Serial Stories நீரோட்டம்

நீரோட்டம்-7 (நிறைவு)

போஃனை அணைத்துவிட்டு நவீனா, “சித்து, நான் உடனே புறப்படணும். பெரியப்பா,

பெரியம்மா,ப்ரீதா எல்லாரும் வராங்களாம்.”என்று சொல்லவும் சோகமானாள் சித்ரா.

 “என்னடி இது! இன்னும் நாலுநாளாவது இருப்பேன்னு பாத்தேன். இன்னும் மலைக் கோயிலுக்கெல்லாம் போகவே இல்ல. “

“இல்ல சித்து. அம்மாவையும் கூட்டிட்டு இன்னொரு வாட்டி வரேன். நீயும் உங்கம்மாவைக் கூட்டிட்டு வா!”என்று கூறி அவளிடம் அவள் அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள். பக்கத்து டவுனிலிருந்து, அவர்கள் எப்போதும் போகும் வண்டியை வரச்சொல்லி, பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். 

“வண்டியில தான போற”என்று சொல்லி எல்லாவற்றையும் மூட்டை கட்ட ஆரம்பித்தாள் சித்ராவின் அம்மா. தோப்புக் காய் என்று மாங்காய், தேங்காய், வீட்டுப் பாலில் செய்த பால்கோவா, மொச்சை, துவரை என்று பயிறு வகைகள் என்று ஏதேதோ சிறிய, சிறிய மூட்டைகளில் கட்டினாள். 

“டிரைவர் தம்பி, பத்ரமா இறக்கி விட்டுட்டு, எல்லாத்தையும் இறக்கி வெச்சிட்டு வந்துடுப்பா”என்று வண்டி புறப்படும் வரை பத்து முறை சொல்லி அனுப்பினார்கள்.

வண்டி தாம்பரம் வந்ததும் அம்மாவுக்கு போன் செய்தாள். அம்மா அனுப்பிய இடம் பல்லாவரத்தில் இருந்தது. 

அழைப்புமணியை அழுத்த, கஸ்தூரி கதவைத் திறந்தாள். அம்மா மட்டும் இருப்பாள், ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்து வந்த நவீனாவுக்கு கூடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. 

நடுவில் கேரம் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அருண், தீபக், ப்ரீதா, பெரியம்மா என நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

“அம்மா, இவங்கல்லாம் எப்ப வந்தாங்க? பெரிப்பா எங்க?” 

“ஏன்! எங்க கிட்டல்லாம் பேச மாட்டியா நவீ? “அவள் குரல் கேட்டதும் எழுந்த வந்த சுஷ்மா கேட்கவும்,”அப்படிக் கேளுங்க பெரீம்மா!”என்றபடி சுஷ்மாவின் இரு பக்கமும் ஒருவராக அருணும், தீபக்கும் நின்றார்கள். 

“இனிமே வீட்ல தான் இருப்பாங்கன்னு நினைச்சு ஆசையா இருந்தோம். எங்க கிட்ட சொல்லாம கூட வந்துட்டாங்க. நாங்க பேச மாட்டோம்னு சொல்லுங்க பெரிம்மா”

“டேய், டேய், என்னை மன்னிச்சிடுங்க டா. அன்னிக்கு அந்த அக்கா வந்தாங்க தான? அவங்கள கொண்டு விடப் போனேன். இனிமே இங்கேயே தான் இருக்கப் போறேன். அடிக்கடி பாக்கலாம். லீவு விட்ட உடனே ஓடி வந்துடுங்க. ஜாலியா சுத்தலாம்.”என்று என்னவெல்லாமோ கெஞ்சியும் பேச மறுத்தவர்கள், “இப்போ அக்கா அழுதிடுவேன்”என்றதும் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். 

அன்று முழுவதும் பேசிப்பேசிக் களைத்தார்கள். மாலையில் பீச், பிறகு டின்னர் என்று போனார்கள். மூர்த்தி பெரியப்பாவின் சாயலில் தன் அப்பாவைப் பார்த்து மகிழ்ந்து போனாள் நவீனா. 

குழந்தைகள் மூலம் அவர்கள் பாட்டியும், மாமாவும் ஊருக்குப் போனதை அறிந்து கொண்டு எல்லோரும் முரளி வீட்டுக்குப் போனார்கள். கிளம்பும் போது அருணும், தீபக்கும், 

“நீங்கல்லாம் அங்க ஜாலியா இருப்பீங்க. நாங்க மட்டும் தனியா இருக்கணுமா. எங்களுக்கும் லீவு தானே! நாங்களும் வரோம். நீங்க சொல்லுங்க கஸ்தூரி பெரீம்மா”என்று பிடிவாதம் பிடித்தார்கள். 

“பசங்களுக்கு லீவு தானேடா! நீங்களும் வந்து அங்க இருந்துட்டு வரலாம்.வாடா!” என்று மூர்த்தி, முரளியைக் கூப்பிடவும் அவர் உடனே மைதிலி முகத்தைப் பார்த்தார். 

“ஏம்மா மைதிலி! நீயாவது சொல்லு அவனுக்கு! இனிமே நாங்களும் இங்க தான் இருக்கப் போறோம். சுமுகமா இருக்கலாமே!”என்று மூர்த்தி நேரிடையாக மைதிலியைப் பார்த்து சொல்லவும் ஒருகணம் திடுக்கிட்ட மைதிலி சுதாரித்தாள். 




“நான் என்ன சொல்றது? உங்க தம்பியை நானா கட்டிப் போட்டு வெச்சிருக்கேன். ஏங்க, என்னைத் தான் தப்பா சொல்வாங்க. நீங்க போய்ட்டு வாங்க. எனக்கு உடம்பு சரியில்ல. நான் இன்னொரு நாள் வரேன்”என்றாள் முகத்தைச் ‘சிடுசிடு’வென வைத்தபடி. 

இவ்வளவு நாள் பழக்கத்தில் மனைவி என்ன நினைக்கிறாள் என்று முரளிக்குத் தெரியாதா? “அவ உடம்பு சரியில்லன்னு சொல்றா. அவளைக் கூட்டிட்டு இன்னொரு நாள் நான் வரேன் . பசங்களை வேணா, இன்னிக்கு நீ கூட்டிட்டுப் போ”என்றார் முரளி. 

இதற்கு மேல் அவர்களை வற்புறுத்திக் கூட்டிட்டுப் போக யாருக்கும் விருப்பமில்லாததால், அருணையும், தீபக்கையும் கூட்டிக் கொண்டு அனைவரும் புறப்பட்டு விட்டார்கள்.

மறுநாள் சிறியவர்களை எல்லாம் சினிமாவுக்கு அனுப்பி வைத்த சுஷ்மா,எல்லோரும் போனதும் கஸ்தூரியைக் கூப்பிட்டாள். பக்கத்தில் மூர்த்தியும் இருந்தார். “என்னவாக இருக்கும்? “என்ற குழப்பத்துடன் அருகில் வந்து அமர்ந்தாள் கஸ்தூரி. அவள் வலது கையை தன் வலது கையால் பிடித்துக் கொண்ட சுஷ்மா  குனிந்தபடி ஒருநிமிடம் ஒன்றும் பேசாமல் இருந்தவள்,தலையை நிமிர்த்திப் பேச ஆரம்பித்தாள். 

“கஸ்தூரி, நான் ஒண்ணு கேப்பேன். தருவியா?”

“அக்கா இது என்ன கேள்வி! தருவியான்னு? என்னை நீங்க கேக்கலாமா? உங்க நல்ல மனசுக்கு எதுவேணா தரலாம் அக்கா. ஆனா குடுக்கறதுக்கு எங்கிட்ட என்ன இருக்கு?”

“உன்னோட பொக்கிஷத்தைக் குடுப்பியா?”

“பொக்கிஷமா?”என்று கேட்டு சிரித்த கஸ்தூரி, “மாமனார் குடுத்த வீட்டைக் கூட அவங்க எடுத்துகிட்டாங்க. மாமியாரோட கொஞ்ச நகைகளும், நவீனாவும் தான் இப்போ என் பொக்கிஷம்” என்றாள். 

“முதல்ல சொன்ன பொக்கிஷத்தை நீயே வெச்சுக்கோ. இரண்டாவதைத் தான் கேக்கறேன்”

“அக்கா”குழப்பமாய்ப் பார்த்தாள் கஸ்தூரி. 

“ஆமாம் கஸ்தூரி. நவீனாவை என் தம்பி சந்தீப்புக்கு கல்யாணம் செய்ய சம்மதம் தருவியா?மும்பைல சொந்தமா தொழில் செஞ்சிட்டு இருக்கான். எந்தம்பிங்கறதால சொல்லல. நிஜமாவே நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. நவியை நல்லபடியா வெச்சுப்பான். என்ன சொல்றே? ப்ரீதாவுக்கு என்னோட இன்னொரு தம்பி சஞ்சீவை நிச்சயம் பண்ணிட்டோம். நீ சரின்னு சொன்னா, இரண்டு பேருக்கும் ஒரே பந்தல்ல கல்யாணம் பண்ணிடலாம்”

சுஷ்மாவின் வலதுகை மேல் தன் கையை வைத்து மற்றொரு கையால் சத்தியம் செய்பவள் போல பிடித்தாள் கஸ்தூரி. 

“அக்கா! உங்களை விட அவளுக்கு நல்லது நினைக்க யாரிருக்கா? அவ உங்களுக்கும் பொண்ணு தான் . உங்க தம்பிக்கு…. இல்லையில்லை, நம்ப தம்பிக்கு நம்ப பொண்ண குடுக்க யார் யாரைக் கேக்கணும்?”

“கஸ்தூரி… கஸ்தூரி.. ஒன்றும் பேசத் தோன்றாமல் அவளைக் கட்டிக் கொண்டாள் சுஷ்மா. 

“நான் வேத்து மொழிக்காரின்னு வேணான்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன். “

“அப்படிப் பாத்தா, உங்களுக்கு நான் வேத்து மொழிக்காரி தானே அக்கா! நவீனாவை நீங்க ப்ரீதாவுக்கு சமமா தானே பாக்கறீங்க! ஒரே மொழி, ஒரே ஜாதி, ஒரே ஊர்னு, ஒரே உறவுன்னு இருந்தும் மைதிலிக்கு என்னோட ஒட்ட முடியலையே! அதை விட நீங்க என்ன வேறயா போய்டீங்க. 

உங்க வசதிக்கும், உங்க தம்பி திறமைக்கும் பொண்ணு குடுக்க உங்க ஜாதியில ஆயிரம் பேர் வருவாங்க! நவீனாவுக்கு நான் தேடினா என்னோட வசதிக்குத் தகுந்த மாதிரி தான் தேட முடியும். ஆனா, அதைக் குத்திக் காட்டாம நீங்க என்னை உசத்தியா வெச்சுப் பேசறீங்க பாத்தீங்களா, அங்க தான் நீங்க இன்னும் உசந்து நீக்கறீங்க. உங்களை விட நல்ல உறவு எங்களுக்கு வேறு யாருக்கா?”

கஸ்தூரியின் பேச்சைக் கேட்டு மூர்த்தியும் அசந்து நின்றார். 

“கஸ்தூரி! நீயும் உங்க அக்காவும் ஒத்துக்கிட்டா போதுமா? நவீனா என்ன சொல்லப் போறாளோ?”என்று மூர்த்தி சொன்னதும், “நீங்களெல்லாம் முடிவெடுத்தப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு பெரிப்பா?” என்று கேட்டுக் கொண்டே நவீனா உள்ளே வரவும், “இத்தனை நேரம் இங்கேயா இருந்தே?”என்று கேட்டாள் கஸ்தூரி. “நானும் இங்கேதான் இருந்தேன் சித்தி”என்றாள் ப்ரீதா. 

“நேரம் இருந்துச்சுன்னு  எல்லோரும் ஐஸ்க்ரீம் சாப்டு போலாம்னு கடைக்கு போனோம். அங்கே சித்தப்பா கூட வந்த சித்தி, “நான் பாத்துக்கறேன்னு கூட்டிட்டுப் போய்ட்டு உங்களை இங்க அனுப்பிச்சுட்டு அவங்க எங்க போய்டாங்க?”ன்னு திட்டிட்டே அவங்களைக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. எங்களுக்கும் படம் பாக்கப் பிடிக்காம திரும்பிட்டோம். நீங்க சீரியசா பேசிட்டு இருக்கவே நாங்க உள்ள வரல. ஒட்டுக் கேக்கணும் னு நினைக்கல. சாரி”என்று இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். 

நவீனாவைத் தனியாகக் கூட்டிக் கொண்டு போய் அவளின் சம்மதத்தைக் கேட்குமாறு சுஷ்மாவும், மூர்த்தியும் வற்புறுத்த, நவீனாவை அறைக்குள் கூட்டிப் போனாள் கஸ்தூரி. 

அங்கே மாட்டப்பட்டிருந்த கணேசன் படத்தை வணங்கச் சொன்னாள் கஸ்தூரி. 

 “மனசு திறந்து உனக்கு விருப்பமான்னு சொல்லு நவீ. நான் முன்னயே சொன்னமாதிரி உனக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்யமாட்டேன். 




அப்பா இல்ல, அதனால நமக்கு இந்த மாதிரி நடந்துடுச்சுன்னு நீ என்னிக்கும் நினைக்கக் கூடாது. சுஷ்மா பெரிம்மா வருத்தப் படக்கூடாதுன்னும் நீ இதை ஒத்துக்கக் கூடாது. 

நீ இன்னும் சின்னப் பொண்ணுதான். இப்பவே உனக்குக் கல்யாணம் செய்ய அவசரமில்ல தான். ஆனால் வர வாய்ப்பை தவற விடக் கூடாதுன்னு நினைக்கறேன். 

கல்யாணம் முடிஞ்ச பிறகும் கூட, நீ படிப்பைத் தொடர்ந்து படிச்சு, வேலைக்குப் போலாம்னு நான் நினைக்கறேன். நீ என்ன நினைக்கறே?”நீண்ட பேச்சுக்குப் பின் மகளை நோக்கினாள் கஸ்தூரி. 

அம்மாவின் தோளில் சாய்ந்து

கொண்ட நவீனா, “அம்மா! என்னோட ஒரு கண்ணை நீயும், மறுகண்ணை பெரியம்மாவும் பொத்தி எங்க நீங்க கூட்டிட்டுப் போனாலும் வருவேம்மா. எனக்கு என்ன தெரியும்னு நீங்க இரண்டுபேரும் என்னைக் கேக்கறீங்க? எனக்கு எது நல்லதுன்னு என்னை விட உனக்குதானேம்மா தெரியும்?” குழந்தையாய் மகள் பேசப் பேச கஸ்தூரிக்கு மகிழ்ச்சியில் மனம் நிறைய, கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. 

நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

முரளியிடமும், மைதிலியிடமும் விஷயத்தைத் தெரிவித்தார்கள். சுந்தரை வேண்டாமென்று மறுத்துவிட்டு, சுஷ்மாவின் தம்பியை நிச்சயம் செய்ததில் மைதிலிக்கு கோபம் எகிறியது. 

அத்துடன் அவன் வசதியானவனாகவும் இருந்ததைப் பார்த்து மனம் புழுங்கினாள். தேவையில்லாத ஆத்திரத்தை கணவனிடம் தவிர வேறு யாரிடமும் காட்ட முடியவில்லை. 

இரு கல்யாணங்கள் ஒரே மேடையில் என்பதால் பெரிய மண்டபத்தை சுஷ்மா வீட்டினர் ஏற்பாடு செய்தனர். இரு மகன்களின் திருமணம் ஆயிற்றே! தடபுடலாக, கஸ்தூரி நினைத்ததற்கும் மேலாக அருமையாக நடந்தது. 

அவர்கள் நினைத்தது போலவே மைதிலி திருமணத்திற்கு வரவில்லை. முரளி மட்டும் பேருக்குத் தலைகாட்டிவிட்டுப் போனார். 

அருணும், தீபக்கும் மட்டும் அவர்களுடனேயே சுத்திக் கொண்டிருந்தார்கள்.

சித்ராவும், அவள் அம்மாவும் இரண்டு நாள் முன்பே வந்து திருமணத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள். 

நிறைவாக நடந்து முடிந்த கல்யாணத்தால் மனம் நிறைந்து போய்த் தனியே அமர்ந்திருந்தாள் கஸ்தூரி. எதிரே கணவனின் போட்டோ. 

“நீங்க என்னைத் தனியா விட்டுட்டுப் போய்டீங்களே, எப்படி நவீனாவைக் கண்கலங்காம வளர்க்கப் போறமோன்னு பயந்துட்டு இருந்தேங்க. நீங்க உங்க அண்ணனையும், அண்ணியையும் அனுப்பி வெச்சுட்டுத்தான் போயிருக்கீங்க!”

“அவனுக்கு எப்பவும் என்மேல பிரியம் அதிகம் கஸ்தூரி”

“அண்ணன் தம்பி நீங்க  இரண்டு பேரும் இப்படியிருக்க . உங்க தம்பி மட்டும் ஏங்க இப்படி?”

“அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு கஸ்தூரி. அதோட அவனுக்கு வாச்ச மனைவி அந்த மாதிரி”

“என்ன கஸ்தூரி? உன்னை அங்க தேடிட்டிருக்கோம். நீ இங்க வந்து தனியா உக்காந்திருக்க! “

கணவனோடு மானசீகமாகப பேசிக் கொண்டிருந்த கஸ்தூரி சுஷ்மிதாவின் குரலால் கலைந்தாள். பக்கத்தில் நின்றிருந்த மூர்த்தி, “என்ன கஸ்தூரி இப்ப நிம்மதியா?” என்று கேட்கவும், அவள் பார்வை கணவனின் படத்தைத் தொட்டு மீண்டது. 

“ரொம்ப நிம்மதிண்ணா. உங்க தம்பி இல்லேங்கற குறையைத் தவிர, வேறெந்த குறையும் எனக்கு இல்ல”சிரித்தவாறே கண்களைத் துடைத்தாள் கஸ்தூரி. 

வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் கஸ்தூரி எதிர்நீச்சல் போட்டுக் கரையேறி விட்டாள். தன் வாழ்க்கையை மட்டுமின்றி, தன் மகள் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொண்டாள். தோணியாய் உதவிய மூர்த்தியையும், சுஷ்மாவையும என்றுமே மறக்கமாட்டாள்.  

வாழ்க்கை எல்லோருக்கும் எதோ ஒரு விதத்தில்  யார் மூலமாகவோ உதவி செய்து கொண்டு தான் இருக்கிறது. 

விதி அல்லது அவரவர் முயற்சியின்படி பலனும் கிடைக்கிறது. நல்லதாய் மாற்றிக் கொண்டு நிறைவாய் வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. 

நிறைந்தது




What’s your Reaction?
+1
7
+1
9
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!