Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-11

 11

அஸ்வின் பலவிதமான எண்ணங்கள் இதயத்தில் புரள காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். காதலைச் சொல்லி தாயிடம் இசைவு பெற்று மகிழ்ந்த கணத்தை விட. தாயின் பதின்ம வயது கனவு எதிர்பாராத கல்யாணத்தில் சிதைந்தது மனதை வதைத்தது. 

ஒன்றுமறியாத சின்னஞ்சிறு பெண்ணாக அந்த இளம் வயதின் கனவுகள் இனம்  காண முடியாத ராட்சசக் கரங்களினால் பிய்த்தெறியப் பட்டு அய்யோ …அஸ்வினுக்கு மனதைப் பிசைந்தது.

காபி குடிப்பதற்காக சாலையோரக்கடையில் நிறுத்தியபோது நிரல்யா அழைத்தாள்.

நிரல்யா…பேரைப்பார்த்ததுமே மனதுள் இதமான அலையடித்தது. அத்தனை நேரம் பாரதூரமாய் உள்ளத்தை வருத்திய துயரம் தூரமாய் நின்று தென்றலாய் வருடியது.

“ஹாய்! சொல்லுடாம்மா..”

“ஏய் அம்மா இப்போ ஓக்கே தானே? கிளம்பிட்டியா”

“ஆமாம்… அம்மாவுக்கு நம்ம விஷயத்தை சொல்லிட்டேன் “

“அச்சச்சோ.. என்ன சொன்னாங்க?”

அவளோடு விளையாட எண்ணியவன் 

“அந்த சோகத்தைத் தாங்க முடியாமல்தான் உன் அழைப்பைக்கண்டதுமே புறப்பட்டுட்டேன்”

எதிர்புறம் அமைதியாக இருந்தது.

“ஹேய்! நிரு லைன்ல இருக்கியா இல்லையா “

“ம்…சொ..சொல்லு.அம்மா …வந்து…மறு…மறுத்திட்டாங்களா”

குரல் தழதழத்தது. முயன்று தன்னைசரிக்கட்டிக் கொண்டு பேசுவது புரிந்தது.

“ம்”

“இப்போ என்ன பண்றது அச்சு”

“ஹேய்! நீ எங்கம்மா மாதிரி கூப்பிடுறே.  அம்மா என்னை அச்சுப்பான்னு தான் கூப்பிடுவாங்க”

“………..”

“சும்மா சும்மா இப்படி அமைதியாயிட்டா எனக்கெப்படி தெரியும் நீ லைன்ல இருக்கியா இல்லையான்னு?  நீ உங்கம்மா கிட்டே பேசிட்டியா “

“ம்! அம்மா  ஊருக்கு வந்திட்டாங்க என்னை கிட்னாப் பண்ணதைப் பேசும் போது நீதான் என்னை காப்பாத்தினதுன்னு சொல்லிட்டேன். அம்மா கண்டு பிடிச்சிட்டாங்க. நானும் உன்னைப்பத்தி சொல்லிட்டேன். அம்மா சந்தோஷமா  சம்மதம் சொல்லிட்டாங்க. உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஆனா..”




“என்ன ஆனா…'”

“எப்படிடா ..உங்கம்மாதான் சம்மதிக்கலைன்னு சொன்னியே”

” ஆமாம் நிரு! இவ்ளோ நாளா என்கிட்டே சொல்லாம மறைச்சதுக்காக கல்யாணம் ஆனதுமே உன்னை என்னோடு அனுப்ப சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“ஹாங்….ஹேய்..அச்சு! …நீ..நீ… என்ன சொல்றே…”

“இந்த லாயரை என் பொண்டாட்டியா ஏத்துக்க சம்மதம்ன்னு சொல்லிட்டாங்க”

“அப்போ…நீ பொய் சொன்னியா? . யூ ..யூ ஆர் எ லையர். “

“ஹேய் நிரும்மா சும்மா விளையாடினேன் மா”

 ” எதெதுல. விளையாடுறதுன்னு இல்லை.  எனக்கு ஹார்ட்பீட்டே நின்னுடுச்சு தெரியுமா…இங்கதானே வரே. நேருல வா வச்சிக்கிறேன்.”

“காத்திருக்கேன் நீருக்குட்டி”

“வா..வா..வச்சி செய்றேன். டிரைவிங்ல பேசாதே.  காலை கட் பண்ணு நிதானமா வா”

அஸ்வின் விசிலடித்தபடியே வண்டியை ஓட்டினான். 

மியுசிக் சிஸ்டத்தில் இளையராஜா  துணைக்கு வந்தார்.

“கள்ளூரப் பார்க்கும் பார்வை

உள்ளூரப் பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே 

வில்லோடு அம்பு ரெண்டும் கொல்லாமல் கொல்லுதே

பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே ..

………ராஜராஜ சோழன் நான்…”

திரும்ப ரிப்பிடட் மோடில் அதே பாடலைப் போட அதில் தோய்ந்து போனான்.

மறுநாள்….

லஞ்சுக்கே ஜானகி வரச் சொல்லியிருக்க

மிக கம்பீரமாகத் தயாராகிப் போனான்.  கருநீலநிற ஜீன்சும் இளமஞ்சள் நிற சட்டையில் பொடி நீலக் கட்டமாக ஷர்ட்டும் ஜெல் வைத்து வாரிய கேசமும் பச்சை நரம்போடிய  க்ளீன் தாடையுமாய்  நின்றவனைக் கண்டு கண நேரம் கன்னியின் காதல் மனம் கனிந்து கிறங்கி நின்றது.

ஜானகி முகமன் கூறி வரவேற்றார். கல்வியோ, பதவியோ ஜானகியின் நடையுடை பாவனையில் தனித்தன்மை மிளிர்ந்தது. கண்ணாடிக்குப் பின்னே ஒளிர்ந்த கண்களில் கனிவும் கண்டிப்பும் கூடவே கம்பீரமும் ததும்பியது. சிறிய ஒற்றைக்கல் தோடு சிறியதாய் பொன் சங்கிலி ஒரு கையில் பொன்வளை ஒரு ஜோடி மறுகையில் ஸ்மார்ட் வாட்ச்.  ஒப்பனையில்லா முகம். நிரல்யாவின் அழகும் இயல்பும் இவரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். 

அதே சமயம்..

தன் அன்னைக்கும் சூழ்நிலை சரியாக அமைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற எண்ணம் உள்ளத்தின் ஒரு மூலையில் ஊவா முள்ளைப்போல் நிரடிக் கொண்டேயிருந்தது.

முகத்தைப் புன்னகையோடு வைத்துக் கொண்டு கையோடு வாங்கி வந்திருந்த இனிப்பையும் பழங்களையும் தந்தான். 




ஏனோ ….

நிரல்யா தடுமாறினாள். எதோ தடுமாற்றம். அம்மா எதுவும் சொல்லி விடுவாரோ என்ற படபடப்போ இல்லை… சிலநாட்களுக்குப்பின் தன்னவனை முதன் முதலாய் தன் வீட்டிலேயே சந்திக்கிற பரபரப்போ…அவள் இயல்பைத் தொலைத்திருந்தாள். 

எளிமையான சாப்பாடுதான். கூட எக்ஸ்ட்ராவாக பாயசம் மட்டுமே. அதுவே அவனைக் கவர்ந்தது. 

கடைசியாக ஐஸ்க்ரீமுடன் சோபாவில் உட்கார்ந்து  பேசத் துவங்க ஜானகியிடம் தன் தாயிடம் தங்கள் விஷயத்தைக் கூறிவிட்டதையும் அவர் சம்மதித்து விட்டதையும் சொன்னவன் தொடர்ந்து

“ஆண்ட்டி! எங்கம்மாவுக்கு மருமகள் பெயர் பிடித்த அளவுக்கு அவங்க சம்பந்தி பேரு பிடிக்கலை””

“புரியலையே”

“ஏன் அஸ்வின்?  எங்கம்மா பேரு நல்லபேரு தானே”

“ஜானகி சீதாதேவியின் பேராச்சே!”




“அதில்லை நிரு. எங்கம்மாவுக்கு சின்னவயசு தோழி இருந்தாங்களாம். அவங்க பேரு ஜானகியாம். ரெண்டு பேரும் பயங்கர க்ளோஸ். ஆனா அந்த ஜானகி கல்யாணத்தின் போது செய்து வைத்தக் குழப்பத்தினாலே எங்கம்மா கனவு சிதைஞ்சி பிடிக்காத கட்டாயக் கல்யாணத்திலே மாட்டிக்கிட்டாங்க. அதனாலேயே ஜானகி ன்னாலே அலர்ஜி அவங்களுக்கு “

என்று கூறி சிரித்தான்.

ஜானகிக்கு மெல்ல ஒரு ஐயம் புற்றிலிருந்து தலையை நீட்டும் அரவமாய் அரவமேயின்றி எட்டிப்பார்த்தது.

அவள் மேலும் கேள்விகள் கேட்க அஸ்வின் பதில் சொல்ல ஜானகிக்கு புரிந்து போனது. அஸ்வின் அவளின் உயிர்த்தோழி வித்யாவதியின் மகனென்பது.

நெஞ்சோரம் வலியெடுத்தது. தான் செய்து வைத்து விட்ட செயல் தன் தோழியை பழி வாங்கி விட்டதே! எப்படித் துடித்திருப்பாள்.? கடவுளே! எவ்ளோ பெரிய பாவம்? வித்யாவின் கனவுகளும் ஆசைகளும் எனக்கும் தெரியுமே! அவளின் ஆசைக்கோட்டையை தரை மட்டமாக்கி அதில் நான் அஸ்திவாரம்  போட்டு கட்டிடம் எழுப்பியிருக்கேன்’ ஜானகி சுய பச்சதாபத்தில் துடித்தாள். எதை சொல்ல எதை விட? மனம் தோழிக்காக. ரத்தக் கண்ணீர் வடித்தது.

பிரபஞ்சம் இத்தனைக் குறுகியதா? எங்கோ பிறந்து வளர்ந்த இந்த இளைய தலைமுறை இப்படி காதல் வலையில் சிக்கி தங்களின் தாய்மார்களின் நட்பை இணைக்கக்கூடுமா? இது இறைவன் போட்ட முடிச்சா? வித்யாவதி என்னை மன்னிப்பாளா? இல்லை என் மீதான கோபத்தில் இவர்களின் நேசத்தை அறுத்து விடுவாளா?  

இன்னும் சேகரனை வேறு சமாளிக்க வேண்டுமே. நிரல்யாவின் பிறப்பு ரகசியம் என்னைத் தவிர யாருமே அறியாதது ஆயிற்றே. நிரல்யாவுக்கே தெரியாது.  இதை வேறு எப்படி சமாளிப்பேன். சேகரோடு வித்யாவும் ஏற்க வேண்டுமே? கடவுளே எப்பேற்பட்ட சிக்கலை விதைத்து என்னை சிக்க வைத்திருக்கிறாய்? 

அஸ்வின் பேசுவதைக் கேட்டால் வித்யாவுக்கு என்மேல் கொலைவெறி இருக்கும் போலவே. ஆனாலும் நான் அவளுக்கு இழைத்த கொடுமைக்குத் தெரியாமல் நடந்தது தான் ஆனாலும் அவளின் துன்பம் என்னால் தானே. அவளின் மனோரதம் குடைசாய்ந்ததும் என்னால் தானே. நான் மட்டும் என் லட்சியத்தை அடைந்து உச்சாணியில் நிற்கிறேன். என் சுயநலத்தால் அவள் தேங்கிப் போய் நின்று விட்டாள்.’

“உலகத்திலேயே விலை மதிக்க முடியாதது நம்பிக்கை இல்லையா? அதை அடைய வருடங்கள் பல ஆகலாம். ஆனால் அதை உடைக்க சில நொடி போதுமே. அதேதான் என் அம்மா வித்யாவதிக்கும் நடந்தது. என் அம்மா அதிலிருந்து மீளவேயில்லை. அந்த இழப்பு அவங்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து விட்டது”

பெருமூச்செறிந்தவள் …

அஸ்வினிடம் 




“நீ சொல்வது சரியே. ஆனால் உங்கம்மாவுக்கு ஒரு பக்கம் இருப்பது போல அந்த ஜானகிக்கும் ஒரு நியாயம்  இருக்கலாம் தானே”

 அதுவரை அடைமழையாகப் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று அமைதியாகி விட்டான்..

ஆமாம். நியாயம் தானே! அவர் பக்கத்தையும் யோசிக்கணும் தான். 

அதன் பின்னர் பேச்சு திசை மாற எதையெதையோ பேசினார்கள்.

பெண்ணின் எதிர்காலம் மருட்டியது. அதேநேரம் தோழியின் நட்பான அரவணைப்புக்காக மனம் ஏங்கியது. காலில் விழுந்தேனும் மன்னிப்பை யாசித்தேனும் பெற்றுவிட வேண்டுமென உறுதி பிறந்தது.

‘இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். ஒருமுறை ஊருக்குப் போய் நம் நிலைமை எடுத்து சொல்வோம். கண்டிப்பா கோபப் படுவாள்தான். ஆனாலும் மன்னிப்பாள். ‘

ஊர்ப்பாசம் மலைப்பாம்பு போல இறுக்கியது.

எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்திருந்தவளுக்கு ஜோடிப் பொருத்தம் கருத்தை நிறைத்தது. அஸ்வின் மீதிருந்த அன்பும் மரியாதையையும் பெருகியது. தன் மகளின் மனங்கவர்ந்தவன் என்பதையும் மீறி ஊன் உயிர்த்தோழியின் பிள்ளை என்பது முதன்மையாக நின்றது. அவனை உச்சி முகர்ந்து அணைத்துக் கொள்ள உடல் துடித்தது. என் வித்யாவின் மகன். நாங்கள் சம்பந்தியாகி எங்களின் பேரப் பிள்ளைகளைக் கொஞ்சி….

ஜானகிக்கு மொபைலில் அழைப்பு வர அவளின் கற்பனைத் தேர் அவளுடன் உள்ளே சென்றது.

இளையோர் இருவரும் தோட்டத்து பக்க ஊஞ்சலுக்கு வந்தனர்.  அளவான சிறிய தோட்டம். மஞ்சள் கொன்றை பொன்னாய் பூத்து பொலிந்தது.

பெரிய மரமல்லி மரத்துக்குக் கீழே ஊஞ்சல் இருந்தது. 

அவள் உட்கார அவன் பின்னிருந்து லேசாய் ஆட்டினான். 

அவள் காதில் தொங்கிய குட்டி ஜிமிக்கியை ஒரு விரலால் சுண்டினான். 

சிணுங்கிச் சிரித்தாள் நிரல்யா.

அவளையே பார்த்திருந்தவனுக்கு இதயத்தின் இடுக்குகளைக் கூட விட்டுவிடாமல் மிச்சம் வைக்காமல் அத்தனையிலும் விருட்சம் போல விரவி நின்றிருந்தாள் நிரல்யா அவனுக்குள். 

திருமணம் என்ற புள்ளியில் இரண்டு உள்ளங்களும் மானசீகமாய் ஒத்தாற் போல் நின்றன. உல்லாசம் கூடு கட்டியது.மழைநீரின் சிதறல்களாய் சிலிர்த்து சிலாகித்தது மனது.

அதைக் கலைத்து அபஸ்வரமாய் ஒலித்தது அஸ்வினின் அலைபேசி.

அப்பா !  

யோசனையும் குழப்பமுமாய் செவியில் வைத்து அழைப்பை ஏற்றவனைத் துண்டாடியது அந்தப்பக்கமிருந்து வந்த செய்தி.

முகம் இருட்டைத் தத்தெடுத்துக் கொள்ள திகைப்பும் திடுக்கிடலுமாய் நிரல்யாவின் முகம் பார்த்தான் அஸ்வின். 




What’s your Reaction?
+1
7
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!