Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-4

4

இன்னமும் தன்னை நம்ப முடியாத பார்வை பார்க்கும் சகோதரியை புன்னகையுடன் பார்த்தாள் சுபவாணி.

“அக்கா நம்பு நான் உன்னுடைய அதே பயந்தாங்கோலி தங்கைதான்”

இந்திரா வேகமாக வந்து தங்கையை மெதுவாக அணைத்துக் கொண்டாள். “ரொம்ப சந்தோசமாக இருக்கிறது வாணி.வெகுளியான உன்னை இப்படி ஒரு நரகத்தில் தள்ளி விட்டோமே என்று நினைத்து நினைத்து மனதை நானும் உன் அத்தானும் புண்ணாக்கி கொண்டிருந்தோம். ஆனால் ஒரு தைரியமான முடிவெடுத்து எங்கள் குற்ற உணர்வை ஓரளவு போக்கிவிட்டாய் நீ”

“என்னுடைய தலையெழுத்திற்கு அத்தானும் நீயும் என்னக்கா செய்வீர்கள்? இப்படி நடக்க வேண்டும் என்று என் தலையில் எழுதி இருக்கிறது. ஏதோ இப்போது அதை கடந்தும் வந்தாயிற்று. இனியாவது குற்ற உணர்வை உதறி நீங்கள் இருவரும் நிம்மதியாக இருங்கள்” ஆறுதல் சொன்ன தங்கையை சிறு விம்மலுடன் கட்டிக் கொண்டாள் இந்திரா.

 தங்கையின் இந்த மென்மையான குணத்தை அந்த ரகுநந்தன் மிக நன்றாகவே புரிந்து வைத்திருந்தான் என்று அவளுக்கு மிக தெளிவாகவே புரிந்தது. அன்று கோர்ட்டில் கூட தீர்ப்பிற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவன் தங்கையின் மனதை கலைக்க முயன்றதை எண்ணிப் பார்த்தாள்.அன்று…

“சுபா என்னம்மா இது?” கேட்டபோது அவன் கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

 இந்திரா அழுத்தமாக தங்கையின் கையை பற்றிக்கொள்ள “அவளை விடுங்க, நான் என் மனைவியிடம் தனியாக பேச வேண்டும்” இப்போது அதிகாரம் வந்திருந்தது அவன் குரலில்.

இந்திரா பரிதவிப்புடன் தங்கையை பார்க்க அவள் முகம் சிவந்து கன்றிக் கிடந்தது. கடவுளே! இவள் இப்போது அழுது விடக்கூடாது.சட்டென உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் தங்கையிடம் இப்போது அந்த அழுகையை இந்திரா விரும்பவில்லை.

“சுபா நான் உன் கணவன் தானே! ஆறு மாதங்கள் நாம் எப்படியெல்லாம் சந்தோஷமாக இருந்தோம்,மறந்து விட்டாயா? இதுபோல சொந்த பந்தங்கள் எல்லாம் கணவன் மனைவியை பிரிக்கத்தான் வருவார்கள் போல, நம்மை பிரிக்கும் இவர்கள் வேண்டாம். என்னோடு வந்து விடும்மா. நாம் நம் வீட்டிற்கு போய்விடலாம்” ஆபத்பாந்தவன் போல் இரு கைகளையும் நீட்டினான்.

” இல்லை போய் விடுங்கள்” தலைகுனிந்து முணுமுணுத்த தங்கையை எரிச்சலாக பார்த்தாள் இந்திரா. தள்ளி போடா… என்று அதட்டாமல் என்ன இவள்!?

“என்னம்மா ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்! கொஞ்சம் எனக்கு கோபம், அதனால்தான் அன்று அப்படி நடந்து விட்டது. கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சகஜம் தானே! இது போல் இதற்கு முன்பும் பலமுறை நமக்குள் நடந்திருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு எப்படியாவது உன்னை சமாதானமும் செய்து விடுவேன்தானே! பிறகு நாம் எப்படியெல்லாம் ஜாலியாக இருப்போம்!அதெல்லாம் உனக்கு நினைவில்லையா?யோசித்து பாருடாம்மா” சரசமாய் கேட்டதோடு கார் அருகில் வந்து ஜன்னலில் வைத்திருந்த அவள் கை மேல் தன் கையை வைத்தான் ரகுநந்தன்.

அவனது அருவருப்பான நினைவுறுத்தல்களை நம்ப முடியாமல் பார்த்து ஓங்கி அவன் கன்னத்தில் அறையும் முடிவை இந்திரா எடுத்தபோது, “கையை எடுடா” என்ற குரலில் ஆச்சரியமாக திரும்பி பார்த்தாள்.

அவளது மென்மையான தங்கைதான்.இப்போது மென்மையானவளாக இல்லை.முகம் ரத்தமாக சிவந்திருக்க கண்களை உருட்டியபடி காளி அவதாரம் எடுத்திருந்தாள்.

“என்னது?” நம்ப முடியாமல் விதிர்த்து நின்றான் ரகுநந்தன்.

சடாரென அவன் கையை உதறி தள்ளியவள், அருவருப்பாக உடலை சிலிர்த்தாள். “சீச்சி சாக்கடை மேலே பட்டது போல் இருக்கிறது. என் முன்னால் நிற்காதே போய்விடு!” சுபவாணியின் குரல் உயர்ந்திருந்தது.

ரகுநந்தனின் முகம் சிவந்தது. பற்களை நறநறவென கடித்தான். அந்த இடத்திலேயே சுபவாணியை அறைந்து தள்ளி நைய புடைத்து விடும் ஆத்திரம் வெளிப்படையாக தெரிந்தது. “எவ்வளவு திமிருடி உனக்கு? புருஷன் என்கிற மரியாதை இல்லாமல்…” கையை காருக்குள் நுழைத்து அவள் தலைமுடியை கொத்தாக பற்றினான்.

” என்ன இது விடுங்க” கத்தியபடி ஓடி வந்தார் அவனது வக்கீலின் ஜூனியர். “கோர்ட்டுக்குள் இப்படியா பண்ணுவீங்க? இதெல்லாம் நம்ம பக்கம் கேசை வீக்காக்கும்” ரகுநந்தனின் கையை விரித்து வலுக்கட்டாயமாக இழுத்துப் போனார்.




“அவன் அப்படி குழைந்து பேசியதும் எங்கே நீ மனம் மாறி விடுவாயோ என்று ஒரு நிமிடம் பயந்து போனேன் தெரியுமா?” இந்திரா சொல்ல விரக்தி சிரிப்பொன்றை சிந்தினாள் சுபவாணி.

“என்னக்கா, முட்டாள் தானே இவள்! நான்கு கொஞ்சும் வார்த்தைகளில் அவன் பின்னால் போய்விடுவாள் என்று நினைத்தாயோ?”

“ஐயோ அப்படி இல்லைமா, அன்பு உனது பலவீனம் என்று எனக்கு தெரியும். அதனை அவன் நன்றாக உணர்ந்து வைத்திருந்தான். அன்பு போல் போலியாக நடித்து உன்னை அவன் பக்கம் மீண்டும் இழுத்து விடுவானோ என்ற பயம்தான் எனக்கு”

” அன்பு எனது பலவீனம்தான் அக்கா. ஆனால் அதனை விட மோசமான குணம் ஒன்று என்னிடம் உண்டு. உண்மையான அன்பு எதுவென்று இனம் பிரிக்க தெரிவதில்லை எனக்கு. இதுதான் எனது மிகப்பெரிய பலவீனம்” விரக்தி கலந்து பேசிய தங்கையை பரிவுடன் அரவணைத்துக் கொண்டாள் அக்கா.

” கவலைப்படாதே வாணி. இனி நாங்கள் எல்லோரும் உனக்கு இருக்கிறோம்”

 சரிதான் அக்கா. ஆனால் எத்தனை நாட்களுக்கு இப்படி என்னை பாதுகாப்பீர்கள்? இதனை தன் மனதிற்குள்தான் கேட்டுக்கொண்டாள் சுபவாணி. அப்போது அவளது எதிர்காலம் அவள் முன் பிரமாண்டமாக எழுந்து நின்று அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது.ஆனாலும்…

 “இப்போதெல்லாம் குழப்பமே இல்லை.ரொம்ப தெளிவாக இருக்கிறேன்…” பரிதவிப்புடன் முன் நின்ற தமக்கைக்காக  புன்னகை பூசினாள்.

“சரி நீ மாடியிலேயே இரு. உனக்கு காபி இங்கே கொண்டு வருகிறேன்” இந்திரா சொல்லி விட்டுப் போக, எழுந்து பால்கனியில் நின்றவள், அதென்ன எனக்கு காபி எடுத்து வர ஒரு ஆள்… என்று எண்ணியபடி படிகளில் இறங்கினாள்.

 பாதிப்படியில் கீழிருந்து வந்த சத்தத்தில் நின்றாள். “ஆனாலும் உங்க குடும்பத்துக்கு இவ்வளவு அழுத்தம் இருக்கக் கூடாதுண்ணா. எவ்வளவு பெரிய வேலை! எவ்வளவு சம்பாத்தியம்! 19ஆவது மாடியில் அந்த வீடு பங்களா மாதிரில்ல இருந்தது! இத போய் வேண்டாம்னு உதறிட்டு வருவாளா ஒரு முட்டாள்!” அத்தை நீலவேணியின் குரல்.

அக்கா, தானே காபி எடுத்து வர சென்றதன் காரணம் சுபவாணிக்கு இப்போது புரிந்தது. தட்டு தடுமாறி டிகிரி முடித்த தனது மகனை எப்படியாவது அண்ணனின் படித்த மகளுக்கு மணமுடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருந்த அத்தை முதலில் குறி வைத்தது இந்திராவை.

 சிவனேசன் மறுத்ததோடு அடுத்த ஆறே மாதத்தில் தகுந்த வரனை பார்த்து முதல் மகளின் திருமணத்தை முடித்து விட்டார். இப்போது அத்தையின் குறி சுபவாணிக்கு மாறியது.

 “என் மகனும் படிச்சு தானே இருக்கிறான். அவளைத்தான் மாட்டேன்ன… இவளுக்காவது கட்டியே தீரனும்” சொந்த பந்தங்களில் நான்கு பேரை பஞ்சாயத்திற்கும் கூட்டி வந்துவிட்டு நிர்ப்பந்திக்க தொடங்கினாள்.

 ஒருவேளை அத்தைக்கு பயந்துதான் அப்பா அவசரப்பட்டு தனது திருமணத்தை முடிவு செய்து விட்டாரோ? ஒரு நொடி யோசித்து விட்டு தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் சுபவாணி. அவளுடைய விதிக்கு யாரையும் குற்றம் கூற அவள் தயார் இல்லை.

ஓசைப்படாமல் ஒதுங்கி ஹாலில் இருந்தவர்களை கடந்து வீட்டின் பின்பக்க தோட்டத்தில் கடப்பைக் கல் பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டாள். “வாணி…” ஒரு மாதிரி இழுவை குரலில் அழைத்தபடி அவள் அருகில் வந்து அமர்ந்தான்  முருகேசன், நீலவேணி அத்தையின் மகன்.

ஐய்யைய்யோ இவன் இப்போது என்ன சொல்லப் போகிறான்? முன்பு அவன் பேசிய காதல் வசனங்கள் நினைவு வந்து வயிற்றை கலக்கியது.அதில் விசேசம் என்னவென்றால் முருகேசன் அதே வசனங்களைத்தான் அக்கா இந்திராவிடமும் பேசியிருந்தான்.

“நாற்பது பக்க நோட்ல பாய்ண்ட் போட்டு எழுதி மனப்பாடம் பண்ணி வைத்திருப்பான் போலடி…”அக்காவும் தங்கையும் தங்கள் அனுபவங்களை பேசி சிரித்துக் கொண்டிருந்ததை அவன் கேட்டுவிட்டான்.கண்கள் சிவக்க நெருங்கினான்.




————-

“அடச்சை…” தக்ளா நீட்டிய நோட்டை தூக்கி போட்டாள் சுபவாணி.”என்ன கண்றாவியை இதில் கிறுக்கி வைத்திருக்கிறாய்?”

“மை லவ்” என்றாள் தக்ளா ஒரு மாதிரி போதையான குரலில். அந்த நோட்டை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். காதல் கவிதைகளும், ஏதேதோ காதல் பிதற்றலுமாக இருந்தது அந்த நோட்டு.

 லைப்ரரியில் குறிப்புகள் எடுப்பதற்காக சுபவாணி நோட்டை கேட்க தக்ளா நீட்டிய நோட்டு இந்த லட்சணத்தில் இருந்தது. “ஏய் தக்காளி நீ எல்லாம் திருந்த மாட்டாயா? உனக்கு இந்த காதலை தவிர வேறு நினைப்பே வராதா?”

சுபவாணி சலித்தபடி புத்தகங்களை அலமாரியில் தேடத் துவங்கினாள்.

“நேற்று நைட் என் கனவு காதலனை நினைத்தபடி எழுதியவை இதெல்லாம்.உனக்கு தெரியுமா பட்டர்,இப்போதெல்லாம் என் கனவு நாயகனுக்கு முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.அது யார் முகம் தெரியுமா?”

“Volconic rocks சப்ஜெக்ட் ரொம்ப குழப்புது தக்ளா.அதற்காகத்தான் இங்கே புத்தகம் தேடுகிறேன்”

“அடப்போடி உன்னோடு ஒரே போர்.வாழ்க்கையை வண்ணமயமாக மாற்ற நான் பேசினால் நீயானால் எரிமலையை பேசிக் கொண்டிருக்கிறாயே”

பொதுவாக வாழ்க்கையில் வண்ணமயமெல்லாம் உண்டா என்ன? அதெல்லாம் அந்த காதலில்தான் வருமா? அது சரி காதலென்பது என்ன? நேரம் காலமில்லாமல் கட்டியணைத்து படுக்கையில் தள்ளி,நீ இருப்பதே இதற்காகத்தான்டி என ஒவ்வொரு அசைவிலும் உணர்த்தும் அந்த தாம்பத்ய உறவிற்கு ஆண் காதலென்றுதான் பெயரிட்டுக் கொள்கிறான்.நீயும் இந்த காதலைப் பற்றித்தான் பேசுகிறாயா தக்ளா? உள்ளுக்குள் புலம்பியபடி மனக்குமுறல் தோழிக்கு தெரியாமலிருக்க முதுகு காட்டியபடி நூலக அலமாரிக்குள் கவிழ்ந்து கிடந்தாள் சுபவாணி.

“Stratigraphy பற்றி ஒரு புக்.அலெக்ஸ்ங்கிறவர்  எழுதியிருந்தார்.நான் M.sc படிக்கும் போது எங்க காலேஜ் லைப்ரரில பார்த்திருக்கேன்.நாங்க பத்து பேர்  குரூப்பா அந்த புக் வைத்துதான் Indian Geology Stratigraphy சப்ஜெக்டை தேர்ட் செமஸ்டரில் படித்து தேத்தினோம். அந்த புக்ல  பாறைப்படிமங்களை பற்றி ரொம்ப நல்லா விளக்கியிருப்பாரு. அதிலேயே அடுத்தடுத்த பாகம் எழுதப் போவதாக சொல்லியிருந்தாரு.அதைத்தான் தேடுறேன். Stratigraphy அடுத்த பார்ட் கிடைத்தால் Volconic rocks ஈசியா படிக்கலாம்னு நினைக்கிறேன்.

நீயும் பாரேன் தக்ளா”

“Love at first sight,Love and love only,Fair to love me இப்படி ஏதாவது புக் அந்த அலெக்ஸ் எழுதியிருக்காரா பட்டர்? சொல்லு உடனே தேடி எடுக்கிறேன்”

இரண்டு கைகளையும் அடித்து தோழியை கும்பிட்டாள் சுபவாணி.”

தாயே தக்காளி இன்றைக்கு உனக்கு படிப்பு பற்றி பேச ஊசி முனை எண்ணம் கூட இல்லை.நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.பேசாமல் நாம் இரண்டு பேரும் கடைசி இரண்டு வகுப்பை கட்டடிச்சுட்டு இருப்பிடம் போய் சேரலாம் வா”

“ஐ, கிளாஸ் கட் பண்ணலாமா? வாயேன் டவுனுக்குள் போய் பீட்ஸா சாப்பிட்டு வரலாம்”

“உதை.அனன்யா மேடத்தை பார்க்க போகும் ப்ளான் வைத்திருந்தோமே.அங்கே போகலாம் வா”

“சரியான சாமியார்டி நீ.வயதுப்பெண் போலவா இருக்கிறாய்” தக்ளா சலிக்க சுபவாணிக்கு சொரேலென்றது.

வயதுப்பெண்ணா நான்? உன் வயதுதான் எனக்கும் தக்ளா.ஆனால் இந்த வயதிற்கு நான் எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன் தெரியுமா? சுபவாணியின் மனம் விம்மியது.




What’s your Reaction?
+1
31
+1
28
+1
2
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!