Serial Stories சதி வளையம்

சதி வளையம்-5

5 சுற்றிவளைத்துப் பேசு; நேரடியாகச் செய்!

“காரை நான் ஓட்டறேன்” என்றாள் தன்யா வெளியே வந்ததும்.

பேசாமல் சாவியை அவளிடம் கொடுத்தான் தர்மா. கோபத்தில் இருந்தாலோ, சிந்தனையில் இருந்தாலோ, காரில் ஒரு சுற்றுச் சுற்றுவது தன்யாவின் வழக்கம் என்பது அவனுக்குத் தெரியும்.

கொஞ்ச நேரம் மௌனமாகக் கார் ஓடியது.

“தர்ஷ், இந்தக் கேஸ் பத்தி என்ன நினைக்கிறே?” என்று ஆரம்பித்தான் தர்மா.

“நீ இந்தக் கேஸ் கொடுத்தவரைப் பத்தி என்ன நினைக்கிறே?” என்றாள் தர்ஷினி.

“யாரைச் சொல்லறே? டாக்டர் திலீபா? அவரைப் பற்றி நினைக்க என்ன இருக்கு? எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவருக்கு இந்தக் கேஸில் டைரக்ட் இன்வால்வ்மென்ட் ஒண்ணும் இல்ல.”

“என்னது, இன்வால்வ்மென்ட் இல்லையா? சம்பவம் நடந்தபோது அவர் அங்கே இருந்திருக்கார், பாஸ்கர் லைஃப்-ல இன்டெரஸ்ட் உள்ளவர், பத்மாவை பாஸ்கருக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணினதே அவர்தான் …”

“அதெல்லாம் சரி, ஆனா அவருக்கும் இந்த கேஸுக்கும் வேறு என்ன சம்பந்தம்?”

“லவ்!” தர்ஷினியிடமிருந்து ஒற்றை வார்த்தை பளீரென்று வெளிப்பட்டது.

‘திக்’கென்று அதிர்ந்தான் தர்மா.

“என்ன இவ்வளவு ஆச்சரியம்? பத்மாவைப் பத்திப் பேசும்போது அவர் கண்ணைப் பார்த்தாலே போதுமே!” என்றாள் தர்ஷினி.

“இரு, நீ என்ன சொல்ல வரே? பாஸ்கர்-பத்மா கல்யாணத்தை நிறுத்தறதுக்காகத் திட்டம் போட்டு டாக்டர் மோதிரத்தை எடுத்துட்டார்ங்கறியா?”

“திட்டம் போட்டு இல்ல. ஒரு சடன் டெம்ப்டேஷன்ல பண்ணியிருக்கணும். அவர் நினைச்சது நடந்தது. பத்மா பட்டிக்காடு இல்ல. சுயமரியாதை உள்ள மாடர்ன் கேர்ள். இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சிருக்கார்.”

“அப்போ பாஸ்கரை அவர் சந்தேகப்படறது? அதுக்கு வலுவா ஒரு காரணம் இருக்குன்னு உங்க கிட்டச் சொன்னது?”

“சிம்ப்பிள். அவர் திட்டத்தோட அடுத்த கட்டம்!”




“நான் அப்படி நினைக்கல தர்ஷ்” என்றாள் தன்யா மெதுவாக. “எனக்கென்னவோ பாஸ்கர் மேல சந்தேகம் இருக்கு. டாக்டரோட ரியாக்ஷன் கொஞ்சம் முன்னப்பின்ன முரண்பாடா இருந்தாலும் பொய்க்கலப்பு இருக்கற மாதிரி தெரியல.”

“சும்மா இரு, உனக்குப் பாஸ்கர் மேல கோபம், பாஸ்கர் வீட்டுக்காரங்க பத்மா வீட்டு மேல பழி போடும்போது அவன் இன்னும் ஸ்ட்ராங்கா எதிர்த்திருக்கணும்னு எண்ணம்” என்று தர்ஷினி சாடினாள். “அதோட, டாக்டர் உள்ளே வரதுக்கு முந்தியே மேஜர் கமல் உள்ளே போனார். அப்போ மோதிரம் அங்கே இல்லங்கறது அவர் ஸ்டேட்மென்ட்” என்று தொடர்ந்தாள்.

“யெஸ், மேஜர் கமல் ….” என்றாள் தன்யா.

“அவரை நீ சந்தேகப்படறியா?” என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் தர்ஷ்.

இல்லையென்று தலையாட்டினாள் தன்யா. ஆனால் முகம் ஏதோ தீவிர சிந்தனையைக் காட்டியது.

சிறிது நேரம் மௌனம்.

“விஜய்?” என்றான் தர்மா.

“சிம்ப்பிள் மோட்டிவ். சொத்து!” என்றாள் தர்ஷினி.

“பேச்சும் உளறிக் கொட்டறான். ஆனா அது தான் அவன் மேல சந்தேகப்பட முடியல. டிபிகல் இந்தக்காலத்து இளைஞன்னு தோணுது” என்றான் தர்மா.

“சரி தாத்தா” என்றாள் தன்யா. இரண்டு பெண்களும் சிரித்தார்கள். தர்மாவும் கலந்து கொண்டான்.

“ஏய், இரு இரு, பாஸ்கர் ரூமுக்கு விஜய் வந்துட்டுப் போனப்புறம் அவன் அப்பா வந்ததா சொன்னாரே, அவர் மோதிரத்தைப் பார்த்தேன்னு சொல்லலையோ?” என்றான் தர்மா.

“ஏண்டா இவ்வளவு அப்பாவியா இருக்க? ஒரு அப்பா தன் பிள்ளையைக் காட்டிக் கொடுப்பாரா?”

“ஓ! அவரே கூட எடுத்திருக்கலாம் இல்லே?” என்றான் தர்மா.

“தாராளமா!” என்றாள் தர்ஷினி.




“சே! மறுபடி நின்ன இடத்திலேயே தான் நிக்கறோம்!  இவங்கள்ள யார் வேணும்னாலும் பொய் சொல்லலாம். அப்படி நிஜம் சொல்றதா இருந்தா, ஒரு இருபது நிமிஷம். அதுக்குள்ளே யார் வேணும்னாலும் இந்த மோதிரத்தை எடுத்திருக்கலாம். ஆனா அது பொண்ணு வீட்டுக்காரங்களோ, வேலைக்காரங்களோ இல்லை.”

“அப்படி நிச்சயமா எப்படிச் சொல்லற?”

“அய்யாக்கண்ணு” என்றான் தர்மா. “நான் கொஞ்சம் அவனை விசாரிச்சேன். ஏழேகால் மணிக்குப் பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாங்க. அவன் அவங்களை ரீஸீவ் பண்ணி, அவன் ஸ்டேண்டுக்குப் பக்கத்தில் இருக்கற சின்ன அவுட் ஹவுஸில விட்டிருக்கான். அவனும் ஏழேகால் மணிலேர்ந்து அங்கேயே நின்னிருக்கான். ஒரு ஏழரை மணிக்குத் தான் அவங்க எல்லாருமா ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வெளியே வந்திருக்காங்க. அய்யாக்கண்ணு புல்வெளில பார்ட்டி நடந்த இடத்திற்கு அவங்களைக் கொண்டு போய் விட்டிருக்கான். அவனைத் தவிர, அப்போ வேலைக்காரங்க யாரும் வீட்டில் இல்ல. கேடரிங் ஸ்டாஃப் புல்வெளியை விட்டு வெளியே வரவேயில்லை என்கிறதை எல்லாரும் ஒத்துக்கறாங்க.  அந்த நேரம் தவிர, அவன் ஸ்டேண்டிலிருந்து அசையவேயில்லை. அங்கேர்ந்து பார்த்தா பாஸ்கர் ரூம்கதவு நல்லா தெரியுது. எட்டு மணிக்கு மேலேதான் பாஸ்கர் பத்மாவையும் அவங்க வீட்டுக்காரங்களையும் உள்ளே கூட்டிப் போயிருக்கான். டைமிங்கைப் பொறுத்தவரை, அய்யாக்கண்ணு ஸ்டேட்மென்டும், மத்தவங்க ஸ்டேட்மெண்டும் பெருமளவு ஒத்துப் போகுது.”

“ஐ சீ” என்றாள் தன்யா.

“நான் பாஸ்கர் ரூமிலே பத்மா ஃபோட்டோ பார்த்தேன். என்ன அட்ராக்டிவ்வா இருந்தா தெரியுமா?” என்றாள் தர்ஷினி.

“அது மட்டுமா? ஐடில வேலை, கைநிறைய சம்பளம், இராஜவம்சமாய்ப் பார்த்துச் சுயம்வரம். சொந்தக்காரங்களுக்கு எந்த விதத்திலும் தொல்லை இல்ல. கொடுத்து வெச்சிருக்க வேண்டாமோ, இந்த மாதிரிப் பெண் பெற!” என்றான் தர்மா.

“இந்தா, ஏதாவது சொல்லணும்னா நேரடியா சொல்லு, இந்த மறைமுக டயலாகெல்லாம் வேண்டாம்” என்றாள் தர்ஷ்.

“ஏய், நான் உங்களை எங்க சொன்னேன்?” என்றான் தர்மா. “ஒருத்தர சொல்ற மாதிரி வேற ஒருத்தர சொல்றது, யார்கிட்டயோ பேசற மாதிரி இன்னொருத்தர்க்கு மெசேஜ் அனுப்பறது இதெல்லாம் எனக்கு வரவே வராது, ஆமாம்!”

‘கிறீச்’சிட்டு நின்றது கார்.

“என்ன தன்யா?” என்றாள் தர்ஷ் பதறி.

தன்யா மௌனமாய் எங்கோ வெறித்தாள்.

“தன்யா, ஆர் யூ ஓகே?” என்றான் தர்மா கவலையாய்.

“முட்டாள்!” என்றாள் தன்யா. “நான் ஒண்ணாம் நம்பர் முட்டாள்!” சில விநாடிக்குப் பின், “தர்ஷ், ஹேமா, அதான் அய்யாக்கண்ணு வைஃப், அவங்க வீட்டு அட்ரஸ் உன் கிட்ட இருக்கில்ல, அதைச் சொல்லு!” என்றாள்.

தர்ஷினி சொன்னதும் கார் பறந்தது. மூவரும் மௌனமாகவே வந்தார்கள்.

மைலாப்பூரின் பல சந்துகளுக்குள் ஒன்றில் நுழைந்து, அய்யாக்கண்ணு வீட்டை அடைந்தார்கள்.

உள்ளே அமர்ந்திருந்த ஹேமாவைப் பார்த்ததும், “ஹேமா, கொஞ்சம் வா!” என்று கூப்பிட்டாள் தன்யா.

அவள் அசையாமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் தான் விபரீதம் உறைத்தது. உள்ளே ஓடினார்கள்.

“டூ லேட்” என்றாள் தன்யா.

கத்திக்குத்து ஆழமாய் நெஞ்சில் பாய்ந்திருக்க, ஏகப்பட்ட இரத்தத்தை வீணடித்து, இறந்து போயிருந்தாள் ஹேமா.

“மை காட்!” என்றான் தர்மா. தர்ஷினி போலீசுக்குப் போன் செய்தாள்.

“சுத்தி வளைச்சு தனக்குத் தெரிஞ்ச விஷயத்தை யாருக்கோ செய்தி சொல்லப் பார்த்தாள் ஹேமா. அவங்க நேரடியா ஆக்ஷன் எடுத்துட்டாங்க” என்று பெருமூச்சு விட்டாள் தன்யா.




What’s your Reaction?
+1
7
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!