lifestyles

வினோதமாக விசிலடிக்கும் வில்லேஜ் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா?

ந்திய நாடு கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட நாடாகும். இங்கே பலவிதமான மக்கள் பலவிதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ்கிறார்கள். எனினும் மக்களுக்குள் இருக்கும் எல்லா வேற்றுமைகளையும் ஏற்று ஒற்றுமையாக வாழ்வதே நம்முடைய பலமாகும்.

இதையெல்லாம் இப்போ ஏன் சொல்றேன்னு நினைக்கிறீங்களா?அதற்கு காரணம் இந்தியாவில் உள்ள ஒரு வினோதமான மற்றும் ஆச்சர்யமான கிராமத்திற்கு உங்களை கூட்டி செல்வதற்காகத்தான். வாங்க போகலாம்.

இந்தியாவில் உள்ள வடகிழக்கு மலைப்பிரதேசமான மேகாலயாவில் உள்ள ‘கோங்தாங்’ என்னும் கிராமத்தை ‘சிங்கிங் வில்லேஜ்’ என்று கூறுவார்கள். அதாவது பாட்டு பாடும் கிராமம். இந்த கிராமம் அதனுடைய தனித்துவத் திற்காகவே நிறைய சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் உலகிலேயே சிறந்த கிராமத்திற்கான போட்டியில் 2021ல் கலந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியம் தகுதியை பெறுவதற்றாகான நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது.




கோங்தாங் கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் அழகையுடையதாகும். இந்த இடம் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும். இந்த கிராமத்தில் வசிப்போர் மிகவும் வித்தியாசமான முறையிலே பேசிக்கொள்வது மற்றவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது. இவர்கள் விசிலையே மொழியாக பயன்படுத்துகிறார்கள்  என்பது அதிசயிக்க வைக்கிறது. அந்த விசில் மொழியின் பெயர், ஜிங்வாய் லாவ்பே (Jingrwai lawbei) ஆகும். இந்த கிராமம் உயிருள்ள வேரினால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கும் பெயர் போனதாகும்.

சுற்றுலாப்பயணிகளும் பல நாடுகளிலிருந்து மொழியை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அமேரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜெப்பானிலிருந்தும் வருகிறார்கள். இக்கிராமத்திற்கு வந்து இம்மக்களை பார்த்து வியந்து போகின்றனர்.

இக்கிராமத்தில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும், அக்குழந்தைக்கு அதனுடைய தாய் விசிலால் தாலாட்டை பாடுவார். அந்த தாலாட்டே அக்குழந்தையின் பெயராக மாறிவிடுகிறது. மற்றவர்களும் அவர்களை அந்த விசிலை வைத்தே கூப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவருக்கும் தனி தனி விசில்கள் உண்டு என்பது இன்னமும் வியப்பான விஷயமாகவே உள்ளது.

இந்த கிராமத்தில் மொத்தமே 500 முதல் 700 மக்களே உள்ளார்கள். அப்படியானால் 700 விதமான விசில்களை கேட்கலாம்.

கோங்தாங் கிராமத்தில் இருக்கும் மக்கள் காசி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் காசி மொழியினை பேசுகிறார்கள். எனினும் ஒவ்வொருவருக்கும் விசிலில் பெயர் வைப்பது என்பது அவர்களுடைய பாரம்பரியமாகும்.

இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதனுடைய தாய் தொடர்ந்து விசில் மூலமாக தாலாட்டை பாடி அதை அக்குழந்தையின் மனதில் பதிய வைத்து விடுகிறார்கள். எனவே இங்கே இருப்பவர்களுக்கு பெயர் என்று தனியாக எதுவுமில்லை. விசிலிலே பாட்டு பாடியே ஒருவரை இன்னொருவர் அழைத்து கொள்கிறார்கள்.  இதை வெளியிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த ஊரிலேயே இருக்கும் கிராமத்து மக்களுக்கு மட்டுமே புரியும் வண்ணம் தனித்துவமாக உள்ளது. ஒவ்வொருவரையும் கூப்பிட பயன்படுத்தும் விசில் தாலாட்டு, சின்னது மற்றும் பெரியது என்று இரண்டு வகையுள்ளது.




கிராம மக்கள்

கோங்தாங் கிராமம் இயற்கை அழகு கொஞ்சும் இடமாக உள்ளது. இக்கிராமம் உலகிலேயே ஈரப்பதம் அதிகம் கொண்ட இடமான சிரப்புஞ்சி (Cherrapunji) மற்றும் மவ்சின்ரம் (Mawsynram) ஆகிய இடங்களுக்கு அருகிலே அமைந்துள்ளது. வாழும் வேர்களால் செய்யப்பட்ட பாலம், அருவிகள் போன்றவையும் இக்கிராமத்தின் தனித்துவமான இடங்களாகும்.

இங்குள்ள மக்கள் வாழும் வேர்களை கொண்டு பாலம் அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கைகளாலேயே அத்தி மரத்தின் வேரை கொண்டு பாலம் அமைத்து உபயோகப்படுத்தி வருகிறார்கள். நன்றாக வளர்ந்த மரத்தின் வேரில் செய்யப்பட்ட பாலத்தில் ஒரே சமயத்தில் 50 நபர்கள் கூட கடந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அதிசயமான கோங்தாங் கிராமத்தை காண்பதற்காக இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நாமும் ஒருமுறையாவது இந்த அதிசய கிராமத்திற்கு சென்று மக்களோடு மக்களாக சேர்ந்து விசில் அடித்து மகிழ்ந்து விட்டு வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!