Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 19

19

 

 

 

அன்று கல்லூரி வாசலில் தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த தேவராஜனை பார்த்ததும் விழி் விரித்தால் வாசகி ” நீங்களா …?நீங்கள் எப்படி வந்தீர்கள் ? ” அவள் கேள்விக்கு அவன் முகம் சுருங்கியது.

 

” ஏன் …? என் பொண்டாட்டியை கூப்பிட நான் வரக்கூடாதா ? ” 

 

” இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை  .வார்த்தைக்கு வார்த்தை  என் மனைவி என்ற உரிமை காட்டினால் மட்டும் போதுமா ? ” முணுமுணுத்தாள் வாசுகி.

 

” வார்த்தையில் மட்டுமா மனைவி என்ற உரிமையை காட்டுகிறேன் ? ” குறும்பாய்  வந்தது அவனது கேள்வி .வாசுகி அவனை முறைத்தாள் 

 

” எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக் கொண்டே இருப்பது… வண்டியை எடுங்கள் ” பைக்கில் ஏறி அமர்ந்து கணவனின் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

 

” காண்ட்ராக்ட் எடுத்த இடத்தில் சின்ன பிரச்சனை வசு . மாமா அங்கே போய் இருக்கிறார். அதனால்தான் நான் உன்னை கூப்பிட வந்தேன் ” பைக்கில் போகும்போது விவரம் சொன்னான்.

 

” இந்த காண்ட்ராக்டில் என்னதான் பிரச்சனை ? ” 

 




” நம் ஊரில் இருந்து பக்கத்து ஊர் வரை இருக்கும் 50 கிலோமீட்டர் தூரத்தை சாலையை அகலப்படுத்த வதற்காக அரசாங்கம் குத்தகைக்கு விட்டிருக்கிறது. அந்த குத்தகையை முதலில் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் தான் அரசாங்க பொதுப்பணித்துறை இருந்தது .ஆனால் நம்மூர் மர வியாபாரிகள் சங்கத்தினர் அந்த லாபகரமான குத்தகையை நமக்கு கொடுக்குமாறு கேட்பதற்கு பொதுப்பணித் துறைக்கு சென்றிருந்தோம் .எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள் இவை எல்லாம்.  அப்போது பொதுப்பணித் துறையில் இருந்த தலைமை இன்ஜினியர் கொஞ்சம் வயதானவர் .ரிட்டயர்மென்ட் ஐ எதிர் நோக்கிக் கொண்டிருந்தார் .அவருக்கு கையில் ஏதாவது கொடுத்து இந்த குத்தகையை நமக்கு வாங்கிக் கொள்ளும் பேச்சுடன் சென்றோம் .ஆனால் அவர் அதுபோன்று சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்பவர் இல்லையாம் .தோல்வி என்றே எல்லோரும் திரும்ப நினைத்தாலும் எதற்கும் கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று நான் அவரிடம் நேரில் சென்று பேசினேன் .

இந்த மரங்கள் நம் ஊர் மர வியாபாரிகளுக்கு எந்த அளவு பயன்படும் என்பதை விளக்கினேன் .அவர் குத்தகையை நமக்கே தருவதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார் .எனது பணிக்காலம் இன்னமும் சில மாதங்கள்தான். அதற்குள் நான் இருக்கும் ஊருக்கு ஏதாவது நன்மை செய்து விட்டுப் போக விரும்புகிறேன். அதனாலேயே உங்களது இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் .அத்தோடு இன்னமும் ஒன்று என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் என்னால் செய்ய முடியாத ஒரு விஷயம். நீங்கள் ஊர்க்காரர்கள் ஒற்றுமையாக  சேர்ந்தால் இதனை நிச்சயம் செய்து முடித்துவிடலாம் .இதற்காக நான் கவர்ன்மெண்ட்டிற்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் இந்த பொறுப்பை ஏற்க தயாராக இல்லை .அவர் இடத்தை அவரவரே பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறேன் …என்று அவர் கேட்ட நிபந்தனை இதுதான் .”

 

”  நாங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த 50 கிலோ மீட்டர் தூரத்திலும்  இருக்கும் மரங்களை வெட்டி எடுததுக்  கொள்வதோடு வழிநெடுக வளர்ந்து கிடக்கும் கருவேலி மரங்களையும் வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும் .அரசாங்க நிலங்களில் இருக்கும் கருவேல மரங்களுக்கு என அரசாங்க நிதி உதவியை எதிர்பார்க்க முடியாது என்பதனால் அதனை எங்கள் வியாபார சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் .தனியார் நிலங்களில் இருக்கும் கருவேலமரங்களை நீக்குவதற்கான செலவை அந்தந்த நில உரிமையாளர்களிடம் வாங்கிக் கொள்ள வேண்டும் .இதுதான் அவர் எங்களுக்கு போட்ட நிபந்தனை.

 

எங்கேயோ வேற்று மாநிலத்தில் இருந்து வந்து இங்கே வேலை செய்யும் ஒருவருக்கு இருக்கும் அக்கறை இதே ஊரில் பிறந்த நமக்கு வேண்டாமா… இந்த எண்ணத்துடன் இதற்கு நான் உன் தந்தை இன்னும் சிலர் இந்த திட்டத்திற்கு மனப்பூர்வமாக சம்மதித்தோம் .ஆனால் சங்கத்தில் இருக்கும் சிலர் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர் .நமக்குரிய வேலையைத் தான் நாம் பார்க்க வேண்டும். இந்த பொதுச்சேவை நமக்கு எதற்கு …என்பது அவர்களது வாதம் . அப்போது நாங்கள் அவர்களை அதட்டி குத்தகை வேண்டுமல்லவா என்று மிரட்டி அந்த இன்ஜினியர் உடன் கருவேல மரங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டு விட்டோம். அது அன் அபிசியல் கான்ட்ராக்ட் தான்.சட்டப்படி செல்லாது .

 

வேலை மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தது .அந்த இன்ஜினியர் அவருடைய பதவிக்காலம் முடிந்து அவர் சொந்த ஊருக்கு போய்விட்டார் .இப்போது நம்முடைய சங்கத்தில்  எதிரணியினர் மீண்டும் பிரச்சனையை ஆரம்பிக்கின்றனர் .இன்ஜினியர் உடன் போட்ட ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாவது கிடையாது. இதுபோல் ஒரு அரசு பணியாளர் ஒப்பந்தம் போட முடியாது… என்று சட்டத்தைக் காட்டி குத்தகை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் கருவேலமரங்கள் திட்டத்தை அப்படியே விட்டு விட வேண்டும் என்று  மீண்டும் பிரச்சனையை துவக்கி இருக்கின்றனர்.

இதற்கு இவர்களுக்கு பின்னால் இருந்து சாவி கொடுத்துக் கொண்டிருப்பது ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் ஓனர் . ஏனென்றால் அங்கே கருவேல மரங்கள் அடர்ந்து கிடக்கும் அதிகமான நிலப்பகுதி அவருடையதுதான். சும்மா கிடக்கும் தனது நிலத்திற்கு மரத்தை அகற்ற என்று ஒரு பெரிய தொகையை செலவழிக்க அவர் தயாராக இல்லை.” 

 

” நானும் மாமாவும் நன்மை நமது ஊருக்குத்தான் என்ற  நியாயத்தை எடுத்துச்சொல்லி அவர்களுடன் போராடிக் கொண்டு இருக்கிறோம் ” 

 

கணவன் சொல்லி முடித்த பிரச்சனையின் விபரங்களுக்கு பிறகு வாசகிக்கு  தந்தையை கணவனை நினைத்து பெருமிதமாக இருந்தது. அதனை ஒளிக்காமல் கணவனுடன் பகிர்ந்து கொண்டாள்.

 

”  இந்த பிரச்சனையின் காரணமாகத்தான் நானும் உன் தந்தையும் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது .அப்போது தான் உன்னை பார்க்க முடிந்தது .உன்னை காதலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது ” 

 

”  நீங்கள் என்னை காதலித்தீர்களா ?அப்போதேவா ? ” வாசுகி நம்பமுடியாமல் இந்தக் கேள்வியை கேட்டாள்.

 

” நிச்சயமாக முதன் முதலாக உன்னை பார்த்த நாளில் இருந்து… நான் மட்டுமல்ல நீயும் தான்…” 

 

 வாசுகி அவனை ஒத்துக் கொள்ள தயாராக இல்லை.”  எனக்கு காதலா ? ” 

 நம் திருமணத்தை நிறுத்தி விடச் சொல்லி உங்களிடம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன் .ஙமறந்து விட்டீர்கள் போல ? “கிண்டலாக கேட்டாள்.

 

” அது உன்னுடைய முட்டாள்தனம் ” என்றுவிட்டு முதுகில் அவளிடமிருந்து இரண்டு அடிகள் வாங்கிக் கொண்டான் தேவராஜன்.

 

” நம் திருமணத்திற்கு முன்பு ஒரே ஒரு முத்தம் கூட உனக்கு கொடுக்காமல் விட்டு விட்டேன் பார் .அதனால்தான் இந்த சந்தேகம் எல்லாம் உனக்கு வந்து கொண்டிருக்கிறது. நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் .நீதான் ஒத்துழைக்கவில்லை ” 

 

“எப்போதும் அதே நினைப்பு  ” வாசுகியின் குரல் இப்போது சிணுங்கலாய் வந்தது.

 

” ஆமாம் எப்போதும் உன்னுடைய நினைப்பு. நமக்குள்  காதலா என்று கேட்டாயே..?  கவனி வாசுகி .வான்மழை பூமிக்கு எவ்வளவு முக்கியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். வறண்டு கிடக்கும் பூமியின் உயிர் மூச்சு மழைதான். அதுபோலத்தான் வறண்டு கிடந்த நம் வாழ்வில் வான் மழை போல் வந்த காதல் நம்முடையது .அதனை நான் யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் ” 

 

தேவராஜன் பேசி முடித்ததும் வாசுகி அவன் முதுகில் படிந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள். ”  ஏய் என்ன இது…..?  நடு ரோடு …என் மூடையே மாற்றுகிறாயே .  வசு ப்ளீஸ் தள்ளி உட்காருடா ” மனைவியை சட்டென அணைக்க முடியா சூழல் 

ஏக்கமாக  வழிந்து ஓடியது தேவராஜனின் குரலில்.

 




கணவனின் ஏக்கம் மனைவிக்கு பிடித்துப் போக ‘” மாட்டேன் போடா…”  செல்லம் கொஞ்சியபடி இன்னும் அவனை இறுக  அணைத்துக் கொண்டாள்.

 

அவர்களது அந்நியோன்யத்திற்கு இடையூறு போல் ஒலித்தது தேவராஜனின் போன் . ” மாமா தான் அழைக்கிறார் ” என்றபடி வேகமாக தனது போனை எடுத்து பேசியவன் ” இதோ இப்போதே வருகிறேன் மாமா ”  என்றுவிட்டு வாசுகியிடம் திரும்பினான்.

 

“வசு அங்கே ஏதோ தகராறு போல ..மாமாவால் தனியாக சமாளிக்க முடியாது.

நான் உடனே போகவேண்டும். இங்கே பக்கத்தில்தானே  நம்முடைய கடை இருக்கிறது .உன்னை அங்கே விட்டுப் போகிறேன் .ஒரு மணி நேரத்தில் வந்து கூட்டி கொள்கிறேன் ”  அவளது பதிலை எதிர்பாராமலே கடைவாசலில் அவளை இறக்கிவிட்டு விட்டு போய்விட்டான்.

 

வேகமாகச் செல்லும் கணவனின் முதுகை புன்னகையோடு பார்த்தபடி கடைக்குள் திரும்பிய வாசுகி அதிர்ந்தாள். உள்ளே ஒரு டேபிளில் அமர்ந்து தலை குனிந்து ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தால் ராதா.

 

வாசுகியை பார்த்ததும் விழிகள் விரிய தன் இடத்திலிருந்து ” வாசுகி எப்படியடி இருக்கிறாய் ? ” என்ற குசல விசாரிப்புடன்  உற்சாகமாக எழுந்து வந்தவள் சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு தனது குரலை குறைத்துக் கொண்டாள்.

 

” வாங்க மேடம் …உள்ளே வாங்க  ” மரியாதையாக மாறி இருந்தது அவளுடைய பேச்சு.

 

” ஏய் என்னடி இது புது மரியாதை ? ” 

 

” நீ என்னுடைய முதலாளி அம்மாவாயிற்றே …இப்படி வேலை பார்ப்பவர்கள் முன்பு உன்னை பெயர் சொல்லி கூப்பிடலாமா ?  நான் இப்போது உங்கள் கடையில் தானே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ” 

 

” அப்படியா எனக்கு தெரியாதே .அவர் ஒன்றும் சொல்லவில்லையே ” 

 

” தேவா சார் என்றைக்கு தான் செய்த நல்லவற்றை வெளியில் சொல்லி இருக்கிறார் ” தேவராஜனின் பெயரை குறிக்கும்போது ராதாவின் குரலில் தெரிந்த மரியாதையை வியப்பாகப் பார்த்தாள் வாசுகி.

 

” என்ன வாசுகி பார்க்கிறாய் ? இன்னமும் என்னை பழைய முட்டாள் ராதாவாகவே நினைத்து விட்டாயா ? அன்று கூட அப்படி நினைத்து தானே பேசினாய் ? ” 

 

அவள் கேட்கவும் தான் அன்று அவளைப் பேசியவிதம் நினைவிற்கு வர வாசுகியின் முகம் சுருங்கியது.

 

” உனக்கு நான் சில விளக்கங்கள் கொடுத்தே ஆகவேண்டும் வாசுகி.

 நான் படிப்பை முடித்துவிட்டு திரும்பி பார்த்தபோது தான் எனது குடும்பத்தின் ஏழ்மை தெரிந்தது .அண்ணன் அவனுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை அவன் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்ள நானும்  அம்மா , தம்பியும் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம் .இன்னமும் அரியர்களே முழுவதுமாக கிளியர் பண்ணாத நிலையில் எனக்கு வேலை கிடைக்கும் சாத்தியமே இல்லை. இந்த கவலையுடன் அன்று ரோட்டில் நடந்து கொண்டிருக்கும்போது அப்படியே தலையை சுற்றிக் கொண்டு வந்துவிட்டது. கீழே விழப் போனவளை அந்தப் பக்கமாக வந்த தேவா சார் தான் கவனித்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி என் நிலையை கேட்டபடியே மெல்ல அழைத்துப் போனார். வழியில் ஜூஸ் வாங்கி கொடுத்து அரியர்களை எல்லாம் எழுதி முடிக்கும்வரை இங்கேயே வேலையில் சேர்ந்து கொள்ளச் சொன்னார் .இப்போது அவரால்தான் நாங்கள் மூன்று வேளையும் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம் ” 




ராதாவின் விவரித்தலில் வாசுகியின் உள்ளம் அவளை சுட்டது. ”  சாரிடி உன் குடும்ப நிலைமை தெரியாமல் நான் அன்று மிகவும் தப்புத்தப்பாக…” 

 

” பரவாயில்லைபா  எனக்கு உன்னை தெரியாதா ? இது எல்லாம் மனைவிகளுக்கும் கணவன் மீது இருக்கும் உரிமைதானே .நல்லவேளை அன்று எங்கள் வீட்டில் அம்மா மட்டும் தான் இருந்தார்கள் .அண்ணன் அண்ணி எல்லாம் இருந்திருந்தால் நீ பேசிய பேச்சிற்கு எங்கள் வீட்டிற்குள் பெரிய பிரச்சனையாகி இருக்கும். அம்மாவிற்கு உன்னை தெரியுமாதலால் நான் சொன்னதும் புரிந்து கொண்டார்கள்.” 

 

” அவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் ராதா ” 

 

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .என் கடை முதலாளி அம்மாவையே மன்னிப்பு கேட்க வைப்பேனா நான் ? ” 

 

” ஏய் உதை வாங்க போகிறாய் ”  பழைய நட்பின் கலகலப்புடன் தோழியின் கைகளை கிள்ளினாள் வாசுகி.

 

” என்னுடைய வேலைக்காக உன்னுடைய கணவருக்கு நன்றி தெரிவித்த போது , நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கல்யாணத்திற்கு முன்னால் வசுவோடு ஒரு பைக் பயணத்திற்கு எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக என்று சொல்கிறார் .பாரேன் நான் வருத்தப்பட்டு விஷம் குடித்து சாகக்கிடக்கும் நேரத்தில் நீங்கள் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்திருக்கிறீர்கள்  ” கிண்டல் போல் கன்னத்தில் கைவைத்துக்கொண்ட தோழியின் பேச்சில் வாசுகியின் கன்னம் சிவந்தது.

 

வெட்கம் இல்லாமல் எல்லோரிடமும் எப்படி பேசிக் கொண்டு திரிகிறான் பார் …கணவனுடன் செல்லமாக மனதிற்குள் ஊடல் கொண்டு தோழியின் கேலியை தாங்காமல் வேகமாக எழுந்தவள் , திடுமென தலையை சுற்றிக் கொண்டு வர மீண்டும் அமர்ந்துவிட்டாள்.

 

 

” வாசுகி என்னப்பா ? என்ன செய்கிறது ? ” 

 

” தலை சுற்றிக் கொண்டு மயக்கம் போல் இருக்கிறது ”  ராதா அவளை அமரவைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு மெல்ல அவள் காதுகளில் கிசுகிசுத்தாள்.

 

” வாசுகி தலைக்கு குளித்து எத்தனை நாட்களானது ? ” 

 

வாசுகியின் உடல் நரம்புகளில் புது உற்சாகத்தோடு குருதி பாய்ந்து ஓடத்துவங்கியது.




 

 

What’s your Reaction?
+1
31
+1
17
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!