Serial Stories

ஓ.. வசந்தராஜா..!-5

5

“அது… வந்து… அக்கா” அஸ்வினி தடுமாறினாள்.

” என்னடி பெரிய இவள் மாதிரி எனக்கு ஆறுதல் சொல்ல வந்தாயே, அப்படி காயப்பட்டிருக்கும் எனக்கு நீ கொடுக்கும் ஆறுதல் இது மட்டும்தான். வாக்கு கொடுத்துவிட்டு பின்வாங்காதே” 

பெருமூச்சு விட்ட அஸ்வினி “சரிக்கா நீ விஷயத்தை சொல். என்னால் முடியுமா? முடியாதா என்று நான் பிறகு சொல்கிறேன்” என்றாள்.

“உன்னால் முடியும்.நிச்சயம் நீ இதனை எனக்கு செய்து தரப் போகிறாய். அந்த வசந்த் ஒரு பர்சனல் லேப்டாப் வைத்திருப்பான். அவனுடைய புதுப்புது சமையல் செய்முறைகளை எல்லாம் அதில் தான் டைப் செய்து வைத்துக் கொள்வான். ஒரு சமையல் செய்து கொண்டிருக்கும் போதே வேறொரு சமையலுக்கான ஐடியா கிடைக்குமாம். அப்பொழுதே லேப்டாப்பில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு அன்று இரவே வீட்டிற்கு போய் அதனை சமைத்து பார்த்து லேப்டாப்பில் ஏற்றி வைத்துக் கொள்வானாம். பெருமையாக எங்களிடம் சொல்லிக் கொள்வான்”

“இந்த சமையல் செய்முறைகளை ஒவ்வொன்றாக அவனது ஹோட்டல்களில் அறிமுகப்படுத்தி வருகிறான்.அப்படி அவன் அறிமுகப்படுத்தும் புது  உணவுகள் நட்சத்திர ஹோட்டல் வட்டாரங்களில் புகழ்பெற்ற டிஷ்களாகி வருகிறது. பாதர் ஆப் தி ஸ்டார் ஹோட்டல்ஸ் டிஷ்ஷஸ் என்று பட்டம் கொடுத்து  எங்கள் கேட்டரிங் கம்யூனிட்டியில் அவனை பாராட்டும் அளவு சுவையான புதுவிதமான உணவு பண்டங்களை கண்டுபிடித்து வைத்திருக்கிறான்”

” அறிமுகப்படுத்தும் உணவுகளுக்கு பேடென்டும் வாங்கி வைத்திருக்கிறான். அந்த வகையிலும் அவனுக்கு பணமும் புகழும் ஒன்றாக கொட்டுகிறது. அதனை சிறிய அளவிலாவது கெடுக்க வேண்டும்”

வசந்தின் திறமைகளையும் அவற்றை காசாக்க கற்றிருந்த அவன் யுக்திகளையும் ஆச்சரியமாக கேட்டிருந்த அஸ்வினி ” இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது அக்கா?” என்றாள்.

“எனக்கு அந்த சமையல் செய்முறைகள் வேண்டும்” முடித்த போது சைந்தவியின் முகத்தில் பிடிவாதம் வந்திருந்தது.

“அவன் ஒரு புது டிஷ்ஸை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதனை நான் என்னுடைய youtube சேனலில் சமைத்து காட்டி விட வேண்டும். அதனை அவன் ஹோட்டலில் சமைத்தால் எனது டிஷ் என்று அவன் மேல் கேஸ் போடுவேன். லட்சக்கணக்கில் பணம் கேட்பேன். பிரபல வசந்த் ராஜ் ஒரு சாதாரண பெண்ணின் யூடியூப் சேனலை காப்பியடித்து அவருடைய நட்சத்திர ஹோட்டலுக்கு பண்டங்களை சமைக்கிறார் என்ற பெயரை சோசியல் மீடியாக்களில் பரப்புவேன். இதனால் எனக்கு லாபம், அவனுக்கு கேரியரில் மிகப்பெரிய களங்கம்” அக்காவின் விளக்கங்களை  கேட்டிருந்த அஸ்வினி முகம் வெளிறினாள்.

“வேண்டாம் அக்கா உனக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி வந்து விடு.இதெல்லாம் நாம் செய்ய வேண்டாம். அவனுடைய லேப்டாப்பில் இருந்து சமையல் குறிப்புகளை நீ கண்டுபிடித்து எடுப்பதெல்லாம் கஷ்டம்” 

” நான் ஏன்டி அவன் லேப்டாப்பை தொட போகிறேன்? எனக்காக நீ தான் அதை செய்யப் போகிறாய்” என்றாள் சைந்தவி மிக உறுதியாக.

“என்ன நானா? சரியாக சொல்வதானால் அவனுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது .அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் எனக்கு கிடையாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி அவனுடைய லேப்டாப்பிலிருந்து…” பேசிக்கொண்டே போனவள் திடீரென விழி விரித்து கத்தினாள்.”அக்கா நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய் ?”

சைந்தவி புன்னகைத்தாள் “உனக்கு புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். அதேதான். நீ அவனை நேரில் போய் பார்க்கப் போவதில்லை. இங்கே நம் வீட்டில் இருந்தபடியே அவனுடைய லேப்டாப்பை ஹேக் செய்து எனக்கு தேவையான தகவல்களை எடுத்து தரப் போகிறாய்”

” நோ…நோ” தலையை பலமாக அசைத்து மறுத்தாள் அஸ்வினி. வேண்டாம் அக்கா இதெல்லாம் தவறு இப்படி எல்லாம் செய்யவே கூடாது”

” கூடவே கூடாததை எல்லாம் அவன் செய்தானே…நாம் ஏன் அவனுக்கு பதிலுக்கு செய்யக்கூடாது?”

” அக்கா நீ ஆத்திரத்தில் இருக்கிறாய். இப்பொழுது இதைப் பற்றி நாம் பேச வேண்டாம். பத்து நாட்கள் போகட்டும் பிறகு பேசலாம்”

“பத்து நாட்களில் உன்னுடைய கம்பெனியிலிருந்து ஆஃபர் லெட்டர் வந்துவிடும். நீ கிளம்பி போய் விடுவாய், நான் நாட்களை தள்ளிப் போட  விரும்பவில்லை அஸ்ஸு. எனக்கு உடனே இதனை நீ செய்ய வேண்டும். இன்று இரவு மட்டும்தான் உனக்கு டைம். நன்றாக யோசித்து விட்டு நாளை காலையில் சொல்”

 சைந்தவி அவளுக்கு முதுகு காட்டி படுத்து போர்வையை தலைக்கு மேல் மூடிக்கொண்டாள். அஸ்வினி அதன் பிறகு வெகு நேரம் தூக்கம் வராமல் மிகப்பெரிய மனப்போராட்டத்துடன் புரண்டு கொண்டே இருந்தாள். இறுதியாக ஒரு முடிவெடுத்து அவள் கண்கள் சொருக தூங்க ஆரம்பித்தபோது வானம் வெளிறத் தொடங்கியிருந்தது.

” அஸ்ஸு எழுந்திரு” பட் பட்டென தன் தோளில் அடிக்கும் வேகத்திற்கு சிரமப்பட்டு விழிகளை திறந்தாள் அஸ்வினி. கண்கள் நெருப்பை வைத்து தேய்த்தது போல் எரிந்தன. சைந்தவி அலுவலகத்திற்கு கிளம்பி நின்றாள். 

“முடிவெடுத்து விட்டாயா?” மாத வட்டிக்கு வந்து நிற்கும் தானாகாரனை போல் நின்றாள்.

 மெல்ல தலையசைத்து சரி சொன்ன அஸ்வினி “உனக்காக நான் இதனை செய்கிறேன். பதிலுக்கு நீ என்ன செய்வாய்?” பேரம் பேசினாள்.




 சைந்தவி முகம் சுளித்தாள். “உனக்கு நான் என்ன செய்ய முடியும்? அப்படி ஒன்றும் என்னிடம் இல்லை?”

” இருக்கிறது அக்கா, இப்போது அம்மாவும் அப்பாவும் உனக்கு ஒரு நல்ல வரனை பார்த்து வைத்திருக்கிறார்கள். மறுப்பு ஏதும் சொல்லாமல் அவரையே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு நீ சம்மதித்தால் உனக்காக நான் அந்த லேப்டாப்பை ஹேக் செய்து தகவல்களை எடுத்து தருகிறேன்”

 அஸ்வினி உறுதியாக சொல்ல சைந்தவி கைகளை பிசைந்தபடி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக சில நிமிடங்கள் நடந்தாள். பிறகு “சம்மதம்” என்றாள்.

” நிஜமாகவா அக்கா? பிறகு மனம் மாற மாட்டாயே..?”

” என்னடி காதல் தோல்வியில் கல்யாணமே வேண்டாம் என்று இருந்து விடுவேன் என்று நினைத்தாயா? அது காதலோ கன்றாவியோ தெரியாது. ஒரே ஃபீல்டில் இருக்கிறோம், நிறைய பணம் வைத்திருக்கிறான். பார்க்க நன்றாக இருக்கிறான். இவனை கல்யாணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருக்கலாமே என்று கணக்கிட்டேன். முடியாது போ என்று அவன் வக்கரித்துக் கொண்டானானால் அவனை நினைத்தே காலம் முழுவதும் அழுது கொண்டிருப்பேனா? எனக்கென்று ஒரு வாழ்க்கையை நான் தேடித்தானே ஆக வேண்டும். எனக்கு முழு சம்மதம். நீ இன்றே உன் வேலையை ஆரம்பித்து விடு”

 மிகத் தெளிவாகப் பேசிய தமக்கையை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் அஸ்வினி. “யு ஆர் வெரி பிராக்டிகல் கா”

“ம்  இல்லைனா இந்த அவசர யுகத்துல ஐந்து நிமிடம் கூட வாழ முடியாது. அடுத்து உன்னுடைய மூமென்ட் என்ன?”

 அஸ்வினி தன்னுடைய பர்சிலிருந்து ஒரு மிகச்சிறிய பென்டிரைவை எடுத்துக் கொடுத்தாள். “இதனை வசந்த்தின் லேப்டாப்பில் சொருகி வைத்து விடு. உடனே எனக்கு தகவலும் கொடுத்து விடு. ஒரு மணி நேரம் இந்த பென்டிரைவ் லேப்டாப்பில் சொருகி இருந்தால் போதும். நான் அவன் லேப்டாப்பில் இருக்கும் எல்லாவற்றையும் என் லேப்டாப்பிற்கு கொண்டு வந்து விடுவேன்”

” சூப்பர் அஸ்ஸு. முடிந்தால் இன்றே செய்து விடுகிறேன்” 

“அக்கா ஜாக்கிரதை இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் கேமரா இருக்கிறது”

” ஆமாம்தான் அவன் ஹோட்டலிலும் சுற்றி சுற்றி கேமரா செட் செய்திருக்கிறான். ஆனால் அவனுடைய பெர்சனல் ரூமில் கேமரா கிடையாது. எனக்குத் தெரியும், அங்கே லேப்டாப் இருக்கும்போது இதனை சொருகி விடுகிறேன்” சைந்தவி உற்சாகமாக கிளம்பினாள்.

ஒரு சில நாட்கள் ஆகலாம் என்ற அஸ்வினியின் கணிப்பு பொய்யாகி அன்று பிற்பகல் 3 மணி அளவில் சைந்தவியிடமிருந்து பென் ட்ரைவை லேப்டாப்பில் சொருகி விட்டதாக மெசேஜ் வந்தது.

 அஸ்வினி உடனே தனது லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.




What’s your Reaction?
+1
29
+1
20
+1
3
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
13 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!