Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-16

16

அடுத்து ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் சுபவாணி. ரியோ வராண்டாவில் நின்று ஸ்வரூபாவிடம் அவளது உடல் நலனை விசாரிப்பதை உணர்ந்தாள். போடா உன் அக்கறை எனக்கு தேவையில்லை… தலையை சிலுப்பிக் கொண்டாள். 

உடல்நலம் சரியில்லை என்று சைலஜாவிடம் காரணம் சொல்லி இருக்க,அவர் மூன்று வேளையும் தவறாமல் உணவை இவள் அறைக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக்கி கொண்டார். சாப்பிடாமல் திருப்பி அனுப்பும் போது அறைக்கே வந்துவிடுவார். 

“இங்கே இருப்பதானால் ஒழுங்காக உணவை உண்ண வேண்டும். இல்லாவிட்டால் அறையை காலி பண்ணிக் கொண்டு போய் விடு” பக்கத்திலேயே நின்று அதிகாரம் செய்பவரை மறுக்க முடியாமல் சாப்பாட்டை விழுங்கி வைப்பாள்.  

இந்த உலகத்தில் ஆண் பெண்ணிற்கிடையே நட்பென்பதே கிடையாது போலும்.  அரை மணி நேரம் அதிகமாக இருவரும் பேசினால் உடனே காதல். மற்றவர்களை சொல்லி என்ன… இவ்வளவு படித்த இத்தனை அறிவுள்ள,உலக ஞானமுள்ள அலெக்ஸே அப்படித்தானே நினைத்து விட்டான்.

 சுபவாணியால் அழுகையை அடக்க முடியவில்லை. அது எப்படி அவன் என்னை இப்படி நினைப்பான்? எண்ணி எண்ணி மாளவில்லை அவளுக்கு. “ஏன் சுபா இப்படி உன் உடம்பை கெடுத்துக் கொள்கிறாய்?” ஸ்வரூபா கேட்க, “உனக்குத்தான் நம் கல்லூரி விஷயம் தெரியுமே..?” என்றாள்.

” நான் வேறு டிபார்ட்மெண்ட்தான். ஆனாலும் உங்கள் டிபார்ட்மெண்ட் விஷயம் காலேஜ் முழுக்க பரவி இருக்கிறது.ஆனால் ரியோ சார் எந்த பாதிப்பும் இல்லாமல் கல்லூரிக்கு வந்து கொண்டு தானே இருக்கிறார். நீயும் அப்படியே…”




” அவரைப்போல் சொரணை இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அவர் என் நம்பிக்கையை கெடுத்துவிட்டார்”

ஸ்வரூபா அவள் அருகே அமர்ந்து அன்பாய் கையை பற்றி கொண்டாள். “சுபா நம் கல்லூரியில் எல்லா பெண்களின் கனவு நாயகன் ரியோதான் தெரியுமா? அவரே உன்னை காதலிக்கும் போது நீ ஏன் அவரை ஒதுக்குகிறாய்?”

” எல்லோருக்கும் அவர் ஹீரோ என்றால், எனக்கும் அப்படியே ஆகிவிடுவாரா? அவரை நான் காதலித்துதான் தீர வேண்டுமா? எனக்கு அவர் மேல் காதல் எல்லாம் இல்லை. எத்தனையோ ஆண்களை தினமும் பார்க்கிறேன், அதில் அவரும் ஒருவர் அவ்வளவுதான்”

 “அட அப்படியா?” ஸ்வரூபா கிண்டலாக பார்க்க, “தப்பாக நினைக்காதே ரூபா. என்னால் யாரையும் காதலிக்க முடியாது. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இவரிடம் பாடம் சொல்லிக் கொடுங்கள் என்று போய் நின்றது என் தவறு.பாடம் படிக்கும்போது காதல் வருமோ இவருக்கு…?”

 “இல்லையே சுபா. உன் மேல் சாருக்கு  முன்பிருந்தே ஒரு ஐடியா இருந்திருக்கும் போலவே, நீங்கள் இருவரும் நெருங்கி பழகுவதற்கு முன்பாகவே உன்னை சாப்பிட வைக்குமாறு சப்பாத்தி எல்லாம் ஏற்பாடு செய்தது அவர்தான்”  

சுபவாணி திகைத்தாள். அனன்யா வீட்டில் ரியோவை பார்த்துவிட்டு இவள் ஓடி வந்த நாள் அது. அன்றே என்னுடைய உணவை பற்றி இவன் ஏன் கவலைப்பட வேண்டும்?

 சுபா எதுவாக இருந்தாலும் இப்படி ஒதுங்கி இருக்காமல் மனம் விட்டு ரியோ சாரிடம் பேசி விடு.உன் நிலைமையை சொல்லி விடு. அதுதான் உங்கள் இருவரின் எதிர்காலத்திற்கும் நல்லது”

 சுபவாணிக்குமே இப்போது அப்படித்தான் தோன்றியது. பேச வேண்டும் அவனிடம் எல்லாவற்றையும் தெளிவாக பேச வேண்டும்…பி…பிறகு எல்லாம் தெரிந்த பிறகு..அ…அவன்…தானே பி…பிரிந்து போய்விடுவான். 

அவள் ஒரு முடிவு  எடுத்த போது அனன்யாவிடம் இருந்து போன் வந்தது. “சுபா லேபர் பெயின் ஆரம்பித்துவிட்டது. ஹாஸ்பிடல் போய்க்கொண்டிருக்கிறேன். நீ இருந்தால் எனக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும்.வருகிறாயா?” என்றாள்.

அவளின் பயந்த சுபாவத்தை அறிந்த சுகவாணி உடனே கிளம்பி விட்டாள். ஆட்டோவில் போய் ஆஸ்பத்திரி வாசலில் இறங்கும்போது அவள் கண்ணில் பட்ட முதல் ஆள் ரியோதான். இவளை பார்த்ததும் “இரண்டாம் மாடியில் பதினெட்டாம் நம்பர் ரூம் கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் வலி வர வேண்டுமாம். வா போகலாம்” என்று இவளை அழைத்துக்கொண்டு லிப்டில் ஏறினான்.

 லிப்டில் இவர்கள் இருவர் மட்டுமே நிற்க ர்ர்ர்ரென்ற என்ற லிப்ட் சத்தத்தை தவிர இருவருக்கும் வேறு பேச்சுக்கள் இல்லை. ஒருவருக்கொருவர் முதுகை காட்டி திரும்பி நின்று கொண்டனர்.

 விழிகளில் பயம் அப்பட்டமாக தெரிய திணறலுடன் அறைக்குள் மெல்ல நடந்து கொண்டிருந்த அனன்யாவின் அருகே சென்று ஆதரவாக கைகளை பிடித்துக் கொண்டாள் சுபவாணி. அதுவரை அறைக்குள் இருந்த தன்வீர்  “ரியோ வாங்க ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் ” எனவும் வெளியே சென்றார்கள்.




” சுபா உனக்கு ரியோவின் விஷயம் தெரியுமா?” அனன்யா ஆரம்பிக்க சுகவாணி முகத்தை திருப்பிக் கொண்டாள். “அவர் விஷயம் எதுவும் எனக்கு தெரிய வேண்டியது இல்லை” 

திரும்பிய முகத்தை வலுக்கட்டாயமாக பிடித்து தன் பக்கம் திருப்பியவள் “இந்த விஷயம் உனக்கு தெரிய வேண்டியதுதான். நிச்சயம் சந்தோசப்படுவாய். ரியோ இன்னொரு சாதனை செய்துள்ளார்”

 சுபவாணியின் காதுகள் தாமாகவே விரிந்து கொண்டன. “நம் ரியோவுடைய ஜியாக்ரபிகல் குழு ஒரு புதிய பள்ளத்தாக்கை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.குலாவத் லோட்டஸ் வேலிக்கு பக்கத்தில், காட்டுக்குள் இந்த பள்ளத்தாக்கு இவ்வளவு நாட்களாக ஒளிந்து இருந்திருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் லோட்டஸ் வேலி முழுக்க தாமரைகளால் நிறைந்திருக்குமல்லவா? அதற்கு மாறாக இந்த பள்ளத்தாக்கு முழுக்க முழுக்க பாறை அடுக்குகளாக இருக்கிறது. நம் குழுவிற்கு இங்கே நிறைய வேலைகள் இருக்கும்”

 சுபவாணியின் விழிகள் விரிந்தன. ஆஹா எவ்வளவு நல்ல கண்டுபிடிப்பு! பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும், மலை உச்சிகளும், அருவிகளும், எரிமலைகளும் மனித இனத்தை, வயதை, முற்கால மனிதனின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாது இனி வரப்போகும் இயற்கை சீரழிவுகளை கண்டறியவும் உதவுபவையாயிற்றே!

ரியோ ஒரு குழுவை உண்டாக்கிக்கொண்டு புவியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவன். அவனுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்துத்தான் புத்தகங்கள் எழுதுவது. அவை நிறைய கல்லூரியில் பாடமாக வைக்கப்படுவதுடன் அரசின் ஆவணங்களிலும் பாதுகாக்கப்படும். மேலும் புவியியல் சார்பான விளக்கங்களுக்கு அரசாங்கம் ரியோவையும் நாடும். புயல், மழை பனிப்பாறைகள் சம்பந்தமான அவனுடைய ஆராய்ச்சியை கண்ட அரசு அதிகாரிகள் அவனுக்கு ஒரு பொறுப்பான பதவியை கொடுக்க முன்வந்தனர். 

ஆனால் அரசங்க அதிகாரியாக இருக்கும் தனது தந்தையின் பதவிக்கு இருக்கும் மரியாதை என்று  ரியோ அதை மறுத்திருந்தான். பிறிதொருவருக்கு கட்டுப்பட்டு தன்னால் வேலைகள் பார்க்க முடியாது,தான் சுதந்திரம் விரும்புபவன் என தெரியப்படுத்தி தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான்.

 இப்போது அவன் கண்டுபிடித்திருக்கும் இந்த பள்ளத்தாக்கில் நிறைய இயற்கை அதிசயங்கள் மனித இனத்திற்கு கிடைக்கக்கூடும். சுபவாணியின் மனம் மகிழ்ந்தது. அவள் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த அனன்யா “பார் இது உனக்கு பிடித்த விஷயம்தானே” என்றாள் கிண்டலாக.

 சுபவாணி கோபமாக பேச வாய் திறந்த போது பின் இடுப்பை பிடித்தபடி “ஆவ்” என்று அலறினாள். “ஒன்றுமில்லை மேடம், அப்படியே மெல்ல நடங்கள்” அனன்யாவை தாங்கி நடக்க வைத்த சுபவாணி வெளியே போய் நர்சை அழைக்க, விரைவிலேயே பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள்.

 அடுத்த அரைமணியில் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள்  அனன்யா. மனைவியுடன் பிரசவ அறைக்குள் உடன் இருந்த தன்வீர் மலர்ந்த முகத்துடன் குழந்தையோடு வெளியே வந்து முதலில் சுபவாணியின் கைகளில்தான் கொடுத்தான்.

“நான் குழந்தை ராசி இல்லாதவள் சார். என்னிடம் வேண்டாம்” சுபவாணி பின்னால் நகர, பின்னிருந்து அவள் தோள் பற்றி முன்னால் நகர்த்தினான் ரியோ. “குழந்தையை வாங்கு வாணி”அழுத்தமாய் அதட்டினான்.




 நடுங்கிய கரங்களுடன் பிள்ளையை வாங்கியவளின் கண்கள் தன்னையறியாமல் கண்ணீரை வழிய விட்டன. “வாணி என்ன இது? அழாதே… குழந்தையைப் பார்” ரியோ ஆதரவாக அவள் தோளணைக்க தலை திருப்பி அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

” உங்கள் இருவர் அப்பா அம்மாவிற்கும் தகவல் கொடுங்கள் தன்வீர்” சொல்லிவிட்டு சுபவாணியை ஆதரவாய் அணைத்து அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் பின்பக்கம் வந்தான் ரியோ. 

அங்கிருந்த மர பெஞ்சில் அவளை அமர வைத்தவன் “எதற்கு இப்போது அழகை?” என்றான் அன்பான அதட்டலோடு .

இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்ட சுபவாணி “என் மேல் இவ்வளவு அன்பு காட்டாதீர்கள் அலெக்ஸ். நான் எதற்கு தகுதியானவள் இல்லை. என்னைப் பற்றி முழுவதும் தெரிந்தால் நீங்கள் என்னை விட்டு தூரமாக ஓடிப் போய் விடுவீர்கள்” கேவினாள்.

 அவள் அருகிலேயே உரசினாற் போல் அமர்ந்து கொண்டான் ரியோ “சொல்லேன் உன்னை பற்றி,அப்படி ஓடிப் போகிறேனா என்று பார்க்கலாம்” 

முன்பே சொல்லி விட வேண்டும் என்ற மன உறுதியில் இருந்த சுபவாணி தனது அவல முன் வாழ்க்கையை சொல்லத் துவங்கினாள். “அக்காவின் கணவர் தனசேகர் அத்தான் எனது படிப்பு முடிந்ததும் எனக்கு ஒரு திருமண வரனை கொண்டு வந்தார். பெயர் ரகுநந்தன்…” சுபவாணியின் மனதிற்குள் கிர்ர்ர்ர் என்று அதிர்ந்தது அழைப்பு மணி ஓசை. கதவை அதிர வைத்து தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் முகமூடி அணிந்த ரகுநந்தன்…. விக்கலும் விசும்பலுமாய் தனது கதையை தொடர்ந்தாள் சுபவாணி.




What’s your Reaction?
+1
40
+1
27
+1
2
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!