Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-7

7

வகுப்பறையை அவர்கள் நெருங்கும் போதே தெளிவான அமெரிக்க ஆங்கிலம் அதே மேனரிசத்தோடு காதுகளில் வந்து விழ “வாவ் என்ன ஒரு மேன்லியான குரல்!” என்றபடி தக்ளா இவள் கைகளை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிப்போய் வாசலில் நின்றாள்.

“உள்ளே வரலாமா சார்?” தக்ளாவின் குரலுக்கு திரும்பி பார்த்தவனின் புருவங்கள் உயர்ந்தன. “என்ன வேண்டும்?” அலட்டல் இல்லாத குரல்.

ஆனால் வழக்கமாக இவன் இப்படி கிடையாதே! அலட்டோ அலட்டென்று அப்படி அலட்டுவானே,எதிர் அறையென்பதால் அவனது ஒவ்வொரு அசைவும் தானாகவே இவள் கண்களில் பட்டு தொலையும்.போக அவனாகவே இவளிடம் வம்பிழுக்கும் நேரங்கள் வேறு. 

சுபவாணி வெறுத்தபடி நின்றாள். இவன்தான் புது லெக்சரரா? அடக்கடவுளே இப்படியா எனக்கே பாடம் எடுக்க வந்து நிற்பான்.இனி இவன் வேலைக்கேற்ற மரியாதை வேறு கொடுத்து தொலைய வேண்டுமே! சலிப்புடன் நின்றவளை கூர்ந்தவனின் பார்வை அடுத்து தக்ளாவிற்கு மாறியது.

“உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்?”

” சார் நாங்களும் இதே கிளாஸ்தான். உங்கள் ஸ்டூடண்ட்ஸ். வகுப்பிற்கு வந்திருக்கிறோம்” தக்ளா சொல்ல அவன் தன் மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான்.

 ” பாடம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் போய்விட்டது. இப்போது வந்தால் எப்படி உள்ளே அனுமதிப்பது?”

 உடன் தக்ளாவின் முகம் சோர்ந்து விட்டது.”சார் ப்ளீஸ் சார்,எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தது.காலையில் லீவ் எடுத்து இருந்தேன். இப்போது கொஞ்சம் பெட்டர் ஆனதால் வேகமாக ஹாஸ்டலில் இருந்து ஓடி வருகிறேன்” எப்படியாவது வகுப்பிற்குள் செல்ல வேண்டும் என்ற உறுதியோடு பேசினாள் தக்ளா.

” ஓஹோ” என்று அவள் விளக்கத்தை கேட்டுக் கொண்டவன் “நீங்கள்…?” என்று சுபவாணியிடம் திரும்பினான்.

 அவள் விழித்தாள். என்ன சொல்வது? நீ வர மாட்டாய் என்று நினைத்து வெளியே போய் உட்கார்ந்து எனக்குள் மூழ்கிக் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியுமா? வாய் திறக்காமல் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

” ஏய் ஏதாவது பேசுடி…” தக்ளா அவள் தோளை இடிக்க, “வந்து… நான்… இந்த ஹவர் ஃப்ரீ என்று…” தடுமாறினாள்.

 இரு கைகளையும் விரித்து தோள்களை குலுக்கிக் கொண்டவன் “பொறுப்பற்ற பதில்கள்” என்றான். “உள்ளே வாங்க, இனி என் பாடத்திற்கு தாமதமாக வந்தால் வெளியில்தான் நிற்க வேண்டும்” என்றான் கறாராக.




” நோ சார் இனி பத்து நிமிடங்கள் முன்னாலே வந்து உட்கார்ந்து கொள்வேன் சார். உங்கள் ஹவர் மிஸ் பண்ணவே மாட்டேன் சார்” தன் போக்கில் உளறியபடி தக்ளா உள்ளே செல்ல அவளை பின்தொடர்ந்தாள் சுபவாணி.

 தங்கள் இடத்தில் அமர போனவர்களின் முன்னிருந்த பெஞ்சை ஓங்கி தட்டினான் அவன். “அங்கே போங்க.

 லேட்டா வந்ததற்கு தண்டனை” கடைசி வரிசையை காட்டினான்.

 சுபவாணி தண்டனையை ஏற்றுக்கொள்ள தக்ளா புலம்பி தள்ளினாள். “எல்லாம் உன்னால்தான்.பேசாமல் நான் மட்டும் வந்திருந்தால் சரியான நேரத்திற்கு வந்திருப்பேன். பேக்கு மாதிரி தனியாக உட்கார்ந்து இருக்கிறாளே, நம்முடைய பிரண்டாயிற்றேன்னு பரிதாபப்பட்டு உன்னை இழுத்துக் கொண்டு வந்ததில்தான் லேட்டாகி விட்டது. இப்போது பார் அவரிடம் முதல் நாளே ஒர்ஸ்ட் இம்ப்ரசன் வாங்கி விட்டேன்”

தக்ளாவின் புலம்பல்கள் சுபவானியின் காதில் விழுந்து மூளையில் பதியாமல் வெளியேறின.

 இவன் பெயர் என்ன…ம் ரியோ,  இவ்வளவு நன்றாக பாடம் எடுப்பானா? நம்ப முடியாமல் அவள் பார்வை அவன் மேலேயே இருந்தது.மிக கடினமான அந்த சப்ஜெக்ட்டை மிக எளிமையாக உயர்தர ஆங்கிலத்துடன் அவன் பாடம் எடுக்கும் முறையை பார்த்தவளுக்கு தான் கூட இப்படி பயிற்றுவிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை மனதிற்குள் ஓடியது.

————–

“உன்னை பார்த்து பேசிப் போகத்தான்மா வந்தோம்” புன்னகையோடு வாசலில் நின்ற பதினைந்தாவது மாடி செவன்த் சி வீட்டு ஆன்ட்டி சாரதாவை எச்சில் விழுங்கியபடி “வாங்க ஆன்ட்டி” வரவேற்றாள் சுபவாணி.

 இதுபோல் அக்கம் பக்கத்தினரை வீட்டிற்குள் விடுவது ரகுநந்தனுக்கு பிடிக்காதது.நல்ல வேளை அவனும் வீட்டில் இருக்கிறான், இல்லாதபோது இவர்கள் வந்திருந்தால் அதையே பெரிய பிரச்சனையாக்கி இருப்பான். 

இக்கட்டிலும் முகிழ்த்த சிறு நிம்மதியுடன் “என்ன சாப்பிடுகிறீர்கள்?” விருந்தோம்பினாள்.

” வாங்க உட்காருங்க” ரகுநந்தனும் முகம் நிறைந்த புன்னகையுடன் அவர்களை வரவேற்றான்.அக்கம் பக்கத்தினருக்கு அவன் எப்போதுமே நைஸ் ஜென்டில்மேன்தான்.அந்த தரம் இறங்காமலிருப்பதில் வெகு கவனமாக இருப்பான்.

 சாரதா அவருடன் ஒரு பெண்ணையும் சிறு குழந்தைகள் இருவரையும் அழைத்து வந்திருந்தார். “சுபா இவள் மாதவி.எட்டாவது ப்ளோரில் இருக்கிறாள். எனக்கு தூரத்து சொந்தம்தான். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். இவர்கள்

இவளுடைய குழந்தைகள். மூன்றாவது ஏழாவது படிக்கிறார்கள். இவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஜாக்ரபி பாடம் எடுக்க முடியுமா?” சாரதா கேட்க நெஞ்சம் படபடத்தது சுபவாணிக்கு.




” இல்லை ஆன்ட்டி, வந்து… எனக்கு அவ்வளவாக சொல்லிக் கொடுக்க வராது..” 

“ஏதாவது சாக்கு சொல்லாதே சுபா. நீ ஜியாக்ரபி படித்திருப்பதாகத்தானே சொன்னாய்? பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதற்கென்ன?”சாரதா வயது மூத்தவள் என்ற முறையில் அதட்டினார்.

“பிள்ளைகளுக்கு இந்த பாடம் மண்டைக்குள் ஏறவே மாட்டேன் என்கிறது சுபா. நீங்கள் எப்படித்தான் இந்த ஜியாக்ரபி எல்லாம் மெயினாக எடுத்து படித்தீர்களா? இந்த பிள்ளைகள் பாடமே எனக்கு சொல்லிக் கொடுக்க முடியவில்லை. ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சுபா”மாதவி புன்னகையுடன் இவள் கை பற்றி கொண்டாள்.

சுபவாணி திணறலுடன் அமர்ந்திருக்க ” சின்ன குழந்தைகள்…சரின்னுதான் சொல்லேன் சுபா.நான் ஆபீஸ் போன பிறகு டிவி பார்த்தும் தூங்கியும்தானே பொழுதை கழிக்கிறாய்?” கணீரென்று வந்த ரகநந்தனின் குரலில் ஆச்சரியமாக பார்த்தாள்.இவன் என்னை வேறு சிலருடன் பழக அனுமதிக்கிறானா?

“சரிதான் உன் தூக்கத்தையும்,டிவியையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டு,பிள்ளைகளுக்கு உதவும்மா…” சாரதா சொல்ல,பிறர் முன்பு தன் கேரெக்டரை ஸ்பாயில் செய்கிறான் என்ற மன முணுமுணுப்பை தாண்டி மகிழ்ச்சியாகவே தலையசைத்தாள் சுபவாணி.

எண்ணி நான்கே நாட்கள்தான்.இத்தனைக்கும் அவன் ஆபிசிலிருந்து வீட்டிற்குள் நுழையும் ஏழரை மணிக்குள் பெரும்பாலும் பிள்ளைகளை அனுப்பி விடுவாள்.ஓரிரு நாட்கள் தாமதமானாலும்…கீழ்க் கண்ணால் அளவிடும் அவனது நரிப் பார்வையை உணர்ந்து,” அங்கிள் வந்துட்டார்.மீதி பாடம் நாளை…” என வலுக்கட்டாயமாக அனுப்பி விடுவாள்தான்.

ஆனாலும் ஐந்தாம் நாள் ” இந்த பிள்ளைகள் வருவது தொல்லையாக இருக்கிறதே…”என ஆரம்பித்தான்.

தனது வறண்ட வாழ்க்கைக்கு மிகச் சிறந்த எக்ஸ்போசராக இருந்த குழந்தைகளை அவ்வளவு எளிதாக இழக்க விரும்பவில்லை சுபவாணி.

“என்னங்க இடைஞ்சல்? நான்தான் நீங்கள் வந்ததுமே அவர்களை அனுப்பி விடுகிறேனே?”

இடுங்கிய அவன் கண்களில் கடுமை பரவியது.”ஆபிசிலிருந்து வந்த உடன் என் பொண்டாட்டியை….”என்றபடி அவள் தோளிழுத்து மெல்லிய துணியாய் தோளில் கிடந்த துப்பட்டாவை குரங்காய் பிடித்திழுத்து கிழித்தெறிந்தான்.

“என்ன துணி இது? கண்ணாடியாய்…சல்லாத்துணி போல… இது எப்படி மாரை மறைக்கும்? இனிமேல் நல்ல அழுத்தமான காட்டன் துப்பட்டா போடு.இல்லையென்றால் பேசாமல் சேலை கட்டிவிடேன்.அதுதான் பொம்பளை மாதிரி இருக்கும்”

அவன் கைகள் பரபரவென அவள் உடைகளை கலைந்தன.”வரும் போதே செம மூட்ல வந்தேன்.இங்கே இந்த குட்டிக் குரங்குகள் உட்கார்ந்து கொண்டு கழுத்தறுக்கிறதுகள்…”மன எரிச்சலை வெகு அழுத்தமாக அவள் உடலில் காட்டினான்.உணர்ச்சியற்ற ஜடமாய் தொய்ந்து கிடந்தாள் சுபவாணி.

அந்த டியூசன் நாட்கள் முழுவதும் தினமும் மிருகமாய் மாறி அவள் உடலை பதம் பார்த்து வெறியை தீர்த்துக் கொண்டாலும்,ஒரு வார முடிவில்” டியூசனை நிறுத்தி விடு” என்றான் நிதானமாக.

சுபவாணிக்கு ஐயோவென இருந்தது.”ஏங்க…வந்து… பாவம் புள்ளைங்க படிச்சிட்டு போகட்டுமே”

“நோ அந்த குட்டி பிசாசுகளை சாக்கா வச்சு அப்பா அண்ணே தாத்தா என்று நூறு ஆம்பளைங்க தினம் வீட்டுக்குள்ள வந்துட்டு போறாங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்கல” அவன் சொல்வது போல் இல்லை. ஒரே ஒரு நாள் மாதவியால் வர முடியாமல் அவள் கணவன் வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றான். அதைத்தான் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறான்.

 மனம் வலிக்க “நீங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க” என்றாள்.

” நான் ஏண்டி சொல்றேன்? நீதானே ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சுட்டு அவங்களுக்கு பாடம் எடுத்தாய். நீயே சொல்லு” என்றான் இரக்கமில்லாமல்.

” நான் என்ன காரணம் சொல்ல முடியும்?”

” சொல்லேன் நான் டிவி பார்க்கணும். தூங்கணும், நல்லா திங்கணும்னு… அதைத்தானே நீ இங்கே செய்து கொண்டிருக்கிறாய்”

 நடுங்கிய குரலில் இவள் டியூசன் வேண்டாம் என்ற போது, அது எப்படி எந்நேரமும் டிவி பார்த்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே ஒரு வேலையும் செய்யாமல் இருக்க உன்னால் முடிகிறது… ரகுநந்தன் வார்த்தைகளில் சொன்னதை சாரதாவும் மாதவியும் இவளிடம் பார்வையால் கேட்டுச் சென்றனர்.

 அடுத்த வாரத்தில் ஒரு நாள் இவர்கள் வீட்டை கடந்த மாதவி “இந்த மேடம் இல்லையென்றால் என்ன… பாடம் எடுக்க வேறு ஆளே கிடையாதா என்ன?” என்று இவளை பார்த்து நொடித்தபடி பிள்ளைகளை இழுத்துக் கொண்டு நடந்தாள். சுப வாணி உள்ளுக்குள் மிகவும் குறுகிப் போனாள்.




———

சட்டீர் என்ற சத்தத்துடன் முன்னிருந்த பெஞ்சில் ஏதோ வந்து விழ திடுக்கிட்டு  விழித்தாள் சுபவாணி. பாடம் நடத்திக் கொண்டிருந்தவன் கையில் இருந்த டஸ்டரை அவள் முன் எறிந்திருந்தான். இவள் நிமிர்ந்து பார்க்கவும் இரு விரலை சொடக்கிட்டான். 

“கெட் அவுட்…” சுபவாணி விதிர்த்து எழுந்து நின்றாள்.

” என் கிளாசை கவனிக்காதவர்கள் இங்கே இருக்கத் தேவையில்லை. வெளியே போகலாம்” வாசலை காட்டினான்.

 வகுப்பறையே அவன் செய்கையில் அதிர்ந்தது. “என்ன சார் சின்ன பிள்ளைகள் மாதிரி ட்ரீட் பண்றீங்க?” ஒரு மாணவன் எழுந்து கேட்க “நீயும் வெளியே போகிறாயா?” என்றான்.

” என்ன சார் தேவையில்லாம மிரட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்?, நாங்க பள்ளிக்கூட பிள்ளைங்க கிடையாது” இன்னொருவன் எழுந்து சொல்ல மெலிதாய் கைகளை தட்டினான்.

” வெரி குட். யார் யாரெல்லாம் அந்த மேடத்திற்கு சப்போர்ட் செய்கிறீர்களோ எல்லோரும் அவர்களோடு சேர்ந்து வெளியே போகலாம்” கிட்டத்தட்ட வகுப்பில் அனைத்து மாணவர்களும் எழுந்து விட,

“எக்ஸ்சலன்ட், கிளம்புங்க” வாசலை காட்டினான். அவர்கள் இரண்டு எட்டு எடுத்து வைக்கவும் “இன்டர்னல் மார்க் என்னுடைய கையில்தான் இருக்கிறது” என்றான்.

 கசமுசாவென எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு பிறகு அமர்ந்து விட்டனர். தக்ளா மட்டும் தயக்கத்துடன் நின்றிருக்க சுபவாணி அவள் தோள் பற்றி அழுத்தி உட்கார வைத்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினாள். ரியோ திருப்தியாகி தனது பாடத்தை தொடர்ந்தான்.




What’s your Reaction?
+1
41
+1
27
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!