உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-10

10

நான் போய் ஆன்ட்டியை கூட்டி வருவதற்கு அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கும். அதற்குள் எப்படி…. இரண்டு விரல்களையும் காற்றில் அங்கும் இங்கும் அசைத்து தனக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்த தோழியை கவலையுடன் பார்த்தாள் தக்ளா.

“என்ன பிரச்சனை பட்டர்?”

” தக்காளி எனக்கு ஒரு விவரம் சொல்லு. ஒரு ஜானிவாக்கர் விஸ்கி பாட்டில்,பக்கத்தில் ஒரு கண்ணாடி கிளாஸ், இரண்டு, மூன்று பவுல்களில் சைட் டிஸ், அப்புறம் ஒரு  சிகரெட் பாக்கெட், மேட்ச் பாக்ஸ் இது எல்லாவற்றையும் யாரும் பார்ப்பதற்கு முன்னால் ஒதுக்கி வைப்பதற்கு சுமாராக எத்தனை நிமிடங்கள் வேண்டும்?” சுபவாணி கேட்டு முடிக்கவும்  ஆழ்ந்த மூச்செடுத்து கத்தினாள் தக்ளா.

” அடிப்பாவிகளா உங்க பிஜில இந்த வேலை தான் பாக்குறீங்களா? ஐயோ தெரியாமல் இப்படி காலேஜ் ஹாஸ்டலில் வந்து மாட்டிக்கொண்டேனே! நீ அப்பாவி, எனக்கு தெரியும். உண்மையைச் சொல் ,இதெல்லாம் உனக்கு பழக்கி விட்டது அந்த ஸ்வரூபா தானே? அவள் எதற்கும் துணிந்தவள் தெரியும்.ஆனால் இப்படி நீயும் அவளோடு சேர்ந்து கொள்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லைடி பட்டர். சரி சொல்லு ஜானிவாக்கர் டேஸ்ட் எப்படி இருந்தது? முதலில் குடிக்கும் போது லேசாக கசக்குமாமே? உண்மையா? ஏய் ஒருநாள் நானும் வரேன்பா. எனக்கும் அதை டேஸ்ட் பார்க்கிறதுக்கு ஆசையா இருக்குது” 

கண்கள் மின்ன பேசியவளை பற்றி குனிய வைத்து முதுகில் மொத்தினாள். “லூசு எதையாவது உளராதடி”

” உளர்றது நானா? நீயா? நீ கேட்ட விளக்கத்திற்கு இப்படி எல்லாம் நான் பேசாமல் இருந்தால்தான் தப்பு” முதுகை தடவியபடி எழுந்தாள் தக்ளா.

” நீயெல்லாம் இதற்கு சரிப்பட்டு வர மாட்டாய் என்று எனக்கு தெரியும். ஆனாலும் இதைப்பற்றி உன்னை பேச வைத்தது யார்?”

” அது… எங்க பிஜியில் ஒரு ரூமுக்குள் திருட்டுத்தனமாக இந்த வேலை நடக்கிறது தக்காளி. நான் வெளியிலிருந்து பார்த்துவிட்டு பிஜி ஆன்ட்டியை கூட்டி வருவதற்குள்… இரண்டு நிமிடங்கள்தான்டி இருக்கும். அதற்குள் எல்லாத்தையும் மறைத்து வைத்து விட்டார்கள். அதுதான் எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

 அவளை பார்த்தபடி இருந்த தக்ளா பட்டென கேட்டாள். “யார் நம்ம ப்ரொபசரா?” லேசாக கண் சிமிட்டினாள்.

“ஏய் ,எப்படியடி கண்டுபிடித்தாய்?” 

“வேறு யாராவது என்றால் மாட்டியிருப்பார்களே! தப்பித்துக் கொண்டதிலிருந்தே அவர்தான் என்று யூகித்தேன்.அவர் ஹீரோப்பா…மாட்டுவாரா என்ன ?”

“ஏய்…அந்த ஆளை ஹீரோ அது…இதுன்ன நான் உனக்கு வில்லனாயிடுவேன்.ஸ்வரூபா ஏதோ சின்னதாக ஆசைப்பட்டு வெளியே போனால், அவளை மாட்டி விட்டவர்.இவர் மட்டும் இப்படி பிஜிக்கு உள்ளேயே செய்யலாமா? அந்த ரியோ ரொம்ப மோசம்டி. நல்லவர் கிடையாது”

” போடி சிகரெட் பிடிப்பவரும் தண்ணி அடிப்பவரும் நல்லவர் இல்லை என்று உனக்கு யார் சொன்னது? எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண்களில் பக்கா பொறுக்கிகள் உண்டு தெரியுமா?” 

சுபவாணியின் மனம் துணுக்குற்றது. என் பிரண்ட் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், இவர்கள் திருமணத்திற்கு முன்பு தனசேகர் ரகுநந்தனுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் கொடுத்தது நினைவிற்கு வந்தது. அதில் பொய் எதுவும் இல்லை. ரகுநந்தனுக்கு குடிபோதை பிடிக்காது. சிகரெட் புகை கூட அலர்ஜிதான். மிக உயர்வான உத்தம மாப்பிள்ளை என்று அவள் பக்கத்து உறவினர்களால் போற்றப்பட்டவன்.

 ஆனால் உள்ளுக்குள் எவ்வளவு மோசமானவன்? சுபவாணி கண்களை இறுக மூடிக் கொண்டாள். வெளி தோற்றத்தையும் பழக்க வழக்கங்களையும் வைத்து ஒருவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ பகுத்தறிய முடியாது. அதுவும் அந்த திறமை என்னிடம் நிச்சயம் கிடையாது. வினாடியில் இறுகி விட்ட சுபவாணியை கண்டதும் தக்ளா கொஞ்சம் பயந்து போனாள்.

” ஏய் சுபா சாரிடி, நான் விளையாட்டாக சொன்னேன். நீ ஏதாவது நினைத்துக் கொள்ளாதே. அந்த பேச்சை விடு, ஸ்வரூபா விஷயம் என்னவாயிற்று? நீதான் காரணம் என்று குழம்பிக் கொண்டிருந்தாளே இப்போது எப்படி நடந்து கொள்கிறாள்?”




 லேசாக தலையை குலுக்கி தன் ஞாபகங்களை துடைத்தெறிந்த சுபவாணி மெலிதாய் புன்னகைத்தாள். “அவள் அண்ணன், அண்ணியை நான் அறைக்குள் அழைத்து பக்குவமாக பேசினேன். நல்ல பிள்ளைதான், சும்மா பிரெண்ட்ஸோடு அன்றுதான் வெளியே சென்றாள். இனி அப்படி போக மாட்டாள், அதற்கு நான் பொறுப்பு என்று பேசினேன். அவர்களும் என் மேல் திருப்தி கொண்டு ஸ்வரூபாவை எச்சரித்து விட்டுப் போய்விட்டனர். இல்லையென்றால் அவளை இங்கிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிற்கு மாற்றும் எண்ணத்தில் இருந்தனர். ஸ்வருபா அங்கே போய் தங்க முடியாது என்று புலம்பிக் கொண்டிருந்தாள். இப்போது எனக்காகத்தான் அவளை மன்னிப்பதாக சொல்லி போயிருக்கின்றனர்”

” அடேங்கப்பா எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறாய்!, ஆனாலும் அந்த ஸ்வரூபா மேல் நம்பிக்கை வைத்து எப்படி இதை செய்தாய் பட்டர்?”

” இனியாவது அவள் கொஞ்சம் திருந்தி விடுவாள் என்ற நம்பிக்கைதான். அதன் பிறகு என்னிடம் பேச்சை நிறைய குறைத்துக் கொண்டாலும், முறைப்பையும் சேர்த்து குறைத்துக் கொண்டாள். தேவையில்லாமல் என்னிடம் வம்பு சண்டைகளுக்கு வருவதில்லை. இனி ஒழுங்காக இருப்பாள் என்று நம்புவோம்”

” என் வீட்டில் காலேஜ் ஹாஸ்டலை தவிர எங்கேயும் தங்கக்கூடாது என்று என் அம்மாவும் அப்பாவும் ஒரே அடம். ஆனால் நான் அவர்களிடம் பேசிக் கொண்டே தான் இருக்கிறேன். ஏதாவது ஒரு சின்ன இணுக்கு கிடைத்தாலும் அதில் நுழைந்து பேசி உன் பி.ஜிக்கு வந்து விடுவேன்”

 சுபவாணி முகம் மலர்ந்தாள். “ஆஹா எனக்காக ரொம்பவும் போராடுகிறாயா தக்காளி? ரொம்ப நன்றி”

“என்ன உனக்காகவா?நான் ரியோவுக்காக….” நெஞ்சில் கை வைத்து கண்கள் சொக்க பேசியவளின் தோள்பட்டையில் சுளீரென அடித்தாள் சுபவாணி.

“பாவி ஒரு நிமிடம் நம் நட்புக்காக என்று ஏமாந்து போனேனே”

” எந்நேரமும் ஏதாவது புக்கை விரித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவாய்.அல்லது ஏதாவது கனவு உலகத்தில் தனியாக மிதந்து கொண்டிருப்பாய். உன்னுடன் ரூம் மேட் ஆக வந்து எனக்கு என்ன யூஸ் இருக்க போகிறது சொல்லு. அதே எதிர் அறையில் ஜாலியாக தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் ஒருவரோடு போய் உட்கார்ந்து அவருக்கு கம்பெனி கொடுத்தால்….” தக்ளா பேசிக் கொண்டிருக்கும்போதே நச்சென்று அவள் தலையில் கொட்டினாள்.

” கண்றாவி என்ன பேச்சடி பேசுகிறாய்?”

” அவர் வைத்திருந்த  அந்த முந்திரிப் பருப்பு ,சிக்கன் இதையாவது தின்று கொண்டிருப்பேன் என்று சொன்னேன். ஏண்டி எல்லாவற்றையும் தப்பாகவே நினைத்துக் கொள்கிறாய்?”

” உன் மூஞ்சி நான் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது ஸ்வரூபா  வீட்டில் இல்லை.உன் வீட்டில் தான். இரு உன் அம்மா அப்பாவிடம் ஹாஸ்டலை விட்டு இவளை நகர விடாதீர்கள் என்று சொல்லி வைக்கிறேன்”

” உனக்கு ஏன்டி பொறாமை? தானும் படுக்க மாட்டாய், தள்ளியும் படுக்க மாட்டாய். என்ன ஜென்மமோ நீ?”

“தக்ளா ஜோக்ஸ் அபார்ட். இதுபோல் மாணவர்கள் அதிகம் தங்கியிருக்கும் விடுதியில் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவனை எந்த கேரக்டரில் சேர்க்க?” சுபவாணி தனது முதல் கவலைக்கு திரும்பி இருந்தாள்.

” ஏண்டி அவர் என்ன நடு ஹாலில் வைத்தா குடித்தார்? அல்லது எதிர் அறையில் இருந்த உன்னையும் கையைப் பிடித்து குடிக்க கூப்பிட்டாரா? அவர் பாட்டுக்கு ரூமுக்குள் குடித்துக் கொண்டிருந்தார். நீங்கள் வரவும் எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டார்”

” சுத்தம் செய்தாரா? திருட்டுத்தனம் பண்ணிவிட்டு மறைத்து வைத்தார்” சுபவாணி சிலிர்த்தெழுந்தாள்.

” ஏய் இப்போ எதுக்கு எகிர்ற?  ஷோல்டரை இறக்கு. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அவர் செய்யும் ஒரு செயல் எப்படி தவறாகும்?”

” ஆனால் அது பிஜி யோட ரூல்ஸ்க்கு எதிர் தானே?”

” அட போடி என்ன பெரிய ரூல்ஸ்? இப்படி சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் நோண்டிக் கொண்டிருந்தால் நாமெல்லாம் இந்த பூமியில் வாழவே முடியாது. ரிலாக்ஸ் பட்டர். இதெல்லாம் சாதாரண விஷயம். கடந்து வா. அசைன்மென்ட் முடித்து விட்டாயா?”

 சுபவாணிக்கு திக்கென்றது. எங்கே அவள் கிளாசை கவனித்தாலல்லவா அசைன்மென்ட் செய்வதற்கு? ஏற்கனவே முடிந்த இன்டர்னலில் அவளுக்கு வெறும் 20 மார்க்குகள் போட்டு வைத்திருந்தான் ரியோ. எண்பது மார்க்குகள் வாங்கும் அளவு அவளும் எழுதவில்லைதான். ஆனாலும் இழுத்துப்பிடித்து பாஸ் செய்ய வைத்திருக்கலாம். வேண்டுமென்றே நிறைய இடங்களில் சிகப்பு மையால் கோடிட்டும் சுழித்தும் வைத்திருந்தான்.

 இவளைப் போலவே எழுதி இருந்த தக்ளாவிற்கு… அதுதான் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துதானே காப்பி அடித்தார்கள்! அவளுக்கு மட்டும் பாஸ் மார்க் போட்டிருந்தான். இவள் பேப்பரை வாங்கிப் பார்த்த தக்ளா பக்கென சிரித்தாள்.

“உன் மேல வஞ்சம் வைத்து விட்டார். ஜாக்கிரதைடி. ஆனால் என் மேல் அவருக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும் போல, பாரேன் இந்த கொஸ்டினுக்கெல்லாம் 12 மார்க் போட்டிருக்கிறார்.” ஒரு மாதிரி பரவசத்துடன் காட்ட சுபவாணிக்கு எரிச்சலாக வந்தது.

” ஏய் பேப்பரை தூக்கிக்கொண்டு ஓடிவிடு. இல்லாவிட்டால் இரண்டு பேப்பரையும் எடுத்துக்கொண்டு போய் ஹெச்.ஓ.டி யிடம் கம்பளைண்ட் சொல்லப் போவேன். எனக்கு அந்த ரியோவை பழி வாங்கணுங்கிறது மட்டும்தான் நோக்கம்.நட்பெல்லாம் பார்க்க மாட்டேன்”  சீரியல் வில்லி போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.




 தக்ளா சட்டென தன் பேப்பரை மடித்து பேக்கிற்குள் வைத்துக் கொண்டாள் ” சை…நீயெல்லாம் டியர் ஃப்ரெண்ட்? சிநேகித துரோகி…” உதடுகளைக் கோணி பழிப்பு காட்டினாள்.

 சுபவாணிக்கு என்றில்லை, அந்த வகுப்பில் ரியோவுக்கு எதிராக முணுமுணுத்து கொண்டிருந்த பலரும் இதுபோல் பெயிலாக்க பட்டிருந்தனர். சிலர் கோபப்பட்டு புலம்பினாலும் பெரும்பாலானோர் இனி ரியோவை பகைத்துக் கொள்வதில்லை என்ற முடிவிற்கே வந்திருந்தனர்.

 ஆக முதல் இன்டெர்னலிலேயே மாணவர்களை தன் பக்கம் திருப்பிக் கொண்ட ரியோ இளவரசனின் தோரணையுடன் வகுப்பறைக்குள் வலம் வந்தான். சுபவாணிக்குத்தான் கையில் இருந்த நோட்டை அவன் மூஞ்சியிலேயே எரியும் வேகம் வந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.

எப்போதும் ரியோவின் வகுப்பில் அவளது இடம் இந்த கடைசி பெஞ்ச்தான் என்று மாற்றிக் கொண்டாள்.அதை கவனித்தும் கண்டுகொள்ளாமல் பாடம் நடத்திக் கொண்டிருப்பான் அவன். அவளது சிறு சிறு பிசகலுக்கும் கவனமின்மைக்கும் உடனே அவனுடைய தீர்ப்பு “கெட் அவுட் ஃப்ரம் தி கிளாஸ்”.

 சந்தோஷமாகவே வெளியேறிவிடுவாள் சுபவாணி. அன்றும் அப்படி வெளியேறி போய் லைப்ரரியில் அசைன்மென்ட்டுக்கான புத்தகங்களை தேடி எடுத்துக் கொண்டாள். மாலை வகுப்பு முடிந்து வெளியேறியவளின் பின்னால் ஓடி வந்த தக்ளா, தான் குறிப்புகள் எடுத்து வைத்திருந்த பாடத்தினை சுபவாணியிடம் கொடுத்தாள்.

 “நான் கிட்டத்தட்ட அசைன்மென்ட் முடிக்க போகிறேன் பட்டர். நீ தான் ரியோ சாரின் கிளாஸை சரியாக அட்டென்ட் பண்ணவில்லையே, இதை வைத்துக் கொண்டு ப்ரீபெர் பண்ணு “

” பரவாயில்லைடி நான் அலெக்ஸின் இந்த புத்தகங்களை வைத்து சமாளித்து கொள்வேன்”

” எதற்காக அத்தனை ரிஸ்க் பட்டர்? நான் இப்படி சொல்லிக் கொடுக்கவில்லையே என்பார் ரியோ. பேசாமல் அவர் சொன்ன பாடத்தில் இருந்தே அசைன்மெண்டை தயாரித்து விடு” நோட்டை அவள் பேக்கிற்குள் வைத்துவிட்டு போனாள்.

 அன்று இரவு அசைன்மென்ட் தயார் செய்ய தக்ளாவின் குறிப்பு நோட்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள் சுபவாணி. இடையிடையே அலெக்சாண்டரின் புத்தகத்தையும் விரித்து பார்த்தவள் புருவங்களை உயர்த்தி இரண்டையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பார்த்தாள்.

 ஆஹா பூனைக்குட்டி வெளியில் வருது… இந்த அறிவு ஜீவி ரியோ இவருடைய புத்தகத்தைத்தான் தின்று மென்று முழுங்கி அங்கே கிளாஸில் வந்து வாந்தி எடுக்கிறாரா? ஏதோ தானே நில அமைப்புகளையும் புவியியல் சார்புகளையும் கண்டறிந்தது போல் என்ன ஒரு பந்தா! இருக்கட்டும் எனக்கு ஒரு நேரம் வரும் இந்த ஆளுடைய சாயத்தை வெளுக்க வைக்கிறேன். தனக்குள் கறுவிக்கொண்டாள் சுபவாணி.




What’s your Reaction?
+1
34
+1
22
+1
2
+1
5
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!