Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -22

 22

தான் சம்பாரிக்கிறோம் இனி இந்தக் குடும்பமே தன்பேச்சைக் கேட்டுத்தான் நடக்கவேண்டும் என்று மதர்ப்பில் இருந்தவள். மதனின் பார்வை தன் மேல் விழவும் இன்னமும் சந்தோஷக் கூச்சலிட்டாள் யாரும் அறியாமலேயே ?! மதன் மட்டும் அவளுக்கு கிடைத்துவிட்டால் இந்த காம்பெளண்டையே விலைக்கு வாங்கலாம் சஅந்த அபிராமிக்காக தன்னை ஒதுக்கிய சிவாவை எகத்தாளமாய் பார்க்கலாம் இன்னும் இன்னும் ஆயிரம் கனவுகள் அவளுக்கு விஜிக்கு இருந்தது. மதனின் பார்வை தன் மீதுதான் என்பதில் ஐயமில்லை என்றாலும் அந்த அமெரிக்கா மாப்பிள்ளை ராதிகாவுக்கு அமைந்ததில் மிகவும் மனத்தாங்கல் விஜிக்கு அதெப்படி அழகியும், யுவதியுமான தன்னை விட்டுவிட்டு அந்த செகண்டன்ட்காரியை மனமுடிக்க நினைத்திருப்பான்.

எது எப்படியோ இப்போது சிக்கியிருக்கும் மதனையும் விட்டால் தன் வாழ்வு சிரிப்பாய் சிரித்துவிடும் இவர்களின் மத்தியில் நான் அப்படி நின்றுவிடக்கூடாது. தன் கைப்பையினைப் பார்த்தாள் முதல்நாள் மதன் தந்திருந்த மாத்திரைப்பட்டை நானிருக்கிறேன் என்று உறுத்தியது. நிச்சயதார்த்தம் முடிந்த அயர்ச்சியிலும் சந்தோஷத்திலும் காம்பெளண்ட் கலகலத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் விஜியின் மனம் மட்டும் புகைச்சலுடன் அதிலும் பின்கட்டுப் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தபோது அபிராமி வந்து விஜி உன்னிடம் கொஞ்சம் பேசணும் என்று சொல்லி இதோ அவளுக்காக கிணற்றடியின் பக்கத்தில் காத்திருக்கும் இந்த நிமிடம் தானாகவே அவளை எப்படி வலையில் விழவைப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவளாகவே வந்து பேச வேண்டும் என்று சொன்னது சந்தோஷமாகவே இருந்தது. மதன் உங்களை அசிங்கப்படுத்தியவளை பழிவாங்க நல்லதொரு வாய்ப்பை அவளே ஏற்படுத்திக் கொடுத்து விட்டாள் என்று சந்தோஷப்பட்டாள்.

மஞ்சள் நிற ஷிபான்சேலை உடலைத் தழுவியிருக்க நிச்சயதார்த்தம் ஆன பெண் என்பதை பறைசாற்றும் விதமாக அரைக்கல்யாணப் பெண்ணைப் போல மெல்லிய அலங்காரத்தில் இருந்தாள் அபிராமி. சிறிய புன்னகை ஒன்றை விஜியைப் பார்த்து சிந்தியவள் நேரம் தாமதிக்காமல் சட்டென விஷயத்திற்கு வந்தாள். 

விஜி நீ படிச்ச பொண்ணு வெளியுலகம் தெரிந்தவள் அந்த மதன் நல்லவன் இல்லை அவனுக்கு ஏற்கனவே நிறைய பெண்களோடு தொடர்பு இருக்கு என்னுடைய தோழி ஒருத்தியுடன் காதலிப்பதை போல பழகி அவளை தவறாக பயன்படுத்திக்கொண்டு கைகழுவிவிட்டான். இப்போ அவ…

அபிராமி உன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது அதற்கு வாழ்த்துக்கள் ஆனா வாழ்க்கையில் நீ மட்டும் நல்லாயிருந்தா போதுமா அடுத்தவங்க நல்லாவே இருக்கக்கூடாதா ? மதன் என்னைக் காதலிக்கிறார். இனிப்பிருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்ப்பதைப் போல அவரைச் சுற்றியும் பெண்கள் மொய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் நீ கூட இருந்ததா அவர் சொல்லியிருக்கிறார்.

அபிராமிக்கு அயர்ச்சியாய் இருந்தது இவள் என்ன அவனுக்கு இத்தனை சப்போர்ட் செய்கிறாள் சொல்லவந்த எதையும் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்று மீண்டும் உண்மைதான் நான் மதனை காதலிப்பதாக சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கு என்னுடைய தோழியைப் போல இன்னமும் எத்தனையோ பெண்கள்அவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு பழிவாங்கிடத்தான் அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாச்சு நடந்த எல்லாமே மதனோட அம்மாவிற்குத் தெரியும் கூடவே சிவாவிற்கும்.

இப்ப என்னை என்ன செய்யச் சொல்றே ?

மதன் நல்லவன் இல்லை விஜி நீ நல்லா வாழவேண்டிய பொண்ணு உன் அக்காவுக்கு இப்போ விடிவுகாலம் பிறந்தாற்போல உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் அது வரைக்கும் இந்த மதன்கிட்டே நீ ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். எனக்குத் தெரிந்து அந்த வேலையை விட்டு நீ நின்னுட்டா கூடதேவலை. அவனுக்கு கல்யாணம் நிச்சயமாகப்போகுது. என்தோழியினையே அவனோட மனைவியா அவங்க அம்மா தேர்ந்தெடுத்து விட்டாங்க. அங்கேயும் நல்லபிள்ளை மாதிரி நடிக்கிறான் உன்கிட்டேயும் நடிக்கிறான். புரிஞ்சிக்கோம்மா அவனை நம்பி இழக்ககூடாததை இழந்திடாதே. விஜி யோசிப்பதைப் போல பாவனைக் காட்டினாள். சட்டென உருவான அத்திட்டத்தினை செயல்படுத்திட கண்களில் நீரை சிந்தவிட்டாள்.

கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்ய சொல்றீயே அபிராமி விஜி அழுகையோடு வார்த்தைகளை சொல்லவும் துணுக்குற்றாள் அபிராமி 

 நீ என்ன சொல்றே ?




அது வந்து……நானும் மதனும் ஒரு சூழ்நிலையில் தவறா நடக்கவேண்டியதாகிப் போச்சு ஆனா இது எதிர்பாராம நடந்தது நான் இருக்கேன்னு அவர் சத்தியம் செய்திருக்கிறார். கூடியவிரைவில் அவங்க அம்மாவைக் கூட்டிவந்து …

எல்லாம் ஏமாற்று வேலை இப்படி ஏமாந்திட்டியே விஜி அபிராமி கை முஷ்டியைக் குத்திக்கொண்டாள். 

விஜி கண்களைத் துடைத்தாள். அபிராமி நீ சொல்றது உண்மைன்னாலும் எனக்காக அவர்கிட்டே போராட யார் இருக்கா ? என் சார்பா பேச தவறை உணர்ந்து எனக்கு ஆறுதலா மதனை எதிர்க்க யாரால முடியும் நீ அதற்கு தயாரா சொல்லு.

அபிராமி தீவிரமாய் யோசித்தாள் பிறகு அந்த மதன் உன்னை எப்போ அடுத்தாக சந்திக்கிறேன்னு சொல்லியிருக்கான். 

நாளை மதியம் மகாபலிபுரத்திற்கு வரச்சொல்லியிருக்கார். அங்கே ஏதோ முக்கியமான முடிவுகளை எடுக்கணுன்னு முடிஞ்சா அங்கேயே நம்ம கல்யாணத்தை முடிச்சிடலான்னும் சொல்லியிருக்கிறார். இப்போ நீ சொல்றதைப் பார்த்தா எனக்கு பயமாயிருக்கு அபிராமி. 

சரி நான் சிவாகிட்டே இதைப்பற்றி பேசி உதவி கேட்கிறேன் ஒரு ஆண்துணையிருந்தா நல்லதுதானே ?!

அய்யய்யோ வேண்டாம். நான் மதனிடம் ஏமாந்து போயிருப்பேனோன்னுங்கிற எண்ணமே என்னை கொல்லுது. இனிமேல் இந்த விஷயம் என் அக்காவுக்கோ அவளைக் கல்யாணம் செய்துக்கப்போற வரனுக்கோ வேற யாருக்கோ தெரியறதை நான் விரும்பலை எல்லாருடைய பாவப்பார்வை என்னை சாகடிச்சிடும் அதுக்கு நானே என் வாழ்க்கையை முடிச்சிக்கிறது பெட்டர். இந்த மகாபலிப்புர டிரிப்பில் நான் தெளிவா மதன்கிட்டே பேசிடறேன் அப்படி நீ சொல்றா மாதிரி அவர் தப்பானவர்னா அங்கிருந்து என் பிணம்தான் வரும் வீட்டுக்கு

 விஜி…

தப்பு செய்திட்டேன் அதுக்கு தண்டனை அடையவேண்டாமா ?

நீ கவலைப்படாதே நாளை மதியம்தானே நானும் உன்கூட மகாபலிபுரம் வர்றேன் என்னை நம்பு தப்பான எந்த முடிவுக்கும் போயிடாதே என்று விஜியிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு யோசனையோடு நகர்ந்தாள் அபிராமி. முட்டாள்தனமாக தன் நடிப்பை நம்பி ஏமாந்து செல்லும் அவளை வக்கிரச்சிரிப்போடு பார்த்த விஜி அபிராமி மகாபலிபுரம் வருகிறாள் என்று மதனுக்குச் சொல்ல விரைந்தாள் அலுவலகம் நோக்கி.

மருத்துவமனை நாப்தலின் வாசத்தோடு மணத்தது. ரிஷப்சனில் இருந்த பெண்ணிடம் தலைமை மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு காத்திருந்தாள் அபிராமி. அவள் மனதிற்குள் குட்டி எரிமலையின் குமுறல். நான் இனிமேல் தப்பே செய்யமாட்டேன் என்று தன் அன்னையிடம் தன் முன்னாலேயே சத்தியம் செய்து விட்டு இதோ அடுத்த பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டானே ?! இதைச்சொன்னால் அந்த அம்மாள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற யோசனையில் காத்திருந்தவளை அழைத்தாள் அந்தம்மாள்.

வாம்மா அபிராமி எப்படியிருக்கே ? நிச்சயத்திற்கு என்னாலே வர முடியலைம்மா ஒரு சர்ஜரி கல்யாணத்திற்கு கட்டாயம் வந்திடறேன் என்று புன்னகையுடன் வாழ்த்துக்களையும் சொன்னார் அந்தம்மாள். 

நன்றிம்மா….நான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

புரியது உன் தோழியைப் பற்றியதுதானே அவளோட உடல்நிலை மட்டுமல்ல மனநிலையும் நல்லாத் தேறிவருது. இன்னும் கொஞ்சநாள்லே அவளுக்கும் மதனுக்கும் கல்யாணங்கிற நல்ல செய்தியை அவளே சொல்லுவா. வாயேன் அவளைப்போய் பார்க்கலாம் உனக்கும் சில ஆச்சரியங்கள் காத்திட்டு இருக்கு. மேற்கொண்டு பேச இடம்தராமல் அபிராமியை அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்றார் அவர். மாடியின் வராந்தாவில் கால்பதிக்கும் போதே விஷயத்தை எப்படி சொல்லுவது என்று மனதில் உருப்போட்டு கொண்டே வந்தாள் அபிராமி.




தானியங்கியாய் மூடியிருந்த கதவைத் திறந்ததும் பார்த்த காட்சியில் அபிராமிக்கு மயக்கமே வரும் போலிருந்தது. அங்கே மதனும் அவள் தோழியும் மதன் அவளுக்கு உணவை ஊட்டிக்கொண்டு இருந்தார் சின்னக்குழந்தைப் போல ஆயிரம் சந்தோஷக்குமிழ்களை முகத்தில் சுமந்தவாறு ஸ்வேதா சாப்பிட்டுக்கொண்டு இருக்க அதைப்பார்த்த அந்தம்மாளின் புன்னகை மேலும் விரிந்தது. 

வாம்மா என்ற அழைப்பில் அவர்கள் இருவரும் கலைய தோழியைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தாள் ஸ்வேதா. வா அபி இப்பத்தான் என்னைப் பார்க்க வழி தெரிந்ததா ? என்ற செல்லக் கோபத்துடன் அவளிடம் பழைய கலகலப்பு மீண்டுவிட்டது தெரிந்தது. 

அபிராமிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி ஸ்வேதா அவளின் உடலை சற்று பரிசோதித்தபடியே சொன்னார் அந்தம்மாள். மதன் நாம கொஞ்சநேரம் வெளியே இருப்போம் அவங்க இரண்டுபேரும் பேசிட்டு வரட்டும் என்று வராண்டாவிற்கு அவர்கள் நகர மேற்கொண்டு அரைமணிநேரம் செலவழித்து அபிராமி வெளியே வர அவளை ஒரு ஏளனப்புன்னகையைப் பார்த்தவாறே நகர்ந்தான் மதன் ஸ்வேதாவின் அறையை நோக்கி

 என்னசொல்றே உன் தோழி

 மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தோழியின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தது அபிராமிக்கு எனக்கு இப்போதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே வந்திருக்கு அபி. அவரை நான் தப்பா நினைச்சிட்டேன் அவங்க அம்மாவுக்கு பயந்துதான் என்னை விட்டுப்பிரியணுங்கிற முடிவுக்கு அவர் வந்திருக்கார். ஆனா நல்லவேளை உன் முயற்சிகள் நல்லமுறையில் அவரை எனக்கு மீட்டுத்தந்து விட்டது இதற்குமேல் வேற என்ன வேண்டும் யூ நோ ஒரு குழந்தையைத் தாங்குறாமாதிரி அவர் என்னைத் தாங்குறார். சந்தோஷமா இருக்கேன் அபி இந்த நிமிடங்களுக்காகத்தான் காத்திருந்தேன் ஸ்வேதாவின் கண்களில் தெரிந்த கனவுகளைப் பார்த்ததும் அபிராமிக்கும் பயம் தொற்றிக்கொண்டது நிச்சயம் உண்மையை இவளிடம் சொல்லி இந்தக் கனவுகளைக் கலைப்பதில் என்ன நலன் அவளுக்குமே வந்துவிடப்போகிறது. அதைவிடத்து மதனின் அன்னையிடம் சொல்லிப்புரிய வைக்கலாம் என்று அபிராமி நினைத்துக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள். 

இப்போது ஸ்வேதாவை நான் வாக் கூட்டிட்டுப் போகிற நேரம் அதனால என்று அவர்கள் பேச்சை இடைமறித்து புன்னகையுடன் அபிராமியைப் பார்த்தான். அவள் தலையைத் திருப்பிக்கொண்டாள். அவனின் தோளில் கிளியைப் போல் தொத்தியபடி தன் மொத்த பாரத்தையும் அவன்மேல் திணித்து நடைபயிலத் தொடங்கினாள் ஸ்வேதா. இதுதான் சமயம் என்று அபிராமி பக்கத்தில் நின்றவளிடம் பேசத் துவங்கினாள்

 நடக்கிறது எல்லாம் நிஜமான்னு நம்ப முடியலை நான் ஒரு பெரிய துரோகத்தை உங்ககிட்டே சொல்லலான்னு வந்தேன் ஆனா இங்கே எல்லாமே வேறாயிருக்கு 

 மதன் கார்மெண்ட்ஸ்ல விஜின்னு ஒரு பொண்ணுகூட பழகறான்னு அவனையும் அவளையும் நீ ஹோட்ல்ல ஒண்ணா பார்த்தே அந்த விஷயம்தானே அபிராமி நீ என்கிட்டே பேச வந்தது. பெரியவளிடம் முகம் மாறா பதிலைக் கேட்டதும் விக்கித்தாள் சிறியவள்

 ஆமாம்மா உங்களுக்கு இது தெரிந்தும் நீங்க ஏன் மதனைக் கண்டிக்கலை ?!

இதுலே மதன் மேல எந்தத்தப்பும் இல்லைங்கிறதாலதான் அந்தப் பொண்ணு தன்னோட வறுமையைப் போக்கிக்க மதனை உபயோகப்படுத்தப் பார்க்கிறதா அவனே என்கிட்டே சொன்னான். தவிரவும் அலுவலகத்தில் கூட இதைப்பற்றி அரசல்புரசலா பேச்சு வந்ததுன்னு மேலாளர் என்கிட்டே சொன்னார் அவளை கண்டிக்கவும் செய்திருக்கிறார் ஆனா அவ கேட்கிற ரகமில்லைன்னு தெரியுது. மதன் ஸ்வேதா கல்யாணம் பத்தி பேசும் வேளையில் அவ தப்பா ஏதுவும் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அவளை வேலையை விட்டு நிறுத்தச் சொல்லிட்டேன். அப்படியே மதன் தப்பு செய்தவனாக இருந்தாலும் அவ கூட பழக வாய்ப்பு இனி அவனுக்கு கிடைக்கப்போறது இல்லை அதனால சிக்கலும் இருக்காது. இதைப்பற்றியெல்லாம் யோசிக்காம நீ கல்யாணக் கனவுகளைக் கண்டுகிட்டு நிம்மதியா இரும்மா என்று அவள் தலையைத் தடவி ஆசீர்வதிப்பைப் போல சொல்லவும். குழப்பத்தோடு மருத்துவமனைவிட்டு வெளியேவந்து ஆட்டோவிற்கு காத்திருந்தாள்.




 

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!