Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-13

13

அஸ்வினுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

பெண்ணென்றால் அதுவும் படித்த பெண்ணென்றால் அசட்டையாகக் கடந்து போகும் சேகரனிடம் இப்படி ஒரு மாற்றமா? கை கூப்பி நன்றியெல்லாம் சொல்கிறார்? வியப்பாய்ப் பார்த்தான். 

“என்னடா அப்படிப் பார்க்கற? ஊர்ப்பய அத்தன பேரும் தொசங்கட்டி அடிக்கக் காத்திருக்க அத்தனை பேரையையும் உளறுவாயனாக ஆக்கிப்புருச்சே இந்தப் பொண்ணு.  அவனுங்க வக்கீலப் பார்த்த மாதிரி என்னாலயும் இங்க வக்கீலைப் பார்க்க முடியும். இருந்தாலும் என்னைய மீறி என்ன நடக்கும்ன்னு ஒரு மிதப்புல இருந்துட்டேன். ஆத்தா மகமாயி இந்தப் பொண்ணு உருவுல வந்து எனக்கு புத்தியக் கொடுத்துட்டா. “

நிரல்யா வெட்கத்துடன் அஸ்வின் பின் ஒதுங்கினாள்.

அவளின் வெட்கப் பார்வையும், அஸ்வினின் கள்ளச் சிரிப்பும் சேகரனுக்கு எதையோ உணர்த்த..

“அப்புறம் அஸ்வினு! இந்தப் பொண்ணு உனக்கு எப்படிப் பழக்கமுன்னு சொல்லலையே!”

“அப்பா! அது வந்து..”

காதல் என்று சொன்னால் கை நீட்டி ரசாபாசமாகி விடுமே எனத் தயக்கத்துடன் நிரல்யாவைப் பார்த்தான் அஸ்வின்.

சொல்லவா? சொல்லி விடவா எனக் கேட்டது அவன் கண்கள்.

சொல்லேன் சொந்தமே இவள் தான்னு எனப் பதிலிறுத்தது அவள் கண்கள்.

சொல்லாத வார்த்தைகளிலும் சுகம் காணும் பார்வைகளிலுமே யூகித்துக் கொண்ட சேகரன் உள்ளும் வெளியிலுமாய்த் தவித்து நின்றார். 

“வீட்டுக்குக் கூட்டிப் போப்பா! நான் பின்னாலயே வந்தர்றேன்!”

“அப்பா! இவளோட அம்மாவும் நம்ம ஊருக்கு வந்திருக்காங்க! என் ப்ரெண்ட் இளங்கோ வீடு  முன்பகுதி காலியாத் தானே இருக்கு. அங்க தங்க வச்சிருக்கேன். இவ அங்க போயிடுவா!”

தாடையைச் சொறிந்து கொண்ட சேகரன்..

“ஓ! அப்படியா! இந்தப் பொண்ணோட அம்மாவும் வந்திருக்காங்களா? அப்ப அவங்களையும் சேர்த்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போ. உனக்குத் தெரிஞ்சவங்க உன்னோடு வந்தவங்க நம்ம வீட்டுக்கு வரது தான் முறை. கிளம்புப்பா! இந்த கணக்கு வழக்கை முடிச்சுட்டு வரேன்!”

என்ற சேகரனிடம்.. அவசரமாய்ச் சொன்னாள் நிரல்யா.

“எந்த பேப்பரிலும் கையெழுத்து போட்டுறாதீங்க மாமா! “

“இல்லம்மா .. இல்ல!” 

அஸ்வினோடு இணைந்து நடந்தவளைச் சற்று நேரம் பார்த்திருந்து திரும்பியவருக்கு அப்போது தான் உறைத்தது. 




இப்போ என்ன சொன்னாள்? மாமான்னா? மாமான்னா நான் அவளுக்கு? அஸ்வினை அவள்? வெறும் ப்ரெண்ட் இல்லையோ? என்ன தான் சமயத்துக்கு வந்து மானத்தை காத்தாலும் இவளே மானம் போவதற்கும் காரணமாய் ஆகி விடுவாளோ?

“டேய்..அஸ்வின்!” குரலெடுத்து கத்தி விட்டார்.

“என்னப்பா?” நிரல்யாவுடன் சென்று கொண்டிருந்தவன் ஓடி வந்தான்.

“அது.. அந்தப் பொண்ணு?”

“நிரல்யாப்பா!”

“ஹான்.. நிரல்யா.. அது ஏன் என்னை மாமாங்குது?”

“மாமாவை மாமான்னு தானே கூப்புடுவாங்க!” சேகரனைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு நிரல்யாவிடம் ஓடிவிட்டான்.

“என்ன நிரு! சட்டுன்னு அவரை மாமான்னு கூப்பிட்டுட்ட? மனுஷன் குடைகுடைன்னு குடையறாரு. சமயம் பார்த்து அறிமுகப் படுத்தணும்ன்னு நான் காத்திருக்கும் போது நீ பொசுக்குன்னு எவிடென்ஸ் கொடுத்துட்டு வந்துருக்க!”

“ஹ! லாயருக்கே எவிடென்ஸா? நக்கலு!” நடந்தவாறே அஸ்வினின் இடுப்பில் முழங்கையால் இடித்தாள் நிரல்யா.

“அடியேய்.. இது கிராமம்டி. கீப் டிஸ்டன்ஸ். கீப் ஆன் டிஸ்டன்ஸ்! இந்த ஊருக்குன்னு இருக்கற பிபிசியும், சிசிடிவி கேமராவும் இதோ வீட்டுத் திண்ணையெல்லாம் உட்கார்ந்து பேசிட்டிருக்கிறாங்களே வயசான பாட்டிங்க! அவங்க தான்! ஒரு பய ஒண்ணும் பண்ண முடியாது இங்க!”

நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தாள் நிரல்யா.

“ஏனாத்தா எங்க பயலை இந்த இடி இடிக்கற? ” ஒரு திண்ணை பாட்டி கேட்க..

“மின்னலாட்டம் இருக்குதுல்ல பொண்ணு. அதான் இடிக்குது!” இன்னொரு பாட்டி சொல்ல..

“அப்ப கல்யாண மழைதான்னு சொல்லு!” முதலாமவர் எடுத்துக் கொடுக்க..

திண்ணையே கொல்லென்று சிரித்தது.

“ஆஹா.. ஆஹாஹா! இந்தப் பாட்டிக மட்டும் எங்க அப்பாகிட்ட விஷயத்தச் சொன்னா சோலி முடிஞ்சுருமே!” அஸ்வின் சொல்ல..

“சோலி முடியுமா? அப்படின்னா?”

“நம்ம கல்யாணத்த  தான் சொல்றேன். வா! அங்க உங்கம்மா வாசலுக்கே வந்து வெயிட் செய்யறாங்க பாரு!”

ஜானகி கலவரத்தோடு நின்றிருந்தாள். பெண்ணைப் பார்த்து சேகரன் என்ன சொன்னாரோ? போன வேலையில் வெற்றி என்பது நிரல்யாவுக்கு கைவந்த கலை என்றாலும் சேகரன் விஷயத்தில் அரைகுறையாய் விட்டுவிட்டால் பிறகெப்படி அஸ்வினை மாப்பிள்ளையாய்க் கேட்பது? நிரல்யாவையே ஒத்துக் கொள்ளாத சேகரன் தன்னைப் பார்த்தால்? ஜானகியின் மனதைப் போலவே சட்டென மூண்ட மின்னலும், இடியும் மழையாய் பூமியை நனைத்து இனி வரும் சம்பவங்களை சூசகமாகக் கூற..

அஸ்வினும், நிரல்யாவும் கைகோத்த படி ஜானகியைப் பார்த்து ஓடி வந்தார்கள். 

“அடடா! தலை நனைஞ்சுடுச்சே! ஒண்ணும் பிரச்சனை இல்லையே அஸ்வின்? நேரமாயிடவும் பயந்துட்டேன்.”

இல்லையெனத் தலையாட்டிய அஸ்வின், நிரல்யா 

இருவரது தலையையும் தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டார் ஜானகி.

அச்சிறு செய்கையில் நெகிழ்ந்த அஸ்வின் ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டு..

“அம்மா மாதிரிம்மா நீங்களும்! ஐ லவ் யூ!” 

“ஐ அப்ஜெக்‌ஷன் மை லார்ட்.  ஃப்ர்ஸ்ட் காதலியிடமே இன்னும் சொல்லாத ஐ லவ் யூவை காதலியின் அம்மாவிடம் சொல்வது முதல் குற்றம். காதலி எனப்படுவளின் அம்மாவை அத்தை எனக் கூறாமல் அம்மா எனப் பிள்ளை முறை பாராட்டுவது அடுத்த குற்றம்!” நிரல்யா அங்கிருந்த மர பெஞ்சைத் தட்டி இடத்தை திடீர் கோர்ட் ஆக்கினாள்.




“குறும்புக்காரி! நீ என் பெண்ணாச்சே. ஐ லவ் யூவை உன் கிட்ட சொன்னா என்ன? என் கிட்ட சொன்னா என்னன்னு நினைச்சிருப்பான் அஸ்வின்!” என்றாள் ஜானகி குறும்பாய்.

நிரல்யா பொய்க்கோபம் காட்டித் திரும்பிக் கொண்டாள்.

“ஆத்தா மகமாயி! மலையிறங்கு தாயி! உன்னோட மாமா, அத்தையெல்லாம் காத்திருப்பாக! போவோ..மா?” என்றவன் ..

“ஜானகிம்மா! வித் யுவர் பர்மிஷன்.. நீங்க அப்படி திரும்பிக்கிட்டீங்கன்னா.. நிரு கோபத்தைக் குறைக்க நான் அப்படியே…”

ஜானகி சிரிப்புடன் திரும்பிக் கொள்ள..

ஐயோ அம்மா இருக்கும் போதே முத்தமிடப் போகிறானோ என்ற பயத்தில் ..

“நோ நோ டோண்ட் டச் மீ!” அலறினாள் நிரல்யா.

“அடடா பூனைக்குட்டி வெளிய வந்துருச்சே! நான் உன் கோபத்தைக் குறைக்க உன் காலுல விழுந்தறலாம்ன்னு நினைச்சேன். நீ வேற நினைச்சியா?” என்றான் குறும்பன்.

அலையலையாய்ப் பரவிய மகிழ்ச்சியின் கூத்தாட்டத்தைப் பார்த்த மழை குறைந்து நின்றுபோக..

“கிளம்பலாம்!” என்றார் ஜானகி.

“இதோ திரும்பினால் இருக்கும் கட்டுவீடு தாம்மா எங்க வீடு!” அஸ்வின் சொல்லிக் கொண்டு நிரல்யாவுடன் முன்னே நடக்க பின் தொடர்ந்த ஜானகிக்குத் தான் கால்கள் இரண்டும் பின்னிக் கொண்டன.

என்னடி வித்யா செய்வாய் என்னைப் பார்த்தால்? கட்டிப் பிடித்து அழுவாயா? கண்டதும் ஓடி விடுவாயா? உன் கணவர் சேகரன், அவரின் அம்மா எல்லோரையும் நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்? எதிர்கொள்ளத் தான் வேண்டும். என் நிரல்யா உன் வீட்டுக்கு வந்து வாழப் போகிறாளே. அதற்குத் தான் அதற்கு மட்டும் தான் இந்த ஊரில் காலடி எடுத்து வைத்தேன். எது வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். நான் ஜானகி. துணைவேந்தர் ஜானகி. எண்ணங்களின் ஓட்டம் நடையில் மிடுக்கைத் தந்தது. 

மெல்லிய வெண்பட்டில் முத்தாரம் அணிந்து வலதுகையில் ஒரு வளையலும், இடது கையில் கடிகாரமும், கண்ணில் தங்க ப்ரேமிட்ட கண்ணாடியுமாய் இருந்த  ஜானகி பார்வையிலும் ஒரு தீர்க்கத்தை ஒட்ட வைத்துக் கொண்டார்.

அங்கு  வித்யாவதியோ மனதில் பொருமிக் கொண்டிருந்தார். போய்த் தொலைன்னுட்டாரே மனுஷன். போயிடுவமா பேசாம? அரளிக்கா பஞ்சம் நம்ம ஊருல! யோசித்தவரின் சிந்தனையைத் துண்டித்தாற்போல வந்து நின்ற சேகரன் பஞ்சாயத்தில் தம்பக்கம் நியாயத்தைப் பேசி தன் சொத்துகளைக் காத்தது அஸ்வினின் தோழி நிரல்யா எனச் சிலாகித்து மகிழ்ந்தார். தன் மனைவியைக் கோபத்தில் திட்டியதெல்லாம் அவர் நினைவிலேயே இல்லை.

கேட்ட வித்யாவதிக்கு சேகரனா இது என்றிருந்தது. சேகரன் என்றைக்குப் பெண்களின் கல்வியறிவைச் சிலாகித்து இருக்கிறான்? அதைவிட பெண்டாட்டியான தன்னிடம் இத்தனை தன்மையாய்ப் பேசும் சேகரன் அவள் கண்ணுக்குப் புதியவனாகத் தெரிந்தான். கண்ணும், காதும் மந்தமான சேகரனின் தாயார் என்னவோ பேசறாங்க என உள்கட்டில் சென்று படுத்து விட்டார்.

வேலிப்படல் திறந்து உள்ளே வந்த அஸ்வின் அழுகையில் கனத்திருந்த அம்மாவின் முகத்தைக் குறிப்பாய்ப் பார்த்தான். அவன் கண்கள் நிரல்யாவை தன்னவள் என அடையாளம் காட்ட வித்யாவின் உள்ளம் மகிழ்ந்தது. 

மருமகளே! என ஆசைதீர கூப்பிட முடியாமல் ஊடே நிற்கும் சேகரனைப் பார்த்தவள்..

“என்னங்க! அவங்க..” என்றாள்.




“அடடே வாங்க! வாங்க! வித்யா இது தான் அந்த வக்கீலம்மா. என்ன திறமைங்கற! அஸ்வின்! எங்க இவங்கம்மா வந்திருக்கறதா சொன்ன?” கேட்டவரின் பார்வையில் பின்னால் வலது காலை வைத்து நுழைந்த ஜானகி பட்டாள்.

“வாங்க அம்மா!” கையெடுத்துக் கும்பிட்ட சேகரனின் குரலுக்கு யாரெனப் பார்த்த

வித்யாவதி ஸ்தம்பித்தாள்.

“இவளா? இவள் தானா?”

நீரும் நெருப்பும் ஒருசேர நிற்பதைப் போல் சேகரனும், வித்யாவதியும் நின்றிருந்தனர்.

நிரல்யாவும், ஜானகியும் அங்கிருந்த மர பெஞ்சில் அமரப் போக அஸ்வின் சென்று அம்மாவின் காதில் முணுமுணுத்தான்.

“அம்மா! எப்படி உன் மருமக?*

“கூட வந்திருக்கறது யாருடா?”  அம்மாவின் குரலில் வழிந்த ரௌத்திரம் அவனுக்கு புரியவில்லை.

“அவ அம்மாம்மா!”

கண்ணை மூடிக் கொண்டாள்.

“வித்யா!” எழுந்து வந்து கைபிடித்த ஜானகியைப் பார்த்தவள்.. அவள் கையை விலக்கி விட்டு..

“என்னங்க! வந்திருக்கிறவுங்க யாருன்னு தெரியுதா?” என்றாள் சேகரனிடம்.

“இந்தப் பொண்ணோட அம்மா தான் வித்யா!”

“இவங்க ஜானகி!”

“அதாம் இவங்க பேரா? நல்லது. குடிக்க காப்பித் தண்ணி கொண்டு வந்து குடு. நீங்க உட்காருங்கம்மா. எனக்கு என் மனைவி,  குடும்பம் தான் எல்லாமே. வெளி மனுஷங்க சகவாசம் அறியாதவன். இதுவரை படிச்ச பெண்ணுங்கன்னா வெறுப்பா இருந்தவன் உங்க பெண்ணோட புத்திசாலித் தனத்தைப் பார்த்ததும் அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். நல்ல பொண்ணை பெத்திருக்கீங்கம்மா!”

அப்ப இத்தனை நாள் இந்தம்மா நினைவா இவரை இல்லையா? கல்லையும் மண்ணையும் பார்க்கற மாதிரி அவளைப் பார்க்கறாரு. சேகரனின் பேச்சில் வித்யாவதிக்கு மனதில் இருந்த ஒரு பெரிய பாரம் பூவாய் மாறியது. எம் புருசன் மனசுல நான் தான் இருக்கேன். இவளில்ல!

மன நிறைவுடன் எழுந்த வித்யாவதி..

“அஸ்வின்! பார்க்கணும் பார்க்கணும்ன்னு சொன்னியே கண்ணு! இவ தான் என் உயிர்த்தோழி ஜானகி!” என்றாள் இடக்காய்.

சேகரனின் பார்வை என்னை வேண்டாமென்ற பெண்ணா இவங்க எனக் கேட்டது. 

வித்யாவதி தலையாட்டினாள்.

சரஸ்வதி கடாட்சம் மிக்க இவங்க எங்க? நானெங்க? மனதில் நினைத்த சேகரன் மௌனமாய் அவர்களைப் பேசவிட்டு அறைக்குள் சென்றுவிட

அஸ்வின் நிரல்யாவைத் தன் வீட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்தான். அவன் உள்ளத்தில் எழுந்த போராட்டத்துக்கு நிரல்யாவின் அண்மை அவனுக்குத் தேவையாக இருந்தது.

என் அம்மாவின் எதிரி எனக்கும் எதிரியா? அப்போ என் காதலி? புகைச்சலின் நெடியில் நிரல்யாவோடு நகர

“ஸாரிடி வித்தி!” என்றாள் ஜானகி.

“ஒரு கல்யாணத்துக்கு என்னைப் பகடைக்காயாக்கி இன்னொரு கல்யாணத்துக்கு எம் பையனைப் பகடைக்காயாக்க வந்திருக்கியா அதுவும் நீ பெத்த பொண்ணோட! சீ!”

அனல் பறந்த விழிகளை அசராமல் பார்த்தபடி நின்றாள் ஜானகி.




What’s your Reaction?
+1
5
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!