Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 5

5

 ” நான்கு நாட்கள் முன்பே போய் அவர்களுடன் தங்கி இருந்து நல்லபடியாக கல்யாணத்தை நடத்திக் கொடுத்து விட்டு வர வேண்டும் ” ஜெயக்குமார் சொல்ல ராஜாத்தி ஒப்புதலாக தலையசைத்தாள்.

” அடுத்த வாரத்தில்  இரண்டு நாள் நான் போய் கீதா வீட்டில் இருந்து விட்டு வருகிறேன். வெளியூர் பத்திரிக்கை வைக்கும் வேலையை அவள் முடித்து விடுவாள் ” ராஜாத்தி மேலும் ஒரு வேலையை சொல்லிக் கொண்டிருந்தாள்.

” இது என்னம்மா அநியாயமாக இருக்கிறது ? ” போர்க்கொடி உயர்த்தினாள்  வாசுகி.

” என்ன அநியாயத்தையடி கண்டாய் ? ” ராஜாத்தி மகளை அதட்டினாள்.

” அந்த கீதா அத்தை வீட்டு கல்யாணத்திற்கா  நீங்கள் இவ்வளவு ஹெல்ப் பண்ண போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் ? ”  தனது சந்தேகத்தை உறுதி செய்து கொள்ளவும் மீண்டும் கேட்டாள்

” ஆமாம் ”  ராஜாத்தி உறுதிப்படுத்தினாள்




” அம்மா அந்த அத்தைக்கும் உங்களுக்கும் எப்போதும் ஒத்தே வராதே . போன தடவை சேகர்  சித்தப்பா மகள்  கல்யாணத்தின் போது கூட உங்களுடன் சண்டை போட்டுவிட்டு தானே பஸ் ஏறினார்கள் ? அவர்கள் வீட்டு கல்யாணத்திற்காகவா இப்படி வேலை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? ” 

” அதுதானே …? அம்மா நீங்கள் அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு போகக்கூடாது ” மாலினியும் கண்டிப்பான பேச்சுடன் வந்தாள்.

” ஏய் மாலுக்குட்டி நீ சின்ன பிள்ளை. இந்த விஷயத்தில் எல்லாம் தலையிடக்கூடாது நீ போய் படி ” ஜெயக்குமார் இளைய மகளை அதட்டி அனுப்பினார். மூத்த மகள் பக்கம் திரும்பினார்.

” அந்த சண்டைகளுக்கும் இந்த வேலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது பாப்பா. சொந்த பந்தங்களுக்குள் இப்படி சண்டை போட்டுக் கொள்வதும் தேவையானபோது கூடிக் கொள்வதும் நடப்பதுதான் ”  கண்டிப்பாக பேசினார்

” அது சரிதான் சண்டையிட்டது உங்கள் தங்கை தானே ?  நீங்கள் இப்படித்தான் பேசுவீர்கள்….”  முணுமுணுத்துக் கொண்டே வாசுகி அப்பா வேலையாக பின்பக்கம் சென்றதும் மீண்டும் அம்மாவிடம் ஆரம்பித்தாள்.

” அம்மா கீதா அத்தை அன்று உங்களை எப்படி எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசினார்கள் . நிறைய தப்பு தப்பான வார்த்தைகளைக் கூட சொன்னார்களே ….எனக்கும் மாலினிக்கும் அன்று அப்படி கோபம் வந்தது. பதிலுக்கு அத்தையை அன்றே நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டிருப்போம் .ஆனால் அப்பாவிற்காக தான் பேசாமல் இருந்தோம். அவர்கள் வீட்டு கல்யாணத்திற்காக நீங்கள் இப்படி திட்டமிட்டு கொண்டிருக்கிறீர்களே ? ” 

” கீதாவின் சுபாவமே அப்படித்தான் பாப்பா .அவள் மனதில் பட்டதை யோசித்து பேச மாட்டாள் .உடனுக்குடன் பட்டாசு வெடித்தது போல் பேசிவிடுவாள் .அவ்வளவுதான் மற்றபடி நல்ல பெண் தான் அவள் ” 

சமாதானம் சொன்ன தாயை ஒத்துக்கொள்ள முடியவில்லை வாசுகியால். அன்று கீதா செய்த… பேசிய விதம் அப்படி.

” சொந்தம் என்று ஆகிவிட்டார்கள் .கல்யாணத்திற்கு போகாமல் இருக்க முடியாது .நாம் எல்லோருமாக கல்யாணத்தன்று மட்டும்  போய்விட்டு வந்துவிடலாம் .மற்றபடி இந்த கல்யாண வேலைகளில் உதவுவது என்பதுபோல கஷ்டமான வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள் அம்மா ” 

” ஐயோ என்ன பாப்பா இப்படி பேசுகிறாய்  ? கல்யாணம் முடிப்பது என்பது லேசான விஷயமா ? இப்படி சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து உதவாவிட்டால் ஒரு திருமணம் நடத்துவது ரொம்ப கடினம்.  பாவம் கீதா அவளை ஏன் இப்படி தண்டிக்க சொல்கிறாய் ? “”

” எப்படி அம்மா உங்களால் இவ்வளவு பொறுமையாக போக முடிகிறது ? “அம்மாவை நம்ப முடியாமல் கேட்டாள்

” பொறுமை காட்ட வேண்டிய இடத்தில் பொறுமை காட்டினால் தான் பாப்பா குடும்பம் என்ற ஒன்று இருக்கும் ” பெற்றவள் மகத்தான வாழ்க்கைப் பாடத்தை மென்குரலில் மகளுக்கு விளக்கினாள்.

” சரிதான் அம்மா .உங்களது பொறுமையை வாங்கிக் கொள்ளும் அளவிற்கு தகுதியுடையவர்கள் இல்லை அத்தை .இதுதான் என்னுடைய வாதம் ” 

” தகுதி தராதரம் எல்லாம் இந்த விஷயத்தில் பார்க்க முடியாது பாப்பா ” 




” ஏன் பார்க்க முடியாது ? எந்த அடிப்படையில் நீங்கள் அந்த அத்தையை இப்படி தாங்குகிறீர்கள் ? எனக்கு சொல்லுங்கள் பார்க்கலாம் ? ” சவால் போல் கேட்டாள்

” இதற்கு ஒரே வார்த்தையில் பதிலளிப்பது என்றால் உன் அப்பா அவ்வளவுதான் ” ராஜாத்தி ” புன்னகைத்தாள்

 அப்பா அவர் தங்கையை கவனிக்காவிட்டால் உங்களை திட்டுவார் என்று நினைக்கிறீர்களா ? ” 

” அவர் திட்டுவதும் திட்டாத்தும்  இங்கே பிரச்சனை இல்லை. உன் அப்பாவுடைய தங்கை அவள் .இது மட்டும் அவளது தவறுகளை தள்ளுவதற்கு எனக்கு போதும் ” 

அம்மாவின் விளக்கங்கள் வாசுகிக்கு நிச்சயமாக பிடிபடவில்லை. தன் சுதந்திரமற்ற அடிமை நிலை என்றே இதனை அவள் நினைத்தாள். ” எனக்கு உங்கள் விளக்கம் புரியவில்லை அம்மா .அப்பாவின் தங்கை என்ற ஒரே காரணத்திற்காக அத்தையின் அராஜகங்கள் எல்லாம் உங்களால் மன்னிக்கப்பட்டு விடுகின்றனவா ? ” 

ராஜாத்தி கை வேலையை போட்டு விட்டு வந்து  மகள் அருகே அமர்ந்தாள் .மென்மையாய் அவளது தலையை வருடி விட்டாள் . ” இதெல்லாம் உனக்கு இப்போது புரியாது பாப்பா .உனக்கு திருமணம் முடித்து உனக்கென்று ஒரு குடும்பம் வந்ததும் அப்போது தான் புரியும் ” 

” அது எப்படி அப்போது மட்டும் புரிந்து விடுமாம் ? ” 

” அது அப்படித்தான் பாப்பா .அத்தையிடம் ஒத்துக்கொள்ள முடியாத குணாதிசயங்கள் உன் நாத்தனாரிடமோ மாமியாரிடமோ  ஒத்துக்கொள்ளக்கூடிய தாகி விடும் ” 

” நெவர் …” குரலுயர்த்தி கத்தலாக சொன்னாள் வாசுகி.”  எனக்கு நியாயம் தான் முக்கியம். நியாயமான வகையில் நடந்து கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன். அது மாமியாரோ நாத்தனாரோ  எல்லோருக்கும் ஒரே தீர்ப்பு தான் என்னுடைய கோர்ட்டில்… ” 

” உன் கணவருக்கு…? ”  சத்தம் ஹாலில் இருந்து வந்தது. அடுப்படிக்குள் இருந்து போய் படி என்று மாலினியை அனுப்பி வைக்க அவள் ஹாலில் உட்கார்ந்து இங்கேதான் காதைத் தீட்டிக் கொண்டு இருந்திருக்கிறாள்.

” கணவர் மட்டும் என்ன பெரிய  தேவராஜனோ …?  அவனுக்கும் அதே சட்டதிட்டங்கள் தான் என்னிடம் ” வாசுகி உறுதியாக கூற …” பாவம்டி அந்த தேவராஜன் ” உச்சுக்கொட்டி பரிதாபப்பட்டாள் மாலினி.

பிறகே இயல்பாக தான் சொன்ன தேவராஜனை  உணர்ந்த வாசுகி நாக்கை கடித்தாள் .ராஜாத்தி அர்த்தத்துடன் புன்னகைக்க தன் வாயை பிடுங்கிய தங்கையின் மீது வாசுகியின் கோபம் திரும்பியது .ஏனென்றால் இன்று வரை அவள் வீட்டில் தனது திருமணத்தை மறுத்துக் கொண்டு தான் இருக்கிறாள் .மேலே படிக்க போகிறேன் என்ற மைண்ட் ரெக்கார்டு வாய்ஸை திரும்பத் திரும்ப எல்லோரிடமும் போட்டுக் காட்டி  கொண்டிருக்கிறாள்.

சை… எப்படி யோசிக்காமல் அவன் பெயரை இழுத்து பேசினேன் தன்னையே நொந்து கொண்டவள் ”  ஏய் வாலு… மாடு படிக்கிறேன் என்று உட்கார்ந்து கொண்டு எங்களை வாய் பார்த்துக் கொண்டிருக்கிறாய் 

.நீ படித்தது போதும் அங்கே வாசலில் காலிங் பெல் அடிப்பது யாரென்று போய் பார் ” தங்கையை ஏவினாள்.

” நான் போகமாட்டேன்பா நான் படித்துக் கொண்டிருக்கிறேன் ” மாலினி  புத்தகத்தை உயர்த்தி முகத்தை மறைத்துக் கொண்டாள். வாசல் அழைப்புமணி மூன்றாவது முறையாக ஒலித்தது.

“நீதான் போயேண்டி ”  ராஜாத்தி கையிலிருந்த கரண்டியுடன் குரல் கொடுக்க வாசுகி தங்கையை முறைத்தபடி வாசலுக்கு நடந்தாள்.

” இந்த அதட்டல் எல்லாம் உன் மாமியாரிடம் வைத்துக்கொள். என்னிடம் செல்லாது ” அடுப்படியில் இருக்கும் அன்னைக்கு கேட்காமல் அக்காவிற்கு கட்டை விரலாட்டினாள் மாலினி.

” மாமியார் நாத்தனார் மட்டுமில்லை .உன்னையும் ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன்டி ”  தங்கையை பேசியபடி வாசலுக்குப் போனவள் திகைத்தாள்.

 வாசல் கதவு திறந்தே இருக்க அங்கே யாரும் இல்லை. திறந்து கிடந்த கதவு வழியாக உள்ளே வராமல் பெல்லை  அடித்துக் கொண்டே இருந்தது யார் வாசுகி எட்டிப்பார்க்க யாரையும் காணவில்லை.

அதே சமயத்தில் ” வாங்க உள்ள வாங்க தம்பி ” என்ற வரவேற்போடு பின்வாசல் வழியாக ஜெயக்குமார் வர திரும்பிப் பார்த்த வாசுகி விழி விரித்தாள். அப்பாவின் பின்னால் தேவராஜன் வந்து கொண்டிருந்தான் .அவனது பார்வை அசைவின்றி இவள் மீது ஊன்றி இருந்தது.

“வீட்டிற்கு வருபவர்களை கவனிக்க மாட்டீர்களா ? ” ஜெயக்குமார் மனைவியை திட்டிக் கொண்டிருந்தார்.

” உள்ளே வேலையாக இருந்தேன் .இந்த பிள்ளைகளை போய் திறக்கச் சொன்னால் அவர்கள் …வாங்க தம்பி கொஞ்சம் கவனிக்கவில்லை தயவான குரலில் சொன்னபடி ” ராஜாத்தி தேவராஜனை வரவேற்றாள் .

” தம்பி முன் வாசலில் பெல்லடித்து சலித்துப்போய் பின்னால் நாம் பட்டறைக்கு வந்து விட்டார் ”  ஜெயக்குமார் மகள்களையும் கண்டிப்பு பார்வை பார்த்தார்.

வாசுகி அப்படியா என்பது போல் தேவாராஜனை பார்க்க அவன் மெல்ல தலையசைத்தான்.

ஜெயக்குமார் சிறிது சங்கடத்துடன் தேவராஜை பார்த்தார் .இங்கே வாசுகி திருமணம் வேண்டாம் என மறுத்து கொண்டிருக்க உடனடியாக அடுத்த ஏற்பாடுகளில் இறங்க தயங்கி கொண்டிருந்தார் அவர். தங்கை வீட்டு திருமணம் நெருங்கி வரவும் அதற்குப் பின்னால் பூ வைத்து நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று தேவராஜ் வீட்டிற்கு தகவல் அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று தன் வீட்டிற்கு வந்து நின்ற தேவராஜனை எப்படி எதிர் கொள்வதென யோசித்தபடி இருந்தார் அவர்.

“நான் வாசுகியிடம் பேச வேண்டும் மாமா “அழுத்தம் திருத்தமாக ஒலித்தது தேவராஜன் குரல்.




வீட்டில் அனைவருக்குமே அதிர்ச்சி தான் .இன்னமும் அவர்களுக்கிடையே திருமண உறுதி செய்யப்படாத நிலையில் அந்த நிகழ்வு உறுதி தான் என்பது போன்ற தேவராஜனின் உறுதியான பேச்சில் எல்லோருக்குமே கொஞ்சம் திகைப்புத்தான் . அதுவும் வாசுகியிடம் பேச வேண்டும் என்ற அவனது உரிமையிலும் மாமா என்ற உறவு அழைப்பிலுமாக எல்லோருமாக கொஞ்சம் குழம்பியே இருந்தனர்.

” என் தங்கை கீதா வீட்டு திருமணம் அடுத்த மாதம் வருகிறது தம்பி .அந்த திருமணம் முடிந்ததும்… தனது நிலையை விளக்கி தேவராஜை தவிர்க்க ஜெயக்குமார் முயல , ஒரு கை உயர்த்தி அவர் பேச்சை நிறுத்தியவன் ”  இந்த விபரங்கள் தான் நீங்கள் முன்பே சொல்லிவிட்டீர்களே மாமா ?  உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும் .இப்போது நான் …” என்று சொல்லி நிறுத்தியவன் அடுப்படி ஓரமாக நின்ற வாசுகியை திரும்பிப் பார்த்தான்.

” வாசுகி இங்கே வா .இப்படி உட்கார்  “அவனுக்கு எதிர் சோபாவை காட்டினான் .வாசுகி திருதிருவென விழிக்க மாலினி பொங்கிய சிரிப்பை கைகளால் மறைத்தபடி சோபாவில் இருந்து எழுந்து உள்ளறைக்கு ஓடினாள் .செய்வதற்கு ஏதுமற்ற அவஸ்தையுடன் ஜெயக்குமார் மகளுக்கு ஜாடை காட்ட வாசுகி அவன் சுட்டிய இடத்தை விடுத்து அப்பாவின் அருகே வந்து அமர்ந்தாள் .உடன் தனது இடத்தை அவளுக்கு அருகில் இருந்த சோபாவிற்கு மாற்றிக்கொண்ட தேவராஜன் தன் கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து அந்த அப்ளிகேஷனை எடுத்தான்.

” இது உன்னுடைய மாஸ்டர் டிகிரி படிப்பிற்கான அப்ளிகேஷன். நிரப்பி கொடு. காலேஜில் கொடுத்து விட்டு போகிறேன் “அவனை பிரமிப்பாய்  நிஜம் தானா என்பது போல் பார்க்க ஆமாமென கண்ணசைத்து தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த பேனாவை அவளுக்கு எடுத்து நீட்டினான்.

“இதெல்லாம் இப்போது எதற்கு தம்பி ? கல்யாணத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாமே ? ” ஜெயக்குமார் சங்கடமாய் தவிர்க்க ” பரவாயில்லை மாமா இப்போதே அட்மிஷன் வாங்கி வைத்து விட்டால் திருமணம் முடிந்ததுமே வாசுகி காலேஜுக்கு  போவதற்கு வசதியாக இருக்கும்  ” என்றான் .வாசுகி நன்றியுடன் அவனை நிமிர்ந்து பார்க்க அதேநேரம் தேவராஜனும் அவளைப் பார்க்க ஜெயக்குமார் எழுந்து கொண்டார்.

” நீ அப்ளிகேஷனை நிரப்பி கொடு  பாப்பா .பட்டறையில் ஒரு வேலை இருக்கிறது .இப்போது வந்துவிடுகிறேன் ” வீட்டின் பின்புறம் இருந்த பட்டறைக்கு நடந்தபடி  போகும் வழியில் கவனித்துக் கொள் என மனைவிக்கு ஒரு கண் ஜாடை காட்டி போனார் .

இளைய மகளை அடுத்த அறைக்குள் அனுப்பிவிட்டு ராஜாத்தி காபி கலக்கிறேன் என்று அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள்.

” எங்கள் வீட்டிற்கு வழி தெரியுமா உங்களுக்கு  ? ” அப்ளிகேஷனை நிரப்பியபடி வாசுகி கிண்டலான குரலில் கேட்டாள்.

” உங்கள் வீட்டிற்கு நான் வந்ததில்லை  ? ” தேவராஜன் புருவங்களை உயர்த்தினான்.

” அது ஏதோ வியாபார விசயம் …வரவேண்டிய நேரத்தில் வரவில்லை ” சிறு குறை தென்பட்ட வாசுகியின் வார்த்தைகளில் தேவராஜனுக்கு மெலிதான புன்னகை வந்தது.

” நான் முன்பே உன்னை இரண்டு முறை பெண் பார்த்துவிட்டேன் .பிறகும் பெண் பார்க்கவென்று சம்பிரதாயமாக வருவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வரவில்லை ” 

“ஏன் பிடிக்கவில்லை ? ” 

” எனக்கு உன்னை இதோ இப்படி எந்த அலங்காரமும் இல்லாமல் இயல்பாக பார்க்கத்தான் பிடித்திருக்கிறது. பட்டும் நகையும் போர்த்தி செயற்கையான தோற்றத்தோடு பார்க்க பிடிக்கவில்லை ” 

உணர்ந்து பேசிய தேவராஜனின் பேச்சில் வாசுகியினுள் ஒரு நெகிழ்வு .அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்கும் பெரிதான உன் அழகு எனக்கு அவசியம் இல்லை என்று சொல்லும் அந்த ஆண்மகனின் இயல்பன்பில்  பாகாய் கரைந்தாள் அவள்.

முழு திருப்தியோடு தனது அப்ளிகேஷனை நிரப்பி அவனிடம் நீட்டினாள் .அவள்  திருப்பிக் கொடுத்த பேனாவை தனது சட்டைப்பையில் சொருகி கொண்டவன் ”  பெஸ்ட் ஆப் லக்  ” என்று அவளுக்கு கை நீட்டினான்.

பக்கத்து அறைகளில் இருந்து தாயும் தங்கையும் தங்களை கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும்  தன் கை தொட நினைக்கும் அவனது தைரியத்தை வாசுகியினால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

” ரொம்ப நன்றி ” என்றபடி கை குவித்தாள் அவள். கண்களில் விஷமம் கூத்தாடியது . தேவராஜனின் முகத்தில் மிகுந்த ஏமாற்றம் தெரிந்தது.”  இன்னமும் கண்டவன் தானா ? ” மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

” எங்கள் கல்யாணத்திற்குப் பிறகும் நான் படிப்பதில் எந்த தடையும் கிடையாதாம் .அவர் தெளிவாக சொல்லிவிட்டார் .வீட்டிற்கே வந்து அப்ளிகேசனையும் பில் செய்து வாங்கிக்கொண்டு போய் காலேஜில் கொடுத்துவிட்டார் . நான் தொடர்ந்து படிக்கப் போகிறேன்  ” தோழிகளிடம் உற்சாகம் பொங்க விளக்கிக் கொண்டிருந்தாள் வாசுகி.

” வாவ் …” ” சூப்பர்  ” என சரண்யாவும் சாரதாவும் வாழ்த்தி கொண்டிருக்க ராதா மெலிதாய் விசும்பினாள்.

” அப்படி என்றால் உங்கள் திருமணம் நிச்சயம் தானா வாசுகி ? ” விம்மலோடு கேட்டாள்

” ஆமாம் .வெகு நிச்சயம் ” வாசுகி எரிச்சலோடு குரலை அழுத்தி பேச ராதா மௌனமானாள் .அவள் முகம் கருத்து துவண்டு போயிருந்தது.

மறுநாள் காலை வாசகிக்கு வந்த செய்தியில் அவள் அதிர்ந்து போனாள் .ராதா விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சாரதா போனில் தகவல் சொன்னாள்.




What’s your Reaction?
+1
18
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!