Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-12

 12

கரை காணாத  மகிழ்ச்சியில் புன்னகையில் விகசித்துக் கொண்டிருந்த அஸ்வினின் முகம் திடீரென இருளடைய…அதைப் பார்த்து விட்ட நிரல்யாவும் சிரிப்பைத் தொலைத்தாள்.

“ஏய் குறும்பா.! என்னாச்சு? ஏன் திடீர்னு மூட் அவுட்டாகிட்டே.? ஃபோன்ல யாரு?” 

என்னவென்று சொல்வது? அதீத சந்தோஷமும், சிரிப்பும், இருந்த இடம் தெரியாமல் போக வைத்த அந்த இடி போன்ற செய்தியைச் சொல்லி இவர்களையும் கவலையில் ஆழ்த்துவதா? சொல்வதா வேண்டாமா மனசுக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்க..நிரூ கவலையுடன் அவன் முகத்தையே பார்க்க..

“என்ன ஒரே மௌனராகம் இசைக்கிறீங்க ? அதுக்குள்ள பேசி முடிச்சாச்சா?” 

சிரித்தபடியே அங்கே வந்த ஜானகிக்கு அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை வியப்பைத் தந்தது.  இளஞ்சிட்டுகளாய் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தார்களே! அதற்குள் இவர்களுக்கு என்னாயிற்று..? சின்னப் பிள்ளைகள் போல ஏதாவது சண்டை வந்திருக்குமோ? சில வினாடிகளுக்குள் அவளுக்குள் பற்பல கேள்விகள்.

தாயைக் கண்டதும்…

“பாருங்கம்மா இந்த அச்சுவை! ஏதோ ஃபோன் வந்ததும் இப்படி சோகமாயிட்டான். என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறான்”. 

“என்னாச்சுப்பா.. எங்ககிட்ட சொல்லக்கூடிய விஷயம்னா சொல்லு.. பர்சனல்னா கட்டாயப்படுத்தல.”

சொன்னால் நம் குடும்பத்தைப் பற்றி ஜானகி குறைத்து மதிப்பிட வாய்ப்பிருக்கிறது.

சொல்லாவிட்டால் அவர்களை அன்னியப் படுத்தியது போலாகும்.அது மட்டுமில்லாமல் ஆரம்பத்திலேயே ஒளிவு மறைவு எதற்கு. வெளிப்படையாகவே இருப்போம்.

“எங்கப்பா தான் ஃபோன் பண்ணியிருந்தாரு ஆண்ட்டி. பணம் கடன் வாங்கின விஷயமா ஏதோ சட்டப் ப்ரச்னை ஆயிடுச்சு போல.  ரொம்ப நெருக்கடியான நிலையில் இருக்கேன். நீ வந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும். உடனே கிளம்பி வாங்கறாரு. அப்பா இப்படியெல்லாம் பேசற ஆளே கிடையாது. கோபக்காரர்தான். ஆனா நேர்மையானவர். எதையும் தைரியமா ஃபேஸ் பண்றவர்.பேச்சுதான் கரடுமுரடா இருக்கும். நான் இப்பவே ஊருக்கு கிளம்பியாகணும் ஆன்ட்டி”

குரல் கம்ம, அப்பாவுக்காக முதன்முறையாக மனம் நெகிழ்ந்தான். கண்களும் கலங்கின.

அவன் கரங்களை ஆதரவாகப் பற்றிய ஜானகி,

“அதெல்லாம் ஒரு ப்ரச்னையும் வராதுப்பா. பக்கத்துலயே லாயர் இருக்க எதுக்கு கவலைப் படற?”

“ஆமா அச்சு,..நானும் உன்கூட வர்றேன். ஒரு கை பாத்துடலாம்.”

“நீ கோர்ட்டுக்குப் போக வேண்டாமா?”

“எங்களுக்கு இப்ப கோர்ட் வெகேஷன்தான். போற வழில சீனியருக்கும், மேகிக்கும் மெஸேஜ் அனுப்பிடலாம்.‌அஞ்சே நிமிஷத்ல ரெடியாகிடறேன்.”

துள்ளி எழுந்தாள் நிரல்யா.

“உன்னை நல்ல சுபமுகூர்த்தத்திலே என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகணும்னு நினைச்சிருக்கேன். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ல எதுக்கு நிரூ?

“நேரம்,காலமெல்லாம் பாத்துகிட்டிருக்க இது சந்தர்ப்பம் இல்லை. நானும் உங்க கூட வர்றேன். “ஜானகி சொல்ல,

“அச்சோ நீங்க எதுக்கு ஆன்ட்டி சிரமப்படறீங்க…! (பெண்கள் படிக்கறதையே விரும்பாத எங்கப்பாகிட்ட உங்களை, அதுவும் இந்த இக்கட்டான சூழ்நிலைல எப்படி அறிமுகப் படுத்துவேன்.?அஸ்வின் மனதுக்குள் புலம்பினான்.)

“உன்னோட தர்மசங்கடமான நிலை எனக்கும் புரியுது. எங்களை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக வேண்டாம். உங்களுக்குத் தெரிஞ்சவங்க வீட்ல தங்க வைங்க.. அதுக்குள்ள நிலைமை சரியாகிடும்னு நம்புவோம்.”

ஜானகியின் நம்பிக்கை வார்த்தைகள் தெம்பைத் தர.. மூவரும் கிளம்பினார்கள்.

கிராமத்தில் தன் பள்ளித் தோழன் இளங்கோவின் வீட்டில் ஜானகியையும்,நிருவையும் தங்க வைத்து விட்டு தன் வீட்டில் காலடி எடுத்து வைத்த அஸ்வினை வரவேற்றது வித்யாவதியை சேகரன் வறுத்தெடுத்த வசவு வார்த்தைகள்.

“எப்படா வீட்டு ஆம்பளைக தப்பு பண்ணுவாங்கன்னு பாத்துகிட்டிருக்கறதுதான பொட்டச்சிக வேலை‌யே. . இத்தன வருசமா அமுக்கிணியாட்டமா இருந்தவளுக்கு இப்ப வாய் நீளுதோ? இந்த வீடு ஒண்ணும் ஒம் பொறந்தவீட்டு சீதனமில்ல. எம்பாட்டன் சொத்து.அத நான் அடமானம் வெப்பேன்..விப்பேன் அதை எல்லாம் உங்கிட்ட சொல்லணுங்கற அவசியமில்லை. வாய மூடிட்டு இருக்கிறதானா இரு‌..இல்ல..எங்கனாச்சும் போய்த்தொலை.”




“இப்ப அவ என்னத்தக் கேட்டுப்பிட்டா? ஒத்தைக்கு ஒரு புள்ள கருவேப்பிலை கன்னாட்டம். அவனுக்குப் பாட்டன் சொத்து வேண்டாமா…? அந்த நரிப்பய பூபாலன் பேச்சைக் கேட்டு இப்பிடி தல கவுந்து நிக்கிறியே! அந்தப் பய நயவஞ்சகக்காரன்…அவன வீட்டுக்குள்ளாற சேக்காதேன்னு தலப்பாடா அடிச்சிகிட்டேன். பொட்டச்சிக பேச்சைக் கேக்க மாட்டேன்னு அகம் புடிச்சு திரிஞ்சியே. இப்ப என்னாச்சு?”

அப்பத்தா மருமகளோடு சேர்ந்து எசப்பாட்டு பாட‌..

“ஏய் கெழவி‌.. ரெண்டு பேரும் வாய மூடிக்கிட்டு கம்முனு கெடங்க. நானே நொந்து போய்க் கெடக்கேன்‌..நீங்க வெந்த புண்ணுல வெந்நிய ஊத்தறீகளா?

“ஒவ்வொரு முறை இந்த வீட்டு வாசலை மிதிக்கும் போதும் ஒரு சவாலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறதே” 

மனசு அரற்றியது அஸ்வினுக்கு.

மகனைக் கண்டதும்,

“அச்சுப்பா…பாத்தியா உங்கப்பாரு செஞ்சு காரியத்தை? நம்மள நடுத்தெருவுல நிறுத்திருவாரு போல இருக்குடா..!

புலம்பிய தாயைக் கட்டியணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து ஆற்றுப் படுத்தியவன்…தந்தையை தனியறையில் சந்தித்து விவரம் கேட்டான்.

நடந்தது இதுதான்…

ஒரு வருடத்திற்கு முன் சேகரன் புதிதாக ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்திருந்தார்.போட்ட பட்ஜெட்டைக் காட்டிலும் செலவு கை மீறி விட அவசரத் தேவைக்காக பூபாலனிடம்  20 லட்சம் பணம் கடன் கேட்க, தன்னிடம் அவ்வளவு பணமில்லை‌..தெரிந்தவரிடம் வாங்கித் தருவதாக சொல்லி வாங்கித் தந்ததோடு, அடமான சொத்தாக பரம்பரை வீட்டுப் பத்திரமும் தேவைப்படும் என வாங்கி வைத்துக் கொண்டார் 

பணம் தந்தவரும்.. பூபாலனுமாக சேர்ந்து சேகரனை ஏமாற்ற அந்த 20 லட்சத்தை இரண்டு கோடியாக மாற்றி, சேகரன் கையெழுத்தை ஃபோர்ஜரி   செய்திருக்கிறார்கள். கடன் தந்தவன் சேகரனை கடன் தொகை இரண்டு கோடியை கொடுத்தே ஆக வேண்டும் என நெருக்கடி தரும்போது  அவரால் தர முடியாத பட்சத்தில் சொத்துக்களை பறிமுதல் செய்து  அதை இருவரும் ஷேர் செய்து கொள்ள திட்டமிட்டு அதை இப்போது செயலாக்கியிருக்கிறார்கள்.

ஒரு வருடமாக பூபாலன் மூலமாக சேகரன் கொடுத்தனுப்பிய வட்டிப்பணத்தையும் பூபாலன் ஸ்வாகா செய்திருப்பதும் இப்போதுதான் சேகரனுக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஊருக்குள் சேகரன் பணமோசடி செய்திருப்பதாக வதந்தி பரப்பி விட்டு ஊருக்குள் தலை நிமிர முடியாமல் செய்து விட்டார்கள்.

“இதிலிருந்து எப்புடி வெளிய வர்றதுன்னு   புரியாமதான் உன்னை வரச் சொன்னேன் அஸ்வின். இத்தன காலமா அண்ணன்..அண்ணன்னு அவம்பின்னால திரிஞ்சதுக்கு நல்ல பலன் கிடைச்சிருச்சு. அவன் நல்லாவே இருக்க மாட்டான். நாளைக்குப் பஞ்சாயத்துல என்னவெல்லாம் நடக்கப் போவது?”

மனம் குமுறினார்.

“விடுங்கப்பா..நான் என்னோட வக்கீல் ஃப்ரண்ட்கிட்ட பேசிட்டு சொல்றேன்.

நீங்க மனச போட்டு ரொம்ப அலட்டிக்காதீங்க. வெளில போய்ட்டு வந்துர்றேன்.”

நேராக இளங்கோ வீட்டுக்கு வந்து நிரல்யா,ஜானகியிடம் அனைத்து விஷயங்களையும் சொல்ல..

உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட நிரல்யா மறுநாள் கிராமப் பஞ்சாயத்து கூடும்போது சேகரன் சார்பாகப் பேசத் தனக்கு  அனுமதி வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டாள்.

இது தெரிந்ததும் கடன் தந்தவனும் தானும் ஒரு வக்கீலை பஞ்சாயத்துக்கு அழைத்து வந்தான்.

பஞ்சாயத்து கூட்டி…வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பிக்க..சேகரன் சார்பாகப் பேச வந்த நிரல்யாவைக் கண்டு கிராமமே “ஆ”வென வாயைப் பிளந்தது. 




“அடச்சே !பொம்பளை வக்கீலா? இந்த அஸ்வினுக்கு புத்தியே இல்ல” 

தலையிலடித்துக் கொண்ட சேகரன் முகம் சீற்றத்தில் சிவந்தது.

நிரல்யாவுக்கும் எதிர் வக்கீலுக்குமிடையே நடந்த ஆர்க்யுமெண்ட் இதோ!

“சேகரன் ஐயா இரண்டு கோடி ரூபாய் வாங்கியதைக் கண்ணால் கண்ட சாட்சி யாராவது இருக்கிறார்களா?”

நிரல்யா கேட்க.

“அவரே தன் கைப்பட கையெழுத்து போட்டிருக்கறப்ப சாட்சி எதுக்கு” 

“அந்தக் கையெழுத்தே பொய் கையெழுத்தாயிருந்தா?”

“அதெப்பிடி…அவரே போட்ட கையெழுத்துதான். ஒப்பிட்டு பாத்துக்கோங்க.”

சேகரனின் மாதிரிக் கையெழுத்தோடு ஒப்பிட அச்சடித்து போல இருந்தது கடன் பத்திரத்தில் இருந்த கையெழுத்து.

நச்சென்று மூளையில் உறைத்தது அஸ்வினுக்கு. சந்தேகமே இல்லை.பூபாலன் மகன் குணாவின் திருவிளையாடல்தான் இது. சிறுவயதிலிருந்தே அவனுக்கு இதுதான் பொழுதுபோக்கு. நிரல்யாவுக்கும் ரகசியமாகத் தகவல் சொன்னான்.

“இப்ப என்னம்மா சொல்றே‌…? கையெழுத்து சேகரனோடதுதான். அதனால கடனை பணமாவோ ,சொத்தாவோ தரணும்னு தீர்ப்பு சொல்லிடலாம்ல..!”

 பஞ்சாயத்து  பெரியவர் அவசரப்பட..

“இருங்க…இருங்க..சேகரன் ஐயா ரெண்டு கோடி பணம் வாங்கலை,20 லட்சம் தான் வாங்கினதா சொல்றாரு‌ அதுக்கு வீட்டுப் பத்திரத்தை ஈடா கொடுத்ததா சொல்றாரு. அந்தப் பத்திரத்தப் பத்தி பேச்சே இல்லையே. ஒரு வருஷமா குடுத்த வட்டிப் பணம்..? அதுக்கென்ன சொல்றீங்க?

“பத்திரம் தரவே இல்லை! வட்டிப் பணத்தைக் கண்ணால் பார்த்தது கூட இல்லை” சாதித்தது எதிர்தரப்பு. 

“அதெப்பிடிங்க! இத்தனை பெரிய தொகையை அடமானம் எதுவுமில்லாமலா தந்தீங்க.?”

“எல்லாம் சேகரன் மேலிருந்த நம்பிக்கைதான்.இப்படி மோசக்காரனா இருப்பான்னு நினைக்கவே இல்லையே!”

“ஓ…அப்படியா! சேகரன் ஐயா நல்லவரா, மோசக்காரரானு தெரிஞ்சிக்க ஒரு வழியிருக்கு.”

“ஆஹா‌..என்ன வழி சொல்லும்மா..”

ஆரவாரித்தது கூட்டம்.

“சொல்றேன்..இதோ கடன் பத்திரத்துல இருக்கற கையெழுத்தையும்,இப்ப சேகரன் ஐயா போட்ட கையெழுத்தையும் சென்னைக்கு தடய அறிவியல் துறை மூலம் அனுப்பினா கையெழுத்து நிபுணர் இது பொய்க் கையெழுத்தா, இல்ல சேகரன் ஐயா போட்ட கையெழுத்தானு  கண்டு பிடிச்சிருவாங்க.

பத்திரத்துல இருக்கிறது சேகரன் ஐயா கையெழுத்துதான்னா, பஞ்சாயத்துக்காரங்க எடுக்கற முடிவுக்கு நாங்க கட்டுப்படறோம். இதே பத்திரத்துல இருக்கிறது பொய் கையெழுத்துன்னு தெரிஞ்சுது…கோர்ட்ல நாங்க மான நஷ்ட வழக்கு போடுவோம். அந்த ரெண்டு கோடிய நீங்க எங்களுக்குத் தர்ற மாதிரி ஆகிடும். அதுமட்டுமல்லாம பொய் கையெழுத்து போட்ட குற்றத்துக்கு ஏழு வருஷம் ஜெயில்தான்.

என்ன வக்கீல் சார்…நான் சொன்னதெல்லாம் சரிதானே!”




நிரல்யா அதிரடியாகப் பேச‌..

அதிர்ந்து போன எதிர்த்தரப்பு..

தனியாகக் கலந்து பேசினார்கள். வக்கீல் நிரல்யா சொன்னதுதான் சரி…எக்ஸ்பர்ட்ஸ் முடிவுக்கு சென்னைக்கு அனுப்பலாம் என்று சொல்ல‌…பூபாலன் மறுக்க, அப்போதுதான் வக்கீலுக்கே தெரியவந்தது அது ஃபோர்ஜரி என்பதே!  

தன்னிடம் உண்மையை மறைத்து பஞ்சாயத்துக்கு அழைத்து வந்ததற்காக கடும் கோபமடைந்தவர்..

“கோர்ட்டுக்குப் போனால் நஷ்டமடையப் போறது நீங்கதான். ‌ஒழுங்கா சேகரன் தர வேண்டிய இருபது லட்சத்தையாவது வாங்கப் பாருங்க .மாட்டிகிட்டீங்க உங்க கதி அதோகதிதான்”

கடுமையாக எச்சரித்தவர், அவர்களிடம் உள்ள சேகரன் வீட்டுப் பத்திரத்தையும் தந்து விடும்படி சொல்லிவிட்டு இதற்குமேல் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவ முடியாதென விடைபெற்றுச் சென்று விட, பஞ்சாயத்தில் கூடியிருந்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக உண்மை தெரிந்து விட்டது. சேகரனின் ஆதரவாளர்கள் கடன்கொடுத்தவனையும் பூபாலனையும் சூழ்ந்து கொண்டு அடிக்கத் துவங்க அஸ்வினும்,நிரல்யாவும் அவர்களைத் தடுத்து இருபது லட்சத்தைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்து  அதற்கான பத்திரத்தையும் வீட்டுப் பத்திரத்தையும் மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்ள வீட்டுப் பத்திரத்தை மீட்டு சேகரனிடம் கொடுத்தனர் ஊர்ப் பெரியவர்கள்.

நடந்ததெல்லாம் கனவா, நனவா என்று தடுமாறித்தான் போய் விட்டார் சேகரன். ஆரம்பத்தில் நிரல்யாவை வெறுப்போடு பார்த்தவர்..படிப்படியாக வியப்புடன் பார்க்க ஆரம்பித்து விட்டார். இந்த சிறு பெண்ணிற்கு இப்படி ஒரு வாதத் திறமையா? இந்த தைரியமும்,திறமையும் கல்வியறிவால் வந்ததுதானோ? கலைமகளும் மலைமகளும் ஒன்றாகி வந்த அம்சமோ? இந்தப் பெண்தானே மோசடிக்காரன் என்ற அபவாதத்திலிருந்து என்னை மீட்டது? சொத்துகள் பறிபோகாமல் காப்பாற்றிக் கொடுத்தது? பாரதியார் பெண்களை சக்தி அம்சமாகப் போற்றியது உண்மைதானோ?  இதுவரை பெண்களைப் பற்றி இப்படி ஓர் உயர்வான எண்ணம் அவர் மனதில் தோன்றியதே இல்லை. சட்டென ஒரு மனமாற்றம் ஏற்பட மலைத்துப் போய் நின்றவரிடம்..

“அப்பா இவங்க நிரல்யா..சென்னைல வக்கீலா இருக்காங்க” 

மனதுக்குள் பயந்து கொண்டே அஸ்வின் அறிமுகப்படுத்த ..

இருகரங்களையும் கூப்பி..

“நன்றி தாயி” என்று கூறியது சேகரன் தானா?




What’s your Reaction?
+1
8
+1
12
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!