உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-5

5

அன்று…கண்களில் கனல் பறக்க சகோதரிகள் இருவரையும் அடித்து நொறுக்கும் வேகத்துடன் அருகே வந்த முருகேசனை சுபவாணி பயத்துடன் பார்க்க, இந்திரா அவன் தோள்களை பற்றி தூர தள்ளியிருந்தாள்.

“அத்தை மகனாச்சேன்னு பார்க்கிறேன்…என் கணவரிடமோ அப்பாவிடமோ சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?”

தடுமாறி கிட்டதட்ட தரையில் விழுந்திருந்தவனுக்கு தனசேகரின் பலம் வாய்ந்த உடல்கட்டு நினைவு வந்தது. அவசரமாக எழுந்து குரோதத்துடன் இவர்களை பார்த்தபடி போய்விட்டான்.

“என்னக்கா அடிக்க வர்றான்…!?” சுபவாணி நம்ப முடியாமல் கேட்க,”ஆம்பளை திமிர்” என்றாள் இந்திரா.

ஒரு சிறு கேலிக்கு கை நீட்டி அடிக்க வருமளவு என்ன ஆக்ரோசம்? ஆண்பிள்ளை என்பதாலா? அன்றைய பச்சைப்பிள்ளை மனது சுபவாணிக்கு புரியவில்லை.

இன்று நிறைய அனுபவித்து விட்ட சுபவாணி வெறுமையான பார்வையுடன் அருகில் அத்தை மகனென்ற சொந்தத்தோடு அமர்ந்திருந்தவனை பயமாய் ஏறிட்டாள்.

முருகேசன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து சுதந்திரமாக புகையை அவள் முகத்திற்கே விட்டான்.

“அப்பா உள்ளேதான் இருக்கிறார் அத்தான்” நினைவூட்டினாள்.

“இருக்கட்டுமே… எனக்கென்ன பயம்?” இன்னமும் ஆழமாக புகையை இழுத்தவனை ஆச்சரியமாக பார்த்தாள்.”ஹா…ஹா…”புகை கசியும் வாயுடன் அட்டகாசமாக சிரித்தான் அவன்.

“கிழட்டு சிங்கத்துக்கு மவுசு போயிடுச்சு…இனி அதால வாலாட்ட மட்டும்தான் முடியும். சொந்த பந்தங்களை மதிக்காம எங்கேயோ உன்னை கொண்டு போயி தள்ளினாரே…இப்போ நிலைமையை பார்த்தாயா,?அத்துட்டு வந்து நிக்கிற. இனி நான்தான் உனக்கு பொறுப்பு எடுத்துக்கனும்”

சுபவாணிக்கு திக்கென்றது.இவன் மீண்டும் திருமண பேச்சை எடுப்பானா?”இல்லை “என்றான் முருகேசன்.

“எனக்கு கலயாணம் முடிவாயிடுச்சு,பத்திரிக்கை வைக்கத்தான் அம்மாவும்,நானும் வந்தோமாக்கும்” கர்வமாக அறிவித்தான்.நின்ற மூச்சு சுபவாணிக்கு சீராக தொடங்கியது.

“ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான் பாத்தியா! இதே வீட்ல வச்சு அன்னைக்கு உங்க அப்பா என்னை அவமானப்படுத்தி விரட்டினார். இப்போ நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு வாழாவெட்டியா இங்க வந்து நிக்கிற?” முருகேசனின் குரலில் தெரிந்த துள்ளல் சுபவாணியை மிகவும் காயப்படுத்தியது. மௌனமாக தலை குனிந்து பூமியை வெறித்தாள்.




” இன்னமும் உன்னை இப்படி பேசியே நோகடிக்க முடியும். ஆனால் நான் அதனை விரும்பவில்லை. ஏனென்றால் நான் உன்னை அந்த அளவு விரும்புகிறேன்” சற்று முன்பு எகத்தாளமாக ஒலித்த முருகேசனின் குரல் இப்பொழுது தழுதழுப்புக்கு மாறியிருந்தது.

சுபவாணியின் மனம் படபடக்க துவங்கியது. இவன் என்ன சொல்ல வருகிறான்?

” உறவுகள் என்று எதற்கு இருக்கிறோம் வாணி. பயப்படாதே உன்னை நான் கைவிடமாட்டேன்”

” என்ன சொல்கிறீர்கள் அத்தான்? உங்களுக்கு திருமணம் முடிவாகிவிட்டது” பயத்துடன் கேட்டாள்.

” ஆமாம் அது அம்மாவிற்காக நான் ஒத்துக் கொண்டது. ஆனாலும் உன்னை விட என்னால் முடியாது. அதனால் எப்பொழுதும் நான் உனக்கு துணையாக இருப்பேன். புருஷனை பிரிந்து வந்த பிறகு இந்த இளம் வயதில் உனக்கும் ஒரு ஆண் பிள்ளை துணை வேண்டாமா?” உதடுகள் கோண கேட்ட அவனின் வக்கிர புத்தி புரிய சுபவாணி மனதுக்குள் சுருண்டாள். அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் கூசினாள்.

ஆனால் கேட்டு முடித்த மறுகணமே முதுகில் வாங்கிய பலமான உதையில் “அம்மா….” என்ற அலறலோடு தரையில் குப்புற விழுந்து கிடந்தான் முருகேசன்.

————–

நான்கு மாத மேடிட்ட வயிற்றை டிராக் பேன்டிற்குள் அடக்கி,வயிறு தெரியாமலிருக்க லூசான டி ஷர்ட் அணிந்திருந்தாள் அனன்யா. கதவை திறந்ததும் அநிச்சையாக தன் வயிற்றின் மீது படிந்த தனது மாணவிகளின் பார்வையில் கூச்சம் வர டி ஷர்ட்டை அநாவசியமாக இழுத்து விட்டுக் கொண்டாள்.

அவர்களை வரவேற்று அமர வைத்த அடுத்த நொடி ஹாலிலிருந்த பெரிய கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக் கொண்டாள்.”கொஞ்சம் குண்டாயிட்டேன்ல,அசிங்கமாக தெரிகிறேனா?” கவலையாக கேட்ட ஆசிரியைக்கு என்ன பதில் சொல்வதென தக்ளா விழிக்க,ஆதரவாய் புன்னகைத்தாள் சுபவாணி.

“இன்னமும் அழகாகி இருக்கிறீர்கள் மேம்.பப்ளியாய் பொம்மை மாதிரி இருக்கிறீர்கள்”

அனன்யாவின் முகம் மலர்ந்தது.”குழந்தையை பெற்று வளர்த்து…ப்பா நினைக்கவே பயமாக இருக்கிறது” நிஜ கலக்கம் தெரிந்தது அனன்யாவின் குரலில்.

கண்டிப்பும்,கறாருமாக தெளிவாக தங்களுக்கு பாடமெடுக்கும் ஆசிரியைதானா இவள்…? கல்லூரியில் சேர்ந்த இந்த மூன்று மாத காலத்திற்குள் சுப வாணியின் அலைவரிசைக்கு ஒத்துப்போனவர்களுள் முதலில் தக்ளா பிறகு இந்த அனன்யா. படிப்பில் தடுமாறி நின்ற அவளுக்கு கை கொடுத்தவள் அனன்யாதான். சுபவாணிக்கு பிடித்தவள் என்பதால் தக்ளாவிற்கும் எளிதாக பிடித்தவளாகிப் போனாள். 

தற்போது தனது முதல் குழந்தை பேற்றை எதிர்பார்த்து இருப்பதனால் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள். தோழிகள் அவளை அடிக்கடி பார்த்து நலம் விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

முதல் தாய்மையை எதிர் கொள்ளும் பயமும் தடுமாற்றமுமாக சராசரி பெண்ணாக நின்றவளை இருவரும்  ஆச்சரியமாக பார்த்தனர்.

“Women always women”தக்ளா முணுமுணுக்க,சுபவாணி நகர்ந்தமர்ந்து அனன்யாவின் கைகளை பற்றிக் கொண்டாள்.

“உங்களது லவ் மேரேஜ் இல்லையா மேடம்! பெரியவர்கள் யாரும் பக்கத்தில் இல்லாததால் உங்களுக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றி இருக்கிறது”

“ஆமாம் சாதாரண லவ் மேரேஜ் கிடையாது. பெரிய போராட்டத்திற்குப் பிறகு எங்கள் இருவர் வீட்டிலிருந்தும் ஓடி வந்து நண்பர்களின் உதவியோடு திருமணம் முடித்துக் கொண்டிருக்கிறோம்” அனன்யாவின் முகத்தில் காதலின் சுடர்கள் மின்னின.

“ஆஹா அந்த உயர்ந்த காதலின் பரிசு தானே மேடம் இந்த குழந்தை!” சுபவாணி மென்மையாக அனன்யாவின் வயிற்றின் மேல் கை வைத்தாள். உடன் சிலிர்த்த அனன்யா பெருமையுடன் தலையசைத்து தன் வயிற்றை பொக்கிஷமாய் பொத்திக் கொண்டாள்.

“உங்கள் காதல் பரிசின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் நீங்கள் சந்தோஷப்பட வேண்டுமே தவிர சங்கடப்படக் கூடாது மேடம். உங்கள் உடலில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றம் இந்த செல்லக் குட்டி இந்த உலகத்தை பார்த்த வருவதற்கான ஏறுபடிகள் தானே! அந்த நிமிடங்களை சந்தோஷத்தோடு சிலிர்த்து அனுபவியுங்கள் மேடம். என்னிடம் கேட்டால் நீங்கள் நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே வருகிறீர்கள் என்றுதான் சொல்வேன்” விளக்கம் கொடுத்த 

சுபவாணியை ஆச்சரியமாகப் பார்த்த அனன்யா அவள் தோளணைத்துக் கொண்டாள்.

” எவ்வளவு மெச்சூரிட்டியான பேச்சு! இந்த வயதில் பத்து பிள்ளை பெற்ற நூற்றுக்கிழவி மாதிரி எப்படி உன்னால் பேச முடிகிறது சுபா?” அனன்யாவின் கேள்விக்கு சுபவாணி தடுமாறினாள்.

 அதே ஆச்சரியத்தை தாங்கி நின்ற தோழியின் கண்களையும் சந்திக்காமல் தன் பார்வையை சுவரில் ஒட்டியிருந்த டிவி மேல் விட்டாள். “அது… அம்மா அக்காவோட பிரசவத்தப்ப தைரியம் சொன்னது, அதை… நான் கேட்டு…” தடுமாறி வார்த்தைகளை கோர்க்க முயற்சித்தாள்.

திருமணம் முடிக்காத கன்னிப் பெண்ணால் இவ்வளவு பக்குவமாக பேச முடியாதுதான்.திருமணத்தையும் தாம்பத்தியத்தையும் தொடர்ந்த இன்னல்களையும் அனுபவித்திருந்த சுபவானியால் உயிரை உருவாக்கும் ஒரு உன்னத நிகழ்வை பற்றி எளிதாக பேச முடிந்தது.சாதாரண பேச்சுக்கே இப்படி ஆச்சரியப்படுபவர்கள் தான் திருமணம் தாம்பத்தியம் குழந்தை என்று எல்லாவற்றையும் தாண்டி வந்தவள் என்று தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? சுப வாணியின் மனது கசந்து வழிந்தது.




 இதோ இந்த தக்ளா ‘ச்சீ நீ இப்படிப்பட்டவளா? உன்னிடமா பிரண்ட்ஷிப் வைத்திருந்தேன்’ என்று உதறிவிட்டு ஓடி விடக்கூடும், விரக்தியாய் நினைத்துக் கொண்டாள்.

“நீங்கள் எட்டு மாதத்திற்கு பிறகு லீல் எடுத்து இருக்கலாமே மேடம்! கொஞ்சம் இந்த தனிமை இல்லாமல் இருந்திருக்குமே?” தக்ளா கேட்க 

சுபவாணிக்கும் அது சரியாகவே பட்டது.

” ஏன் மேடம் இப்போதே விடுமுறை எடுத்துக் கொண்டீர்கள்?” அதே கேள்வியை கேட்டாள்.

“ம்… உடம்பு ரொம்ப டயர்டாக தெரிந்ததும்மா. டாக்டரும் ரெஸ்ட் எடுக்க சொன்னார்.தன்வீர் பிடிவாதமாக லீவ் போட சொல்லிவிட்டார்” தன் கணவரை பேசியவளின் குரலில் பெருமை வழிந்தது.

“உங்க சப்ஜெக்ட் மட்டும்தான் கொஞ்சம் புரியும். இப்போது அதற்கும் ஆபத்து” தக்ளா கவலையாக கன்னத்தில் கை வைக்க, ” என் இடத்திற்கு கெஸ்ட் லெச்சரர் ஒருவரை ஏற்பாடு செய்யப் போவதாக அறிந்தேன். அது ரியோவாக இருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி இருந்தால் உங்கள் எல்லோருக்கும் அதிர்ஷ்டம்தான். அவர் நிறைய படித்தவர் அழகாக உங்களை படிக்க வைப்பார்”

அனன்யா பேசப்பேச தக்ளாவின் முகம் மலர்ந்தது. “அன்று நீங்கள் போட்டோவில் காட்டினீர்களே அவர் தானே மேடம்?” அப்பாவியாய் கண் விரித்து கேட்டாள்.

 அனன்யா தலையசைக்க சுபவாணியை பார்த்து கண்களை சிமிட்டினாள்  தக்ளா.




What’s your Reaction?
+1
30
+1
20
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!