lifestyles News

பழங்குடி இனப் பத்திரிகையாளார் ஜெயந்தி புருதா!

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயந்தி புருதா என்ற பழங்குடி இனப்பெண் அவரது மாவட்டத்தின் முதல் பெண் பத்திரிகையாளர் என்பதோடு தன் இனமான கோயா இனப்பெண்களை முன்னேற்றுவதிலும் செயல்பூர்வமாக இருந்து வருகிறார். ஒடிஷா மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி பருதா என்ற பழங்குடிப் பெண் பத்திரிகையாளர் 2024ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியாவின் W-Power பட்டியலில் இடம்பிடித்து சாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியா முழுதும் சுய உருவாக்க பெண்கள் என்ற வகையில் 23 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.




புருதா தனது மாவட்டத்தில் முதல் பெண் பத்திரிகையாளர் என்பதைத் தவிர, தனது பழங்குடியினமான கோயாவையும் மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். உடன் பிறந்தோர் 11 பேர்களில் ஜெயந்தி 9வது வாரிசு. அவர் தன் தாய்க்கு விறகு சேகரிக்கவும், மாடுகளை மேய்க்கவும், மஹுவா பூக்களை பறிக்கவும் தனது கிராமமான செர்பல்லியைச் சுற்றியுள்ள காட்டில் உதவினார். இதோடு மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியிலும் சேர்ந்து கல்வியைப் பெறத் தொடங்கினார். ஜெயந்தி புருதாவின் இரண்டு ஆசிரியர்கள் அவருக்கு அனைத்துப் பாடங்களையும் கற்பித்தனர்.

மேலும் அவர் கல்விப்புலத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இந்த இரண்டு ஆசிரியர்களும் உதவினர். ஃபோர்ப்ஸ் இந்தியா தகவலின் படி, 10 மாணவர்களே கொண்ட வகுப்பறையில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற தனித்துவத்தையும் ஈட்டினார் புருதா. இவர் தன் கல்வியை வீணடிக்காமல் கிராமத்தில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி புகட்டினார். இதற்கு கடும் எதிர்ப்புகளும் அவருக்கு இருந்தது. சமூக பணியில் ஆர்வமிக்க புருதா இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்தார். ஆனால், அங்கும் நம் இந்திய சமூகத்தைப் பீடித்த நோயான பாகுபாட்டு அரசியல் இருப்பதை அனுபவித்தார்.




இதனால் பத்திரிகைத் தொழில்தான் தமக்கும் தன் இனத்திற்கும் பெண் குலத்திற்கும் மரியாதையைப் பெற்றுத்தரும் என்று முடிவெடுத்தார். புவனேஸ்வரில் உள்ள அஜிரா ஒடிசா ஸ்டுடியோவில் ஒரு மாத பயிற்சிக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான பீரன் தாஸின் வழிகாட்டுதலின் கீழ், ஜெயந்தி புருடா கேமராவை எவ்வாறு கையாள்வது, நேர்காணல் நடத்துவது மற்றும் ஒரு திரைப்படத்தை எடிட் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார். புவனேஸ்வரில் உள்ள ஒரு பிராந்திய செய்தி சேனலில் அவருக்கு வேலை கிடைத்தாலும், அங்கு புருதாவுக்கு உரிய மரியாதைக் கிட்டவில்லை, இவர் எடுத்த செய்திகளுக்கு அவரின் பெயரைக் கொடுப்பதில் சேனல் பாரபட்சம் காட்டியது.

ஆனால் இத்தகைய விஷயங்கள் எதுவும் அவரைப் பலவீனப்படுத்தவில்லை. 2017ல், புருதா பெண் பத்திரிகையாளர்களுக்கான NWMI ஃபெல்லோஷிப்பைப் பெற்ற முதல் பெண் பத்திரிகையாளர் ஆனார். பண உதவி தவிர, அவருக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டது. பின்னர், அவர் 2023ல் ‘ஜங்கிள் ராணி’ என்னும் தொடரின் முன்முயற்சியைத் தொடங்கினார், இது மைய நீரோட்ட ஊடகங்களில் வராத பழங்குடியினக் கதைகளுக்கான சமூக ஊடக தளமாகும். கடந்த ஆண்டு முதல், அவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் சுயாதீன சிந்தனைக் குழுவான பாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசியுடன் தொடர்புடையவர். ஒரு கிளஸ்டர் ஒருங்கிணைப்பாளராக, அவரது பணி CFR (The Community Forest Resource Rights-சமூக வன வள உரிமைகள்) பற்றி பேசுகிறது. “நாங்கள் எங்கள் சொந்த ஊடக நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறோம், எங்கள் சொந்த தளத்தை உருவாக்க விரும்புகிறோம், எங்களின் கதைகளை அதன் வழியே வழங்க விரும்புகிறோம்,” என்று புருதா ஃபோர்ப்ஸ் இந்தியாவிடம் கூறினார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!