Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-11

11

 

“வேர்ட் பை வேர்ட் அப்படியே அந்தப் புத்தகத்தில் இருப்பதை காப்பி அடிக்கிறார் மேடம்” அனன்யாவிடம் நீட்டி முழக்கி புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் சுபவாணி.

” இதில் தவறு காணும் அளவு என்ன இருக்கிறது சுபா? ஆராய்ச்சி செய்து எழுதிய பெரிய எழுத்தாளர்கள்  புத்தகங்களை தானே எங்களைப் போன்ற ப்ரோபஸர்கள் பாடம் எடுக்க உபயோகித்துக் கொள்கிறோம்”

” நன்றாக சொல்லுங்கள் மேடம். நானும் இவளிடம் சொல்லி சொல்லி அலுத்துவிட்டது”

” அந்த புத்தகத்திலிருந்து சில பாயிண்ட்ஸ்கள் எடுத்துக் கொள்வது சரிதான் மேடம். ஆனால் இவர் அப்படியே அந்தப் புத்தகத்தை கரைத்து குடித்து இங்கே வந்து ஒப்பிக்கிறார் மேடம். அதில் அவர் சொல்லிக் கொடுக்கும் மேனரிசத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே, என்னவோ இவரே அந்தப் பாறைகளையும் தீவுகளையும் எரிமலைகளையும் நேரில் பார்த்து ஆராய்ந்து எங்களுக்கு சொல்லித் தருவது போல் ஒரு பந்தா. அடடா என்ன அலட்டல் தெரியுமா?”

” சுபா அது அலட்டலாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவரது பாடம் நமக்கு தெளிவாக புரிகிறதா இல்லையா? நீயே சொல் இப்போது நமக்கு பாடம் எடுக்கும் ப்ரபஸர்களில் ரியோ மாதிரி இவ்வளவு தெளிவாக யார் சொல்லித் தருகிறார்கள்? நம் வகுப்பு மாணவர்களிடம் நீயே கேட்டுப்பார். இப்போதெல்லாம் ரியோ சாருக்கு ஃபேன்ஸ் அதிகமாகி விட்டார்கள் தெரியுமா?”

 தக்ளா சொன்னதிலும் நியாயம் இருந்தது. இதற்கென்ன சொல்கிறாய் என அனன்யா புருவம் உயர்த்தி இவளைப் பார்க்க சுபவாணி தொண்டையை செருமிக் கொண்டாள்.”அது…வந்து… அவர் இன்டர்னல் மார்க்… அசைன்மென்ட்… அது இதுவென்று எல்லோரையும் மிரட்டி அவர் பக்கம்….”

” போதும்டி நிறுத்து, உன் மனசாட்சியை தொட்டு சொல்லு  ஆரம்பத்தில் அவர் அப்படி மிரட்டினார்தான். ஆனால் இப்போதெல்லாம் அவரது பாடத்திற்காகவே தானே அவர் கிளாசை மிஸ் பண்ண கூடாது என்று நாம் நினைக்கிறோம். இதோ நீ சொல்வது போலவே இப்படி புத்தகத்தில் இருப்பவற்றை நம் மண்டைக்குள் ஏற்றும் விதமாக அவர் சொல்லிக் கொடுப்பதால் தானே நம்மால் எளிதாக படிக்க முடிகிறது”

” அதுதான் இந்த புத்தகத்தையே தான் அங்கே வந்து கத்துகிறார் என்கிறேனே”

” சுபா நீ உன் மனதிற்குள் ரியோவை பற்றி ஒரு தவறான அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டாய். அதையே நியாயப்படுத்த முயற்சிக்கிறாய். எனக்கு தெரிந்தவரை அவர் நிறைய படித்தவர். விசய ஞானம் உள்ளவர்.  உங்களுக்கு பாடம் எடுக்க தகுதியானவர்” அனன்யா சொல்ல சுபவாணி முகம் சுளித்தாள்.




 “அறைக்குள் உட்கார்ந்து கொண்டு திருட்டுத்தனமாக தண்ணி அடிப்பவருக்கெல்லாம் நல்லவர் பட்டம் கொடுப்பீர்களா மேடம்?”

 அனன்யா திகைக்க தக்ளா அன்று விடுதியில் சுபவாணி பார்த்ததை விளக்கினாள். அனன்யா தோள்களை குலுக்கி கொண்டாள். “கல்லூரியை தாண்டி அவருடைய சொந்த வாழ்க்கையில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ரியோவை பார்க்கும் போது உன் கண்ணில் போட்டுக் கொள்ளும் மெல்லியத் துணியை விளக்கிக் கொள் சுபா. எல்லாம் சரியாகிப் போகும்”வயதில் மூத்தவளாய் அவர்கள் ஆசிரியையாய் அறிவுரை கூறினாள்.

 மனமின்றி தலையசைத்த சுபவாணிக்கு ரியோ மீது இருந்த அதிருப்தி போகவில்லை. அவளுடைய நினைப்பிற்கு ஏற்றார் போன்ற சம்பவங்கள்தான் அடுத்தடுத்து நடந்தன.

 மறுநாள் அவர்கள் கல்லூரி வளாகத்தின் பின்புறம் இருந்த அடர்ந்த மரங்களின் இடையே ரியோ இரண்டு மாணவர்களை அடித்து நைய புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானாள். என்ன இவன் கல்லூரிக்குள் ரவுடி மாதிரி நடந்து கொள்கிறான்…? வேகமாக அவர்கள் அருகே சென்றாள்.

 அதற்குள் இருவரையும் நன்றாக அடித்திருந்த ரியோ கீழே அவர்களை தள்ளி விட்டு “ஜாக்கிரதை” என்ற ஒற்றை விரல் ஆட்டலுடன் அங்கிருந்து நகர்ந்து போய்விட்டான்.

 அடி தாங்காமல் கீழே விழுந்து கிடப்பவர்களுக்கு  தூக்கி விட கை நீட்டினாள் சுபவாணி. அதற்கே சொருகிய கண்களுடன் கீழே கிடந்தவர்கள் “ஐயோ வேண்டாம் சார்” என்று பயந்து அளறினர்.

” நான் தோழிதான். எழுந்திருங்கள்” அமர வைத்து தண்ணீர் கொடுத்தாள். அவர்களை அடித்த காரணத்தை கேட்ட பொழுது இருவர் முகத்திலும் பயம் தெரிந்தது. அவர்கள் வகுப்பு தோழியான ரோஸி என்ற பெண்ணை இன்டெர்னல் மார்க் வேண்டும் என்றால் என்னுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ரியோ பேரம் பேசியதாகவும் அவள் இவர்களிடம் சொல்லி அழுததால் இவர்கள் ரியோவிடம் நியாயம் கேட்க போய் அவன் இவர்களை இப்படி போட்டு அடித்து விட்டான். 

சுபவாணி குழம்பினாள்.இவர்கள் சொல்வதை எந்த அளவிற்கு நம்புவது?

 அவர்கள் வாங்கி இருந்த அடியும் அழுகை வந்துவிட்ட குரலும் தந்த பரிதாபத் தோற்றம் அவர்கள் பக்கம் சுபாவானியை இழுத்தது. “சரி வாங்க நாம் நம் டிபார்ட்மெண்ட் ஹெட்டிடம் கம்பளைண்ட் சொல்லலாம்” 

அவர்கள்  அலறினர் .அவர்கள் “ரியோ சார் நம் கல்லூரி நிர்வாகத்திற்கு மிகவும் பழக்கமானவர். பெரிய இடத்துப் பிள்ளை. இங்கே அவரை மீறி யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள். அதனால்தான் நாங்கள் இப்படி தனியாக வந்து அவரிடம் கெஞ்சி கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால் இப்படி எங்களை போட்டு அடித்து விட்டார். ப்ளீஸ் சுபா இந்த விஷயத்தை வேறு யாரிடம் சொல்லி விடாதே! பிறகு எங்களை நீ உயிருடன் பார்க்க முடியாது” கெஞ்சி கேட்டு விட்டு தள்ளாடியபடி எழுந்து சென்றனர்.

அவர்கள் மிக கெஞ்சி கேட்டுக் கொண்டாலும் இந்த விஷயத்தை அப்படியே விட சுபவாணிக்கு மனதில்லை.அவள் தைரியமாக அவர்கள் டிபார்ட்மென்ட்டிற்கு ரியோ மீது கம்ப்ளைன்ட் லெட்டர் எழுதி புகார் பெட்டியில் போட்டாள். இது சம்பந்தமாக தன்னை தனிப்பட்ட முறையில் விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டாள்.

 மறுநாளே அவர்கள் எச் ஓ டி பாலச்சந்திரனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

டேபிள் மேல் கைகளை கட்டிக்கொண்டு லேசாக சாய்ந்து நின்றபடி இவள் வரவை எதிர்பார்த்திருந்தார் பாலச்சந்திரன். அவர் முகம் ஒரு வகை சங்கடத்தில் இருந்தது. சுபவானியிடம் படபடவென ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.




” என்னம்மா கம்ப்ளைன்ட் இது? யார் மேல் கொடுத்திருக்கிறாய்?”

” என்னுடைய கம்ப்ளைன்டிலேயே தெளிவாக சொல்லி இருந்தேனே சார். நம் டிபார்ட்மென்ட் லெக்சரர் மிஸ்டர் ரியோ மேல் கொடுத்த கம்ப்ளைன்ட் “

 நீ அவரைப் பற்றி தவறாக புரிந்து கொண்டாயம்மா.இந்த கம்ப்ளைன்டை என்னால் எடுத்துக் கொள்ள முடியாது” 

“என்ன சார் விசாரிப்பீர்கள் என்று நினைத்தால்… அந்த மாணவர்களை கூட்டி வந்து கேளுங்கள் சார்” சுபவாணி கோபமாக பேச,

” என்ன செய்யலாம் ரியோ?” என்று பாலச்சந்திரன் வலப்பக்கம் திரும்பி கேட்க சுபவாணி அதிர்ச்சியுடன் அஅங்கே திரும்பி பார்த்தாள். அங்கே சற்று தள்ளி ரோலிங் சேர் ஒன்றில் கால் மேல் கால் போட்டபடி இவர்களை கவனித்துக் கொண்டிருந்தான் ரியோ.அவன் கையில் இவள் எழுதிப் போட்ட கம்ப்ளைன்ட் லெட்டர்.

 அவன் மேல் கொடுக்கப்பட்ட கம்ப்ளைன்ட். அவனும் அங்கே இருக்கத்தான் வேண்டும். ஆனால் இவன் அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டவன் போல் தெரியவில்லையே. நீதி சொல்லும் நீதிபதி போல் அல்லவா அமர்ந்திருக்கிறான்!

 சுபவாணி முறைத்ததும் அவன் சேரின் விசையை இழுத்து பின்னால் சாய்ந்து கொண்டு “சொல்லுங்க மேடம்” என்றான்.

 அந்த சேர் எச்ஓடி அமர்வது. அதில் இவன் உட்கார்ந்திருக்கிறான். இவர் நின்று கொண்டிருக்கிறார். சட்டையின் மேல் பொத்தான்களை  மார்பு தெரியும் அளவு திறந்து விட்டுக்கொண்டு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் போலன்றி வாழ்வை அனுபவிக்கும் ஓர் உல்லாசி போல் சொகுசாக சாய்ந்திருந்தான். ஆவலுடன் பிடித்த திரைப்படத்தை பார்க்கும் பாவனை இருந்தது அவன் முகத்தில்.

” கம்ப்ளைன்ட்டை தெளிவாக சொல்லச் சொல்லுங்கள் பாலா சார்”கிண்டலாக இவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.

சுபவாணி மெளனமாக திரும்பி வாயிலுக்கு நடந்தாள்.”மிஸ். சுபவாணி…” பாலச்சந்தர் அழைக்க, “சாரி சார் இங்கே நியாயம் கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை” வெளியேறி விட்டாள்.

 என்னவென்று கேட்ட தக்ளாவிடம் எல்லாவற்றையும் கொட்டினாள். “எனக்கு என்னவோ நீ அவசரப்படுவது போல் தெரிகிறது சுபா. நாம் எத்தனையோ பேர் பெண்கள் ரியோ சாருடன் பழகுகிறோம். ஆனால் அவரிடம் ஒரு தப்பான பார்வை கிடையாது”

 இது உண்மைதான் சுபவாணியும் கவனித்திருக்கிறாள்தான். ஆனாலும் அந்த மாணவர்களை போட்டு அடித்ததற்கு அவன் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆசிரியராக இருந்தாலும் மாணவர்கள் மேல் கை வைக்கும் உரிமையை இவனுக்கு யார் கொடுத்தது? பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரா இவன், சரியான பொறுக்கி.. ரவுடி… பற்களை கடித்தாள்.

 அவள் ரியோவின் மீது கொடுத்த கம்ப்ளைன்ட்டுக்கான பதில் மறுநாளே அவளுக்கு கிடைத்தது. அவளது அசைன்மெண்டை மிகச் சரியாக அவள் மூஞ்சியிலேயே விட்டெறிந்தான் ரியோ. “என்ன கண்றாவி அசைன்மென்ட் இது? தீ வைத்து கொளுத்து”




” நீங்கள் சொல்லிக் கொடுத்ததைத் தான் செய்திருக்கிறேன் சார்.”

“என்னுடைய கிளாஸையே நீங்கள்  அட்டென்ட் பண்ணவில்லையே மிஸ் ?பிறகெப்படி அசைன்மென்ட் செய்தீர்கள்?”

” நீங்கள் ஒரு புத்தகத்தை படித்து பாயிண்ட் பை பாய்ண்டாக இங்கே வந்து சொல்லித் தந்தீர்களே, அதே புத்தகத்தை வைத்துத்தான் நானும் அசைன்மென்ட் செய்தேன் சார். தப்பாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை “தெளிவாக விளக்கினாள்.

வகுப்பறைக்குள் சிறு சலசலப்பு தோன்றியது.” சைலன்ஸ்” கத்தியவன்” எந்த புத்தகம்” என்றான். கண்கள் கூர்மையானது.

” இதோ” புத்தகத்தை தூக்கி காட்டினாள். தாடையை வருடியபடி பார்த்தவன் ” வேறு யாரெல்லாம் இந்த புத்தகத்தை வாசித்தீர்கள்?” என்றான் வகுப்பறையை பார்த்து.

 யாரிடமிருந்தும் சத்தம் வரவில்லை “ஆக எங்கேயோ குப்பையில் கொண்டு போய் போடவேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து இதிலிருந்து எடுத்தேன் என்கிறாயா?” அவள் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி வகுப்பறை வாசலுக்கு எறிந்தான். “கெட் அவுட் ஃப்ரம் மை கிளாஸ்”

 சுபவாணி அவனை முறைத்தபடி வெளியே போனாள். கல்லூரி முடிந்த பிறகு ஆறுதலாக பேச வந்த தக்ளாவை தவிர்த்து விட்டு அனன்யாவை பார்க்க கிளம்பினாள். இந்த ரியோவின் பின்புலத்தை யாரிடமாவது கேட்டு தெரிவிக்க சொல்ல வேண்டும்.

 தனக்குள் சில திட்டங்களை போட்டபடி அனன்யாவின் வீட்டு வாசலை மிதித்தவள் தயங்கினாள். உள்ளிருந்து ஆண் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. மேடத்தின் கணவர் இருக்கிறாரோ?  ஃப்ரீயாக பேச முடியாதே? தயங்கி ஒரு நிமிடம் நின்றவள் உள்ளிருந்து வந்த குரலில் அதிர்ச்சியானாள்.

 வேண்டாம் இது தவறு என்று சுட்டிக்காட்டிய மனதை தவிர்த்து பக்கவாட்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தவள் அதிர்ந்தாள் . சோபாவில் ரியோவும் அனன்யாவும் அருகருகே அமர்ந்து ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி பேசிக் கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் டண்டன்னாக உற்சாகம் வழிந்து கொண்டிருந்தது.நிச்சயம் இப்போதுதான் அறிமுகமாகி கொண்ட புதியவர்கள் போல் இல்லை. வருடங்களாக பழகியவர்கள் போல் தெரிந்தது.

 ஆக சுபவாணி ஏமாற்றப்பட்டிருக்கிறாள். அவசரமாக ஜன்னலை விட்டு நகர்ந்து  தனது சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தாள். பின்னால் வாணி என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டாற் போலிருக்க பாறாங்கல் ஒன்று தலைமேல் இருப்பது போன்ற பாவனையுடன் சைக்கிளை மிதித்தாள் சுபவாணி.




What’s your Reaction?
+1
31
+1
24
+1
1
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!