Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-3

3

“தமிழர் விழாக்களில் ஒன்றுன்னு பொங்கல் விழா கொண்டாடுவோம். சூரியனைக் கும்பிட்டு பொங்கல் கொண்டாடிடலாம். ஜல்லிக்கட்டு பற்றி எல்லோரிடமும் பேசிடலாம். வேறு தமிழர்களுடைய கிராமிய கலைகள் யாராவது ஏதாவது ப்ரோக்ராம் செஞ்சா நல்லா இருக்கும்” மிருணாளினி அந்த மும்பை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் செகரட்டரிகளில் ஒருத்தி, முன்வந்து பேசினாள்.

 தமிழ் பெண்ணான அவள் குறைவான அளவில் தமிழர்கள் இருந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தை இங்கு வசிக்கும் பிற மாநிலத்து ஆட்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி இந்த தைப்பொங்கல் விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாள்.

சிலம்பாட்டம், கோலாட்டம் ,ஒயிலாட்டம்,கும்மி என ஒவ்வொருவராய் சொல்ல சுபவாணி அநிச்சையாய் “கரகாட்டம்” என்றாள்.

” வெரி குட்”  என்ற மிருணாளினி “சுபா நீயே ஆடிவிடேன்” என்க இவளுக்கு திக்கிட்டது.

” நானா..? நான் எப்படி..? எனக்கு அதெல்லாம் தெரியாது. கரகம் தலையில் நிற்க வேண்டுமே”

“ஏய் சுபா பொய் சொல்லாதே, நீ ஸ்கூல்ல கரகாட்டம் ஆடியிருக்கேன்னு அன்னைக்கு போட்டோஸ்லாம் காட்டினாயே!”சபீனா சரியான நேரத்திற்கு நினைவுபடுத்தி சொல்ல, சுபவாணிக்கு ஐயோவென இருந்தது.

அவள் மொபைலில் இருந்த போட்டோவை தற்செயலாக பார்த்தவளிடம் கொஞ்சம் பெருமையாகவே சொல்லியிருக்க கூடாதா? எண்ணி பத்தே நிமிடங்கள்தானே உன்னிடம் பேசினேன் சபீதா…அது இன்று என்னை இப்படி இக்கட்டில் வைக்க வேண்டுமா? சுபவாணி தவித்தாள்.

“விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறதுப்பா. கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிக்கோயேன். அது தப்பு இது தவறுன்னு சொல்றதுக்கு நம்ம வடக்கு நண்பர்களுக்கு தெரியாது.அட இப்படி ஒரு டான்ஸான்னுதான் பார்ப்பாங்க. நீ தான் பண்ற.சரி கும்மி யாரெல்லாம் ஆடலாம்?” மிருணாளினி அடுத்த ஏற்பாட்டிற்கு போய்விட்டாள்.

 தொடர்ந்து  நீனா, சபீனா மைங்கா,ஜோஸ்னா என எல்லோரும் வற்புறுத்த, தயக்கத்தை மீறி ஒரு ஆர்வம் உள்ளுக்குள் எழுந்ததில் வீட்டிற்கு வந்து சொம்பு ஒன்றை தலையில் வைத்து பிராக்டிஸ் செய்து பார்த்தாள் சுபவாணி. தொடர்பு விட்டுப் போய் நெடுநாட்களானாலும் இப்போதும் தலையில் சொம்பை வைத்துக் கொண்டு சுழல முடிந்தது. உள்ளுக்குள் ஊறிய கலை மறக்காது போலும்.

விழாவன்று அவளுடைய நடனத்திற்கு மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது. “ரகு சார் உங்க வைப்போட டான்ஸ் நீங்க பாக்கலையே! சூப்பரா ஆடினாங்க” ஆபீஸிலிருந்து அப்பொழுதுதான் விழாவிற்குள் நுழைந்த ரகுநந்தனிடம் ஆர்ப்பாட்டமாய் சொன்னார் ஜோதேஸ்.

தொடர்ந்து அசத்,அஹமத் சஞ்சய், சாம்ரேத் என பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த அனைவரும் ரகுநந்தனை பாராட்ட அவன் முகம் தாமரையாக மலர்ந்தது. “நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” ஆங்கிலத்தில் எல்லோருக்கும் சொன்னபடி மனைவியின் தோளை ஒற்றைக் கையால் வளைத்துக் கொண்டவன், குனிந்து அவள் கன்னத்தில் ஆழ்ந்து முத்தமிட்டான்.




 “ஓஓஓஓ” உற்சாக கூச்சல் எங்கும் பரவ “புதுமணத் தம்பதிகள் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடுங்கள்” என்று இருவரையும் சபை நடுவில் இழுத்து விட்டார்கள். போடப்பட்ட இசைக்கு ஏற்றவாறு மற்ற ஜோடிகளும் இணைந்து ஆடத் துவங்க ரகுநந்தனும் அவள் இடைப்பற்றி அசைந்தான்.

 இரண்டாவது நிமிடம் அவள் காதுக்குள் “என்ன டான்ஸ் ஆடினாய்?” என்றான்.

“க… கரகாட்டம்” திணறி பதில் சொன்னாள்.

 

“குட்…”மெச்சுதலாக அவள் கன்னங்களை வருடி அவளிடமிருந்து பிரிந்தான்.

விழாவுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தை மறுத்து இருவரும் தங்கள் வீடு வந்தனர். 

” ம்…இப்போது ஆடு”  சுபவாணியை அறைக்கு நடுவே தள்ளி நிற்க வைத்தான். அலங்கரித்த கரகத்தை தலை மேல் வைத்தான்.ஹோம் தியேட்டரில் ஏதோ ஒரு இசையை ஒழிக்க விட்டான்.

அவள் மெல்ல அசைந்து ஆட கன்னத்தில் கை தாங்கி அதனை பார்த்தபடி இருந்தான். ஒற்றை காலை ஊன்றி அவள் சுழன்று கொண்டிருந்த ஒரு நடன அசைவின்போது டீப்பாய் மேலிருந்த ஆஸ்ட்ரேயை அவள் காலுக்கு குறி வைத்து எறிந்தான்.

 அலறலுடன் சுபவாணி தரையில் விழ, நிதானமாக நடந்து வந்து அவள் அருகே குனிந்தான். “ஜாக்கெட்டிற்குள் எத்தனை பேர் பணம் வைத்தார்கள்? எங்கே காட்டு பார்க்கலாம்” 

———

அவமானத்துடன் உடல் அருவருப்பால் கூச சுற்றுப்புறம் மறந்து குறுகி அமர்ந்திருந்தவளின் முன்னால் இரண்டு வலிய கரங்கள் ஒன்றாய் தட்டி ஓசை எழுப்பின. 

டப்…டப்… டப்… சட்டென அவள் முகத்தில் அறைந்த உணர்வு வர திடுக்கிட்டு மலங்க விழித்தாள் சுபவாணி.

“பட்டப் பகலில் கையில் போனை வைத்துக் கொண்டு இப்படி வேறு கனவு உலகத்தில் ஆழ்ந்திருந்தால் நாங்கள் எல்லாம் எங்கள் வேலையை பார்க்க வேண்டாமா?” எரிச்சலுடன் கேட்டபடி எதிரில் நின்றவன் அந்த எதிர் அறைக்காரன்.

 அவள் உட்கார்ந்திருந்த நிலையில் அவனை அண்ணாந்து பார்க்க எதிரில் நின்றிருந்தவன் விஸ்வரூப தோற்றம் எடுத்த சிவனை போல் உயர்ந்து ஆகிருதியாய் தெரிந்தான். எட்டி குனிந்து இவள் கையில் இருந்த போனை பார்த்தான்.சட்டென தனது போனை கவிழ்த்து மறைத்தாள். அவனை முறைத்தாள்.

சில கைடு லைன்சிற்காக அவள்  youtube வீடியோ பார்த்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக வந்து விட்டிருந்த  பொங்கல் விழா பற்றிய வீடியோ ஒன்றில் அவள் நினைவுகள் எங்கோ போயிருந்தன. 

“தண்ணீர் குடிக்க வேண்டும். நியூஸ் பேப்பர் வேண்டும். கொஞ்சம் நகர்ந்தால் எனக்கு வசதியாக இருக்கும்” அவன் சொல்ல திரும்பி அவள் அருகில் இருந்த வாட்டர் பில்டரை பார்த்தாள். 

அந்த விடுதியின் ரிசப்ஷன் பகுதி அது. ஸ்வரூபா குளித்து கிளம்பி தயாராவதற்கு என்று ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்வாள். வெளியே கிளம்புவதற்கான அவளது அமர்க்களங்களை அருகில் இருந்து பார்க்க சகிக்காது ரிசப்ஷனில் வந்து அமர்ந்து கொண்டிருந்தாள் சுபவாணி. இந்தப் பகுதி அந்த விடுதியில் எல்லோருக்கும் பொதுவானதுதான். அந்த வகையில் இவனும் உபயோகிக்க உரிமையானதுதான்.

 ஆனாலும் அறைக்குள்ளேயே வாட்டர் பில்டர் போன்ற வசதிகளை வைத்திருக்கும் இவன் இங்கே வந்து நிற்க அவசியம் இல்லை தானே! ஏனோ எப்போதும் போல் இப்போதும் இவன் தன்னை வம்புக்கு இழுப்பதாகவே மனதில் பட்டது சுபவாணிக்கு. பிரச்சனைகளை தேடி செல்பவள் இல்லையாதலால் அவள் எழுந்து கொண்டாள்.

 உடனே அவள் அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டவன் அரை டம்ளர் தண்ணீர் பிடித்து அருந்திவிட்டு நியூஸ் பேப்பரை எடுத்து பிரித்து முகத்தை மறைத்துக் கொண்டான்.

சரிதான் போடா என்று அவனை திட்டும் உந்துதலை அடக்கிக் கொண்டு தன் அறைக்கு திரும்பியவள் நல்ல வேலையாக ஸ்வரூபா கிளம்பியிருக்க ஆசுவாச பெருமூச்சு விட்டாள். “எனக்கு இன்று பஸ்ட் ஹவர்  கிடையாது சுபா. நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்” ஸ்டைலாக கையை அசைத்து விட்டு வெளியேறினாள் ஸ்வரூபா.




 அடிப்பாவி இதை முதலிலேயே சொல்வதற்கென்ன… நான் முதலில் கிளம்பி போய் இருப்பேனே! மனதில் ஓடியதை சரளமாய் அவளுடன் பேச மொழி உதவாததால் “ஓகே” என்று தலையாட்டி விட்டு காலேஜ் பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு கடனுக்கு ஒரு முறை முகத்தை கண்ணாடியில் பார்த்து விட்டு  வெளியே வந்தாள் நித்யவாணி. 

மிகச் சரியாக எதிர் அறையை பூட்டிக் கொண்டு திரும்பினான் அவன். உணர்ச்சியற்ற விழிகளால் இவளை ஏற இறங்க பார்த்துவிட்டு அகல எட்டுக்களுடன் அவளுக்கு முன்னால் நடந்தான். “தடியன் எப்போது பார்த்தாலும் எனக்கு இடையிலேயே வருகிறான்…”அகன்ற அவன் முதுகை பார்த்து முணுமுணுத்தபடி பார்க்கிங் ஏரியா போனாள்.

அவள் தனது சைக்கிளை ஸ்டேண்டிலிருந்து எடுக்க அவன் தன் பைக்கை சீற விட்டு கொண்டு இவளை உரசுவது போல் அருகாமையில் வந்து இவள் போக வேண்டிய திசைக்கு எதிர் திசையில் பறந்தான்.

“மூஞ்சியை பாரு சைக்கோ” மனதிற்குள் திட்டியபடி தன் சைக்கிளை மிதித்தாள். அதென்னவோ அவளுக்கு இப்போதெல்லாம் எந்த ஆணைப் பார்த்தாலும் சைக்கோவாகத் தான் தோன்றியது.

———–

“என்ன இன்றைக்கு இவ்வளவு அலங்காரம்?” அலுவலகத்தில் இருந்து வந்ததும் தன் எதிரே வடிவாக நின்றவளை கண்களால் அளந்தபடி கேட்டான் ரகுநந்தன்.

” இங்கே பக்கத்தில் ஒரு காட்டன் எக்ஸ்போ போட்டு இருக்கிறார்களாம். அதற்கு போகலாம் என்று…”

“ஓ…” என்றவன் அறைக்குள் போய் பத்தே நிமிடங்களில் கிளம்பி வெளியே வந்தான். “வா போகலாம்”

” நீங்களும் வருகிறீர்களா?” 

சடாரென திரும்பினான்.கொத்த தயாராகும் அரவத்தின் தலை திருப்பல்.

” நீங்களும் என்றால்… உன் பிளான் என்ன?”

” வந்து… நாங்கள் பெண்களாக சேர்ந்து போகலாமென்று பிளான் செய்தோம்.அ…அங்கே ஆண்களுக்கு எதுவும் இருக்காது.எல்லாம் பெண்கள் உடைகள்தான்…” அவள் பேசி முடிக்கும் முன் சட்டென்று காலில் மாட்டி இருந்த ஷூவை உதறினான். பரபரவென்று அணிந்திருந்த சட்டையை சுழற்றி சோபாவில் வீசினான்.

” பொம்பளைகளாக தனியாக வெளியே ஊர் சுற்ற போகிறீர்களா! எவ்வளவு தெனாவட்டு?” கையில் கட்டி இருந்த வாட்சை அவிழ்த்து எறிந்தான். அது மிகச்சரியாக சுபவாணியின் உதட்டில் பட்டது. சட்டென உதட்டில் ரத்தம் கசிய கையால் பொத்திக்கொண்டு மிரட்சியாய் அவனை பார்த்தாள்.

 “புருஷன் இல்லாமல் இப்படி தானாக ஊர் மேயும் பொம்பளைக்கு பெயர் என்ன தெரியுமா?” 

 அதற்கு மேல் அவன் பேசிய வார்த்தைகளை கேட்க முடியாமல் காதுகளை பொத்தி கண்களை மூடிக் கொண்டாள்.பத்து நிமிடங்கள் கழித்து கைகளை விலக்கி கண் திறந்த போது “லோலாயி” என்ற அவனுடைய வார்த்தை காதில் விழ மீண்டும் காது பொத்திக் கொண்டாள்.




ரகுநந்தன் தன் போக்கில் புலம்பியபடி அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான். ஏதேதோ மோசமான கெட்ட வார்த்தைகள். அவைகளில் பலவற்றை சுபவாணி முன்பு கேட்டிருந்தது கூட கிடையாது. ஆனாலும் அவன் உச்சரித்த விதத்திலேயே மிக மோசமான வார்த்தைகள் அவை என்று புரிந்தது.

 எப்படியுல்லாம் பேசுகிறான்… படித்தவன் போலவா நடந்து கொள்கிறான்… அவனை வெறித்தபடி நின்று கொண்டே இருந்தாள். ஓய்ந்து உட்காரக்கூட பயமாக இருந்தது. அதற்கும் காது கூசும் அளவுக்கு ஏதேனும் வார்த்தைகளை பிரயோகிப்பான்.

 வாசல் அழைப்பு மணி ஒலிக்க சுபவாணி கண்களால் அவனிடம் கெஞ்சினாள். நீயே போய் பதில் சொல்லி விடேன்.சற்று முன் பெண்களாக உற்சாகமாக போட்ட திட்டங்கள் அவள் வாயினாலேயே பிரித்து எறியப்படப் போவதை அவளால்  ஜீரணிக்க முடியவில்லை.

அழுத்தமாய் கால்களை ஊன்றி நின்றான் ரகுநந்தன். “போடி.. போய் பேசு,கிக்கி பிக்கின்னு இளித்து இளித்து திட்டம் போட்டீல்ல…இப்போ வர முடியாதுன்னு நீயே போய் சொல்லு “வார்த்தைகளை பல்லிடுக்கில் அரைத்து நழுவ விட்டான்.

 நடுங்கிய கரங்களுடன் கதவை திறந்த சுபவாணி சிரமப்பட்டு புன்னகையை அணிந்து கொண்டாள். “வா போகலாம்” ஆர்ப்பாட்டமாய் அழைத்தபடி வெளியே இருந்த பெண்கள் அவளது உதட்டுக்காயத்தை பார்த்ததும் பதறினர். “என்ன ஆச்சு?”

” ஒன்றுமில்லை,ஒரு சின்ன ஆக்சிடென்ட்.கீழே விழுந்து விட்டேன்.தலை ரொம்ப வலிக்கிறது. நீங்கள் போங்களேன். நான் இன்னொரு முறை வருகிறேன்” தடுமாறி வார்த்தைகளை கோர்த்து பேசினாள்.

 அவளை ஒருவிதமாக பார்த்தபடி தலையசைத்து நகர்ந்தனர் அவர்கள். பெருமூச்சுடன் கதவை பூட்டிவிட்டு திரும்பியவள் அதிர்ந்தாள். இரு கைகளையும் விரித்தபடி ஆத்மார்த்தமான அன்போடு காதலை கண்களில் வழிய விட்டபடி நின்றிருந்தான் ரகுநந்தன்.

” வெரி குட் இப்போதுதான் நீ நல்ல குடும்பப் பெண். என்னுடைய அன்பான மனைவி” அவளை நெருங்கி இறுக்கி தழுவினான். 

அள்ளி எடுத்து சோபாவில் சரித்தவன் “எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? இத்தனை அழகையும் புருஷனுக்கு காட்டாமல் வெளியே எவன் எவன் கண்ணுக்கோ காட்ட நினைத்தாயே, இதெல்லாம் நியாயமா?” கேட்டபடி அவள் அலங்காரத்தை கலைப்பதில் மூழ்கினான்.

 சுபவாணி உடம்பை மரத்துப் போக வைத்து சீலிங்கில் சுற்றிக் கொண்டிருந்த ஃபேனிற்கு பார்வை மாற்றி பதித்துக் கொண்டாள்.

————

கண்களில் தளும்பிய நீரை வழிய விடாமல் காத்தபடி மனதின் அழுத்தத்தை கால்களில் காட்டி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தாள் சுபவாணி.

“ஹாய் பட்டர் ஒரு சர்ப்ரைஸ். வேறு யாருக்கும் தெரியாது. ஸ்பை வச்சு நானா தெரிஞ்சுக்கிட்டேன்” என்றபடி வந்தாள் தக்ளா.

அவ்வளவு ஆர்வமாக வந்த தக்ளாவின் சர்ப்ரைஸை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இல்லை சுபவாணி.




What’s your Reaction?
+1
37
+1
30
+1
2
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!