Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-14

14

“வித்யா! நான் எதையும் திட்டம் போட்டு செய்யல.”

“திட்டமிடாமலா கல்யாணத்தன்னைக்கு ஓடினீங்க ஆன்ட்டீ”

“என்னப்பா அஸ்வின்! அம்மான்னு கொஞ்சம் முன்னாடி ஆசையாக் கூப்பிட்ட நீ இப்ப ஆன்ட்டியாக்கிட்ட.”

“அவ்வளவு தான் ஆன்ட்டீ. 25 வருஷமா எங்கம்மாவை ஊமையா மனசுக்குள்ள அழ வச்சவங்க பெண்ணை எப்படி நான் கட்டிக்க முடியும்.

ஸாரி நிரல்யா!

காதலியையோ காதலையோ கைவிடறவன் நானில்லை.ஆனா ஒரு அம்மாவுக்குப் பிள்ளையா அவங்க மனசு வருத்தப்படற எதையும் செய்ய நான் தயாரா இல்லை”

தனக்காகத் தன் காதலையே தியாகம் செய்ய முன்வரும் மகனை இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

“எனக்குப் படிப்பு மீதிருந்த ஆசையை நிறைவேத்திக்க‌ நான் போனது தப்பா?”

“அது தப்பில்ல.ஆனா உங்க கழுத்துக்கு வந்த கத்தியை எங்கம்மா பக்கம் திரும்பிவிட்டது தான் தப்பு.உயிர்த்தோழியிடம் கூட சொல்லாமல் உங்க காரியத்தைப் பார்த்துகிட்டு நீங்க நகர்ந்திட்டீங்க.ஆனா எங்கம்மா…

அந்த இடத்தில் ஊர் மொத்தமும் குறை சொல்ற இடத்தில் கையறு நிலையில் நின்னாங்க.

இன்னைக்கு உங்க பொண்ணு ஆசைப்பட்ட வாழ்வு கிடைக்கணும் னு நீங்க தவிக்கிறீங்க.அன்னைக்கு அவமானப்பட்டு நின்ற இரண்டு ஜீவன்கள் விருப்பமே இல்லாம ஊருக்காக ஜோடியா மாறிய அவலம் உங்களால் தான்.எங்கப்பா‌ அம்மா..இரண்டு பேரும் மனப்புழுக்கத்தோட இத்தனை நாள் வாழ்ந்ததுக்கு காரணமே நீங்க தான்.”

அஸ்வினின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய்

ஜானகியைக் குத்தின.

“திரும்பவும் சொல்றேன் அஸ்வின்.உங்கப்பாவை அவமானப்படுத்தணும் னு நான் நினைக்கல.அவர் கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.”

“தேவையே இல்லைமா.அது எதுக்கு பழைய கதை.அதை நான் எப்பவோ மறந்திட்டேன்.

ஆனா ஒரு விஷயம்…என் புள்ள சொன்னமாதிரி வித்யாவை விருப்பமில்லாம கட்டிக்கல.அவ கழுத்தில் தாலிகட்டின மறுநிமிஷம் அவ தான் எனக்கு எல்லாம்.அந்த உரிமையில் தான் அவளை நான் திட்டறதும் கொட்றதும்.”

சேகரன் திடீரென்று பிரவேசிக்க

அஸ்வின் திகைத்துப் போனான்.

வித்யாவுக்கோ உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது.

இந்த முரட்டு மனுஷனுக்குள்ள இத்தனை பாசமா?

இந்த ப்ரியத்துக்காக அவள் ஜானகி என்ன இன்னும் எத்தனை துரோகிகள் வந்தாலும் மன்னிப்பாளே.

“சரி.வித்யா.ஏன் மசமசனு நிக்கிற.வந்தவங்களுக்கு விருந்து சமைச்சு போடற வழியைப் பாரு”




வழக்கம் போல சேகரன் சிடுசிடுக்க வித்யா “இதோ போறேங்க ” என பவ்யமாகக் கூற

அஸ்வினுக்கு கொஞ்சம் ஆசுவாசமானது

நிரல்யாவோ அங்கு நடப்பது எதுவும் புரியாமல் யார் பக்கம் வாதிடுவது என தவித்தாள்.

ஜானகிக்கும் மனது தாளவே இல்லை . தன் ஒருத்தியின் அபிலாசை இப்படி இன்னொருத்தியின் வாழ்வை அழிக்கும் என்று அவர் கிஞ்சித்தும் நினைக்கவில்லை தன்னுடைய ஆசையை நிறைவேற்ற அவள் போட்ட திட்டம் அதை நோக்கிய அவளுடைய முனைப்பு மட்டும் தான் அப்போதைய அவளுடைய இலக்காக இருந்தது . இன்று துணைவேந்தர், பதவி சிறந்த பேராசிரியர் என்ற பட்டம் விருது என்று எத்தனையோ உயரத்தை அவள் அடைந்து விட்டாள். ஆனால் அது அத்தனையும் வித்யாவதியினுடைய ஆசைகளைக் கொன்று அந்த சவக்குழி‌ மேல் நடந்ததாக தான் அவளுக்கு இப்போது தோன்றியது.

வித்யாவைக் கையைப் பிடித்து தோட்டத்துப்பக்கம் அழைத்து வந்தவள்.

“நிரல்யா.அஸ்வின் நீங்களும் வாங்க.

அன்று என்ன நடந்ததுனு ஒண்ணு விடாம சொல்றேன்.என் மீது எந்த தப்புமில்லைனு என் உயிர்த்தோழி வித்யா கண்டிப்பா புரிஞ்சுப்பா “

“பூம்பொழில் கிராமம்..

அது தான் எங்க ஊர்.எல்லா கிராமத்தையும் போல‌ பழமையும் கட்டுப்பாடுமான ஊர். நானும் வித்யாவும் அங்கேதான் வளர்ந்தோம்.ஒண்ணா படிச்சோம்.ஒத்துமையா இருந்தோம்.ஒரு கூட்டுப் பறவை மாதிரி ஒண்ணா திரிஞ்சோம்.எங்க வீடு ரொம்ப கட்டுப்பெட்டியானது.ஆனா எங்க நட்புக்கு அங்கே தடையேதும் இல்லை.

இரண்டு பேருமே நல்லா படிப்போம்.எங்க கனவுகள் ஒரே மாதிரியா இருந்தது.

நல்லா படிச்சு கல்லூரி ஆசிரியராகவோ வக்கீலாகவோ கலெக்டராகவோ வரணும் னு ஆசைப்பட்டோம்.

உண்மையா சொல்லணும் னு

இந்த மாதிரி ஆசைகளை எனக்குள்ளே விதைச்சதே வித்யா தான்.

என் வீட்டுச்சூழலால் கொஞ்சம் நான் சுணங்கினாலும் வித்யா தான் தைரியம் கொடுப்பா.பயப்படாம எதையும் எதிர்கொள்ளணும் னு சொல்வா.

பத்தாவது பரீட்சை முடிஞ்சு பதினோராம் வகுப்பு போன போதுதான்  எங்கப்பா குண்டைத் தூக்கிப் போட்டார்.

எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா சொன்னார்.நான் எவ்வளவோ கெஞ்சியும் போராடியும் அவர் கேட்கல.எனக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சார்.

இந்த விஷயம் தெரிஞ்சு வித்யா வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ரெடியானாங்க. ஆனா வித்யா அவ பெத்தவங்களை கன்வின்ஸ் செஞ்சு படிக்க அனுமதி வாங்கிட்டா.

என்னால் தான் தப்பிக்க முடியல.

நான் படிக்கணும் னு அப்பாகிட்ட அழுதேன்.

அவரோ கல்யாணம் பண்ணிக்கிட்டு மாப்பிள்ளை அனுமதிச்சா படிச்சுக்கோனு தீர்மானமா சொல்லிட்டாரு.

வீட்டை விட்டு ஓடிப் போயிடலாம் னு வித்யாவைக் கூப்பிட்டேன்.

அவ அதுக்கு உடன்படல.எங்க ஸ்கூல் டீச்சர் ரேணுகாகிட்ட யோசனை கேட்க சொன்னா.”

வித்யா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“ரேணுகா டீச்சரும் முதலில் எங்க வீட்ல தான் பேச சொன்னாங்க.

கட்டுப்பெட்டியான எங்கம்மாவும்

எனக்கு உதவ மாட்டாங்க.பெண்கல்வியோட மகத்துவம் தெரியாதவங்ககிட்ட 

பேசி எந்த பயனில்லைனும்‌ அவங்க மறுத்தா நான் எங்காவது ஓடிப்போவதைத் தவிர வேறு வழியில்லைனு சொல்லி கெஞ்சினேன்.என் பிடிவாதத்தைப் பார்த்து எனக்கு உதவ சம்மதிச்சாங்க.

அவங்களுக்குத் தெரிஞ்ச ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி நான் படிக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

அவங்க சொந்த பிரச்சினை காரணமாக வேலையை விட்டு வேறு ஊருக்கு போறதாகவும்

சாமான் ஏற்ற வரும் வண்டியில் யாருக்கும் தெரியாமல் என்னை ஏறி வரும்படியும் ஐடியா கொடுத்தாங்க.

ஆனா இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாங்க.

எங்கப்பா காதுக்கு விஷயம் போனா ஊர்க்காரங்க டீச்சரை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்கனு பயந்தாங்க.”

“எல்லாம் சரிதான்.ஐடியா கொடுத்த என்கிட்ட மறைச்சது சரியா?”

வித்யா கோபம் குறையாமல் கேட்க..

“எங்கே மறைச்சேன்? கல்யாண வீட்ல நம்மை சுத்தி ஆளுங்க இருந்திட்டே இருந்தாங்க.அதனால ஒரு பேப்பரில் டீச்சர் விஷயத்தை எழுதி உன் பெட்டிக்குள்ளே போட்டேன்.அதுவும் நம்ம சங்கேத பாஷையில்.”

வித்யாவதி திகைத்தாள்.

எல்லாம் முடிந்தபின் தான் அந்த பேப்பரைப் பார்த்தாள்.

ஜானகி மேல் உள்ள கோபத்தில் அந்த கடிதத்தை படிக்காமல் கிழித்து போட்டது ஞாபகம் வந்தது.




“ஓடறவ இரண்டுநாள் முன்னாடி ஓட வேண்டியதுதானே!கல்யாணத்தன்னைக்கு ஓடினதாலதான் எனக்கு பிரச்சினை”

வித்யாவிடம் சுருதி குறைந்திருந்தது.

“அன்றுதானே அந்த வேன் வந்தது?நானென்ன செய்ய?

ஆனால் எனக்குப் பதிலாக உன்னை மாட்டிவிடுவார்கள்னு நான் நினைக்கல.நீ எப்படி இதுக்கு ஒத்துகிட்ட?”

“வேற வழி.ஊர் மொத்தமும் கூடி நின்று செஞ்சிட்டாங்க.அன்னைக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா?”

வித்யா கண்கலங்க ஜானகி அவளை அணைத்துக் தேற்றினாள்.

“என்னை மன்னிச்சிடு வித்தி.ஆனா உனக்கு இப்ப என்ன குறை? ராஜாவாட்டம் ஒரு பிள்ளை..அதுவும் உன்னைத் தாங்கற பிள்ளை..நீ தான் உலகம் னு நினைக்கிற கணவர்..கிடைச்சிருக்காங்களே!”

உண்மைதான். வித்யா கனிவோடு மகனைப் பார்த்தாள்.அவனருகே வியப்போடு நின்றிருக்கும் நிரல்யாவைப் பார்த்தாள்.படிக்கவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவில்லைங்றது வருத்தம் தான்.ஆனால் என் பிள்ளைக்குப் படிச்ச அறிவான மனைவி வரப்போறாளே ..

“ஜானகி நீ செஞ்ச தப்பை நீயே சரி பண்ணிடு.”

“புரியுது.உன் படிப்பைக் கெடுத்த நான் இப்ப கொடுக்கிறேன்.

அட..அஸ்வின் எங்கே?”

என்று தேட..

அவனும் நிரல்யாவும் தன்னைப் பெற்றவர்கள் பிரச்சினை தீர்ந்ததில் நிம்மதியாகி கண்ணாலே தங்கள் காதலை கண்டினியூ செய்து கொண்டிருந்தார்கள்.

வித்யாவும் சமாதானமாகி ஜானகியின் பழைய கதையெல்லாம் விலாவரியாகக் கேட்டுக் கொண்டே விருந்து சமையலை தடபுடலாக சமைத்தாள்.

சாப்பிடும் போது சேகரனும் வழக்கமில்லாத வழக்கமாக சாப்பாட்டுக் கூடத்தில் வந்து அமர்ந்து கொண்டு “பார்த்துப் பரிமாறு வித்யா!” என ஆர்டர் போட்டார்.

அப்பத்தா மட்டும் மனசு சமாதானமாகாமல் உட்கார்ந்திருந்தார்

“எம்மவராசனை வேணாம்னு உதறிட்டு போன மேனாமினுக்கிக்கு அவனே விருந்து வைக்கிறான்.இந்தக் கூத்தெல்லாம் எங்காவது நடக்குமா?அன்னைக்கு நான் மட்டும் இந்த சிங்காரி யைப் பிடிச்சு கட்டிவைக்கலைனா இந்த ஜபர்தஸ்தெல்லாம் நடக்குமா?”

முகத்தை நொடிக்க..

“நான் நல்லதுதானே மா செஞ்சிருக்கேன். வித்யா மாதிரி ஒரு சொக்கத் தங்கம் உங்களுக்கு கிடைச்சிருக்குமா?”

ஜானகி இடைமறிக்க..

“மூணு வேளையும் பார்த்துப் பார்த்து சோறு போடறால்ல அப்புறமென்ன?”

சேகரன் அம்மாவை அதட்டிவிட்டு ஜானகியிடம் விசாரித்தார்.

“வீட்டை விட்டு ஓடிப்போனவங்க பட்டணத்தில் தனியா எப்படி சமாளிச்சீங்க?”

சேகரன் கேட்க..

ஜானகியும் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் தங்கி படித்ததையும் பின் பார்ட் டைம் வேலை பார்த்து மேற்படிப்பு படித்த கதையெல்லாம் விலாவரியாக சொல்ல..

பிரமித்துப் போனார்.

மெல்ல மெல்ல அவள் மீதான மதிப்பு அவருக்குக் கூடியது.

இன்னும் தன்னை பெரிய இக்கட்டிலிருந்து காப்பாற்றிவிட்டு சிறுபிள்ளை போல வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும் நிரல்யா மீதும் அபிமானம் வந்தது.

சாப்பாடு முடிந்ததும் வித்யாவை உள்ளறைக்கு அழைத்தவர்

“அந்த பிள்ளை அதான் அஸ்வின் ஃப்ரெண்ட் .. அதுக்கு எதனாச்சும் செய்யணும்.எவ்வளவு பெரிய சிக்கல். எத்தனை பொய் பித்தலாட்டம்.

பங்காளியா இருந்துகிட்டு துரோகம் பண்ண பார்த்தவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு நம்ம வீட்டை மானத்தை மீட்டுக் கொடுத்த பிள்ளை.அதுக்கு என்ன செய்யலாம்? பணமா கொடுத்தா வாங்குமா?

பேசாம நெல் வித்த காசில் உனக்கு வாங்கின அட்டிகையை கொடுப்போமா?”

இத்தனை வருஷத்தில் காணாத தவிப்பைக் கணவரிடம் பார்த்த வித்யா மனங்குளிர்ந்து போனாள்.




“காசு பணம் நகை

எதுவும் அந்தப் பொண்ணு செஞ்ச உதவிக்கு ஈடாகாது.

உங்க மானத்தை காப்பாத்தியிருக்கா.உங்க கௌரவத்தை மீட்டிருக்கா”

“ஆமாம் வித்யா.

எதிரி வக்கீல் சொன்னார்.எப்பேர்பட்ட வக்கீல் உங்களுக்கு கிடைச்சிருக்காங்கனு.

எல்லாம் எம்புள்ள சாமர்த்தியம்.

அவனையே கேட்போமா?”

“நான் ஒண்ணு சொன்னா நீங்க கோபப்பட மாட்டீங்களே!”

“சொல்லு!”

“பேசாம அந்தப் பெண்ணை நம்ம அஸ்வினுக்கு கட்டிவச்சா என்ன?”

“அவங்க அம்மா பொண்ணு இரண்டுபேரும் நிறைய படிச்சவங்க .சரி வருமா?”

“உங்களுக்கு சம்மதமானு சொல்லுங்க.நான் பேசறேன்.”

அன்றைய சம்பவத்தில் நிலைகுலைந்து போயிருந்த சேகரன் மலைபோல் நம்பியிருந்த பூபாலனின் சாயமும் வெளுத்ததில் கலங்கிப் போயிருந்தார். தனக்கும் பிள்ளைக்கும் பிடிமானத்துக்கு ஒரு வலுவான கை இருப்பது நல்லது தான் யோசித்தவர் தலையசைத்தார்.

வித்யாவுக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது. தான் இழந்தது எல்லாமே ஒரே நாளில் கைக்கு வந்தது போலிருந்தது. உயிர்த்தோழியின் மகளே மருமகளாக வருவது எப்படிபட்ட வரம்..

“அப்புறம் வித்யா..

இவங்க ஒத்துகிட்டாலும் அவங்க வீட்டு ஆம்பளைங்க சம்மதிப்பாங்களானு ஒரு வார்த்தை கேட்டுக்க..”

அதானே!

ஜானகியின் கணவர் எங்கே? அவருக்கு அஸ்வினை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள சம்மதமா!

ஜானகியிடம் கணவரின் எண்ணத்தை சொன்னவள் இதையும் கேட்கவே செய்தாள்.

“நான் குழந்தையா இருக்கறப்பவே அப்பா இறந்திட்டார் அத்தை”

நிரல்யா சோகமாக சொல்ல..

ஜானகியோ முகம் வெளிறி நின்றிருந்தாள்.

எல்லாம் சுமுகமாக நடக்கும் இவ்வேளையில் தான் பெற்றெடுத்த மகளைப்பற்றிய‌ ரகசியம் தெரிந்தால் வித்யா ஏற்றுக்கொள்வாளா?

அஸ்வின்-நிரல்யா திருமணம் நடக்குமா?




What’s your Reaction?
+1
6
+1
11
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!