gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கலையாற் குறிச்சி கூடமுடையார்

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது  கலையாற் குறிச்சி  எனும் கிராமம். அங்கு  அர்ஜுனா மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கின்றன. அவை சதுரகிரி மலையில் உற்பத்தியாகி அங்கு வருகின்றன.  சதுரகிரி மலையில் ஆடுமாடு மேய்ப்பவர்கள் பலர் உண்டு.  ஒரு முறை சிவபெருமான் அவர்களுடன் விளையாட நினைத்தார். ஆகவே அவர் ஒரு கன்று போல உருமாறி அனைத்து மாடுகளின் மடியில் இருந்தும் பாலைக் குடித்து விட்டார். அந்த இடையர்களுக்கு மாடுகளின் பால் வற்றி விட்டதின் காரணம் தெரியவில்லை. குழம்பினார்கள் . ஆகவே என்ன நடக்கின்றது என அவர்கள் கண்காணிக்கத் துவங்கினார்கள்.




ஒருநாள் அந்தக் கன்று அனைத்து மாடுகளின் பாலையும் குடிப்பதைக் கண்டு பிடித்தனர். அதைப் பிடிக்கத் துரத்தினார்கள். சிவபெருமான் ஓடிப் போய் ஒரு சாப்பாட்டு பானையில் ஒளிந்து கொண்டார். வருணனை பெரும் மழையை பொழியச் சொன்னார். அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தப் பானை மிதந்து சென்று கயலாற் குறிச்சியில்  ஓடிய அர்ஜுனா நதியில் உடைந்து விழ சிவன் அங்கிருந்த மண்ணில் ஒளிந்து கொண்டார். அந்த இடத்தின் அருகில் கோவில்பட்டி உள்ளது. அங்கு யாதவர்கள் அதிகம் உண்டு. மாடு மேய்ப்பது அவர்களின் தொழில்.  ஒரு முறை ஒரு யாதவன் அந்த வழியாக மாட்டை ஓட்டிக் கொண்டு சிவபெருமான் மறைந்து கொண்டு இருந்த இடத்தின் வழியே செல்கையில்  சிவபெருமான் அவன் காலை இடறி விட்டார். அது தினமும் தொடர அந்த இடையன் தனது நண்பரான முத்துக் கருப்ப செட்டியாரிடம் அது பற்றிக் கூறினார். அவர்கள் இருவரும் அந்த இடத்துக்குச் சென்று அங்கு தோண்டிப் பார்க்க அதில் இருந்து முதலில் பாலும் அதன் பிறகு ரத்தமும் வர பயந்து போனவர்கள் குழியை ஒரு கூடையினால் மூடிவிட்டு வந்து விட்டனர்.

சில நாட்கள் பொறுத்து அவர்கள் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று மூடி விட்டு வந்த இடத்தில் இருந்த கூடையை திறந்துப் பார்க்க அங்கு சிவலிங்கம் ஒன்று இருந்தது.  அப்போது செட்டியாருக்கு சாமி வந்து தான்தான் அந்த இடத்தில உள்ள கூடை லிங்கம் எனவும் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும் கூற அவர்கள் கிராமத்திற்கு ஓடிச் சென்று அந்த செய்தியை  அனைவரிடமும் கூற அவர்கள் அதை நம்ப மறுத்தனர். ஆகவே கோபமடைந்த சிவன் அனைத்து மாடுகளையும் கல்லாக்கி விட்டார்.




பயந்து போனவர்கள் அந்த லிங்கம் கிடைத்த இடத்திற்குச் சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்கள். உடனே கல்லான மாடுகள் திரும்பவும்  உயிர் பெற்றன.  ஆகவே மக்கள் அங்கு சிவலிங்கத்துக்கு ஒரு ஆலயம் அமைத்து அதை கூடமூடையான் என அழைத்து வழிபடலானார்கள்.  இன்று அந்த செட்டியாரின் வம்சாவளியினரே அந்த ஆலயத்தின் பூசாரிகளாக உள்ளனர்.

சில காலத்திற்குப் பின்னால் கோவில்பட்டியை சேர்ந்த சிலர் அந்த ஆலயம் கட்டியவர்களுக்கு தொந்தரவு தரத் துவங்கினார்கள். அவர்கள் கிராமத்தில் இருந்தவர்களை துரத்தியடித்தனர். ஆகவே சிவன் அந்த வெள்ளம் ஓடிய  நதியின் மத்தியில் ஒரு பாதையை உருவாக்க அங்கிருந்து சென்றவர்கள் அடுத்த கரையை அடைந்தனர். அந்த புதிய இடத்துக்குச் சென்று கூடமுடையான் சிவனுக்கு ஆலயம் எழுப்பினார்கள். சிவன் கிழக்கு நோக்கி நதியைப்  பார்த்திருக்க அவர்கள் வடக்கு நோக்கி பார்த்தபடி இருக்குமாறு  ஐயனாரையும், புஷ்கலா மற்றும் பூர்ணாவையும் பிரதிஷ்டை செய்தார்கள்.  அந்த ஐயனாரை கூடமுடைய ஐயனார் என அழைக்கின்றார்கள். ஐயனாரைத் தவிர சின்ன கருப்பு, பெரியகருப்பு, ஒத்தை கருப்பச்சாமி, லாடன் , சன்யாசி , காளி, வேட்டை அருப்புச்சாமி மற்றும் அக்னி கருப்பச்சாமிகளின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன.




வாயிலில் செட்டியார் முத்தையா சிலை  வடிவில் உள்ளார். அவரே அந்த ஆலயத்தின் பாதுகாவலர். அவரைப் பற்றிய அற்புதமான  கதை இது.  அந்த கிராமத்தின் அருகில் இருந்த இன்னொரு ஊரான செத்தூர் எனும் ஊரில் வாழ்ந்து வந்தவர் இளைஞர் முத்தையா.    ஒரு முறை அவர் அந்த நாட்டு அரசியை காதலித்து  கடத்திக் கொண்டு போய் விட அவனை துரத்திப் பிடித்தார் மன்னர். அவனை சதுரகிரி மலை மீது சிரச்சேதம் செய்தார். ஆகவே அது முதல் தினமும் அந்த செட்டியாரின் ஆவி இரவு நேரத்தில் அந்த அரசியை கடத்திச் சென்றுவிட்டு விடியற்காலை அவளை திரும்பக் கொண்டு வந்து விட்டு விடும். ஆகவே அதை யாராவது தடுத்து நிறுத்தினால் முந்நூறு பொன் காசுகள் தருவதாக மன்னன் அறிவித்தார். ஆலய பூசாரியான முத்துக் கருப்பன் செட்டியார் அந்த ஆவியிடம் பேசி அந்த ஆலயத்தில் கடைசியாக வந்து வணங்கப்படும் தெய்வமாக வந்து இருக்குமாறு கூற அந்த ஆவியும் அதற்கு ஒப்புக் கொண்டது. மன்னன் தான் அறிவித்தபடி முந்நூறு பொற்காசுகளை ஆலய பூசாரியான செட்டியாரிடம் இனாமாகத் தந்தப் பின் செட்டியாரை கொன்று விட்டு அதை திருப்பி எடுத்து வருமாறு கூறி ஆறு சிப்பாய்களை அனுப்பினார். அதை அறிந்து கொண்ட செட்டியார் மந்திரத்தினால் அவர்களை பிடித்து வைக்க மன்னன் வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார். அது முதல் முதல் சிவராத்திரி அன்று செய்யப்படும் முதல் பூஜை  அந்த மன்னனின் பெயரிலேயே  செய்யப்படுகின்றது.

அந்த கடவுளை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவராத்ரி அன்று  மூன்று நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஆடி அம்மாவாசையில் இரண்டு நாட்கள் விழா நடைபெறும். அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி பல இடங்களுக்கும் சென்று வசிக்கும் மக்கள் அந்த விழா காலங்களில் தமது மாட்டு வண்டியில் ஏறி அங்கு வந்து அவரை வணங்குகின்றனர். சுமார் ஐநூறு மாட்டு வண்டிகளில் வந்து அங்கு நடக்கும் விழாவில் மக்கள் பங்கேற்கின்றார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!