Serial Stories

சதி வளையம்-11

11. சதானந்தனின் சந்தேகங்கள்

“சரி, பின்னே காணாம்” என்றார் சதானந்தன்.

“இத்துடன் சபை கலையலாம்” என்று முணுமுணுத்தான் தர்மா. போஸுக்கும் திலீபுக்கும் சிரிப்புப் பீறிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

மெதுவாக எல்லோரும் வெளியேற ஆரம்பித்தார்கள்.

“மிஸ் தன்யா, நீ இரு” என்றார் சதானந்தன். தன்யா அப்படியே நின்றாள். தர்ஷினியும் அவள் அருகே வந்து நின்று கொண்டாள். வெளியேற இருந்த தர்மாவைக் கைப்பிடித்து நிறுத்தினாள் தன்யா. சதானந்தன் ஒன்றும் சொல்லவில்லை.

சில விநாடிகளுக்குப் பின் “இனி நாம பேசலாம். உட்காருங்க” என்றார் சதானந்தன். அங்கே இருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் தன்யாவும் தர்ஷினியும் அமர்ந்தார்கள். தர்மா அவன் வழக்கப்படிச் சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டான்.

“ஹைனஸ், உங்க முடிவைப் பாராட்டறேன். சுஜாதா ரைட் பர்ஸன். ஆனாலும் ஒரு சந்தேகம்” என்று ஆரம்பித்தாள் தன்யா.

“சொல்லு” என்றார் சதானந்தன்.




“விஜய் மேல உங்களுக்குக் கோபமிருக்கு, ஓகே. ஆனா அதுக்காக மட்டும் நீங்க இதைச் செய்யலை, இல்லையா? அவனைக் காப்பாத்தத்தானே இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க?”

அதிர்ச்சியடைந்த சதானந்தன் எழுந்துவிட்டார். “நீ யாரு? ஏதாவது மோகினியா? உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? வந்து … என்னல்லாம் தெரியும் உனக்கு?” என்று ஏதேதோ பேசிக் கொண்டு போனார்.

“பேசினால் தெரியற விஷயத்துக்குப் ப்ரச்னம் பார்க்கணுமா, தம்புரான்? எல்லாம் விசாரிச்சதுல தெரிஞ்சதுதான். என்னென்ன தெரியும்னு கேட்டிங்கல்ல, சொல்றோம். தர்ஷினி!” என்றாள் தன்யா.

தர்ஷினி தன் டேப்லட்டை ஆன் செய்தாள். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள். “தம்புரான்! கேரளாவில் உங்க அணிமங்கலம் கோவிலகம் ராஜ குடும்பம் பிரசித்தியானது, செல்வச் செழிப்புடன் இருப்பது. அதனால் அது பலர் கண்ணை உறுத்துது, முக்கியமா காலத்தின் கோளாறால் தங்கள் சொத்துக்களைப் பெருமளவு இழந்துட்ட வேறு பழைய ராஜவம்சக் குடும்பங்கள். அவற்றில் முக்கியமானது அரக்கில் கோவிலகம். அந்தக் குடும்பம் உங்களுக்கு ஒரு வகையில் சொந்தம்கூட. அதனால் அவங்களுக்கு உங்க குடும்ப மோதிரத்தைப் பற்றித் தெரியும். அது யாரிடம் இருக்கோ அவங்கதான் அணிமங்கலத்தின் சொத்துக்களை அடைவாங்க என்ற நம்பிக்கையும் தெரியும்.

“அரக்கில் கோவிலகத்தோட தூண்டுதலால் அந்த மோதிரத்தைத் திருட பலமுறை முயற்சிகள் நடந்தது. வெறும் அதிர்ஷ்டத்தாலும் சுஜாதா கண்கொத்திப் பாம்பாக கவனிச்சதாலேயும் வேலைக்காரங்க நேர்மையா இருந்ததாலும் அதைத் திருடும் முயற்சிகள் தோல்வியடைஞ்சது.

“முதலில் இந்தத் திருட்டு நடந்த போது நீங்க பெண்வீட்டைச் சேர்ந்த யாராவது அதைச் செஞ்சிருக்கணும்னு நினைச்சீங்க. அதனால பெண்வீட்டாரைக் கேவலமா பேசினீங்க. அது கல்யாணமே நிற்கிற நிலைக்குக் கொண்டு வந்துட்டது. எங்க விசாரணையின் போதுதான் உங்களுக்கு உங்க மகன் மோதிரத்தை எடுத்திருக்க வாயப்பு அதிகம்னு புரிஞ்சது. பிள்ளைப் பாசத்தால் அவனைக் காப்பாற்ற முயற்சி செஞ்சீங்க. ஹேமாவோட கொலை உங்க எண்ணங்களை மறுபடி புரட்டிப் போட்டது. இது சாதாரண பெட்டி தெஃப்ட் இல்லேன்னு உங்களுக்குப் புரிஞ்சது. அரக்கில் கோவிலகத்தைச் சேர்ந்தவர்களோட வேலை இதுன்னு நினைச்சீங்க. விஜய் கைக்கு அதிகாரம் கிடைக்க வேண்டாம்னு நீங்க நினைச்சதுக்கு அவன் மேல உள்ள கோபம் ஒரு சின்னக் காரணம்தான், அவனுக்கு ஆபத்து வரக் கூடாதுங்கறதுதான் முக்கியமான காரணம், இல்லையா?”

தர்ஷினி பேச்சை நிறுத்தினாள். சதானந்தன் பேசவில்லை.

ஒரு அசந்தர்ப்பமான மௌனத்திற்குப் பிறகு பெருமூச்செறிந்தார். “அரக்கில் கோவிலகம் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டார்.

“பிரஸ் கனெக்‌ஷன்ஸ்” என்றான் தர்மா.

சதானந்தன் அவன் பக்கம் திரும்பினார். நெற்றி லேசாய்ச் சுருங்கியது. பிறகு, “ஓ! பாரத புத்ரா!” என்றார்.

அவர்கள் சதானந்தனைப் பற்றி விசாரித்தது போலவே அவரும் அவர்களைப் பற்றி ஓரளவு விசாரித்திருக்கிறார் என்பது புலனானது.

தன்யா சதானந்தனை உற்றுப் பார்த்தாள். “தம்புரான்! எங்களுக்குத் தெரிஞ்சதையெல்லாம் நாங்க சொல்லிட்டோம். இனி நீங்க பேசணும். அரக்கில் கோவிலகத்திலேர்ந்து யாராவது இதைச் செய்திருப்பாங்கன்னு நீங்க நம்பறீங்களா? அவங்க கொலை வரைக்கும் போகக் கூடியவங்க தானா?” என்று கேட்டாள்.

சதானந்தன் சோகையாய்ச் சிரித்தார். “பலகோடிகள் மதிப்புள்ள சொத்து உள்ளதும்மா அணிமங்கலம். அதை ஆளணும்னா கொலைபாதகம் கூடச் செய்வாங்க அரக்கிலைச் சேர்ந்தவங்க. வந்து… பல பரம்பரையா குடும்பச் சண்டை வேற…” என்று இழுத்தார்.

தன்யா புன்னகைத்தாள். “சரி சரி. ஏதோ மோகன்லால் சார் படம் பார்க்கிற மாதிரி இருக்கு. அது போகட்டும். அரக்கில் கோவிலகத்துக்காரங்க எப்படி உள்ளே வந்து இந்த மோதிரத்தைத் திருட முடியும்? அதோட பாஸ்கர் அதை டிரஸ்ஸிங் டேபிள் மேல வைப்பார்னு அவங்களுக்கு ஜோசியமா தெரியும்?”

“அவங்க நேரடியா வந்தாங்கன்னு நான் எப்ப சொன்னேன்? உள்வட்டத்தில் இருக்கற ஒருத்தரை அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க, அவ்வளவு தான்.”

“யாரைச் சொல்றீங்க?”




“யாரைன்னு சொல்லறது? கமலைக் கூடச் சந்தேகப்படலாம். ஆனா அவர் வீட்டு மாப்பிள்ளையாச்சே! சத்தியத்தில் நான் சந்தேகப்படறது…”

“அய்யாக்கண்ணு” – அழுத்தமாய்ச் சொன்னாள் தன்யா

“ஆமாம். ஹேமாவோட கொலையை அப்போதான் புரிஞ்சிக்க முடியுது.”

“ம்ம்ம்…” சற்று யோசித்தாள் தன்யா. “யுவர் ஹைனஸ், அய்யாக்கண்ணு, ஹேமா ரெண்டு பேரும் எவ்வளவு நேர்மையானவங்கன்னு பாஸ்கர் கதை கதையாச் சொல்றார். அதோட அய்யாக்கண்ணு எடுக்கணும்னு நினைச்சிருந்தா அவனுக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைச்சிருக்கும். இப்படிக் கூட்டத்தில் ரிஸ்க் எடுப்பானா?”

“இங்க பாரு, உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ஏதோ என் சந்தேகத்தைச் சொன்னேன்.”

“ஹைனஸ், ஒரு கடைசிக் கேள்வி.”

“கேளு.”

“வேற யார் மேலாவது சந்தேகம் இருக்கா?”

“பாலாஜி” என்றார் சதானந்தன் சுருக்கமாக.

“நல்லது, வரோம்” என்று கிளம்பிவிட்டாள் தன்யா.

======================

“பாலாஜி யாரு? இது ஏதோ புது காரெக்டரா இருக்கே?”” என்றான் தர்மா வெளியில் வந்ததும். 

“எல்லாம் தெரிஞ்ச காரெக்டர் தான்” என்றாள் தன்யா.

“எனக்கு ஒரே பாலாஜிதான் தெரியும். அப்படின்னா திருப்பதி சுவாமியவா சந்தேகப்படறார் மனுஷன்?”

தன்யா புன்னகைத்தவாறே போனை எடுத்தாள்.

“இன்ஸ்பெக்டர் போஸ், தன்யா ஹியர். ஒரு சின்ன உதவி வேணும். பாலாஜிங்கறவர் பத்தின டீடெயில்ஸ் தெரியணும்” என்றாள்.

“பாலாஜியா? யாரு இது புது காரெக்டர்?” என்றார் எதிர்முனையில் போஸ், தர்மாவைப் போலவே.

“எல்லாம் சம்பந்தப்பட்டவங்கதான் சார்.”

“யாருன்னு சொன்னா பரவாயில்ல.”

“பாலாஜி, பத்மாவோட தம்பி” என்றாள் தன்யா.

போஸ், தர்மா இரண்டு பேரும் அதிர்ந்தார்கள்.




What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!