய்மை வரை  பார்த்தவள். என்னிடம் காதல் சொல்வது நியாயமே இல்லை”

 தன் மார்பிலிருந்து அவளைப் பிரித்து அவள் முகத்தை கைகளில் ஏந்தினான் “வாணி நீ…” பேசத் தொடங்கும் போது பின்னால் தன்வீரின் உற்சாக குரல் கேட்டது.” ரியோ  ஒரு நிமிடம் இங்கே வாங்களேன்” வாசல் படியில் நின்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் தன்வீர்.

 “எங்கள் இருவரின் அம்மா அப்பா வந்திருக்கிறார்கள்.நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” உணர்ச்சிவசப்பட்டதில் அவன் குரல் நடுங்கியது.

“அனன்யா தன்வீர் வாழ்வில் இது முக்கியமான கட்டம்.நம் விஷயத்தை பிறகு பேசிக் கொள்ளலாம் வாணி எழுந்து வா” ரியோ எழுந்து நடக்க அவ்வளவு நேரம் அவனுடைய ஆதரவான கத கதப்பில் இருந்தவளுக்கு காய்ச்சல் கண்டது போல்  உடல் நடுங்க துவங்கியது.

 இரண்டெட்டு எடுத்து வைத்தவன் திரும்பி பார்த்து அவள் நிலைமையை உணர்ந்து கொண்டு வேகமாக வந்து அவளை அணைத்து மீண்டும் தன் உடல் கதகதப்பிற்குள் கொண்டு வந்தான். “வாணி நான் இருக்கிறேன் வா” பிடியை விலக்காமல் அழைத்துப் போனான்.

 “இரண்டு வருடங்களாக என்னை திரும்பி கூட பார்க்காமல் இருந்து விட்டீர்கள் தானே? இப்போது உங்கள் பேரப் பிள்ளையை பார்ப்பதற்கு மட்டும் வருவீர்களா?” என்று அனன்யா தன் பெற்றோருடன் அழுகையுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் திரும்பத் திரும்ப சாரி கேட்டுக் கொண்டிருந்தனர்.

 அந்த நிலையிலும் கட்டிலின் மறுபக்கம் ரியோவின் கை வளைவில் நின்றிருந்த சுபவாணியை பார்த்ததும் கண்ணீருக்கிடையிலும் அனன்யாவின் கண்கள் மின்னியது. கட்டை விரலில் தம்சப் காட்டி நண்பனுக்கு தன் வாழ்த்தை தெரிவித்தாளவள்.




What’s your Reaction?
+1
40
+1
28
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!