Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-9

9

பிசிரற்ற குரலில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவனை கடைசி பெஞ்சில் அமர்ந்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுபவாணி. சீ என்ன மனிதன் இவன்! நம்ப வைத்து கழுத்தை அறுத்தார் போல்…! அவள் மனம் இறுகியது. 

முதல் நாள் இரவு… திடுமென தோன்றி கேள்வி கேட்டவனுக்கு  தடுமாறி பின் பதிலளித்தாள். “சார் என் ரூம் மேட் .அவள் பிரண்டோடு வெளியில் போகிறாள். சீக்கிரமே வந்துவிடுவாள்”

“ஓ… சைலஜா ஆன்ட்டியிடம் சொல்லியாயிற்றா? முன் பக்க வாசல் கதவு சாவி தொலைந்து விட்டதாக சொன்னார்களா என்ன?” என்றான் நக்கலாக.

” இல்லை சார், அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். இவள் ஏதோ கொஞ்சம் ஆசைப்பட்டு….”

“ம்… நீ போகவில்லையாக்கும்?” என்றவனின் குரல் சீண்டல் சுபவாணியை மிக பாதித்தது.

” நானெல்லாம் அப்படி போக மாட்டேன்”

” ஆனால் செல்பவர்களுக்கு சப்போர்ட் மட்டும் செய்வாய் போல! எனக்கென்னவோ இரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருப்பது போல் தோன்றவில்லை” தோள்களை குலுக்கினான்.

“ப்ச்  எதற்கு சார் வீண் பேச்சு? ஏதோ ஸ்வரூபாவின் அல்பத்தனமான ஆசை இது. போய்விட்டு வரட்டும். இந்த விஷயம் நீங்கள் சைலஜா ஆன்ட்டியிடம் சொல்ல வேண்டாம்” பேசிக்கொண்டே போனவள் அவனது புருவ உயர்த்தலை கண்டு “ப்ளீஸ்…” என்று ஒரு கெஞ்சல் வார்த்தையையும் சேர்த்துக் கொண்டாள்.

 பதிலின்றி உள்ளே நடந்தவன் முதுகை குழப்பமாக பார்த்தாள். ஒத்துக் கொண்டானா்..? இல்லையா…?

இரவு 12 மணிக்கு மேல் சைலஜா அறைக் கதவை தட்டும் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டாள். ஏதாவது சந்தேகம் வந்தால்தான் இப்படி கதவைத் தட்டி விசாரிப்பார். பயந்தபடி கதவை திறந்தவளை தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தார். 

“ஸ்வரூபா  எங்கே?” இந்தியில் கேட்டார்.

” தூங்குகிறாள் ஆன்ட்டி”

” அவளை எழுப்பு. ஒரு விபரம் கேட்க வேண்டும்” சைலஜா கால்களை அழுத்தமாக ஊன்றியபடி நிற்க, அந்த குளிர் நேரத்திலும் சுபவாணிக்கு அநியாயமாக வியர்த்தது.

“அ… அவள் நன்றாக தூங்குகிறாள். காலையில் பேசிக் கொள்ளலாமே ஆன்ட்டி…” தடுமாறியவளின் கண்கள் எதிர் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் எட்டிப் பார்த்தவனை கண்டதும் நிம்மதி அடைந்தது.

 ஏனோ அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை. காப்பாற்றேன் என்பதாக கண்களாலேயே அவனுக்கு ஒரு செய்தியும் அனுப்பினாள். ஒற்றைக் கதவை திறந்து வைத்துக் கொண்டு மூடியிருந்த மற்றொரு கதவின் மேல் சாய்ந்து கைகளை கட்டி நின்றபடி இங்கே சுவாரசியமாக பார்த்தான் அவன்.

“ஸ்வரூபாவை எழுப்பு” சைலஜா குரலை உயர்த்தினார். இன்னமும் இரண்டு அறைகளில் இருந்து தலைகள் வெளியே தெரிய துவங்க சுபவாணிக்கு ஒரு மாதிரி அவமானமாக இருந்தது.

 சுபவாணியின் குரல் பலவீனமாகிக் கொண்டே போனது. “இந்த மேடம் அவர்கள் தோழியை தூக்கத்திலிருந்து எழுப்ப யோசிக்கிறார்கள் ஆன்ட்டி. நீங்களே போய் எழுப்பலாமே” எதிர் அறையில் இருந்து ரியோ குரல் கொடுக்க அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். 




 அவன் இரு விழிகளையும் உருட்டி உருவங்களை மேலே உயர்த்தி எப்படி என்று இவளிடம் அபிப்பிராயம் கேட்டான். சுபவாணிக்கு சீ என்றானது.போடா நீயும் அந்த மட்டமான ஆண் சாதிதானே! குமுறியது அவள் மனம்.

 “நீ சற்று நகர்” சைலஜா வேகமாக உள்ளே நுழைந்து படுக்கையில் இருந்த போர்வையை உயர்த்தி பார்த்ததும் கன்னா பின்னாவென்று கத்த துவங்கினார். அவர் பேசிய ஹிந்தி பாதிக்கு மேல் சுபவாணிக்கு புரியாவிட்டாலும் மிகவும் கோபமான வசவுச் சொற்கள் அவை என்பதை உணர முடிந்தது.

 குற்றம் சாட்டும் பார்வையுடன் எதிர் அறையை பார்க்க ரியோ இன்னமும் சுவாரஸ்யமாகி இவர்கள் அறைக்குள் கொஞ்சம் எக்கி பார்த்துக் கொண்டிருந்தான். 

“இப்படி விதிகளை மீறுபவர்களை இங்கே தங்க வைக்க முடியாது. உங்கள் வீட்டினருக்கு நான்தான் பதில் சொல்லியாக வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் நாளையே அறைகளை காலி செய்து கொள்ளுங்கள்” 

“ஆன்ட்டி ஒருவேளை இவர்களுக்கு அவர்கள் தோழி போனதே தெரியாதோ என்னவோ?” அங்கிருந்து குரல் கொடுத்தான் ரியோ. கூடவே அப்படித்தானே என்று இவளிடம் ஒரு பார்வை வேறு. 

உன்னைப்போல் நரி வேலை நான் பார்க்க மாட்டேன். மனதிற்குள் சொல்லிக்கொண்ட சுபவாணி தலை நிமிர்ந்து ” இல்லை ஆன்ட்டி, ஸ்வரூபா என்னிடம் சொல்லிக் கொண்டுதான் சென்றாள்” என்றாள். 

ரியோவின் கண்களில் மெலிதான சலிப்பு தெரிந்தது .எப்படியோ போ என்பது போல் புறங்கையை அசைத்தவன் அறைக்குள் போய் கதவை பூட்டி கொண்டான்.

” அவள் வந்த பிறகு இரண்டு பேரும் என்னை ஆஃபீஸில் வந்து பாருங்கள்” சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிய சைலஜா வராண்டாவில் நின்று எல்லா அறைக்கும்  மீண்டும் ஒரு எச்சரிக்கையை கொடுத்துவிட்டு தான் அறைக்குள் போனார்.

 எல்லோர் பார்வையும் தன் மேலேயே இருப்பது போல் உணர்ந்த சுபவாணி கூச்சத்துடன் அறைக்கதவை மூடிக்கொண்டாள். நள்ளிரவு தாண்டி திரும்பிய ஸ்வரூபா சுபவாணி சொன்ன செய்தியில் அவளை எரிப்பது போல் பார்த்தாள். “வேண்டுமென்றே என்னை மாட்டி விட்டாய்தானே?” குரோதத்துடன் கேட்டுவிட்டு தொப்பென படுக்கையில் விழுந்தாள்.

 சும்மாவே இவளுடன் அவ்வளவு பழக மாட்டாள். இதில் எந்த பிரச்சனை வேறா… சுபவாணிக்கு வெகு நேரம் உறக்கம் வரவில்லை. 

மறுநாள் காலையில் அறையை விட்டு வெளியே வந்த போது ரியோவும் சரியாக வெளியில் வந்தான். அவனைப் பார்க்க பிடிக்காது சட்டென மீண்டும் அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.

“அம்மா அப்பா இல்லை எனக்கு. அண்ணனும் அண்ணியும்தான். இந்த விஷயம் தெரிந்தால் என் படிப்பையே நிறுத்தி கூட்டிப் போய் விடுவார்கள்” புலம்பிக் கொண்டிருந்தாள் ஸ்வரூபா.

“நாம் ஆன்ட்டியிடம் பேசிப் பார்க்கலாம்” ஆதரவாக தோள் தொட்டவளை உதறினாள். 

 சுபவாணி பெருமூச்சுடன் சைலஜாவின் அறைக்கு நடந்தாள். “மிகச் சரியான நேரத்தில் காட்டிக் கொடுத்தீர்கள் சார். வகையாக மாட்டிக் கொண்டார்கள். உங்களால்தான் அவர்களை பிடித்து விட்டேன்” சைலஜாவின் உற்சாக குரல் உள்ளிருந்து கேட்க அதிர்ந்து நின்றாள்.

எதிர்பார்த்ததுதான் என்றாலும் கண் முன்னால் நடந்து கொண்டிருந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“நான் சொன்னது அந்த பெண் ஸ்வருபாவை மட்டும்தான். இன்னொரு பெண் நல்லவள். என்னுடைய ஸ்டூடன்ட் கூட. அவளை விட்டு நீங்கள் அந்த பெண் மீது மட்டும் நடவடிக்கை எடுங்கள்” தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தான் ரியோ.

” நீங்கள் சொல்லிவிட்டீர்களே, அப்படியே செய்து விடலாம் சார்” சைலஜா வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருக்க உடலெங்கும் பரவிய பதட்டத்துடன் வேகமாக வெளியே போய் ஓரமாக இருந்த கல்பெஞ்சில் அமர்ந்து பெரிய மூச்சுக்களாக எடுத்து விட்டாள் சுகவாணி.

 அவளை பார்த்தபடி கடந்து போய் தனது பைக்கை எடுத்த ரியோ அவள் அமர்ந்திருக்கும் நிலையிலேயே தன் பேச்சை கேட்டு விட்டாள் என்ற புரிந்து கொண்டான். பைக்கை ஸ்டார்ட் செய்து அவளை கடக்கும் போது ஒரு நிமிடம் நிறுத்தி “பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்,ஒழுங்கீனங்களை அனுமதிக்க முடியாது” சொல்லிவிட்டு போய்விட்டான். 

கீழே கிடந்த கல்லை எடுத்து அவன் முதுகில் எரியும் வேகம் வந்தது சுபவாணிக்கு. பெரிய ஒழுக்கசீலன்… இப்போது பிரச்சனையிலிருந்து அவளை வேறு விடுவித்து வைத்திருக்கிறான். இது ஸ்வரூபாவிற்கு இன்னமும் இவள் மேல் ஆத்திரத்தைத்தானே கிளப்பும்!




 அளவற்ற எரிச்சலுடன் வகுப்பிற்கு வந்தவள்,அவன் உள்ளே நுழையவுமே தனது மூன்றாவது பெஞ்சிலிருந்து எழுந்து விடு விடு என்று கடைசி பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டாள். நோட்டை மூடி வைத்துவிட்டு பெஞ்சில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். 

உன் முகத்தை பார்க்க உன் பாடத்தை கேட்க பிடிக்கவில்லை என்று தன் எதிர்ப்பை அவள் பதிவு செய்ய, இரண்டாம் நிமிடம் அவள் மேலேயே வந்து விழுந்தது சாக்பீஸ் துண்டு. “கெட் அவுட் ஃப்ரம் தி கிளாஸ்” அவன் கத்த “தேங்க்யூ சார்” மலர்ந்த முகத்துடன் நன்றி சொல்லிவிட்டு தனது பேக்கை எடுத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினாள்.

 இவன் முகரையைப் பார்த்து பாடம் படிப்பதற்கு பதிலாக நான் படிக்காமலேயே இருந்து விடுவேன் தனக்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தவளின் அருகே வந்த அமர்ந்தாள் தக்ளா. சுபா என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?”

உன் க்ரஷ் சரியான திமிர் பிடித்தவன், கோள் மூட்டி என்றெல்லாம் அவளிடம் சொல்ல மனமில்லை சுபவாணிக்கு. சொன்னாலும் அவள் நம்பப் போவதில்லை என்பது அடுத்த விஷயம். “எனக்கு மூட் சரியில்லை தக்ளா”

” சரிதான் இப்படியே இருந்தாயானால் எப்படித்தான் படிப்பதாம்? ரியோ அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார்.இதோ நான் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். இதை வைத்து நீயும் தயார் பண்ணிக் கொண்டு வா” தனது நோட்டை நீட்டினாள்.

” பிறகு நீ எப்படி அசைன்மென்ட் எழுதுவாய்? எனக்கு இந்த குறிப்பு தேவையில்லை. நான் லைப்ரேரியிலிருந்து புத்தகம் எடுத்துக்கொண்டு போய் அசைன்மென்ட் தயார் செய்து கொள்கிறேன்”

 சுபவாணி நூலகத்திற்கு நடந்தாள். இவன் பாடத்தை கேட்டு நான் படிப்பதற்கு தலையை எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம்…வெறுப்பாய் நினைத்தபடி அவளுக்கு தேவையான புத்தகத்தை தேடி கண்டுபிடித்து எடுத்து வருவதற்குள்ளாகவே சோர்ந்து போனாள். 

இனி இதனை படித்து பாய்ண்ட்ஸ்கள் வேறு எடுக்க வேண்டும், தளர்ந்த நடையுடன் தன் அறைக்கு வந்தவளின் கண்கள் எதிர் அறைப்பக்கம் போக புருவங்கள் சுருங்கின. எதிர் அறைக் கதவு மிக லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே… சுபவாணியின் விழிகள் சாசராக விரிந்தன.

 உள்ளிருப்பவனுக்கு தெரியாமல் சற்று ஒதுங்கி நின்று கொண்டு மீண்டும் பார்வையை கூர்மையாக்கி உள்ளே பதித்து உறுதி செய்து கொண்டாள். உடன் ஒரு பரபரப்பு அவளிடம் வந்திருந்தது. ஆஹா சிங்கம் சிக்கிருச்சுடா! இது மட்டும் விதிமீறல் இல்லையா! மவனே செத்தடா நீ இன்னைக்கு!

வேகமாக சைலஜாவின் அறைக்குள் ஓடிப் போனவள் சிறு மூச்சு வாங்கலுடன் “ஆன்ட்டி 19ஆம் ரூமுக்கு வந்து பாருங்களேன்” என்று சைலஜாவின் கையை பிடித்து இழுத்து வந்தாள். 

அழித்து பிரித்து செய்தால் நான்கு சுபவாணிகள் செய்யலாம் போன்ற உருவத்தில் இருந்த ஷைலஜாவை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு அறைக்கு வந்தால், இப்போது அறைக்கதவு இறுக்கமாக மூடப்பட்டிருந்தது.

 “விடும்மா ஏன் டிஸ்டர்ப் பண்ற ?” என்ற சைலஜாவின் பேச்சை தாண்டி டப் டப்பென்று கதவை தட்டினாள்.  கதவைத் திறந்து வெளியே வந்தவனை திகைப்புடன் பார்த்தாள்.

 தியானம் முடித்து எழுந்து வந்த புத்தரின் தோற்றத்தை கொண்டிருந்தான் ரியோ. இவன்தானா கொஞ்ச நேரம் முன்பு சிகரெட் பிடித்தபடி விஸ்கி குடித்துக் கொண்டிருந்தவன்! குழப்பத்துடன் அண்ணார்ந்து அவன் முகம் பார்க்க அவன் அவளுக்கு மட்டுமாக மிக லேசாக கண்களை சிமிட்டினான்.

ஷைலஜா திரும்பி பார்க்கவும் முகத்தை பவ்யமாக்கி மீண்டும் கௌதமனானான்.




What’s your Reaction?
+1
34
+1
26
+1
3
+1
5
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!