Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-6

6

முன்னால் விரித்து வைத்திருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் நெளி நெளிவாக புழுக்கள் போல் ஓட ஆரம்பிக்க நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி பெஞ்சில் சரிந்து கொண்டாள் சுபவாணி. அவள் தோலை தட்டினாள் காத்தரின்

“அடிக்கடி வேறு ஏதோ உலகத்திற்கு போய் விடுகிறாயே என்ன விஷயம்?” ஆங்கிலத்தில் கேட்டாள்.

சுபவாணி பதில் சொல்லாமல் புன்னகைக்க, “ மேடம் தக்ளாவிடம் மட்டும்தான் பேசுவார்கள்” கிண்டல் செய்தான் ஜகான்.

கொஞ்சம் உடம்பு சரியில்லையென தக்ளா லீவு எடுத்திருக்க,தனிமையில் இருந்த சுபவாணியை வம்படியாக சீண்டினர் அனைவரும்.

“நாம் இங்கே படிப்பதற்காக வந்திருக்கிறோம். இப்படி கனவு கண்டு கொண்டிருப்பதற்கு அல்ல தெரியுமா?” என்றாள் காத்தரின் கிண்டலுடன்.அவளளவு சுபவாணி படிப்பில் கெட்டி கிடையாதாம்.குத்தலை ஜீரணித்தாள் சுபவாணி.




ம்…படிப்பு. கடந்து வந்திருந்த பாதைகள் மண்டைக்குள் சர்ப்பமாய் ஊர்ந்து கொண்டிருக்க இந்த படிப்பை மூளைக்குள் ஏற்றுவது 

சுபவாணிக்கு மிக கடினமாகவே இருந்தது. இத்தனை வயதிற்கு பின் இவ்வளவு அனுபவங்களுக்கு பின் இன்னமும் எதை சாதிக்க படிக்க வேண்டும்? புத்தகத்தை தூக்கி எறிந்து விட்டு போய்விடும் எண்ணம் தான் அவளுக்கு. பலமுறை அப்படித்தான் தோன்றும். ஆனால் இனி இதுதான் உன் எதிர்காலம் என்று அவளிடம் குடும்பத்தாரால் திணிக்கப்பட்டிருந்தது இந்த படிப்பு.

“ஒன்றுமில்லை காத்தரின். எங்கள் ஊர் நினைவு…” மழுப்பினாள் சுபவாணி.

 உடன் மொச்சை பற்கள் தெரிய பளிச்சென சிரித்தாள் காத்தரின். “எனக்கும் அடிக்கடி என் ஊர் ஞாபகம் வருவதுண்டு.ஆனாலும் இங்குள்ள பிரண்ட்ஸ்களை பார்த்து பேசி பழகி என் வீட்டை மறக்க முயற்சிக்கிறேன். ” என்ற காத்தரின் டெக்சாஸிலிருந்து படிப்பதற்காக இந்த இந்தூர் ஐ.ஐ.டி வந்துள்ளாள்.

அமெரிக்காவில் வேலை செய்யும் அவளது தந்தையும் தாயும் தங்கள் ஓய்வுக்காலம் இந்தியாதான் என முடிவெடுத்து ,சொந்த நாட்டில்தான் மகள் படிக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் அவளை இந்தூர் ஐஐடியில் சேர்த்து விட்டிருந்தனர்.

இவள் சொல்வதும் உண்மைதான். நட்பு எப்பேர்பட்ட காயத்தையும் கொஞ்ச நேரம் மறக்க வைக்கும்தான். இங்கே சுபவாணியிடம் நட்பு பாராட்ட எத்தனையோ பேர் தயாராக இருந்தும் அவளால் இன்னமும் தனது கடந்த காலத்திலிருந்து மீண்டு இயல்புக்கு வந்து அவர்களுடன் ஒன்ற முடியவில்லை.

இங்கே இருப்பவர்கள் அனைவரும் சுபவாணியின் வயதினர்தான். ஆனால் உற்சாகமும் உல்லாசமும் கட்டுப்பாடற்ற சுதந்திரமுமாக தங்கள் இளமைக்காலத்தை படிக்கும் வயதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.

 ஆனால் சுபவாணியோ ஆறே மாத திருமண வாழ்வில் எல்லாமே தன் வாழ்க்கையில் முடிந்து போனது என்பதான வெறுமை மனநிலையில் இருப்பவள். முதலில் இவர்களுடன் சேர்ந்து பழகுவதற்கு படிப்பதற்கு தகுதியானவள் தானா நான், என்ற எண்ணமே அதிகம் சுபவாணியை வதைத்துக்கொண்டிருந்தது.

ஒதுங்கி ஒதுங்கி செல்பவளை இழுத்து பிடித்து பேசுபவள் தக்ளா மட்டுமே. கடல் அலையாய் மீண்டும் மீண்டும் நட்பு நாடி வருபவளை  ஒதுக்க சுபவாணிக்கு முடிவதில்லை.

போக,சிறு வயதிலிருந்தே அவள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவள்.அவ்வளவு எளிதாக யாருடனும் பழகி விட மாட்டாள்.வீட்டினருடன் கூட அளந்தே பேசுவாள்.ஒவ்வொரு வார்த்தையை விடும் முன்பும் எதிரிலிருப்பவர் என்ன நினைத்து விடுவாரோ என மிகத் தயங்குவாள்.இந்த குணத்தை மாற்ற அவளது தாய் தந்தை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

கல்லூரியிலும் பெண்கள் கல்லூரியே வேண்டுமென அடம் பிடித்து சேர்ந்தாள். ஓரளவு சொல்லிப் பார்த்துவிட்டு திருமணம் ஆனதும் சரியாகிவிடுவாள் என்று வீட்டினர் விட்டு விட்டனர். ஆனால் அவளுக்கு அமைந்த மண வாழ்வு அவள் வாழ்க்கையே தலைகீழாக புரட்டிப்போட்டது.

“ஹேய் கைஸ், இன்று இரவு வெளியே போகலாமா?” கண்கள் மின்னக் கேட்டபடி இவர்கள் அருகே வந்து அமர்ந்தான் ரியாஸ். பாகிஸ்தானை சேர்ந்த அவன் அனைவரிடமும் வெகு சரளமாக பேசக் கூடியவன். எந்நேரமும் பாட்டு விளையாட்டு கேலி என்று அவனை சுற்றிலும் ஆர்ப்பாட்டமாக இருக்கும். 




“ஓ..” வேகமாக அவனோடு கைகோர்த்துக் கொண்டாள் கேத்தரின். இதோ இவளை போல சுபவாணியால் மற்றவர்களுடன், குறிப்பாக ஆண்களிடம் பழக முடியாது. இப்போதைய அவளுடைய கசப்பான அனுபவத்தின் காரணமாக என்றில்லை. முன்பே அவள் சற்று ஆண்களிடம் ஒதுக்கமாகவே இருந்து வந்தவள்.

 வினாடியில் இன்னும் சிலரும் ரியாசுடன் சேர்ந்து கொள்ள,அவன் கேள்வியாய் சுபவாணியை பார்த்தான்.இவர்கள் எல்லோரும் பல்கலைக்கழக ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவர்கள். சுபவாணி மட்டுமே சற்று தாமதமாக கல்லூரியில் சேர்ந்ததால் ஹாஸ்டலில் இடம் கிடைக்காது பல்கலைக்கழக வளாகத்தை விட்டு சற்று தொலைவில் அமைந்திருந்த பி.ஜி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தாள்.

நகரை விட்டு தள்ளி அமைந்திருக்கும் இந்த பல்கலைக்கழக வளாகத்தினுள் மிகுந்த கட்டுப்பாடு உண்டு.மாணவர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை விரும்பினால் 25 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊருக்குள் செல்ல வேண்டும். அது போல் ஒரு அவுட்டிங்கிற்குத்தான் ரியாஸ் அழைத்தான். 

அழுத்தமாக தலையசைத்து மறுப்பை தெரிவித்தாள் சுபவாணி. புரியா மொழியில் கேலி பேச்சுக்களுடன்  அவளை விட்டு சென்றனர் அவர்கள். இங்கே வந்த இந்த இரண்டு மாதங்களில் இது போன்ற மறைமுக கேலிகளை நிறைய சந்தித்து இருந்தாலும் இப்போதும் இந்த கேலி சுபவாணியை மனதிற்குள் மறுக வைத்தது. இந்த படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கிருந்து ஓடிப் போய் விட மனம் துடித்தது.

 ஆனால் அதன் பிறகு…? மீண்டும் தாய் தந்தையுடன் சென்னையில் போய் இருந்து கொள்வதை நினைக்கவே பிடிக்கவில்லை. தான் அவர்களுக்கு பாரம் என்ற உணர்வினை தாண்டி, இனி எனக்கு அங்கே என்ன இருக்கிறது என்ற உணர்வே மேலோங்கி நின்றது. தன்னால் தாய் தந்தைக்கு மட்டுமல்ல அக்கா அத்தானுக்கும் மனச்சங்கடம் என்று உறுதியாகவே நம்பினாள். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறே அவள் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்தன.

———-

“உங்கள் தங்கை குடும்பத்தின் லட்சணத்தை பார்த்தீர்களா?” சிவசங்கரி கண்ணீருடன் குமுற,சிவநேசன் முகம் இறுக அமர்ந்திருந்தார்.

“அந்த கும்பலை வீட்டிற்குள் சேர்க்காதீர்களென்று சொல்லிக் கொண்டேயிருந்தேனே ..நீங்கள் கேட்கவில்லையே, இப்போது எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருக்கிறான் பாருங்கள்”

உன் மகன் இப்படி பேசுகிறான் என்று நீலவேணியிடம் சொல்ல, “அவன் ஆம்பளை ஆயிரம் கேட்பான்,இவளுக்கு விருப்பமிருந்தால் சரி என்கட்டும் ,இல்லைன்னா வேணான்க வேண்டியதுதானே,அதற்கு இப்படியா மிதித்து தள்ளுவது?” அலட்சியமாக கேட்டபடி கீழே விழுந்ததால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த மகனின் காயத்திற்கு கவலையுடன் ஐஸ் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் நீலவேணி.

சுபவாணியும் முருகேசனும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டபடி பின்னால் வந்து நின்ற தனசேகர் அப்படி அவனை ஓங்கி மிதித்து தள்ளி இருந்தான். “சுபா வீட்டிற்குள் போ” கத்திய அத்தானின் குரலில் நடுங்கிய சுபவாணி பின்னால் திரும்பி பார்க்கவும் நடுங்கி வீட்டிற்குள் ஓடி வந்து விட்டாள்.

“இப்படி மிதித்து என் மகனின் மூக்கை உடைக்கும் அளவிற்கு ஆத்திரம் வர என்ன காரணம்? அப்படி என்ன விசேஷ அக்கறை கொழுந்தியாள் மேல்?” நீலவேணியின் அநியாய கேள்வியில் அனைவரும் அதிர்ந்து இருந்த வேளையில் தனசேகர் கர்ஜித்தான்.

” இனிமேல் உங்களுக்கு மரியாதை இல்லை. வெளியே போங்க”

 ஆத்திரத்துடன் அண்ணனை திரும்பிப் பார்த்த நீலவேணி சிவனேசன் எதிர்ப்புர சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருக்க, “மருமகனை வைத்து தங்கையை  விரட்டுகிறாயா அண்ணா? ஒருநாள் என் மகளுக்கு நீயே கதி என்று குடும்பத்தோடு என் காலில் வந்து விழுவீர்கள் பாருங்கள்” சவாலிட்டு விட்டு மகனின் கையை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

” எல்லாம் நீங்கள் கொடுத்த இடம்” சிவசங்கரி சிவனேசனிடம் வெடிக்க, “போதும் வாயை மூடு. உன் குடும்பம் மட்டும் ரொம்ப லட்சணமா? போன மாதம் உன் அண்ணன் வந்து பேசியது நினைவில் இல்லையா?” பதிலுக்கு கத்தினார் சிவநேசன்.

 சிவசங்கரி வாயை மூடிக்கொண்டாள். அவளுடைய அண்ணன் கைலாசம் மிகவும் பரிவாக சுபவாணியின் வாழ்வை பற்றி விசாரித்து, பரிந்துவிட்டு கையோடு மாப்பிள்ளை ஒருவரையும் சொன்னார்.ஏகப்பட்ட சொத்து பத்து நிலம் நீச்சு என்று அடுக்கியவர், “மாப்பிள்ளைக்கு வயதுதான் கொஞ்சம் அதிகம். 58 முடிந்து 59 பிறக்கப் போகிறது. ஆனால் பார்த்தால் அப்படி தெரியாது.நீங்கள் போட்டோவை பாருங்கள்” என்று நீட்ட இந்திரா அதனைப் பிடுங்கி கிழித்து எறிந்தாள்.

“இந்த மாப்பிள்ளையை உங்கள் மகளுக்கு பாருங்க மாமா”

 கைலாசம் வெகுண்டெழுந்தார். “என் மகள் சிறுபெண். படித்துக் கொண்டிருக்கிறாள். நல்லபடியாக கல்யாணம் முடித்துக் கொடுத்த மாப்பிள்ளையிடம் முறைத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்கவில்லை. இன்றில்லாவிட்டால் இன்னமும் ஒரு வருடம் கழித்து எங்களைப் போன்ற உறவினர்களிடம்தானே, என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார் என்று வந்து நிற்க வேண்டும். அப்போது பேசிக் கொள்கிறேன்” இரு விரலால் சொடக்கிட்டார்.




 சிவசங்கரி கையெடுத்து கும்பிட்டாள். “அண்ணா அப்படி உங்கள் வீட்டு வாசல் வரும்போது கேளுங்கள். இப்போது தயவு செய்து போய்விடுங்கள்”கைலாசம் முறைத்தபடி வெளியேறினார்.

“உன் அண்ணனிடம் என் மகளுக்கு மாப்பிள்ளை பாரென்றேனா? முழு கிழவன் ஒருவன் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு என் வீட்டு படி ஏற எவ்வளவு தைரியம்?” சிவநேசன் கத்த…

“உங்கள் தங்கை அளவு என் அண்ணன் மோசம் இல்லை. அவர் கௌரவமாக திருமணம் முடிக்கத்தான் வரன் கொண்டு வந்தார். ஆனால் உங்கள் தங்கையோ… சீ சீ சொல்லவே கூசுகிறது…” சிவசங்கரி பதிலுக்கு கத்த,வீடு முழுவதும் ஒரு வகை விரும்பத்தகாத வெம்மை பரவியது.

சோபாவின் மூலையில் கால்களை கட்டிக் கொண்டு ஒடுங்கி அமர்ந்திருந்த சுபவாணி முகத்தில் விரக்தியுடன் தந்தையையும்,தாயையும் வெறித்திருந்தாள்.

“இங்கே யாரும் யாருக்கும் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம்.யார் வாழ்வை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.இது நான் செய்த தப்பு, நானே சரி செய்கிறேன்” தனசேகர் அதட்டலாய் சொல்ல சிவநேசன் மருமகனை மறுப்பாக பார்த்தார்.

“உங்கள் மேல் என்ன தப்பு மாப்பிள்ளை? ஒரு பையன் இருக்கிறான்னு சொன்னீங்க,அவனை விசாரிக்காதது என் தப்பு.அவன் வேலை, வீடு,பேச்சுன்னு பார்த்து ஏமாந்துட்டேன்”

“நானும் விசாரித்திருக்க வேண்டும் மாமா. கூட படித்தவன். பாரம்பரியமான கௌரவமான குடும்பம் .எப்போதும் படிப்பில் முதல். வேலையில் புத்திசாலி. எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். எனக்குத் தெரிந்த அவனது முகம் இதுதான் மாமா. ஆனால் அவனுக்குள் இப்படி ஒரு குரூரமான மனது இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.

வாணியின் வாழ்வு இப்படி ஆனதற்கு நானும் ஒரு காரணமெனும் குற்றவுணர்வு எனக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது.அதனை நானே சரி செய்ய வேண்டும்”

ஒரு நிமிடம் வீட்டில் அமைதி நிலவியது.சிவசங்கரி மெல்ல கேட்டாள் “வந்து…வேறு நல்ல மாப்பிள்ளை…”

சுபவாணி சரேலென நிமிர்ந்து தனசேகரை பார்த்தாள்.

திரும்பவுமா…என்ற அவளது குற்றச்சாட்டு பார்வையை எதிர் கொள்ள முடியாத அவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டு “இல்லை” என்றான் அழுத்தமாக.

“வாணி மேலே படிக்கட்டும்,நான் அவள் மேற் படிப்பிற்கான அப்ளிகேசனுடன் வந்திருக்கிறேன்” அப்ளிகேசனை எடுத்து டீபாய் மேல் வைத்தான்.

பெற்றவர்கள் முகத்தில் அதிருப்தி நிலவியது.”அவள் ஏற்கெனவே இரண்டு டிகிரிகள் முடித்திருக்கிறாள் மாப்பிள்ளை .இன்னும் என்ன…?” 

“இப்போது எம்.எஸ் படிக்கட்டும்…”

“இனி திரும்பவும் காலேஜ் போய் படித்து…அக்கம் பக்கம்…சொந்த பந்தம்…ம்கூம் சரி வராது மாப்பிள்ளை”

“நீங்கள் நினைக்கும் சொந்த பந்தங்கள் அவள் வாழ்க்கையை பற்றி கவலைப்படவில்லையே அத்தை.நீங்கள் ஏன் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்?”




“அவர் சொல்வது சரிதான்மா.நாம் நொந்திருக்கும் நேரம் பார்த்து மேலும் நம்மை குத்தி சாய்க்கத்தானே இந்த சொந்தங்கள் நினைக்கிறார்கள்?நம் வாணி முதலில் அந்த கொடூரமான வாழ்க்கையை மறந்து வெளியே வரவேண்டும். இங்கே நாம் வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்தோமானால் அது நடக்காது.அவளுக்கு இப்போதைய தேவை  அவளது பழைய வாழ்க்கையை நினைவு படுத்தாத வித்தியாசமான சூழ்நிலை. இதையெல்லாம் யோசித்துதான் அவர் தெரிந்தவர்கள் யார் யாரையோ பிடித்து இந்தூர் ஐஐடியில் அவளுக்கு சீட் வாங்கியுள்ளார்” என்றாள் இந்திரா. 

“அது எங்கே இருக்கிறது?” சிவசங்கரி குழம்ப… “என்ன அவ்வளவு தூரத்திலா?” பிரமித்தார் சிவனேசன். “அங்கே எப்படி இடம் கிடைத்தது மாப்பிள்ளை ?” 

“எப்படியோ கிடைத்தது மாமா. எனக்கு தெரிந்த ஒருவர்,அரசியல் பின்புலம் உள்ளவர்.அவர் மூலமாக சீட் வாங்கினேன். இப்போது வாணி இந்த அப்ளிகேஷனை நிரப்பி அனுப்பினால் உடனே அவளுக்கு கல்லூரியில் சேர்வதற்கான அழைப்பு வந்துவிடும்”

“வேண்டாம் அத்தான். எனக்கு அவ்வளவு தூரத்தில் போய் அங்கெல்லாம் படிக்க பயமாக இருக்கிறது” அடுத்த எதிர்ப்பை பதிந்தது சுபவாணியே.

” என்னடி நீ? அவர் எவ்வளவு சிரமப்பட்டு…” கோபமாக பேச ஆரம்பித்த மனைவியை கையுயர்த்தி தடுத்த தனசேகர் சுபவாணியின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“பார் வாணி இந்த உலகம் மிகவும் பெரியது.உன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த சிறு சறுக்கல் உலகோடு ஒப்பிடுகையில் கண் சிமிட்டும் நேரம். கடவுள் நமக்கு கொடுத்த மிகச்சிறந்த வரம் மறதி. உன் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து விடவே நீயும் விரும்புவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் நன்றாக யோசித்துப் பார். இங்கே நம் வீட்டு சூழ்நிலை உனக்கு அந்த மறதியை அளிக்குமா? நிச்சயம் இல்லை. உன்னுடைய சூழல் மாற வேண்டும். நீ அன்றாடம் சந்திக்கும் பழகும் மனிதர்கள் மாற வேண்டும். இந்தூர் யுனிவர்சிட்டிக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட மாணவர்கள் படிக்க வருவார்கள். படிப்போடு கூடவே அவர்கள் அனைவரோடும் கலந்து பழகி உன்னுடைய வாழ்க்கையை வேறொரு தளத்திற்கு நீ கொண்டு செல்லலாம். இரண்டு வருடங்கள் கழித்து அந்த அயோக்கியனை தூங்கும் போது வந்த பத்தே நிமிட கனவு என்று நீ உதறித் தள்ளும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. நன்றாக யோசித்து பதில் சொல்”

 குழந்தைக்கு சொல்வது போல் தனசேகர் பேசினாலும் தனது சாதகமான பதிலை தருவதற்கு சுபவாணி ஒரு வாரத்திற்கும் அதிகமாகவே அவகாசம் எடுத்துக் கொண்டாள். அந்த இடைவெளியில் தாய் தந்தைக்கிடையே அவள் பொருட்டு நடந்த சண்டைகள், உள்ளூர மகிழ்ச்சியும் மேலாக துக்க முலாமுடன் அவளை பார்க்க வந்த உறவினர்கள் என அனைவரும் அவளை இந்த படிப்பின் பக்கம் தள்ளி விட்டனர்.

 இறுதியாக இதோ சுபவாணி இங்கே இந்தூர் ஐஐடியில் மாணவியாக சேர்ந்து விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

“ஹேய் வாணி, என்ன இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய்?” தக்ளா அவள் அருகே வந்து அமர்ந்தாள். ” ஏய் உடம்பு சரியில்லை என்று லீவ் போட்டு இருந்தாயே?”

“ஆமாம் தான் திடீரென்று காலேஜுக்கு வர வேண்டிய அவசியம் வந்துவிட்டது.ஹாஸ்டலில் இருந்து ஓடி வந்து விட்டேன். சொல்லு நீ ஏன் தனியாக இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய்?”

“அனன்யா மேம் பீரியட். இந்த ஹவர் ஃப்ரீ தானே?”

“யார் சொன்னது ?ரொம்ப முக்கியமான ஹவர் இது. புது லெக்சரர் வருகிறார் தெரியுமா?”

கடந்த இரண்டு வாரங்களாக இந்த பாடவேளை ஃப்ரீயாக தான் இருந்தது. சுபவாணியும் தொந்தரவு இல்லாமல் இப்படி ஆடிட்டோரியத்தில் வந்து அமர்ந்து கொண்டு தனக்குள் மூழ்க வசதியாக இருந்தது.

 ஆனால் இப்போதோ புது லெக்சரர் வந்தாயிற்றாமே… சலிப்புடன் எழுந்தவளுடன் நடந்தபடி தக்ளா கண்களை சிமிட்டினாள்.”இவ்வளவு சலிப்பு தேவை இல்லை ஃப்ரெண்ட். அவரைப் பார்த்ததும் கவிழ்ந்தடித்து விழப் போகிறாய். நான் காலையிலேயே பார்த்துவிட்டேன். செம ஹேண்ட்ஸம். அப்படியே ஹீரோ போல் இருக்கிறார்.நாளைதான் கிளாஸுக்கு வருவார் என்று நினைத்திருந்தேன்.கடவுள் புண்ணியத்தில் இன்றே வந்துவிட்டார்”

 கடவுளை எதெற்கெல்லாம் இழுக்கிறாள் பார்…தக்ளாவின் விவரணைகளில் மனதில் அப்பிய எரிச்சலுடன் வகுப்பறைக்குள் வந்த சுபவாணி இன்னமும் அதிக எரிச்சலுக்குள் விழுந்தாள்.

 ஏனெனில் அங்கே புது லெக்சரராக நின்றிருந்தவன் அவளது பி.ஜி எதிர் அறைக்காரன்.




 

What’s your Reaction?
+1
41
+1
20
+1
2
+1
3
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!