Serial Stories ஓ…வசந்தராஜா…!

ஓ…வசந்தராஜா…!-11

11

“நான் இரண்டு கிலோ குறைந்து விட்டேன்”

“நான் மூன்று கிலோ.உங்களை முந்தி விட்டேனே…”

சைந்தவி, விதார்த்தின் கலகலப்பான பேச்சு சத்தத்தில் விழிப்பு வர  அஸ்வினியின் இதழ்கள் தாமாக புன்னகைத்தன. அன்றைய நாள் மிக அழகாக விடிந்திருப்பதாக உணர்ந்தாள்.

சைந்தவியும்,விதார்த்தும் உடம்பை குறைக்க ஜிம்மில் சேர்ந்திருக்கிறார்கள்.திருமணத்திற்குள் பத்து கிலோவாவது குறைக்க போகிறார்களாம். சரியான ஜோடி தனக்குள் புன்னகைத்தபடி எழுந்து வந்து விதார்த்தை முறையாக வரவேற்றாள்.

” ஹாய் அஸ்வினி,என்ன இது எட்டு மணி வரை தூக்கம்? சைதுவை பார்த்தாயா…எப்படி காலையிலேயே சுறுசுறுப்பாக எழுந்து என்னோடு வெளியில் வந்திருக்கிறாளென்று..” விதார்த் சொல்ல சைந்தவியின் முகம் பெருமிதமாய் மின்னியது.

ம்… எல்லாம் நேரம், பத்து மணி வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் கழுதை இது,இன்றென்னவோ நல்ல பிள்ளை வேடம் போடுகிறது. மனதிற்குள் சலித்துக் கொண்ட அஸ்வினி “உங்கள் ஆளைப்போல என்னால் இருக்க முடியுமா அத்தான்? அவள் லெவலே வேற…” என்று சைந்தவியை பாராட்டி பேசி விதார்த்தின் முகத்தை மலரச் செய்தாள்

 நிச்சயதார்த்தத்திற்கென்று ஒரு நாளை வீணாக்க வேண்டாம், திருமணத்திற்கு முந்தைய நாளையே நிச்சயதார்த்தமாக வைத்துக் கொள்ளலாம், என்று இரு வீட்டாரும் பேசி, நெருங்கிய பக்கத்தில் இருக்கும் சொந்தங்களை மட்டும் அழைத்து வீட்டிலேயே பூ வைக்கும் வைபவத்தை நடத்தி விட,விதார்த் சைந்தவி ஜோடிக்கு மிகுந்த சுதந்திரம் கிடைத்துவிட்டது.இருவரும் மனம்போல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர். 

வசந்தை பற்றிய தகவல் எதுவும் தங்கை தராததால் அப்படி ஒருவன் தன் வாழ்வில் வந்ததையே மறந்தவளாக சைந்தவி வருங்கால கணவனுடன் குதூகலித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு பெரிய விஷயம்! அதெப்படி இவளால் மறக்க முடிகிறது! அஸ்வினி எந்நேரமும் லேசாக சிவந்த கன்னங்களுடன் வலம் வந்த தமக்கையை ஆச்சரியமாக பார்த்திருந்தாள்.

கடந்த ஒரு வாரமாகவே வசந்திடமிருந்து அழைப்போ ,செய்தியோ வரவில்லை. எங்கே போயிருப்பான்? எப்படி இப்படி சத்தமில்லாமல் இருக்கிறான்? அவன் அப்படிப்பட்டவன் கிடையாதே விதம் விதமாக அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தவள் திடுக்கிடலாய் அதனை உணர்ந்தாள். 

என்ன இது எந்நேரமும் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டு… தன் மனதை அதட்டினாள். சரியான வில்லன் அவன்! அவனைப் பற்றிய நினைப்பு எதற்கு ?தன் கையை வருடி விட்டுக் கொண்டாள். அன்று கையை ஒரு அழுத்தலிலேயே காயப்படுத்தியதை நினைவுபடுத்திக் கொண்டாள்.

 நான் வில்லன் என்றால் நீ யாரோ? ஹீரோயினா? ஆனால் கதாநாயகிகள் இப்படியெல்லாம் செய்வார்களா என்ன? மனதிற்குள் அவன் குரல் கேட்க விதிர்த்தாள். என்ன இது அவனுக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியா அவனுடைய செயல்பாடுகள் என் மனதிற்குள் ஊறிப் போய்விட்டது. தலையை உலுக்கிக் கொண்டாள்.

 ஆனால் ஒன்று நிச்சயம் அவனை வில்லன் என்றால் கண்டிப்பாக நீ வில்லி கிடையாதா என்று எதிர் கேள்வி கேட்பான். நான் தான் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிய வேண்டியதிருக்கும். ஆனாலும் அப்படி எங்கே போயிருப்பான்… மீண்டும் மீண்டும் அவனிலேயே உழன்ற மனதை திசை திருப்புவது அஸ்வினிக்கு பெரும்பாடாகத்தான் இருந்தது.




 இப்பொழுதெல்லாம் ஹீரோக்களை விட வில்லன்கள்தான் அதிகமாக மனங்களை டாமினேட் செய்கிறார்கள். இவன் அந்த ரகம் போல, ஒரு வாரமாக சத்தமே இல்லாமல் இருப்பவன் அப்படியே எங்கேயாவது போய் தொலைந்து விட்டால் கூட நல்லதுதான், அஸ்வினி எண்ணமிட்டபடி அமர்ந்திருக்க அப்படி உன்னை நிம்மதியாக விட மாட்டேன்டி என்று சொல்வது போல் அவள் போனில் மெசேஜ் டோன் வந்தது.

வேகமாக போனை ஆன் செய்தாள். “அவசர வேலையாக வெளியூர் சென்றிருக்கிறேன், இரண்டு நாட்களில் சென்னை திரும்பி விடுவேன். வந்ததும் சந்திக்கலாம்.”என்று செய்தி அனுப்பியிருந்தான் வசந்த். 

ஆமாம் உன் சந்திப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்,நீ கட்டிக்க போற பொண்ணு நானு,பெருசா மெசேஜ் அனுப்புறான், எரிச்சலோடு “உன்னை பார்க்க நான் விரும்பவில்லை” என்று பதில் மெசேஜ் அனுப்பினாள். 

உடனே அவள் போன் ரிங் ஆனது. வீடியோ கால் என்று வர தயங்கினாள். இவனோடு வீடியோவில் பேச என்ன இருக்கிறது ? மறுப்பாய் நினைத்தபோதே வேண்டாம் அஸ்வினி இரண்டு வார்த்தை பேசி விடு, இல்லையென்றால் ராட்சஷன் நேரில் இங்கேயே வந்து நின்றாலும் நிற்பான் என்று அவள் மனம் எச்சரிக்க சட்டென அட்டென் செய்தாள்.

 பச்சை பசேல் என்ற வயல்வெளி பின்னணியில் இருக்க கையில்லாத வெள்ளை பனியனும், வியர்த்த முகமுமாய் போன் திரையில் தோன்றினான் வசந்த். “ஹாய்…” என்று உற்சாகமாக கையசைத்தான்.

டிரஸ்ஸை பாரு முகம் சுளித்தபடி  “இப்போது எதற்கு வீடியோ கால்?” எரிச்சலாக கேட்டாள்.திரண்டு அசையும் அவன் புஜங்களில் ஓங்கி ஒரு குத்து விட்டால் எப்படியிருக்கும் என ஓர் ஆசை தோன்றியது அவளுள்.

 “நீ என்னை பார்க்க ஆசைப்படுவது போல் தெரிந்தது.அதனால் தான் வீடியோவில் வந்தேன்… “என்று லேசாக கண் சிமிட்டினான். 

“மூஞ்சியை பாரு,கண்ணை நோண்டனும்” இமை தாழ்த்தி அவள் முணுமுணுக்க,”போனில் எப்படி கண்ணை நோண்டுவாய் அஸ்வா?” என்றான் மென் சிரிப்புடன்.

” போனில் முடியாது. நேரில் நோண்டலாமில்லையா?”

” சரிதான்.அதற்காகவேனும் நாம் சந்திக்கத்தானே வேண்டும்?” என்றபடி அவன் கையை உயர்த்தி போனை கொஞ்சம் உயரமான இடத்தில் வைப்பது தெரிந்தது. கூடவே சலசலவென நீரோடும் ஓசை கேட்க,தெரியாதென்ற போதிலும் அஸ்வினி எக்கி பார்க்க முயன்றாள். எங்கே இருக்கிறான்…?

 போன் இப்போது சற்று சரிய கீழே முழு வீச்சுடன் ஓடிக்கொண்டிருந்த பம்ப்செட்டை கேமரா காட்டியது. “எங்கே இருக்கிறீர்கள்?” தன்னை அறியாமல் இந்த கேள்வியை கேட்டாள்.

” எனது சொந்த ஊர் மம்சாபுரம். இது எங்கள் வயல் காடு” அவன் கையை பின்னணிக்கு  காட்டினான்.

” அது எங்கே இருக்கிறது?”

“ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில்.அது எங்கே இருக்கிறது என்று கேட்டு விடாதே, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஆண்டாள் கோவில், தெரியும் என்று நினைக்கிறேன்”

” தெரியும்” என்றவள் “ஊர் நாட்டானா நீ?”  சத்தம் வராமல் இதழ் மட்டும் அசைத்தாள்.

” நான் தெக்கத்திக்காரனாக்கும்” பெருமிதமாய் மீசை முறுக்கினான் அவன்.

 முறுக்கிய மீசையிலிருந்து பார்வையை பிடுங்கி எடுத்து பின்பக்க வயல்வெளிக்கு  அனுப்பியவள், “தெற்கு எப்படி இந்த சிட்டியோடு சேர முடியும்?அவரவர்கு உகந்த பாதையை பார்த்துக் கொண்டு போய்விட்டால்,அடுத்து நாம் சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காதே” வெண் நுரையாய் ஆர்ப்பரித்து கொட்டிய நீருக்கு பார்வையை கொணர்ந்தாள்.

 வசந்த் பதில் சொல்லவில்லை. குனிந்து பொங்கி வந்த நீரை அள்ளி முகத்தில்… தோள்களில் அடித்துக் கொண்டான். நீர்த்தாரைகள் வழியும் முகத்துடன் நிமிர்ந்தவன் “அப்படி உன்னை விட்டு விட்டால் என் கதி என்னாவது?” என்றான்.

” உங்களுக்கென்ன சார்,அடுத்து டார்ச்சர் செய்வதற்கு வேறு யாராவது சிக்குவார்கள். இப்படியே ஜாலியாக உங்கள் பொழுது போய்விடும்” முகத்தை நொடித்தாள்.

” ஆஹா நானாக தேடிப் போய் ஆட்களை பிடிப்பது போலல்லவா பேசுகிறாய்! விலகிப் போய்விடத்தான் நினைத்தேன். ஆனால் தானாக என்னிடம் வந்து சிக்குகிறது.உபயோகித்து கொள்ளாவிட்டால் நான் என்ன ஆண் பிள்ளை சொல்” வெண்ணிற துவாலையால் அவன் ஈரத்தை துடைத்துக் கொள்ள ஆரம்பித்தான்.

நீரில் நனைந்து அவன் நெற்றியில் காக்கை சிறகாய் படிந்து கிடந்த சிகை புதிதானதொரு கவர்ச்சி தோற்றத்தை அவன் முகத்திற்கு கொடுக்க, கூர் நாசியில் வடிந்து அவன் அடர் மீசை தொட்ட நீர்த்துளியை பார்த்தபடி “ம்க்கும் பெரிய்ய்ய ஆண்பிள்ளை இவன்” உதடசைத்தாள்.

“இல்லையா பின்னே… நீயே பார்த்து சொல்லேன்” அவன் வலது கை முறுக்கி புஜத்தை உயர்த்திக் காட்ட,அஸ்வினி  பட்டென போன் காலை கட் செய்தாள். படபடத்த நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள். ஆணழகன் போட்டியில் கேட்வாக் செய்பவன் போல் நிற்கிறான் அவனும் அவன் முகரையும். 

போனை தூக்கி பெட்டில் போட போன போது அவனிடமிருந்து மெசேஜ்.

“ப்ளம் கலர் நைட் சூட் உனக்கு ரொம்ப பொருத்தம்.பெரிய ப்ளம் பழம் போலவே”

அடிங்…அஸ்வினி அவசரமாக குனிந்து தன்னை ஆராய்ந்தாள். அவனை பார்த்தேனே… என்னை மறந்து போனேனே… நல்ல வேளை, ஓரளவு டீசன்டான உடைதான். நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டவள் லேப்டாப்பை திறந்து வைத்து தனது வேலைகளுக்குள் நுழைய முயன்றாள். கோடிங்குகள் மழைக்கால ஈசலாய் அங்கும் இங்கும் பறந்து அவளுக்கு தலைவலியை வர வைத்தன.




 தூங்கலாம் என லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு படுக்க கண்களுக்குள் கையை முறுக்கி காட்டி நான் ஆண் பிள்ளைதானே? என்றான் வசந்த். படக்கென விழிகளை திறந்து கொண்டவள் இனி தானாக சொக்கி விழும் வரை நானாக கண்களை மூடுவதில்லை என்று சபதம் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.ப்ளம் பழம் எப்படியிருக்கும்? அவள் மனதில் ஓடிய கேள்வியின் தலையில் வலிக்கும்படி நறுக்கென கொட்டினாள்.

 விழிகளை அகல திறந்து வைத்து சுவற்றை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த தங்கையை வினோதமாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சைந்தவி.”ஏய் ஏன்டி இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்?”

” அது… கண்ணை மூடினால் கெட்ட கெட்ட கனவாக வருகிறது. அதுதான்…”

 சைந்தவி கலகலவென சிரித்தாள். “அப்படி எந்த சைத்தானடி உன் கனவில் வந்தது?”

” சைத்தான் இல்லை. அரக்கன், ராட்சசன். அதை விடு இன்று நீயும் அத்தானும் எங்கே போனீர்கள்?”

 சைந்தவி பதிலின்றி கட்டிலில் விழுந்து உடம்பை சுகமாக முறுக்கினாள். கண்கள் சொக்க “அஸ்ஸு இன்று அவர் என்னை கிஸ் பண்ணினாரடி. இங்கே…” என்று உதட்டை தொட்டு காட்டினாள்.

 ஒரு நொடி திகைத்த அஸ்வினி உடனே தலையணையை எடுத்து அக்காவை மொத்தினாள். “என்னக்கா இது தப்பில்லையா?”

“என்னடி தப்பு? நாங்கள் காதலர்கள். முத்தம் கொடுத்துப்போம். உனக்கு ஏன் எரியுது?”

 தலையணையை போட்டுவிட்டு கைகளில் தலையைத் தாங்கி அமர்ந்தாள் அஸ்வினி. “முத்தம் கொடுக்காமல் காதலிக்க முடியாதா?” எரிச்சலாக கேட்டாள்.

“யாருக்கடி வேண்டும், சப்பென்ற அந்த சைவக் காதல்”

” ஓஹோ அது சைவமா? முத்தம்தான் காதலை சொல்கிறதாக்கும்?”

“காதலை தெரியப்படுத்துவதற்கு முத்தத்தை தவிர சிறந்த வழி வேறென்னடி இருக்கப் போகிறது. என் விதார்த் என்னை எவ்வளவு காதலிக்கிறாரென்று இன்றுதான் உணர்ந்து கொண்டேன்.

கண்ணை மூடினால் தேவகுமாரன் மாதிரி கனவு முழுக்க அவர்தான் வர்றாரு”

 சைந்தவி காதலில் புலம்பிக் கொண்டிருக்க அஸ்வினி கஷ்டமே என தலையில் கை வைத்தபடி யோசித்தாள். என் கனவில் மட்டும் ஏன் ராட்சசர்களும் அசுரர்களுமாகவே வருகிறார்கள்!




What’s your Reaction?
+1
42
+1
23
+1
1
+1
4
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!