யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-15 (நிறைவு)

15

சட்டென்று சூழ்ந்த இறுக்கத்தில்  எல்லோரும்  பேசாது மௌனமாக நின்றார்கள். 

“ஜானகியின் கணவர் இறந்துவிட்டாலும், சொந்தக்காரர்கள் இருப்பார்களே! அவள் வீட்டு ஆண்கள் இந்தக் கல்யாணத்திற்கு என்ன சொல்வார்களோ? ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவள் நிரல்யா. அவளைப் பெற்றவள் ஜானகி. இருவரும் ஒப்புக்கொண்டுவிட்டபோது, அதை வீட்டார்கள் மதிக்கவே செய்வார்கள். என்னைப் போலவா, பெண்கள் ஏதாவது சொன்னால் வீம்புக்கு அதை எதிர்க்க?” என்று எண்ணி நாணினார் சேகரன்.

“பொண்ணு நல்லாத்தான் இருக்கு, அஸ்வினுக்குப் பொருத்தமாத்தான் தெரியுது. இருந்தாலும் வீட்டைவிட்டு ஓடிப்போன ஒருத்தி பெத்ததாச்சே, இது வீட்டுக்கு அடங்கியிருக்குமா? இந்த ஜானகியையே பாரு, தாலியறுத்தவ மாதிரியா இருக்கா? எட்டணா பொட்டும், தலையில் ரோஜாப் பூவும், ஜம்பமா புடவைக்கட்டும்!” என்று அப்பத்தா தன்வரையில் சிந்தனையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

 “இவர்களிடம் என்ன சொல்வது? நிரல்யாவின் அப்பாவைப் பற்றி எப்படி விளக்குவது?” என்று பிரமித்து நின்றாள் ஜானகி.

இந்த ஜானகி ஏன் இப்படி விழிக்கிறாள்? ஒருவேளை கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாளோ? அதை எப்படிச் சொல்வது என்று தவிக்கிறாளோ? அப்படியெல்லாம் ஏதாவது இருந்தால், கணவனிடம் எப்படியாவது சொல்லிச் சமாளித்து நிரல்யாவை அஸ்வினுக்குக் கட்டிவைத்துவிட வேண்டும். ஜானகிமீது எனக்கு இன்னமும் கோபம் இருக்கிறது, அதற்காக அவள் எனக்குத் தோழி என்பது இல்லாமல் போய்விடுமா? பழகிய பாசம் விட்டுவிடுமா?” கண்களில் கசிந்த நீருடன் உறுதியாக நின்றாள் வித்யாவதி.

“சொல்லலாம்னா சொல்லு ஜானகி! நிரல்யாவின் அப்பாவுக்கு என்னாச்சு?”

வித்யாவதி  ஆதுரமாய் கையைப் பிடித்துக் கொண்டாள். 

ஆழ்ந்த பெருமூச்சுவிட்ட ஜானகி அமைதியாய் அவளை ஏறிட்டாள். “விதி, வித்யா. கர்ம வினை!” என்றாள்.

“என்ன கர்மவினை? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு! இன்னமும்கூட நான் உன்னை நம்பறேன். தூய்மையான கல்விக்காக இல்லறத்தைத் தூக்கி எறிஞ்ச உன்னைக் கண்ணியம் தவற அந்தக் கல்வியே விட்டிருக்காதுன்னு உறுதியா நம்பறேன்! உண்மையைச் சொல்லு ஜானகி! நிரல்யாவோட அப்பா யாரு? உயிரோட இருக்காரா, இல்லையா?” என்று கேட்டாள் வித்யாவதி.

“உயிரோட இல்லை” என்றாள் ஜானகி பெருமூச்சுடன்.

“அப்போ எதுக்கு சுமங்கலி மாதிரி இந்த டம்ப வேஷம்?” என்று கேட்டார்கள் அப்பத்தா கோபமாக.

அதைக் கண்டு கொள்ளாதவளாக

“நாங்க இத்தனை பேர் கேட்டுக்கிட்டே இருக்கோம், மௌனமா இருந்தா என்ன அர்த்தம் ஜானகி? பேசு! உண்மையைச் சொல்லு!” உத்தரவிடுவதுபோல் சொன்னாள் வித்யா.

ஜானகியின் ஈரப்பசையற்ற கண்கள் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்ப்பவை போன்று எங்கோ வெறித்தன. 

==========




என்னைக் கூட்டிக்கிட்டுப் போனது ரேணுகா டீச்சர்னு உனக்குத் தெரியும். அவங்களுக்கு கல்லூரிப் படிப்பை முடிச்ச மகள் இருந்தா. அவளை நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு அவள் விருப்பப்பட்ட இடத்திலேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க டீச்சர். நான் கூடத் திருமண விழாவுக்குப் போயிருந்தேன்.

நான் மேல்படிப்புப் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு மேல டீச்சரைக் கஷ்டப்படுத்த மனம் இல்லை. கவர்மெண்ட் கிராண்ட் கிடைக்க முயற்சி பண்ணிட்டிருந்தேன். அதோடு, நான் டிகிரியில் கோல்ட் மெடல் வாங்கியதால், ப்ரைவேட்டா என் மேல்படிப்பை ஸ்பான்ஸர் பண்ண விரும்பிய ஒரு பெரிய மனிதரைப் போய்ப் பார்த்தேன். அவர் மகன் மோகனும் என்னோடு கல்லூரியில் படித்தவர்தான். அப்போதுதான் பன்னாட்டு அரசியலில் விருப்பம் வந்து அதில் ஈடுபட ஆரம்பித்திருந்தார். மிகவும் நேர்மையாளர், திறமைசாலி என்று பெயர் வாங்கியிருந்தார். அவர் எதிர்காலம் பிரகாசமானது என்று எல்லா பத்திரிகைகளும் பேசின.

வித்யா! அவர் என்னை விரும்பினார். நானும் விரும்பினேன். ஆனால் என் லட்சியத்தை விட்டுக்கொடுக்க முடியாது, படிப்பு முடிந்து, உத்யோகத்தில் அமர்ந்து, குறிப்பிடும்படியாக ஏதேனும் சாதித்த அப்புறம்தான் திருமணம் என்று அவரிடம் நிச்சயமாகச் சொல்லிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். 

ஒருநாள் என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்தார். என் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து “நான் வெளியுறவு அமைச்சகத்தில் சேர டெல்லி போகிறேன். உன் இஷ்டப்படி நீ எப்போது கல்யாணத்திற்குச் சம்மதிக்கிறாயோ, அப்போது ஊரறிய நம் கல்யாணம். ஆனால் இந்த மோதிரத்தைப் போடும் இந்த விநாடி என்னைப் பொருத்தவரை நம் கல்யாணம் முடிந்துவிட்டது. நீ இப்போது மிஸஸ் மோகன்” என்று அன்புடன் சொன்னார். பிறகு டெல்லி சென்றுவிட்டார். தன் வேலையில் மிகவும் சின்சியராக இருந்தார். ஒவ்வொரு அரசிலும் இவருடைய முக்கியத்துவம் உணரப்பட்டது. 

நாங்கள் எப்போதாவது ஹாஸ்டலிலோ, அவர் வீட்டிலோ சிறிது நேரம் சந்திப்போம். அப்போதெல்லாம் என்னோடு மிகக் கண்ணியமாகப் பழகினார். அதெல்லாம் ஆரம்ப காலங்களில். பிறகு அவர் வேலை அவரை வெளிநாடுகளிலேயே தங்க வைத்துவிட்டது. நானும் என் படிப்பிலேயே முழுக் கவனம் செலுத்தினேன்.

என் மேல்படிப்பு முடிந்து, நான் படித்த கல்லூரியிலேயே டெமான்ஸ்ட்ரேட்டராக வேலை செய்துகொண்டே எம் ஃபில் படிக்கத் தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான், என்னைக் கட்டாயத் திருமணத்திலிருந்து காப்பாற்றி அன்புடன் என்னை வளர்த்துப் படிக்கவைத்த ரேணுகா டீச்சரின் வாழ்வில் இருந்த பெரும் சோகம் எனக்குத் தெரியவந்தது.

திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகியும் டீச்சரின் மகளுக்குக் குழந்தைகள் இல்லை. பலமுறை கருவுற்றும் கரு தங்காமல் கலைந்து போனது. அவள் கருப்பை பலவீனமாக இருந்தது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதைச் சொல்லி அழுவார் டீச்சர். நான் அவருக்கு மிகவும் நெருங்கியவள் என்பதாலேயே இதைச் சொல்கிறார் என்று நினைத்திருந்த என் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. “மாதா-பிதா செய்தது, மக்களுக்கு. உன்னை உன் அம்மா-அப்பா கிட்டருந்து பிரித்த பாவம்தான் இன்றைக்கு என் மகள் தலையில் வந்து விடிஞ்சிருக்கு” என்று என்னிடம் சொல்லிப் புலம்பினார்கள். 

“உன்னைப் படிக்க வெக்கறேன்னு பாவத்தைக் கட்டிக்கிட்டேனே! பெத்த தாய்-தகப்பனைத் தலைகுனிய வெச்சுட்டு உன்னை ஓடிவரச் சொன்னேனே! அதான் இன்னிக்கு என் பொண்ணுக்காக நான் தலை குனிஞ்சு நிக்கறேன்” – இப்படி என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏதேதோ புலம்ப ஆரம்பித்தார்கள்.

என்னையும் குற்ற உணர்ச்சி குத்தியது. அம்மா-அப்பா அன்றைக்கு எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்! எவ்வளவு கூனிக் குறுகி நின்றிருப்பார்கள்! அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள், தங்கள் துக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்களா என்றுகூட நான் பார்க்கவில்லை! எவ்வளவு பெரிய பாவி நான்!




===========

“கவலைப்படாதே, ஜானகி! உன் அம்மா-அப்பா நல்லாத்தான் இருக்காங்க! எனக்கு மனசு கேட்கலை. கல்யாணம் ஆகி நான் முதன்முதலா பிறந்தவீட்டுக்கு வந்தப்போ அவங்களையும் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்தேன். முதலில் என் முகத்தையே பார்க்க மாட்டேன்னு கோபமா இருந்தவங்க, அப்புறம் என் மேல் எந்தத் தவறும் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இன்றைக்கும் என்னை அவங்க பொண்ணு மாதிரி நடத்தறாங்க” என்றாள் வித்யாவதி.

ஜானகி நன்றி பொங்க அவளைப் பார்த்தாள். 

“டீச்சரின் மகளுடைய டாக்டர் ஒரு யோசனை சொன்னார். அவளுடைய கருப்பை பலவீனமாய் இருப்பதால், யாரேனும் வாடகைத்தாயாக இருந்து குழந்தையைத் தாங்கிப் பெற்றுக் கொடுத்தால் அவளுக்குக் குழந்தை கிடைக்கும் என்பதே அது. இப்போது இது சர்வசாதாரணம். அப்போது புரட்சிகரமான புதிய கருத்து.

நான் டீச்சருக்காக ஒரு பிராயச்சித்தம் செய்ய முடிவு செஞ்சேன். என்னால்தான், எனக்கு உதவியதால்தான் அவர்கள் மகளுக்குக் குழந்தை தங்கவில்லை என்று அவர்கள் நம்பினார்கள். அவளுக்கு நானே வாடகைத்தாயாக இருந்து குழந்தையைப் பெற்றுக் கொடுக்க முடிவு செய்தேன். 

இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்று டீச்சர் மகள் விரும்பினாள். நான் என் வேலையை ராஜிநாமா செய்தேன். ஒரே வீட்டில் நாங்கள் இருவரும் தங்கிக் கொண்டோம். வெளியே கர்ப்பமாய் இருப்பதாக அவள் நடிக்க, அவள் குழந்தையை நான் தாங்கினேன்.

குழந்தை பிறந்தது. உங்களுக்கு இதற்குள் தெரிந்திருக்கும், அதுதான் நிரல்யா! அவளை அவள் தாயிடம் ஒப்படைத்து, நான் விலகினேன். என் வேலையைத் திரும்ப ஒப்புக்கொண்டு, படிப்பையும் தொடர ஆரம்பித்தேன்.

சிலகாலம் கழிந்த பிறகுதான் தெரிந்தது, தான் பெறாத குழந்தை தன்னுடையது என்று ஏற்றுக்கொள்ள டீச்சர் மகளால் முடியவில்லை. அடிக்கடி அதனைத் தன் அம்மாவிடம் விட்டுவிட்டுப் போய்விடுவாள்.

அப்படி ஒருமுறை அவள் விட்டுப் போயிருந்தபோதுதான், ஒரு பயங்கர பஸ் விபத்து நடந்து, அதில் பிரயாணம் செய்துகொண்டிருந்த டீச்சர் மகளும் மருமகனும் கோர மரணமடைந்தார்கள்.

டீச்சர் கதறி அழுதார்கள். மனம் முழுவதும் உடைந்த அவர்கள், குழந்தையை என்னிடமே ஒப்படைத்துவிட்டு, ரிஷீகேசத்தில் இருக்கும் சிவானந்தா ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்கள்.

“இவ்வளவு அன்பு வெச்சிருக்கற நீ ஏன் மோகனைக் கல்யாணம் செய்துக்கல ஜானகி?” என்று வருத்தத்துடன் கேட்டாள் வித்யா.

சோகமாய்ச் சிரித்தாள் ஜானகி. “ஓ! பண்ணிட்டிருக்கலாமே! கையில் குழந்தையோட நான் மணமகளா நின்னா, ரொம்ப அழகா இருந்திருக்கும். என்னை விடு, அவருக்கு எவ்வளவு அவமானம்! இந்தத் தேசத்தின் மாண்பை உலகம் முழுவதும் உணர்த்த வேண்டிய வேலையில் இருக்கார் அவர்! அதான் நானே அவர் எவ்வளவோ கேட்டும் கல்யாணம் செய்துக்க மறுத்துட்டேன்! அவரும் இன்றைக்குவரை கல்யாணம் செஞ்சுக்காம, தேசமே தன் குடும்பம், தேசசேவையே தன் உயிர்னு இருக்கார்! ஏன், டீச்சர்கூட மோகனைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டுக் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துடும்படி சொன்னாங்க…”

“ஏம்மா செய்யலை நீ? எனக்காக உன் வாழ்க்கையையே அழிச்சுக்கிட்டியே” என்று கண்ணீருடன் கேட்டாள் நிரல்யா.

“என்னடா இப்படிக் கேட்கற? நீ என் குழந்தைடா! உன்னைவிட்டு எனக்கு ஏதுடா வாழ்க்கை? அப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சாலும் அது எனக்கு நரகமாத்தான் இருந்திருக்கும்!  அதோடு, என் அம்மா-அப்பா அன்போட எனக்கு ஒரு வாழ்க்கை தேடி வெச்சாங்க! பெரிய புரட்சி செய்யறதா நினைச்சு அதைத் திரஸ்காரம் பண்ணிட்டு ஓடினேன். இப்போ நானா திருமண வாழ்க்கையைத் தேடிக்கிட்டா, அது அவங்களுக்குச் செய்கிற பெரிய துரோகமா இருக்கும்னு எனக்குத் தோணிச்சு. உன்னை நல்லா வளர்த்து, நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்து என் பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பினேன்…” விசும்பி அழுதாள் ஜானகி.




“போதும்மா, நீ அழாதே! உன் ஆசைப்படி தான் இனி நான் எல்லாமே செய்வேன். அஸ்வின் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சரி, இல்லேன்னா, நீயா பார்த்து எந்தக் கழுதையைக் கட்டிக்கச் சொன்னாலும் கட்டிக்கறேன்” என்றாள் நிரல்யா கண்ணீருடன்.

“உதைப்பேன். என் பிள்ளையைக் கழுதைன்னு சொல்றியா?” என்றாள் வித்யா விளையாட்டாக.

“ஐயையோ அத்தை! அதுக்குள்ள மாமியார் மிரட்டல் வந்துடுச்சே!” என்றாள் நிரல்யா.

“வித்யா! அப்போ இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கிறியா? என்னை நம்பறியா வித்யா?” என்று அழுகையுடன் கேட்டாள் ஜானகி.

“நீ எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே நான் உன்னை நம்பிட்டேனே! இப்போ நம்ப மாட்டேனா? அதோட, இந்த மகாலட்சுமியை வேண்டான்னு தள்ள எனக்கு மனசு வரலியே! உன்மேல எனக்கு இருக்கற கோபத்தை எல்லாம் சம்பந்திச் சண்டையா போட்டுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் வித்யா சிரிப்புடன்.

“நானும் ஒத்துக்கறேன்மா” என்றார் சேகரன்.

“நான் இன்னும் ஒத்துக்கலை” என்றான் அஸ்வின். எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

“ஆமா, அம்மா! நான் ஒத்துக்கணும்னா, கல்யாணத்துக்கு என் மாமா, மோகன், வரணும். நாங்க ரெண்டுபேரும் உங்க ரெண்டுபேர் காலிலும் விழணும்! அவரைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருக்கேன், இன்றைக்கு அவர் ஸ்டெர்லிங் காரக்டர் தெரிஞ்சு என் கண்ணில் தண்ணி வந்துடுச்சு! என்னைப் பொறுத்தவரை, நீங்க நிரல்யாவோட அம்மான்னா, அவர்தான் அவளோட அப்பா! உங்க ரெண்டுபேரோட மருமகன்னு சொல்லிக்க நான் ரொம்பப் பெருமைப்படறேன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டான் அஸ்வின்.

“இப்ப சொல்வியா அஸ்வின் அந்த ஐ லவ் யூ?” ஜானகி குறும்புடன் கேட்க..

ஒருபக்கம் வித்யாவதியையும்  மறுபக்கம் ஜானகியையும் பிடித்துக் கொண்ட அஸ்வின் 

“ஐ லவ் யூ மாம்ஸ்!” என்றான். 

“சீக்கிரமே எங்க குடும்ப நண்பரான சீனியர்ட்டயும் சொல்லிட்டு கல்யாணத்தை வச்சுடலாம்!”  என்ற ஜானகிக்குப் பக்கவாத்தியமாய் ஊரில் கட்டி இருந்த மைக்செட் பாடியது.

“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்

பேரு விளங்க இங்கே வாழணும்

சோலவனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்

காலமுழுக்க சிந்து பாடணும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில 

பொண்ணுபுள்ள நிக்கையில

கண்ணுபடும் மொத்தத்தில

கட்டழக அம்மாடி என்ன சொல்ல!

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்

பேருவிளங்க இங்கே வாழணும்!”




What’s your Reaction?
+1
11
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!