Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-3

3

சரேலென திரும்பியவன்”எதற்காக யாரிடமும் சொல்லாமல் இப்படி உள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?” அதட்டினான்.

“எ…எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை…” மீண்டுமொரு விசும்பல் அவளிடமிருந்து.

“சுற்றிலும் உன் சொந்தங்கள்தானே? ஒருவரிடமாவது சொல்லியிருக்கலாமே?”

“பதறி வருவார்களா என தெரியவில்லை.ஏற்கெனவே எங்கள் மேல் நிறைய கோபத்தில் இருக்கின்றனர்”

“சாவிற்கு கூட வீம்பு காட்டுபவர்களெல்லாம் உறவுகளே இல்லை.என்ன பெண்ணம்மா நீ? வா வீட்டை காட்டு.செய்தியை சொல்லலாம்”

பாரிஜாதம் இன்னமும் தயங்கியே நின்றாள்.இப்போது அவள் உடலின் நடுக்கத்தை இனம் காண முடிந்தது. தளர்ந்த உடலை தாங்கவோ என்னவோ சற்றே பின் நகர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

“அடுப்படி எந்தப் பக்கம்?” உதயன் முகத்தில் பல வித உணர்வுகள். அவளை தாங்க எழுந்த கரத்தை அடக்கி பின் கோர்த்துக் கொண்டான்.

வாய் திறக்கவும் தெம்பில்லையோ…முகத்தை திருப்பி கண்களால் சுட்டினாள்.வேகமாக உள் நுழைந்தவன் அடுப்பருகேயே இருந்த டப்பாவை திறந்து பார்த்து ஸ்பூனால் வாயிலிட்டு சத்துமாவு எனத் தெரிந்து கொண்டு பாத்திரத்தை அடுப்பிலேற்றினான்.

வெது வெதுப்பான கஞ்சியுடன் அவன் வந்த போது,பாரிஜாதம் தந்தையின் கட்டிலருகே தரையில் அமர்ந்து முகத்தை கட்டிலில் பதித்து அவரை பார்த்தபடி இருந்தாள்.சட்டென மனதில் தோன்றிய வலியை ஒதுக்கிக் கொண்டு அவளருகே போய் தம்ளரை நீட்டினான்.

“குடி”

கண்களை மட்டும் அவன் பக்கம் திருப்பி பார்த்தவள் தலையசைத்து மறுத்தாள்.

“எப்போது சாப்பிட்டாய்?”

உதட்டை பிதுக்கினாள்.”தெரியவில்லையா? சாப்பாட்டையே மறந்து விட்டாயா?” கோபமாக கேட்டவனின் மனது உள்ளூற கணக்கு போட்டது.

அன்று காலையே அப்பாவிற்கு உடம்பு சரியின்றி போனதென்பது குமரன் தந்த தகவல்.அது சரியெனில் இவள் இன்று முழுவதும் உண்டிருக்க வாய்ப்பில்லை.அல்லது முதல் நாள்…நாட்கள்,அப்பாவின் உடல் சீர்கேடுற்றிருந்தால் சில நாட்களாகவே சரியான உணவுண்டிருக்க மாட்டாள்.

உதயன் கஞ்சி டம்ளரை அவள் வாயருகே வைத்து அழுத்தினான்.”ஒழுங்காக குடி”அவள் பின்தலையை அழுத்திக் கொண்டான்.




அசைய முடியாமலோ,நகரும் தெம்பற்றோ கஞ்சியை விழுங்கத் துவங்கினாள் பாரிஜாதம்.நீர்த்திரையிட்டிருந்த அவள் கண்கள் தந்தையிடமே மையம் கொண்டிருந்தன.முழு தம்ளர் உணவையும் அவள் வயிற்றுக்குள் அனுப்பிய பிறகே உதயனுக்கு நிம்மதி.

“பெற்ற அப்பாவின் சடலத்தருகே உட்கார்ந்து வயிற்றை நிறைத்த ஒரே உயிர் நானாகத்தான் இருக்கும்” காலி தம்ளருடன் போனவன்,அவள் பேச்சில் திரும்பி முறைத்தான்.

“ஆகாதது எதையும் மண்டைக்குள் போட்டு உருட்டாமல் எழுந்து வா.எல்லோருக்கும் சொல்ல வேண்டும்”

பொம்மையாய் எழுந்து நின்றாள்.தளர்வாய் வாசலுக்கு நடந்தாள்.கதவை திறந்து வெளியே வந்தார்கள்.உடன் மல்லிகை வாசம் நாசியை நிறைத்தது.இழுத்து முகர்ந்தான் தன்னையறியாது.

“இரவில் பூக்கும் பூ.இப்படித்தான் வாசம் இருக்கும்”சொன்னபடி சற்றே மேட்டிலிருந்த வீட்டிலிருந்து இறங்கி நடந்தாள்.

” எந்தப் பக்கம்?” கேட்டபடி அவளுடன் நடந்தான் உதயன்.கை தூக்கி சுட்டிக் காட்டினாள்.பேச்சு அவள் உள்ள அழுகையை வெளிக்காட்டுமென எண்ணியிருப்பாளாயிருக்கும்.

வீடிருக்கும் இடத்தை தாண்டி வயற்பரப்புகளுக்குள் நுழைந்தனர்.

“அந்த வீடா?” வேகமாக அவளைத் தாண்டி நடக்க முயன்றவனின் முன் கை நீட்டினாள்.உதயனின் வயிற்றில் மெத்தென பட்டு வழி மறித்தது அவளது கை.பூச்சென்டொன்றை வயிற்றில் உணர்ந்தவனின் மனம் படபடத்து வானமேறியது.

பாரிஜாதம் குனிந்து கீழே கிடந்த நீண்ட மரக்குச்சியை எடுத்துக் கொண்டு,தரையில் உரசி சத்தமெழுப்பியபடி முன்னால் நடக்கலானாள்.

“இது எதற்கு?” உடன் நடந்தபடி ரகசிய குரலில் கேட்டான்.




“பூச்சிக்களை விரட்ட…” சிக்கனமான பதில்.

“இந்தக் கம்பில் எந்த பூச்சி அடிபடும்?” கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.அந்தக் கண்கள் இதோ சுற்றி செடியில் தலை நீட்டி எழுந்து நிற்கும் பூ மொட்டுகளுடன் ஒத்துப் போவதாக அவனுக்கு தோன்றியது.

“இது…பாம்புகளை விரட்ட…”

“பாம்பா? இங்கே இருக்குமா என்ன?” உதயனுக்கு தொண்டை உலர்ந்த்து.நடையை அவளுக்கு நெருக்கமாக்கிக் கொண்டான்.பீதியுடன் சுற்றிலும் ஆராய்ந்து கொண்டான்.

அருகே வந்த இரண்டு வீடுகளை ஒதுக்கி அவள் மேலும் நடக்க “யார் வீட்டிற்கு போகிறோம்?” விசாரித்தான்.

“பாட்டையா வீட்டிற்கு”

“பாட்டையா ?”

“பாட்டியின் ஐயா அதாவது அப்பா…”

“உங்கள் பாட்டியின்…”

“ம்…என் அப்பாவின் அம்மாவை பெற்ற அப்பா.எங்கள் குடும்பத்திலேயே வயதான மூத்தவர்.அவரிடம்தான் முதலில் சொல்ல வேண்டும்”சொன்னபடி அந்த வீட்டு மேடேறினாள்.

மற்ற வீடுகளை காட்டிலும் சிறிய வீடுதான் அது.வாசல் விளக்கு மாடத்தில் மினுங்கிய சிம்னி விளக்கை அட எனப் பார்த்தான் உதயன்.இதெல்லாம் இன்னமும் இங்கே புழக்கத்தில் இருக்கிறதா?

” பாட்டையா” பாரிஜாதத்தின் மென் குரலுக்கு உள்ளிருந்து பதிலில்லை.உதயன் குரல் உயர்த்தி கதவை அழுத்தி தட்டினான்”தாத்தா…”

“வர்றேன்”நடுங்கலான குரலுடன் கதவை திறந்த வயசாளி கூன் முதுகுடன் கையில் ஒரு கம்பூன்றி நின்றிருந்தார்.இடுங்கிய கண்கள் இருளிலும் பளபளத்து மின்னின.

” நீயா…?” நெற்றியில் கை வைத்து அண்ணார்ந்து பார்த்து பாரிஜாதத்தை அடையாளம் தெரிந்து கொண்டு கேட்டார்.”என்ன?”அதட்டினார்.

“பாட்டையா…அ…அப்பா…” மேலே பேச முடியாது வாய் மூடி நின்றாள் பாரிஜாதம்.

“உங்கள் தூக்கத்தை கெடுத்ததற்கு மன்னிக்கனும் தாத்தா.குமரனின் அப்பா இயற்கையெய்தி விட்டார்.அதனால்தான்…”

பாட்டையா அதிர்வது உடல் நடுக்கத்தில் நன்கு தெரிந்தது.”ம்ம்ம்…”என ஒரு வகையான உறுமலுடன் கை கம்பை ஓங்கி ஓசையுடன் தரையில் தட்டினார்.கண்களை இறுக மூடி அந்த கம்பின் மீதே தலை சாய்த்து ஒரு நிமிடம் நின்றார்.பின் வீட்டை விட்டு வெளியே வந்து பாரிஜாதத்தின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

மேடிறங்கும் போது தடுமாறியவரின் கையை பற்றிக் கொண்டாள் பாரிஜாதம்.நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவர்,துடிக்கும் உதடுகளுடன் தலை குனிந்து நடக்க ஆரம்பித்தார்.




வழியில் தென்பட்ட வீடுகளை கையால் காட்டி கம்பை ஆட்டி விட்டு நடையை தொடர்ந்தார்.பாரிஜாதம் அந்த வீட்டுப் பக்கம் திரும்ப,”அவர்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.நீ தாத்தாவுடன் போ” என உதயன் திரும்பினான்.

அவன் முன் தன் கை குச்சியை நீட்டினாள்.சத்தம் வராமல் “பத்திரம்” என இதழ்களை மட்டும் அசைத்தாள்.

சுற்றிலும் பூத்துக் கிடந்த மலர் கூட்டங்கள் தென்றலை மணத்தோடு வாரி உதயன் முகத்தின் மேல் இறைத்தன.சொல்லப் போகும் சாவு செய்தியை பற்றிய ப்ரக்ஞை இன்றி நிலத்தை விட்டு ஓரடி உயரமாக நடந்து போனான் அவன்.

அடுத்த அரை மணி நேரத்தில் பாரிஜாதத்தின் வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பியது.தம்பி,சித்தப்பா,மச்சான் என தங்கள் உறவு முறையை உச்சரித்தபடி தாமோதரனை சுற்றி நின்றபடி அழுது கரைந்தனர் சொந்தங்கள்.

படபடவென வீடு முழுவதும் விளக்குகள் எரிய விடப்பட,பெண்களின் அழுகுரல் கூட,ஊரே விழித்தெழுந்து அங்கே வரத் துவங்கியது.உதயன் பாரிஜாதத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே ஒரு ஓரமாக சுவர் மூலையில் கண்டு பிடித்தான்.அப்பாவை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

கால்களை கட்டிக் கொண்டு முட்டியில் தலை தாங்கி அவள் அமர்ந்திருந்த கோலம்,தீராத சோகத்தில் இருக்கும் சித்திர தேவதையை நினைவுபடுத்தியது.கலைந்த தலையும்,கசங்கிய உடைகளும் சித்திரப் பெண்ணின் மேல் படிந்திருக்கும் தூசென தோன்ற,உதயனின் கை அவனையறியாமலேயே கைக்குட்டையை எடுத்தது,அந்த சித்திர சட்டத்தின் தூசுகளை துடைக்க.

அடுத்த நொடியே நிலைமை உணர்ந்து தலையை உதறிக் கொண்டான்.உயிரை பறி கொடுத்திருக்கும் சோகத்தில் கூட ஒரு பெண்ணால் இத்தனை அழகாக இருக்க முடியுமா? அவன் விழிகள் அவளையே சுற்றி வந்தது.

“தம்பி யாரு?” திடுமென அவன் தோள் தட்டப்பட திடுக்கிட்டு திரும்பினான்.மேலுதடு நெடுக ஊர்ந்து கன்னம் தொட்டு காது வரை பரவிக் கிடந்த அடர் மீசைக்காரர் ஒருவர் சந்தேக கண்களுடன் அவனைப் பார்த்து நின்றிருந்தார்.




What’s your Reaction?
+1
40
+1
33
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!