Serial Stories தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே-28

28

நம் ” மோர் எடுத்துக் கொள்ளுங்கள் ”  புவனா உபசரிப்புடன் வந்து நின்றாள்.  மகளைத் தேடி வந்திருக்கும் விருந்தாளிக்கு ஓரகத்தி எந்தப் பண்டத்தை கொடுத்துவிடுவாளோ எந்த பானத்தை அளித்துவிடுவாளோ என்ற பரிதவிப்புடன் தான் கனகம் உள்ளே எழுந்து கண்காணிக்க சென்றிருந்தாள்.  இப்போதும் உள்ளே போய் பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் பால் போன்ற பானங்களையும் பதுக்கி வைத்துவிட்டு மோரில் இன்னும் தண்ணீர் ஊற்றி நீர் மோராக்கி கனகம் தம்ளரில் ஊற்றவும் திருப்திப்பட்டு வெளியே வந்து இருந்தாள்.

” ஆஹா வெகு ருசி. மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா ”  ஒரு மடக்கு மோரை  உறிஞ்சிவிட்டு பாரிஜாதம் புவனாவை பாராட்டினாள். நீர்த்து கிடந்த மோரும்  இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என புவனாவின் கைவண்ணத்தில்  மணமாக ருசியாக மாறி இருந்தது.

” பால் இருந்ததே. காபி போட்டுக் கொண்டு வந்து இருக்க கூடாதா அக்கா?” கனகத்தின் குயுக்தி கேள்வி பாரிஜாதத்தின் பாராட்டு அவளுக்கு பிடித்தம் இல்லை என்பதனை வெளிப்படையாக காட்டியது.

” கெட்டியாக பால் இருக்கும்போது இந்த நீர் மோர் எதற்கு புவனாக்கா? ” கனகம் தனது கூனி வேலையை தொடர்ந்தாள். உள்ளதைச் சொல்ல முடியாமல் புவனா முகம் வாடி நிற்க பாரிஜாதம் தலையை ஆட்டி மறுத்தாள்.

” இல்லை அம்மா பாலோ காபியோ இந்த நேரத்தில் எனக்கு பிடித்தம் இல்லை.  இந்த நீர் மோரின் சுவைக்கு அவையெல்லாம் ஈடாக முடியாது ”  சப்புக் கொட்டி குடிக்கத் தொடங்கினாள். கனகம் முகம் மாறியது.

” அடிக்கடி லீவு போடுறான்னு கண்டிக்க வந்தீங்களா மேடம்? ” அவளது அடுத்த குறி கமலினியாக இருந்தாள்.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. கமலினி போல் சின்சியர் ஒர்க்கர் கிடைப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவளது உடல் நிலையை விசாரிக்கத்தான் வந்தேன்”. கனகத்தின் முறையற்ற எறி பந்துகளை பாரிஜாதம் ஓசையின்றி நான்கு ரன்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். எதிர்த்து நிற்பதில் பிரயோஜனம் இல்லை என உணர்ந்த கனகம் தனது வியூகத்தை மாற்றினாள் .

“உண்மைதான் மேடம். எங்கள் கமலி ரொம்ப புத்திசாலியான பெண். இடத்திற்கு ஏற்றார் போல் கோளாறாக மாறிக் கொள்வாள். சின்ன பிள்ளை போல்  பாதி வேலையில் விட்டுவிட்டு அடிக்கடி  ஓடி வந்து விடுகிறாள் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அவளுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லை .இன்று அவள் தலை குளித்த நாள். அதனால் வயிற்று வலி  , குறுக்கு வலி. அதனால் தான் குழந்தை பாதியிலேயே வந்து விட்டாள். இது எல்லா பெண்களுக்கும் வரும் பிரச்சனை தான். இதையெல்லாம் சமாளிக்க தெரியாதவர்களா நாம்? ஆனாலும் எங்கள் கமலினிக்கு பூஞ்சை உடம்பு. அதனால்தான் சோர்ந்து விடுகிறாள்.நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதற்காகவெல்லாம் வேலையை விட்டு நிறுத்தி விட மாட்டீர்களே?” கமலினிக்காக பேசுவதுபோல் மேற்பூச்சு இட்டு அவளது குறைகளை எடுப்பாக்கிக் காட்டினாள் கனகம்.




இந்தப் பேச்சில் வாயடைத்து போனாள் பாரிஜாதம் .கனகம் கமலினிக்கு எதிராக பேசுகிறாள் என்றோ சார்பாக பேசுகிறாள் என்றோ நிச்சயமாக யாராலும் வரையறுக்க முடியாது. பாரிஜாததிற்கே இதே சந்தேகத்தில் என்ன பதில் சொல்வது என்ற குழப்பம் வந்தது .மையமாக தலையசைத்து வைத்தாள்.

” கமலினியை வேலையை விட்டு நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு நிச்சயம் கிடையாது ” பாரிஜாதம் உறுதிபட உரைத்தபோது…

“நம் நிறுவனத்துடன் இரண்டு வருடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் கமலினி மேடம். பிறகு எப்படி வேலையை விட்டு நிற்பார்களாம்? ” என்ற குரல் வாசல் பக்கம் இருந்து வர பெண்கள் அனைவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.

 வாசலை அடைத்தாற் போல் நின்று கொண்டிருந்தான் விஸ்வேஸ்வரன். அவனது பார்வை கூர்மையாக கமலனியை கிழித்துக் கொண்டு இருந்தது. பாதியில் ஓடி வருகிறாய் நீ ?என்று கேட்டுக் கொண்டிருந்தது.

அடித்துப் புரண்டு முதலில் எழுந்து கொண்டவள் பாரிஜாதம்தான்.”  விஷ்வா …அது …வந்து …நான் ..வந்து …” குழறினாள்.

” எனது உடம்பை நலம் விசாரிக்க மேடம் வந்தார்கள் சார். “பாரிஜாதத்திற்கு உதவினாள் கமலினி.

” ஓஹோ…”  விஸ்வேஸ்வரன் தலையசைத்துக் கொண்டான். ” அம்மா உங்களை தேடினார்கள். நீங்கள் வீட்டுக்குப் போங்க.” ஆணை போல் இருந்தது அவனது குரல்.

பாரிஜாதம் விழுந்தடித்து என்பார்களே அதே போன்றோர் அவசரத்துடன் வெளியே ஓடினாள். இரண்டே நிமிடங்களில் அவளது கார் கிளம்பும் ஓசை வாசலில் கேட்டது.

ஆ வென முழித்தபடி விஸ்வேஸ்வரனை பார்த்துக்கொண்டிருந்தாள் கனகம்.  “இவர் என் கடை முதலாளி சித்தி” அவள் கை தொட்டு அசைத்தாள் கமலினி.  கனகத்தின் கண்கள் விரிந்தன .இதென்ன  இவளை தேடி முதலாளிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள்…?

 கனகம் வேகமாக இரு கை கூப்பி கும்பிட்டாள்.” வாங்க… வாங்க சார்.   நீங்கள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு வர நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” பவ்யமாக கொஞ்சம் முன் குனிந்து பணிவாக வரவேற்றாள்.

மெல்லிய தலையசைப்பு ஒன்றுடன் உள்ளே வந்த விஸ்வேஸ்வரன் தோரணையாக சோபாவில் அமர்ந்து கொண்டான். இவன் வீடு போல உட்கார்ந்திருப்பதை பாரேன் கமலினி தனக்குள் பொருமிக் கொண்டாள்.

 அங்கே என்னை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இவன்  இப்போது இங்கே எதற்கு வந்திருக்கிறான் ? அவனுக்கு முறையான வரவேற்ப்பை கொடுக்கக் கூட கமலினிக்கு  மனம் வரவில்லை.

” நம் அக்ரிமென்ட் பத்திரத்தின் காப்பி. இதனை உன்னிடம் கொடுத்துவிட்டு செல்ல தான் வந்தேன் ”  கையிலிருந்த கவரிலிருந்து சில பேப்பர்களை எடுத்தான் .

அது கமலினி ஸ்வர்ணகமலம் நிறுவனத்துடன் போட்டுக் கொண்டிருந்த வேலை ஒப்பந்தம் .

இரண்டு வருடங்களுக்கு எங்கள் அனுமதியின்றி வேறு எங்கும் நீ வேலைக்கு செல்லக்கூடாது என்ற கட்டளை சொன்னது பத்திரம். இந்த விவரம் கமலினி அறிந்ததுதான். ஆனாலும் இப்போது அவளுக்கு நினைவுபடுத்துவதற்காகவே இவன் இதனை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறான் .

 ” இந்த விபரம் தான் எனக்கு நன்றாக தெரியுமே சார். இதற்காகவா வந்தீர்கள் ? குத்தலாக கேட்டாள் .

 “இதில் ஒரு இடத்தில் உன் கையெழுத்து மிஸ் ஆகிவிட்டது. அதனை வாங்கிக் கொண்டு உன் உடல் நலத்தை விசாரித்து செல்லலாம் என்று வந்தேன் ”  பேப்பரை திருப்பி அவள்  கையெழுத்திட வேண்டும் என ஒரு இடத்தை சுட்டினான்.

கமலினிக்கு என்னவோ இது  அவன் அவளை பார்க்க வருவதற்காகவே உருவாக்கப்பட்ட பத்திரம் போல் தோன்றியது .வாசித்து கூட பார்க்காமல் படபடவென கையெழுத்திட்டாள்.

  கையெழுத்திடும்  போது “என்னிடம் இருந்து தப்ப முடியாது விஸ்வேஸ்வரனின் இந்த முணுமுணுப்பில் அதிர்ந்தாள்.” என் அனுமதியின்றி வேறு இடத்திற்கு வேலைக்கு போக முடியாது என்று சொன்னேன் ” விளக்கம் சொல்லிக் கொண்டான் அவன்.

” நாளை வேலைக்கு வந்து விடுவேன் சார். யோசிக்காமல் கிளம்புங்கள்  ” அவனை வெளியேற்ற முனைய அவன் சோபாவில் பின்னே சாய்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டான் .

” குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ஆன்ட்டி …?” புவனாவை பார்த்து கேட்டான்.

  “தண்ணீர் எதற்கு? நீங்கள் மில்க்ஷேக் குடியுங்கள் சார்.” பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய நுரை ததும்ப அந்த குளிர்பானத்தை கொண்டு வந்து உற்சாகமாக நீட்டியவள் சங்கவி.

  ” ஓ தேங்க் யூ. மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ் ….? ” விஸ்வேஸ்வரன் மலர்ந்த முகத்துடன் பானத்தை எடுத்துக் கொண்டான்.




” நான் சங்கவி சார் “உதடுகளிலும் பற்கள் முளைத்து இருந்தது சங்கவிக்கு.

“இதையும் சேர்த்து சாப்பிடுங்கள் சார்.” சிப்ஸ் முறுக்கு பிஸ்கட் என ஸ்னாக்ஸ் ஐட்டங்களை தட்டில் பரப்பி கொண்டு வந்துவைத்தாள் கனகம். முதலாளிகளுக்கு மட்டும் அவள் வீட்டில் கொடுக்கப்படும் மரியாதை இது.

கமலினி மரத்த முகத்துடன் சித்தியையும், சித்தி பெண்ணையும் பார்க்க விஸ்வேஸ்வரன் பரவச முகத்துடன் இருந்தான்.

” நீங்கள் எங்கே …என்ன படிக்கிறீர்கள் மிஸ் சங்கவி…? “

” ஐயோ மிஸ் எல்லாம் வேண்டாம் சார். சும்மா சங்கவின்னே கூப்பிடுங்க.நான் ரொம்பவும் சின்னப் பெண்தான்.இந்த வருடம்தான்  படிப்பையே  முடிக்க போகிறேன். கமலினி எனக்கு அக்கா தெரியுமா ? அவளை விட நான் வயதில் இளையவள் .எனக்கு உங்கள் கடையில் வேலை தருகிறீர்களா சார்…?  சேல்ஸ் கேர்ள் வேலை…?”

” ஷ்யூர் …ஷ்யூர் உங்களை மாதிரி அழகான இளம் பெண்களுக்கு என் கடையில் நிச்சயம் வேலை உண்டு ” விஸ்வேஸ்வரனின் ஒப்புதல் பேச்சு கமலினிக்கு மனவலியை கொடுத்தது. அவள் சட்டென எழுந்தாள்.

” நீங்க கிளம்புங்க சார். நான் நாளை காலை வேலைக்கு வந்து விடுவேன். ”  உறுதி மொழியோடு அதட்டலும் அவள் பேச்சில் இருந்தது.  கண்கள் மின்ன அவளை ஒரு பார்வை பார்த்த விஸ்வேஸ்வரன் எழுந்து கொண்டான்.

 ” நாளை காலை வந்ததும் முதல் வேலையாக …”  பேசியபடி அவன் வாசலுக்கு நடக்க கமலினியும் பின்னால் நடக்கவேண்டியவளானாள்.வாசல் தாண்டியதும் “எந்தக் காரணத்தைக் கொண்டும் வேலையை விட்டு நிற்க நினைக்காதே ”  ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்தான்.

” எந்தக் காரணத்தைக் கொண்டும் இனி எங்கள் வீட்டிற்கு வராதீர்கள் ” எச்சரிக்கை ஆட்டல் இப்போது  கமலினியிடமும்.

” ஏனோ! இங்கே வருவதில் என்ன பிரச்சினை  உனக்கு ? ” கமலினி பற்களை கடித்தாள். இவனை… அப்படியே அவனை தெருவில் உருட்டும் ஆசை அவளுள் எழுந்தது.

” நாளை வந்து சொல்கிறேன். முதலில் வெளியேறுங்கள் ”  அவசரப்படுத்தினாள். ஏனென்றால் வாசலில் தயங்கி நின்று பேசிக்கொண்டிருந்த விஸ்வேஸ்வரனை வழி அனுப்பும் நோக்கத்துடன் சங்கவி வெளியே வர முயல்வது அவளது ஓரக் கண்ணில் பட்டது .

” ஏன் இந்த பதட்டம் கமலி? ” தலை வருடி ஆறுதல் அளிப்பது போல் வந்தது விஸ்வேஸ்வரனின் குரல்.

” நீங்கள் முதலில் கிளம்புங்கள் ” பொறுமை இழந்த குரல் கமலினியிடம் …அதோ சங்கவி வர தொடங்கி விட்டாள்.

” இன்னும் ஒரே ஒரு நிமிடம் …இரண்டே இரண்டு வார்த்தை பேசிவிட்டு போய்விடுகிறேனே” விஸ்வேஸ்வரன் அடம்பிடிக்க …சங்கவி வந்தே விட்டாள்.

கமலினி கண்ணகியை கொஞ்ச நேரம் கடன் வாங்கினாள் .

“நான் வரவா சார்? ” சங்கவியின் கேள்விக்கு கமலினியிடம் புருவம் உயர்த்தினான். அவள் முகம் திருப்ப …

” எங்கே? ” சங்கவியிடம் கேட்டான்.

” உங்கள் கடைக்கு வேலைக்கு…”

” அடடா நாங்கள் சின்ன பெண்களை எல்லாம் வேலைக்கு சேர்த்துக் கொள்வதில்லை பாப்பா”.

 பாப்பா வா …? சங்கவி வாயைப் பிளக்க ,” நீதானே பாப்பா கொஞ்ச நேரம் முன்னால் சொன்னாய். நீ மிகவும் சிறு பெண்ணென்று .உன்னை எப்படி நான் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள முடியும். சரி சரி அழாமல் உள்ளே போய் ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு தூங்கு போ. ” குழந்தைகளிடம் பேசும் குரலில் பேசினான்.

திறந்த வாயை மூட தோன்றாமல் சங்கவி நிற்க அவள் நிலைக்கு பீறிட்ட சிரிப்பை அடக்கமுடியாமல் கமலினி வாய் பொத்த  அவளது அந்த  இலகு பாவனையில் திருப்தியுற்று தலையசைத்து ” குட் ..” என்றான்.

 போதும் போகலாம் கமலினி வாய் அசைக்காமல் ஜாடை சொல்ல பணிந்து வெளியேறினான் .சுண்டக்காய்கள் காய்த்த விட்ட முகத்துடன் சங்கவி உள்ளே போனாள்.




What’s your Reaction?
+1
20
+1
16
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!